ரா.பி.சேதுப்பிள்ளையின் வழிவழி வள்ளுவர் நூலை முன்வைத்து...

thiruvalluva book 450சங்க காலத் தமிழரின் திணை  சார்ந்த இனக்குழு வாழ்க்கை சிதலமாகி, சமயங்களின் ஆதிக்க அரசியல் மேலோங்கிய காலகட்டத்தில், அதற்கேற்ற வகையில் மனித உடல்களைத் தயாரிக்கும் நுண்ணரசியல் வலுவடைந்ததது. வீரமும், காதலும் முன்னிலைப் படுத்தப்பட்ட சூழலில் மாற்றம் ஏற்பட்டது. விண்ணுலகு பற்றிய கற்பிதத்துடன் புராணக் கதைகளும் அதியற்புத ஆற்றல்களும் பற்றிய பேச்சுகளை மக்களிடம் உருவாக்கிட சமயங்கள் முயன்றன. இனக்குழுத் தலைவன், குறுநில மன்னன் போன்றோரின் ஆளுகைக்குட்பட்டிருந்த நிலப் பரப்பானது, தமிழ் அடையாளத்துடன் விரிவடைந்து, வேந்தனின் ஆட்சியதிகாரம் பரவலானது. இத்தகு சூழலில் ஆள்வோரின் நலன்களுக்கேற்ற வகையிலான விதிகளும் விலக்குகளும் உருவாக்கப் பட்டன. அறம், ஒழுங்கு என்ற பெயரில் மக்களிடம் வலியுறுத்தப்பட்ட நியதிகள் உருவாக்கத்தில் நீதி அல்லது அறத்தை வலியுறுத்துவதற்காக எழுதப்பட்ட திருக்குறள் உள்ளிட்ட அறநூல்கள் தனித்துவ மானவை.

ஜைன சமயக் கருத்துகளுக்கு முக்கியத் துவம் தந்து திருவள்ளுவரால் எழுதப்பட்ட அற நூலான திருக்குறள், காலந்தோறும் தமிழர் வாழ்க் கையில் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற அரசியல் ஒருபுறமும், திருக்குறள் உலகப் பொதுமறை என்ற அரசியல் இன்னொருபுறமும் நிலவுகின்றன. இன்றைய உலகமயமாக்கல் கால கட்டத்தில் தமிழர் வாழ்க்கையின் அடையாளமாகக் கருதப்படுகிற திருக்குறள், அதற்குப் பின்னர் எழுதப்பட்ட பல்வேறு படைப்புகளில் கருத்தியல் ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருக்குறளின் சிறப்புக் குறித்து ஆராய்ந்திட்ட தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை, அந்நூலின் கருத்துகள் சிலப்பதி காரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்ப ராமாயணம் போன்ற காப்பியங்களிலும், பாரதியார் பாடல்களிலும் எவ்வாறு கையாளப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளார். பிற இலக்கியப் படைப்புகளில் திருக்குறளின் தாக்கம் குறித்த சேதுப்பிள்ளையின் ஆழமான திறனாய்வுப் பார்வை அடங்கிய கட்டுரைகள், தொகுக்கப்பட்டு, வழிவழி வள்ளுவர்(1953) என்ற நூலில் இடம் பெற்றுள்ளன. அன்றைய காலகட்டத்தில் ஒப்பியல் நோக்கில் நோக்கில் இலக்கியத்தை ஆராய்வது வழக்கற்ற நிலையில், சேதுப்பிள்ளை, பரந்துபட்ட இலக்கிய அறிவுடன் இலக்கியப் பிரதிகளை ஒப்பிட்டு ஆராய்ந் திருப்பது, தனித்துவமானது.

