amsapriya book“ஒரு மேகத்தைப் போலத் தனிமையில் அலைந்தேன்” வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் எழுதிய இந்த ஆங்கிலக் கவிதை புகழ் பெற்றதும், மிக விரும்பப் பட்டதும் ஆகும். தனித்த மேகம், மலைகள் மற்றும் பெருவெளிகளின் மேல், வானத்தில் மிதப்பதைப் போலத் தான் தனித்து நடப்பதாகச் சொல்லியிருப்பார். ஜான் கீட்ஸ் ‘தனிமைக்கு’ என்ற கவிதையில் மகிழ்ச்சியற்ற நகர வாழ்வைப் பற்றிக் குறிப்பிட்டு, தனிமையில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திடும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

பொதுவாக மனிதர்கள் தம்மை வருத்தும் தனிமைக்கு ஆறுதலை இயற்கையிடமே தேடுகிறார்கள். ‘தனிமையில் அலையும் தனிமை’யைப் பற்றிப் பேசும் பல கவிதைகளைக் கொண்ட கவிஞர் க. அம்சப்ரியாவின் இந்நூலிலும் இயற்கை நிலவாக, சூரியனாக, ஒரு பறவையாக, மரமாக, முற்றத்தில் எட்டிப் பார்க்கும் அணிலாக, நட்சத்திரங்களாக மனிதனை ஆற்றுப் படுத்துகிறது.

கவிஞர் மே சர்டன் தனது ‘ஜர்னல் ஆஃப் சாலிட்டியூட்’ நூலில் ‘தனிமையை ஆன்மாவின் ஏழ்மை’ என்றும், ‘விரும்பி ஏற்கும் ஏகாந்தமான தனிமையை ஆன்மாவின் செழுமை’ என்றும் சொல்லியிருப்பார். விரும்பி ரசிக்கும் தனிமையிலும் இயற்கையுடன் கை கோர்த்துக் கொள்ளும் மனிதன், தன்னை வருத்தும் தனிமையிலிருந்து தப்பிக்க இயற்கை அன்னையின் மடியையே சரணடைவது இயற்கைதான் இல்லையா?

“இந்தத் தனிமையில்
எனக்கு நானே
ஒரு பூங்கொத்தை நீட்டுகிறேன்
நிலவின் வடிவம் பூவில் இருந்தது”

“..ஒரு கிளி என் திசை வருமென
காத்திருக்கிறேன்
அதனிடம் சொல்லி அனுப்ப
ஓராயிரம் கதைகள்..”

“..பொழுதுகளற்றவனின் உலகம்
விரிந்திருக்கிறது
பறிக்க அவசியமற்று
உதிரும் திராட்சைப் பழங்களென”

“அவளின் சமையலறையில்
யாவும் தெளிவாக இருக்கிறது
மேலும் சுத்தமாக இருக்கிறது
மேலும் அது எப்போதும்
காலியாக இருக்கிறது
நேற்றைய உணவின் கடைசிப் பருக்கையை
தன்னைத் தேடிவந்த அணிலுக்கு
காணிக்கையாக்குகிறாள்”

தனிமையால் துவண்டு விடாமல் தனிமையையே துணையாக்கிக் கொண்டு தனிமையை விரட்டவும் தனிமையை வெல்லவும் முடியுமென்கின்ற சில கவிதைகள்:

“தனிமை ஒரு கைத்தடியாகிறது
அதை ஊன்று கோலாக்குவேன் என்று
எதிர்பார்க்கிறது காலம்
நானோ
சர்ப்பங்களை விரட்டப் பயன்படுத்தினேன்”

“காலக் கணிப்பன்
இந்தத் தனிமையை
பெரும் சாபமென
எதிர்த்திசையைக் காட்டினான்
நானோ தனிமையைப்
பெரும் ஊற்றாக்கினேன்
எனது கவிதை மந்திரம் கொண்டு
அதை நோய்தீர்க்கும்
ஊற்று நீராக்கினேன்
முதல் துளியைப் பருகிய
கிழட்டு காகமொன்று
இளமை திரும்பி பறந்தது..”

