200 ஆண்டுகால வரலாற்றைக்கொண்ட சிங்கப்பூர் ஒரு மிகச் சிறிய தீவு நாடு. வணிக நோக்கத்தோடும், கிழக்கிந்திய கம்பெனியின் ஆணைகளை ஏற்றுச் செயல்படுத்தும் திட்டத்தோடும் 1819ல் கவர்னர் ஸ்டாம்ப்போர்டு ராபிள்ஸ் அவர்கள் நாராயண பிள்ளை எனும் ஒருவரின் தலைமையிலான தமிழர்களையும், பிற நாட்டுப் பிரதிநிதிகளையும் ஒரு கப்பல் நிறைய அழைத்துக்கொண்டு பினாங்கிலிருந்து மீன்பிடிக் கிராமமாக இருந்த சிங்கப்பூருக்கு வந்தடைந்ததிலிருந்துதான் சிங்கப்பூர் வரலாறு தொடங்குகிறது. அதிலிருந்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நூல் வடிவங்களிலான படைப்புகள் தமிழில் உருவாகத் தொடங்கின.

1868ல் சி.வெ. நாராயணசாமி நாயகரால் எழுதப்பட்ட 'நன்னெறித் தங்கம் பாட்டு' என்ற நூல்தான் எமக்குக் கிடைத்த சிங்கப்பூர்த் தமிழ் முதல் நூல் என்று தெரிகிறது. 1872ல் மகதூம் சாயுபு அவர்களால் எழுதப்பட்ட 'முனாஜத் திரட்டு' என்ற கவிதை நூல் தமது அச்சகத்திலேயே பதிப்பித்து வெளியிட்டுள்ளதற்கானச் சான்று கிடைத்துள்ளது. அதன் பிறகு 1887ல் இலங்கை சி. ந. சதாசிவப் பண்டிதரால் இயற்றப்பட்ட 'சிங்கைநகர் அந்தாதி' என்ற நூல் அறிமுகம் கண்டது. இம்மூன்று நூல்கள்தான் சிங்கை மக்களால் முன்னோடி நூல்களாகக் கருதப்பட்டு வருகின்றன.library 33சாயுபு அவர்களைத் தொடர்ந்து அவர் அச்சகத்தில், ஷேக் காதிறு ஜெயனுதீனின் 'ரத்தினச் சுருக்கம்’, முகியித்தீன் அப்துல் காதரின் 'சந்தக்கும்மி' நெல்லையப்பச் செட்டியாரின் 'சிங்கை வடிவேலவர் ஸ்தோத்திரம்’, செவத்த மரைக்காயரின் 'மலாக்காப் பிரவேச திரட்டு’, மீரா சாகிப்பின் 'பாயாலேபர் பங்களாவின் அலங்காரச் சிந்து’, மெய்யப்பச் செட்டியாரின் 'சிங்கப்பூர்ப் பிரபந்தத் திரட்டு’, க. வேலுப்பிள்ளையின் 'சிங்கை முருகேசப் பதிகம்' போன்ற நூல்கள் வெளிவந்திருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலும், உலகப்போர்க் காலங்களிலும் சற்றுத் தொய்வாக இருந்த இலக்கிய வளர்ச்சி, பின்னர் பாரதியின் தேசிய விடுதலைப் பாடல்களின் பாதிப்பு, தந்தை பெரியார் வருகையின் தாக்கம், சிங்கப்பூரில் நேதாஜி முன்னெடுத்த இந்திய தேசிய இராணுவ உணர்வு ஆகியவற்றால், தேசியப்பற்று, பகுத்தறிவு, சீர்திருத்தக் கருத்துக்களால் உந்தப்பட்ட எழுத்தாளர்கள் உயிர்ப்புடன் வீறுகொண்டு தமிழ்ப் படைப்புகளைப் பெரிதும் வெளிக்கொண்டு வரத் தொடங்கினர்.