ஓலைச்சுவடிகள் மூலம் பிரதியெடுக்கப்பட்டுத் தலைமுறைகள்தோறும் வாசிக்கப்பட்டுப் பாதுகாக்கப் பட்ட பண்டைய இலக்கியப் பிரதிகள், பெரிதும் மனனம் செய்யப்பட்டு வந்தன. கவிராயர் பரம் பரையில் வந்த புலவர் ஒருவர், சிலப்பதிகாரம் முழுவதையும் நினைவில் இருந்து சொல்லும் ஆற்றல்மிக்கவராக விளங்கினர். இத்தகு சூழலில் ஓலைச்சுவடிகள் மடங்கள், அரண்மனைகள், பணக் காரர்கள், புலவர் பரம்பரையினர் வீடுகளில் மட்டும் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. ஓரளவு கல்வியறிவு பெற்றவரும் முன்னர் எழுதப்பட்ட படைப்புகளில் சிலவற்றை மட்டும்தான் அறிந்து வைத்திருப்பர். முந்தைய நூலின் கருத்து, அடுத்தத் தலைமுறை யினரால் எழுதப்படுகிற புதிய நூலில் இடம் பெறுகிறது எனில், அந்நூல் இலக்கிய வட்டாரத்தில் கவனம் பெற்றிருக்க வேண்டும்.

பண்டைத் தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரையில், சங்க இலக்கியப் படைப்புகளைவிடத் திருக்குறள் கருத்தியல்ரீதியில் இன்றுவரை பரவலாகக் கவனம் பெற்றிருக்கிறது. சராசரியான மனிதன் அன்றாட வாழக்கையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறை களைப் போதித்திடும் திருக்குறள், சமயம் சாராத தன்மையின் காரணமாகப் பரவலாகத் தமிழர்களிடம் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றுள்ளது. எனவேதான் சிலப்பதிகாரம் தொடங்கி இன்றளவும் திருக்குறள், இலக்கியப் படைப்புகளில் நுட்பமான முறையில் ஆளுகை செலுத்துகிறது. திருக்குறளின் கருத்துகள், காலந்தோறும் படைப்புகளில் பெற்றிருக்கும் செல்வாக்குக் குறித்த சேதுப்பிள்ளையின் ஆய்வுக் கருத்துகள் ஆய்விற்குரியன.

திருக்குறள், இதுவரை இன்பம், பொருள், அறம் என இருந்த தமிழர் வாழ்க்கைப் போக்கினை அறம், பொருள், இன்பம் என வரிசை மாற்றியமைத்தது, பருண்மையான அரசியல் பின்புலமுடையது. தமிழர்கள் எப்படி வாழ வேண்டுமென நியதிகளை வலியுறுத்திய திருவள்ளுவரின் நோக்கமானது, அடிப்படையில் ஆள்வோர், ஆளப்படுவோர் என இரு வேறு நிலைகளில் அமைந்திட்ட சமுதாயத்தின் நலன்களை முன்னிலைப்படுத்தியது. இதனால்தான் திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியப் படைப்புகள், பெரும்பாலும் பூமியில் புலன்கள் மூலம் பெறுகின்ற இன்பங்களை ஒதுக்கிவிட்டு, விண்ணுலகில் கிடைக்கவிருக்கிற வீடுபேறு குறித்த புனைவுகளைக் கட்டமைத்திட முயன்றன.

ஒரு நாட்டின் வளம் எவ்வாறு இருக்க வேண்டு மென விவரிக்க முயலுகிற திருவள்ளுவர், பிற நாடுகளில் இருந்து, போர், பஞ்சம் போன்ற காரணங் களினால் புலம்பெயர்ந்து வருகிற மக்களை ஆதரிக்கிற வளமுடையதாக இருக்க வேண்டும் என்கிறார்.

பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறைஒருங்கு நேர்வது நாடு

சோழ நாட்டின் வளத்தைச் சிறப்பிக்க முயன்ற இளங்கோவடிகள் காவிரிப்பூம்பட்டினம் பற்றிக் குறிப்பிடுவது பின்வருமாறு:

முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்

வழங்கத் தவாஅ வளத்த தாகி

அலைகள் ஆர்ப்பாரிக்கிற கடல் அலைகள் சூழ்ந்த உலகத்து மக்கள் திரண்டு வந்தாலும், அயராது வழங்கத்தக்க வளமுடைய காவிரிப் பூம்பட்டினம் என்ற இளங்கோவடிகளின் விவரிப்பு, வள்ளுவரின் கருத்தைத் தழுவியது என்கிறார் சேதுப்பிள்ளை. நாடு என்ற சொல்லினை முன் வைத்துத் திருவள்ளுவரும் இளங்கோவடிகளும் ஒத்திசைவது பற்றிய விளக்கம் ஏற்புடையது.