கவிஞர் ‘பறவைக்காகக் காத்திருக்கும் தருணங்கள்’ யாவுமே அருமை. ஆறு கவிதைகளில் அழகிய ஒன்று:

“ஒரே பறவை
ஒரே உலகம் போல
இறுதியாக வருகிறது
தூரத்துப் புள்ளியாக
மறையும் வரை
பார்த்துக் கொண்டே இருந்தேன்
அப்பறவைக்கு
என் பெயர் மிகப் பொருத்தமென
நினைத்துக் கொண்டேன்.”

உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் கொரோனா தொற்றை எண்ணி அச்சத்தாலும் குழப்பத்தாலும் மனதளவில் தனிமைப்பட்டிருக்கும் நேரம் இது. அதன் பாதிப்பைச் சொல்லும் சமகாலக் கவிதைகள் நம்பிக்கையையும் விதைத்துச் செல்கின்றன:

“யாரும் யாரோடும் நெருங்காதீர்கள் என்கிறார்கள்
தெருவில் இனி வேலையில்லை என்கிறார்கள்
எதையும் தொட்டு வாங்காதீர்கள்
என்கிறார்கள்
கைகளைக் கழுவு கைகளைக் கழுவு
என்கிறார்கள்
தனிமையை நேசிக்கத் தெரியாதவர்கள்

........

தனிமையைப் பூக்காலம் ஆக்குவோம்
ஒர் அன்பின் உரத்துச் சொல்லும்
சொல்லொன்று நம்மிடம் உண்டு
வயோதிகரிடம்
குழந்தைகளிடம்
இந்த ஊழிக்காலத்தை
நம்பிக்கையோடு கடந்துவிடலாமென
பூக்களை நீட்டுங்கள்”

தன்னோடு தேநீர் பொழுதுகளைக் கொண்டாடிய நண்பர்களை நினைத்துக் கொள்கிறார் இந்த ஊரடங்கு நேரத்திலே..

“.....இடைவெளிவிட்டு
மிகக் கவனமாக அருந்தும்
உள்ளூர் தேநீராயினும்
சுயமாக சரியாக
தயாரித்த
இல்லத் தேநீராயினும்
மற்றவர்கள் சுவையென்ற போதும்
அத்தனை கசப்பாக இருக்கிறது
இத்தேநீர்ப் பொழுது
விருப்பமற்ற தனிமையை
கட்டாயமாக சேர்த்ததாலோ என்னவோ...!”

தனித்திருப்பவன் மனதில் சூழ்ந்திருக்கும் வெறுமையை அவனின்றி யாராலுமே புரிந்து கொள்ள இயலாதுதான்.

“நான் எனக்கிருந்த
ஒரே ஒரு வானத்தை
பார்த்தபடி இருந்தேன்
நான் ரசித்துக் கொண்டிருப்பதாக
நினைத்திருக்கலாம்...அது.”

இவரது கவிதைகளில் கதாபாத்திரங்களாகப் பல கவிதைகளில் வருகிறார்கள் நேசத்திற்குரியவளாக அம்முவும், குழந்தை அதிஸ்யாவும், கிராமத்து சராசரிப் பெண்களின் பிரதிபலிப்பாக அருக்காணியும், ஈர உள்ளம் கொண்ட அக்காவும்.

“ஒரு ஈத்துக்கு
மூனு குட்டியா போடுறது
இப்பப் பாரு
பாலுக்கு ஆளாப் பறக்குதென
இட்டேரி இட்டேரியாய் தேடி
கள்ளிச் செடிகளைத் தட்டி
பசியாற்றும் அக்காவைத்தான்
பிள்ளையில்லாதவளென
ஊர் தூற்ற
ஆட்டுக்குட்டிகளின் மே மே
குரலில் கிறங்கி
அணைத்துக் கொள்கிறாள்
முந்திக் கொள்ளும்
கண்ணீரை
ஒற்றியெடுக்கிறாள்
முந்தானையில்
யாரும் அறியாதபடி...”