1893ல் வெளிவந்து மக்களால் பெரிதும் பேசப்பட்ட, அரங்கசாமி தாசனின் 'குதிரைப்பந்தய லாவணி' என்ற நூலைப் போலவே பின்னாளில் வெளிவந்த 'வழிநடைச் சிந்து' எனும் நூல் சிங்கப்பூர் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் நூலாக அமைந்தது. தமிழவேள் கோ. சாரங்கபாணி 1924ல் சிங்கை வருகைக்குப் பின் தமிழிலக்கிய உலகுக்கும் நாளிதழ்களுக்கும் புத்தெழுச்சி ஏற்பட்டன. அவரைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து வந்த வை. திருநாவுக்கரசு தமிழ் இலக்கிய உலகுக்கு நெருக்கமானவராகி, அரசாங்கத்துக்கும் படைப்பாளர்களுக்கும் ஒரு பாலமாகச் செயல்பட்டு இலக்கியச் சேவை புரிந்தார்.

1930ல் யாழ்ப்பாணம் வல்வை சின்னையா என்பவரின் 'நவரச கதாமஞ்சரி' என்ற கதைத்தொகுப்பு, சிறுகதைகளுக்கு முன்னோடியாக விளங்கியது. 1935 வாக்கில் சமயச் சார்பான இலக்கியங்கள் குறைந்து, சமுதாயச் சிந்தனைப் படைப்புகள் தோன்ற ஆரம்பித்தன.

1940க்கு முன் தமிழகக் கலாசாரத்தை ஒட்டி எழுதிவந்த எழுத்தாளர்கள், சிங்கை மக்களின் வாழ்வியலுக்கு ஏற்ப எழுதும் பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள். அந்தக் காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளர் ந. பழனிவேலு, தெ.வே. வைத்தியலிங்கம், சிங்கை முகிலன் எம் ஆறுமுகம், வை. இராஜரத்தினம், போன்றோரின் படைப்புகள் சீர்திருத்த உணர்வோடும், துடிப்போடும் விளங்கின.

1950க்கும் பிறகு நாடக நூல்கள் 'சுகணசுந்தரம்’, 'கௌரிசங்கர்' போன்ற நூல்கள் வெளியாயின. மூன்று பெரிய இனங்களான சீன, மலாய், இந்தியர் கூடி வாழ்ந்ததால் சிங்கப்பூரில் ஏற்பட்ட காதல், கலப்புத் திருமணங்களால் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வைத்து திருமதி இராஜாம்பாள் எழுதிய 'விஜயாள் ஒரு அனாதை' என்ற கதை, புதிய சமூகச் சிந்தனையை மக்களிடையே எழுப்பியது. அதன் பிறகு சமுதாயத்தில் சொல்லப்படவேண்டிய புரட்சிக் கருத்துக்களான, சாதி ஒழிப்பு, கைம்பெண் மணம், பிராமண எதிர்ப்பு, இதிகாச எதிர்ப்பு, ஆங்கிலேய, ஜப்பானிய ஆட்சிகளின் அடக்குமுறை, தோட்டத்தொழில் போன்ற கருப்பொருள்களைக்கொண்டு படைப்புகள் வெளிவரத் தொடங்கின.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை
அ.சி. சுப்பையா உருவாக்கி, சிங்கை வந்தபோது தந்தை பெரியாரிடம் கொடுத்தார். அதை அவர் தமிழக முதல்வராயிருந்த எம்ஜியாரிடம் பரிந்துரைத்ததன் பயனாய் நடைமுறைப்படுத்தப்பட்டதுதான் தற்சமயம் நாம் கையாளும் எழுத்துநடை. அத்தகைய மொழியறிஞர் சுப்பையா 1948ல் 'சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்' என்ற புராணத்திற்கு எதிரான புரட்சிப் படைப்பை வெளியிட்டார். அது பின்னர் அரசால் தடை செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் ரெ. சீனிவாசன், ந. தேவராசன், மெ. சிதம்பரம், அ. முருகையன், தி. செல்வகணபதி, ஆர். வெற்றிவேலு, ரா. நாகையா, எம். கே. துரைசிங்கம், பா. சண்முகம் போன்றோரின் படைப்புகள் பேசப்பட்டன.