வள்ளுவரின் அரசியல் கருத்தியலில் நாட்டை யாள்கிற மன்னனுக்கும் அமைச்சருக்குமான உறவு எப்படி இருக்க வேண்டுமென்ற வரையறை முக்கிய மானது. மதிநலம், சொல்வன்மையுடன் சுயநலம் அற்றவராக அமைச்சர் இருப்பின் நாட்டுக்கு நன்மை உண்டு. இத்தகைய அமைச்சர், அரசன் தவறு செய்யும் போது, தடுத்துச் சொல்லத் தயங்கிட மாட்டார் என்ற நிலையை வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிகொன்று அறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன்

வள்ளுவர் சிறப்பித்துக் குறிப்பிடுகிற அமைச்சர்கள், கோசல நாட்டையாண்ட தசரதனுடைய அவையில் இருந்தனர் என்ற கம்பரின் வரிகள் ஒப்பு நோக்கினுக் குரியன.

தம்முயிர்க்கு உறுதி எண்ணார்

தலைமகன் வெகுண்ட போதும்

வெம்யைத் தாங்கி நீதி

விடாதுநின்று உரைக்கும் வீரர்

செம்மையின் திறம்பல் சொல்லாத்

தேற்றத்தார் தெரியும் காலம்

முமையும் உணர வல்லார்

ஒருமையே மொழியும் நீரார்  

கோசல நாட்டு அமைச்சர்கள் அரசனின் கருத்தை மறுத்துப் பேசினால், அவனது கோபத்திற்கு

ஆளாக நேரிடுமே என்று அஞ்சாமல் உண்மையை எடுத்துரைக்கும் இயல்பினர் என்ற கம்பரின் கூற்று, வள்ளுவரின் வழிப்பட்டதாகும் என ஒப்பீட்டுள்ளார் சேதுப்பிள்ளை. மேலும் அமைச்சர்களால் கோசல நாட்டுக்குக் கிடைத்த நன்மைகளை தசரத மன்னனே மனதாரப் போற்றுகிறான்.

உம்மையான் உடைமையின் உலகம் யாவையும்

செம்மையின் ஓம்பிநல் லறமும் செய்தனன்

என்று அமைச்சர்களைப் பார்த்துத் தசரதன் கூறினான். அமைச்சர்கள் சொல்கிற மாறுபட்ட கருத்துகளை அறிவினால் ஆராய்கிற தன்மையினராக இருத்தல் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு 

திருக்குறள் குறிப்பிடுகிற பண்பு வாய்ந்த மன்னன் தசரதன் என்பது சேதுப்பிள்ளையின் கருத்து.

சீவக சிந்தாமணி காப்பியத்தில் அமைச்சரின் ஆலோசனையைப் புறக்கணித்த மன்னன், கட்டியங் காரனிடம் நாட்டை ஒப்படைக்க முடிவெடுக்கிறான்.  அப்பொழுது அமைச்சர்

மூரித்தேன் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கிப்

பாரித்தென் தரும நுண்ணூல் வழக்குஅது ஆதல்கண்டே

என்று பேசுகிறார். Òஉனக்கு உறுதியான அறிவுரை சொல்வது என் கடமை என அற நூல் கூறுகிறது. என் கடமையை நிறைவேற்றி விட்டேன். இப் பொழுதே இந்நாட்டை விட்டுச் செல்கிறேன்’’ என்ற அமைச்சரின் பேச்சின்மூலம் திருக்குறளைத் தரும நுண்ணூல் எனப் போற்றுகிறார் திருத்தக்கத்தேவர். மன்னன்-அமைச்சன் உறவு பற்றிய விவரிப்பில் கம்பரும் திருத்தக்கத்தேவரும் எங்ஙனம் திருவள்ளுவரின் கருத்தை வழிமொழிந்துள்ளர் என்ற சேதுப்பிள்ளையின் ஆய்வு நுட்பமானது.