குழந்தைகளைத் தெய்வமெனக் கொண்டாடத் தெரியாதவர்களைப் பார்க்கிறோம் நம்மில். கவிஞரின் வரிகளில்..

“குழந்தைகள் ஓடோடி வருவார்கள்
யாரோ ஒருவர்
மெதுவாய் அதட்டுவார்
இது சாமிக்கான பூ
பறிக்காதே என்பார்
வேண்டுமானால் ஒரு பூவைப் பறித்துக் கொள்
என்பார்கள்
குழந்தைகள் வராத கோவில்களில்
துயரத்தோடு உதிர்ந்திருக்கின்றன
பூக்களும்
கடவுளின் புன்னகையும்”

நாம் பார்க்கத் தவறிடும் வாழ்க்கையின் நிதர்சனங்களை, நாம் உணர மறுத்திடும் வலிகளைக் கவிதைகளாக்கித் தருகிறார்கள் கவிஞர்கள். ஆனால் நாமோ அவற்றை வாசிக்காமல் கடந்து விடுவதென்னவோ நிஜம்தான்..

“நீங்கள் வாசிக்காமல்
கடந்த கவிதையில்தான்
ஒரு கவளம் சோற்றுக்கு
கையேந்தும் ஒருவனின்
உடைந்த குரல் தேய்ந்திருந்தது...

இன்றும் யாராவது
பசிதீர்க்க வரக் கூடுமென
கனவை முடிந்து வைத்தபடி
காத்திருக்கும் குழந்தையின்
அடிவயிற்று வலியொன்று
கேவியபடி இருக்கிறது” (நீங்கள் வாசிக்காமல் கடந்த கவிதை)

இப்போது என் கவலையெல்லாம் கீழ்வரும் இந்தக் கவிதையை நீங்கள் வாசிக்காமல் கடந்து விடக் கூடாதென்பதே. நோய்த் தொற்றின் காரணமாக லாக்டவுன் அறிவிப்பாகவும் அகதிகளைப் போல் பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கால்நடையாக பசியோடும் வயதான பெற்றோரோடும் குழந்தைகளோடும் ‘இது தமக்கான தேசம்தானா’ என்கின்ற திகைப்போடும் கடந்த தொழிலாளர்களோடு இக்கவிதையை என் மனம் ஒப்பிட்டுப் பார்க்கிறது.

“தனக்கான மரம்
இதுவல்லவென்று
அறிவித்துவிட்டார்கள்
தனது குஞ்சுகளொடு
அகன்ற வானம்
நம்முடையதென்று
பறக்கத் துவங்கியது கிளி
ஜோதிடர் கூட இல்லாத
ஊரொன்றையும் கடக்கிறது
கூண்டில் வளர்ப்பவர்களும்
கைவிரித்துவிட்டார்கள்
இப்போது பறத்தலை நிறுத்தி
பாதி வானத்தில்
யோசிக்கத் துவங்கியது கிளி
ஒரு நெல்மணி கூட கிடைக்காத
இவ்வானத்தில்
பறத்தல் பெருஞ்சுமை மேலும்
தன் குஞ்சுகளுக்கு உணவிட இயலா
பெருஞ்சாபம்...
இறுதியாக யாரிடமோ கதறியது
இது கிளிகளுக்கான வானமில்லையென
அறிவித்துவிடுங்களென...” (ஒரு கிளி உணவூட்டுகிறது)

*

‘தனிமையில் அலையும் தனிமை’ - க. அம்சப்ரியா
கவிதைகள்: 70 விலை: ரூ 79/-
இணையத்தில், அமேசான் கின்டில் வெளியீடு

(இது கவிஞரின் எட்டாவது கவிதைத் தொகுப்பும்.. அமேசானில் முதல் மின்னூலும்.. ஆகும். விரைவில் அச்சிலும் வெளியாக உள்ளது.)

- ராமலக்ஷ்மி

Pin It