இடைப்பட்டக் காலத்தில், பல நூல்களை எழுதிப் புகழ்பெற்ற சே. வெ. சண்முகத்தின் 'தமிழச்சியா' தொடர்கதையும், பக்ருதீன் சாகிப்பின் 'கதீஜாவின் காதல்' நூலும், மா. பக்கிரிசாமியின் 'அந்துவா' படைப்பும் மக்களால் பாராட்டப்பட்டன. ஏ.பி.இராமனின் கலைமலர், எஸ் ஏ நாதனின் இந்தியன் மூவி நியூஸ், முதலிய திரைப்பட இதழ்களும் வெளிவந்தன. பெருங்கவிஞர்களான ஐ. உலகநாதன், முல்லைவாணன், பரணன், முத்தமிழன் போன்றோரின் படைப்புகள் பல வெளிவந்துள்ளன. இவர்களின் தாக்கங்களால் கவிஞர்கள் உருவாகிப் பல படைப்புகளை எழுதினர். தமிழாசிரியர் மு. தங்கராசன் 22 நூல்களையும், கவிஞர் இக்பால் 17 நூல்களையும் படைத்துச் சிங்கை தமிழ் இலக்கிய உலகுக்குப் பெரிதும் பங்களித்துள்ளனர்.

இன்றும் வாழ்ந்து வரும் புதுமைதாசன் எனும் பி. கிருஷ்ணன் 10 வானொலி நாடகங்கள் உள்பட மொத்தம் 22 நூல்களைப் படைத்திருக்கிறார். மக்களால் போற்றப்பட்ட 'அடுத்த வீட்டு அண்ணாசாமி’, 'விலங்குப் பண்ணை' போன்ற நூல்களை வெளியிட்டதோடு, ஷேக்ஸ்பியரின் 9 நாடகங்களை மொழிபெயர்த்துத் தமிழில் தந்த பெருமைகளுக்குச் சொந்தக்காரர். எஸ். எஸ். சர்மா, பி. பி. காந்தம், ஆ. பழனியப்பன் போன்றோர் பல மொழிபெயர்ப்புகளைச் செய்து நூல்களையும் படைத்திருக்கின்றனர். 13 மொழிகளைத் தெரிந்த பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன் ஆத்திசூடியைப் பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்.

1965ல் சிங்கப்பூர் தனி நாடாகியது. கடந்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்பாளிகள் அதிகமானோர் தங்கள் படைப்புகளை வாரந்தோறும் வெளியிடத் தொடங்கினர். கவிஞர் முருகடியான், மா. இளங்கண்ணன், ச. வரதன், தனித்தமிழ்ப் பற்றாளர் பாத்தேறல் இளமாறன், புகழ்பெற்ற 'துயரப்பாதை' எனும் நாவலை 1978ல் எழுதிய கவிஞர் கா. பெருமாள், உணர்ச்சிக் கவிஞர் அமலதாசன், நா. ஆண்டியப்பன், ஜமீலா, ரஜீத் யூசூப் ராவுத்தர், ஷாநவாஸ், மலர்மாணிக்கம், வெண்பாச் சிற்பி இக்குவனம், பெரி. நீல. பழநிவேலன், கவிஞர் திருவேங்கடம், பாத்தூறல் முத்து மாணிக்கம், மு. அ. மசூது, வீ. சுதர்மன், மற்றும் பெண் எழுத்தாளர்களான பார்வதி பூபாலன், நூர்ஜகான் சுலைமான், சூரிய ரத்னா, லதா, கவிஞர் இன்பா, ஆய்வு நூல்களை எழுதும் எம்.எஸ். சிரீலட்சுமி, பல புத்தகங்களைத் தானும் எழுதியதோடு பலருடைய நூல்களையும் வெளியிட உதவிய பாலு மணிமாறன் போன்றோர் எண்ணிலடங்கும் படைப்புகளை சிங்கைக்கு நல்கியுள்ளனர்.

செ.ப. பன்னீர்செல்வம் தமிழர்களின் வரலாறுகளை ஆதாரமாகக் கொண்டு நூல்களைப் படைத்திருக்கிறார். தமிழாசிரியர் பொன் சுந்தரராசு 'தெமாசிக்’, 'சுண்ணாம்பு அரிசி' போன்ற 19 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இராம. கண்ணபிரான் சிறுகதை, கட்டுரை என 14 நூல்கள் படைத்துள்ளார். 'பீடம்' புதினத்தின் ஆசிரியரான அவர் தமிழ் இலக்கியவாதிகளுக்கு ஒரு முன்னோடியாக விளங்குபவர். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் கமலாதேவி அரவிந்தன் தமிழிலும் 'நுவல்' போன்ற பல நூல்களை எழுதிக்கொண்டு வருபவர்.