மனித வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிக் குறிப்பிடுகிற திருவள்ளுவரின் பார்வை நுட்பமானது.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு

சாவு-பிறப்பு என இரு எதிரிணைகளின் வழியாகக் கட்டமைக்கப்பட்டுள்ள உயிரினங்களின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்கும் வள்ளுவரின் கருத்துப் பின்புலத்தில் திருத்தக்கத்தேவரும் கருத்துரைத்துள்ளார்.

பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்

உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்

என்ற சீவகசிந்தாமணியின் வரிகள், உறங்குதல், விழித்தல் என இரு சொற்கள்மூலம் மனித வாழ்க் கையின் சூட்சுமத்தை விளக்குகிறன. மரணம் பற்றிய திருத்தக்கத்தேவரின் கருத்திய உருவாக்கத்திற்குப் பின்புலமாகத் திருக்குறள் அமைந்துள்ளது எனச் சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

சங்க இலக்கியப் பிரதிகள், குடும்ப நிறுவனத் தினை வலியுறுத்துவதன் மூலம், நிலவுகிற சமூக அமைப்பினுக்குச் சார்பான போக்கை வலியுறுத்து கின்றன. பால் அடிப்படையில் பெண்ணின் இடத்தை வரையறுத்திட முயன்ற நிலையானது, வளர்ச்சியடைந்த சூழலைத் திருக்குறள் உள்ளிட்ட அறநூல்களில் கண்டறிய முடியும்.

பெண் பற்றிய கட்டமைப்பை உருவாக்கிய திருக்குறள் புனைந்துரைந்த நெறிகளின் வழியாகப் பெண் பற்றிய மதிப்பீடுகள், இன்றளவும் தமிழர் களிடையே நிலவுகின்றன.

பெண் பற்றிய பிம்ப உருவாக்கத்தில், பாலியல் ரீதியில் பெண்ணுடலைக் கொண்டாடுவது பற்றிய திருவள்ளுவரின் கருத்தானது, ஆண் மையவாத நோக்கில் அமைந்துள்ளது.

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடிக் கண்ணே யுள

பெண்ணுடல் தரும் இன்பம் என்ற ஆணின் வியப்பு, திருக்குறளில் இடம் பெற்றுள்ளது. வள்ளுவரின் கருத்தையட்டி இளங்கோவடிகள் கோவலன், மாதவியின் உடலழகைப் போற்று வதாகப் பாடியுள்ளார்.

மாசுஅறு பொன்னே வலம்புரி முத்தே

காசுஅறு விரையே கரும்பே தேனே

கண்ணகி பற்றிய கோவலனின் விவரிப்பு, குறளின் கருத்தை உள்வாங்கிகொண்டு இளங்கோவினால் எழுதப்பட்டுள்ளது என்று ஒப்பீட்டுள்ளார், சேதுப் பிள்ளை.

கோவலன், மாதவியின் மீதான ஈடுபாட்டினால் கண்ணகியைப் பிரிந்து வாழ்கிறான். அப்பொழுது மாதவி மகிழ்ச்சியடைந்தாள்; கண்ணகி துயருற்றாள். இந்நிலையைக் காட்சிப்படுத்துகிற இளங்கோ வடிகள் குறிப்பிடுகிற வரிகள் முக்கியமானவை.

கூடினார் பால்நிலவாய் கூடார்பால் வெய்யதாய்க்

காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே கூடிய

மாதவிக்கும் கண்ணகிக்கும் வானூர் மதிவிரிந்து

போதவிழ்க்கும் கங்குற் பொழுது

வெண்ணிலா ஒளி சிந்துகிற வேளையில் போதாக இருந்த பூக்கள், கட்டவிழ்ந்து இதழ்களை விரிக்கிற அந்திப் பொழுதில் மாதவி இன்பத்தில் திளைத்தாள்; கண்ணகி துயரமுற்றாள். இயற்கை யுடன் மனித உணர்வினைத் தொடர்புபடுத்திடும் காப்பியப் போக்கின் முன்னோடியாக பின்வரும் திருக்குறளின் வரிகள் அமைந்துள்ளன எனக் குறிப்பிடுகிறார் சேதுப்பிள்ளை.