பேராசிரியர் தமிழறிஞர் சுப. திண்ணப்பனார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக்கொண்டே ஏராளமான தமிழ்ப் படைப்பாளர்களை உருவாக்கியவர். எழுத்தாளர்களுக்கு அணிந்துரைகளைத் தந்து ஊக்கப்படுத்தியவர். கட்டுரை, ஆய்வு நூல்களைத் தனியாகவும் இணைந்தும் தொகுத்தளித்தவர். முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதன் அவர்கள் ‘உழைப்பின் உயர்வு’ என்ற தன் சுயசரிதையை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். அதேபோல் அம்பாசிடர் கே. கேசவபாணி அவர்களும் 'தோட்டப் புறத்திலிருந்து தூதரகம் வரை' என்ற தம் சுய சரிதையை எழுதி சிங்கப்பூர் வரலாறுகளைப் பதிவு செய்திருக்கிறார். அத்துடன் அவர் 'நாகப்பட்டினம் முதல் சுவர்ணபுரிவரை" என்ற தமிழர்களின் சிங்கை வருகையைப் பதிவு செய்து நூலாகத் தொகுத்தளித்திருக்கிறார். தமிழாசிரியர் ப. கேசவன் பல நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் அவர் எழுதிய 'எளிய தமிழில் இனிய இலக்கணம்' என்ற நூல் சிறந்த நூலெனத் தமிழக அரசு தேர்வுசெய்து பரிசளித்திருக்கிறது.

சிங்கையிலேயே பிறந்து வளர்ந்து மறைந்த எம்.கே. நாராயணன் வானொலியின் தலைவராகப் பணியாற்றிய போது மகாபாரதக் கதையை நாடகமாக்கியவர். மர்மக்கதை மன்னர் என்றழைக்கப்படும் அவர், நாட்டின் தந்தை லீ குவான் யூவின் வாழ்க்கை வரலாற்று நூலையும், சிங்கப்பூர் இந்தியர்கள் வரலாற்று நூலையும் எழுதியவர். தமிழர்களை ஆவணப்படுத்தி 'இருநூற்றுவர்' என்ற இரு பாகங்களை இளையர் மன்றத் தலைவர் முனைவர் அ. வீரமணி, வெளியிட்டுள்ளார். 'வானம் வசப்படும்' எனும் தன்முனைப்புத் தொகுப்பு நூல் மூலம் உலகத் தலைவர்களைச் சிங்கைக்குக் கொண்டுவந்து சேர்த்தார் அழகியபாண்டியன்.

தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து சிங்கப்பூரில் நிரந்தரவாசம் பெற்றவர்களின் இலக்கியப் பங்களிப்புக் குறிப்பிடத்தக்க, பெரிய அளவில் இருந்து வருகின்றன. உதாரணமாகக் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ 30 கவிதை, கட்டுரை நூல்களைப் படைத்துள்ளார்.

கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தைப் போல் கவிமாலை என்ற அமைப்பும் 160க்கும் அதிகமான நூல்களைச் சிங்கப்பூரில் வெளியிட்டுக் கொடுத்துச் சாதனை புரிந்திருக்கிறது. அதற்கு மூல காரணமாக இருந்தவரும் அதன் காப்பாளருமான மா. அன்பழகன் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என 38 புத்தகங்களை யாத்துச் சிங்கை இலக்கிய உலகுக்குப் பங்களித்திருக்கிறார். கதை, கட்டுரை, மொழிபெயர்ப்புகளைக் கொண்ட 26 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் ஜெயந்தி சங்கர்.

சிங்கப்பூரில் பதிப்பகம் என்று பெரிதாக இல்லை. அதற்குக் காரணம் அச்சடிக்கும் செலவினம் அதிகம் என்பதே. படைப்பாளர்கள், சிங்கையில் ஆகும் செலவில், பாதி விலையில் மலேசியாவிலும், அதில் பாதி செலவில் தமிழகத்திலும் அச்சாக்கிக் கொண்டு வந்துவிடுகின்றனர். எல்லோரும் பதிப்பகம் என்ற ஒரு பெயரை உருவாக்கிக்கொள்கின்றனரே தவிர தொழில் முறையான பதிப்பகங்கள் இங்கு இல்லை.

சிங்கப்பூரில் அரசின் ஆதரவுபெற்ற அமைப்பானத் தேசிய கலைகள் மன்றத்திடம் படைப்பாளர்கள் தங்கள் நூல்களை அச்சிடப் பொருளுதவி கோரலாம். வெளியிட உகந்தது என்று கருதினால் நிதி ஆதரவு தருகிறார்கள். அத்துடன் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் படைத்த நூல்களை விலைக்கு வாங்கி 26 பொது நூலகங்களிலும், 3 பிராந்திய நூலகங்களிலும் வைத்து, பொதுமக்கள் இரவல் வாங்கிப் படிக்க வழியமைத்திருக்கிறார்கள். அத்துடன் நூல் வெளியீடுகளையும் நடத்திக்கொள்ள இலவசமாக இடம் கொடுத்துப் பேருதவி செய்து வருகிறது. எங்கள் நூலகத்தைப் பார்த்துத்தான் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது.

இன்று சிங்கப்பூரைப் பொருத்தவரை தமிழ்முரசு நாளிதழ் மட்டுமே இருக்கிறது. திங்களிதழ்களாக மக்கள்மனம், சிராங்கூன் டைம்ஸ் இதழ்களும் இலக்கிய வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகின்றன.

2024ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்தம் 6 மில்லியன் மக்கள் வாழும் நாடு சிங்கப்பூர். சீனர்கள் 76, மலாய்க்காரர்கள் 15, இந்தியர்கள் 8 விழுக்காட்டினர் இருப்பதாக கணக்கிடுகிறார்கள்.

சிங்கப்பூரில் ஆட்சிமொழியாகப் பூர்வீக மொழியாகிய மலாய் மொழியை வைத்திருந்தாலும் அரசு அதிகாரத்துவ மொழிகளாக ஆங்கிலம், சீனம், மலாய், மற்றும் தமிழ்மொழியை அங்கீகரித்துள்ளது. எந்த அரசு அலுவலகத்திலும் நம் தாய்மொழியில் கேள்விகள் கேட்கலாம். ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.

இந்த நாட்டின் தந்தை என்று போற்றப்படும் மறைந்த லீ குவான் யூ அவர்கள். நாடு விடுதலை பெற்ற பின்பு இந்த நாட்டின் உருவாக்கத்திற்கு அவர் பாடுபட்டபோது அவருக்கு வலது கரமாய் நின்று உதவியவர்கள் தமிழர்கள் என்பதால் எப்போதுமே அவருக்கும் அவருடைய மகன் அண்மையில் ஓய்வுபெற்ற பிரதமர் லீ சியன் லூங்கும் நம் தமிழர்கள் மீது தனிக் கவனம் செலுத்தும் குணமுடையவர்கள். அதனால் நமக்குரிய பிரதிநிதித்துவத்தைவிட அதிகமாகவே எல்லா துறைகளிலும் தந்து வருகிறார்கள்.

அவரவர் தாய் மொழியை இரண்டாம் மொழியாகத் தேர்வுசெய்து படியுங்கள் என்று அரசு அறிவுறுத்துகிறது. நான்கு மொழிகளுக்கும் சம அளவில் பங்களிப்பைத் தருகிறார்கள். சிறந்த தமிழ்ப் படைப்புகளுக்குப் புத்தக மேம்பாட்டு கழகத்தால் கவிதை, கட்டுரை, புதினம், புதினம் அல்லாதவை, மொழிபெயர்ப்பு என ஐந்து துறைகளுக்கு விருதுகளைத் தந்து ஊக்கம் அளிக்கிறது. அத்துடன் அரசின் தேசியக் கலைகள் மன்றம் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நிமித்தமாகச் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்கும் போட்டி வைத்துத் 'தங்கமுனை' என்ற பெயரில் மதிப்புமிக்க விருதுகளை வழங்குகிறது. சிங்கப்பூரில் உள்ள 50 தமிழ் அமைப்புகளும் ஏராளமான பரிசுகளைப் படைப்பாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். இருந்தாலும் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர்களின் படைப்புகள் பெரிய அளவில் வரவில்லையே என்ற ஏக்கம் எல்லோரிடமும் இருந்து வருகிறது.

புதுமைத்தேனீ மா.அன்பழகன், கவிஞர், எழுத்தாளர். சிங்கப்பூர்க் கவிமாலை அமைப்பின் காப்பாளர். துணைத் தலைவர், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்.