காலை அரும்பி பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்       

பூ காலையில் அரும்பி, பொழுது செல்லச் செல்ல முதிர்ந்து மொட்டாகி, மாலையில் பூப்பது போலக் காதலும் மனித மனதில் வினையாற்றுகிறது என்ற வள்ளுவரின் நுட்பமான காதல் பற்றிய பார்வையானது, மாதவியின் காதல் வயப்பட்ட நிலையைச் சித்திரிக்கப் பயன்பட்டுள்ளது.  

பெண்ணுக்குக் கற்பினை வலியுறுத்தும் போக்கில், அதுவே சிறந்த பெண்ணின் இலக்கணம் என நீதிநூல்கள் தொடர்ந்து வலியுறுத்துவதற்கு முன்னோடியாக விளங்குவது திருக்குறள் ஆகும். திருவள்ளுவர் கட்டமைக்க விரும்பிய பெண், தமிழ்ப் பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறாள்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

வள்ளுவரின் மொழியைப் பின்பற்றுகிற இளங்கோவடிகள், கண்ணகியின் கற்பினைப் போற்றிடப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாளைத்

தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் தெய்வமாய்

மண்ணக மாதர்க்கு அணியாய் கண்ணகி

விண்ணக மாந்தர்க்கு விருந்து

திருக்குறளில் இடம்பெற்றுள்ள வரியை அப்படியே சிலப்பதிகாரத்தில் எடுத்தாண்டுள்ளார் இளங்கோவடிகள்.

மணிமேகலைக் காப்பியத்தில் சீத்தலைச் சாத்தனாரின் பெண்ணின் கற்பு பற்றிய விளக்கம் குறிப்பிடத்தக்கது.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப்

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்

குறளின் முதலடியை அப்படியே எடுத்தாண்டுள்ள சாத்தானார், திருவள்ளுவரைப் பொய்யில் புலவன் என்றும் அவர் அருளியது பொருளுரையே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இளங்கோவடிகளும் சீத்தலைச் சாத்தானாரும் பெண்களின் கற்பு பற்றிய விளக்கத்தில் திருவள்ளுவரின் திருக்குறளின் வழிப்பட்ட  போக்கினைச் சார்ந்திருப் பதைச் சான்றுகளுடன் எடுத்துரைப்பது, சேதுப் பிள்ளையின் விமர்சன அணுகுமுறைக்கு எடுத்துக் காட்டு.

கட்டுப்பாடும் காவலும் மகளிர் கற்பினைக் காக்குமென்ற மரபு வழிப்பட்ட சிந்தனைப் போக்கை மறுக்கிறார் திருவள்ளுவர்.

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை

பெண்ணின் மனம்தான் முக்கியம் என்ற வள்ளுவரின் வழியில் பாரதியார் குறிப்பிட்டுள்ள பாடலைச் சேதுப்பிள்ளை ஒப்பிட்டு எடுத்துரைக்கிறார்:

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போம்என்ற

விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.     

பெண்ணுக்குக் காவல் என்பது பொருளற்றது என்ற நிலைப்பாட்டில் வள்ளுவரும் பாரதியாரும் ஒன்றுபடுகின்றனர்.

நுண்மான் நுழைபுலம்மிக்க திருவள்ளுவர் சமூக விமர்சனத்தின்போது, அறச்சீற்றத்துடன் வரிகளைப் புனைந்துரைத்துள்ளார். ஒருவன், பிறரிடம் இரந்து பிச்சையெடுத்துத்தான் வாழ வேண்டும் என்ற

நிலை ஏற்பட்டால், இந்தச் சீரழிந்த உலகத்தைப் படைத்தவன் சிதைந்து ஒழிக என கோபமடைகிற திருவள்ளுவர் ஒருவகையில் சாபம் விடுத்துள்ளார்.

இரந்தும் உயிர்வாழ்தல்வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்

வள்ளுவரின் சீற்றத்தை வழிமொழிகின்ற பாரதியார்

தனியருவனுக்கு உணவில்லை எனில்

சகத்தினை அழித்திடு வோம்

எனச் சாபம் விடுகிறார். வயிற்றுக்கு உணவு இல்லாத கொடுமையான நிலையில் மனிதர்கள் படுகிற துயரத்தைக் கண்டு கோபமடைகிற பாரதியாரின் பாடலில் வள்ளுவரின் குறள் செல்வாக்குச் செலுத்து வதைப் பொருத்தமுடன் சேதுப்பிள்ளை குறிப்பிட்டு உள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் புதுமைக் கவிஞர் எனப் போற்றப்படுகிற பாரதியார், பண்டைத் தமிழிலக்கிய வாசிப்புக் காரணமாக மரபின் தாக்கத்துடன் பாடல்கள் பாடியுள்ளார் என்பதற்கு ஆதாரமாக ஓப்பீடுகளைச் சேதுப்பிள்ளை தந்துள்ளார்.    அறம் வேண்டும் என வலியுறுத்துகிற வள்ளுவர், இல்லறம், துறவறம் ஆகியவற்றின் பெருமைகளை எடுத்துரைத்துள்ளார். மேலும் அவர் துறவு மேற் கொள்கிறவர் அதற்குரிய நெறியில் வாழ்ந்திடாமல், போலித்துறவைப் பின்பற்றுவதைக் கடிந்துரைத்து உள்ளார்.           

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்

துறவு என்பது ஒழுக்கம் சார்ந்த நிலையில் சடையை வளர்த்தலும் தலையை மழித்தலும் தேவையற்றவை என்ற வள்ளுவரின் கருத்தில் பாரதிக்கு உடன்பாடு உண்டு. பாரதியாரின் துறவு பற்றிய வரிகள்:

காவிதுணி வேண்டா கற்றைச்சடைவேண்டா

பாவித்தல் போதும் பரமனிலை எய்துதற்கே

என்ற பாரதியாரின் வரிகள் துறவிகளின் உடல், உடை பற்றிய விமர்சனத்தைப் பாரதியின் வழியில், முன் வைத்துள்ளது.

அறத்தை உடனடியாகச் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிற வள்ளுவரின் வாக்கு குறிப்பிடத் தக்கது.

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

இவ்வுலகில் உடலும் பொருளும் நிலையற்றவை; அழியாத செல்வம் அறம் மட்டும்தான் என்ற வள்ளுவரின் மொழியை இளங்கோவடிகள், மாடலன் மூலம் உரைத்துள்ளார்.

நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே

கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்

இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்

முதுநீர் உலகில் முழுவதும் இல்லை

அறத்தை விரைந்து உடனடியாகச் செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்குகிற இளங்கோவடி களுக்கு வள்ளுவரின் குறள் வரிகள் உதவியிருப்பதை நுணுக்கமாகக் கண்டறிந்து சேதுப்பிள்ளை குறிப்பிட்டு உள்ளார்.

இன்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வகுத்துத் தந்திட்ட திருவள்ளுவரின் குறள் கருத்துகள், காலந் தோறும் புலவர்களின் புதிய படைப்புகளில் தாக்கம் செலுத்தியிருப்பதை ரா.பி.சேதுப்பிள்ளை கண்டறிந்திருப்பது. அவருடைய பரந்துபட்ட வாசிப்பினுக்குச் சான்றாக உள்ளது. இன்னொருபுறம் மூலநூலின் கருத்துகள், அடைந்திருக்கும் வளர்ச்சி நிலையை அறிந்திட சேதுப்பிள்ளை வகுத்துள்ள வழி, முக்கிய மானது. நவீனச் செவ்வியல் கவிஞரான பாரதியாரிடமும் வள்ளுவரின் தாக்கம் கணிசமாக உள்ளது என்ற விமர்சனப் பார்வை, குறிப்பிடத்தக்கது. ஐம்பதுகளில் ஒப்பிலக்கியம் என்ற கருத்தியல் தமிழில் அறிமுகமாயிராத சூழலில், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பாரதியார் பாடல்கள் ஆகிய படைப்புகளுடன் திருக்குறளின் கருத்துக்களை ஒப்பீட்டு எழுதியுள்ள ரா.பி.சேதுப் பிள்ளையின்  தனித்துவமான ஆய்வுப் போக்கு, இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியதாகும். அவ்வகையில் ரா.பி.சேதுப்பிள்ளை, திருக்குறள் பற்றிய ஆய்வில் தனித்து விளங்குகிறார்.

சான்றாதாரம்

சேதுப்பிள்ளை, ரா.பி., வழிவழி வள்ளுவர். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ், 1953.

Pin It