ஜெபி என்றழைக்கப்படும் கு. ஜெயபிரகாஷ் எழுதிய நாவல். முதல் நாவலான "முனைவர்" மூலம் பரவலாக அறியப்பட்டவரின் இரண்டாவது நாவல் "சா".

ku jeyaprakash novelநாவலின் வடிவமைப்பு எளிமையாக கச்சிதமாக உள்ளது. சொல்ல வந்த தளம் மிகப் பெரிது. சா மரணம், இந்த ஆதி வார்த்தையின் அதிர்வுகள் மனித குலத்தின் ரத்த நாளங்களில் யுகயுகமாய் ஓடிக் கொண்டிருக்கின்றன ஆனால் மரணம் குறித்த மற்ற நூல்களில் இது வேறுபட்டு நிற்பது இதன் எதார்த்த கதைக்களத்தில் தான். மாய வாதமோ தத்துவார்த்தமோ.. இன்றி வாழ்வின் போக்கில் மரணமும் ஒரு தற்செயல் தான் என்கிறது நாவல் "சா".

          முகப்பு அட்டைப் படத்தில் இருந்தே தன் கதையை ஆரம்பித்து விடுகிறார் ஜெபி. ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ப்புப் பறவையான "கோல்ட் பிஞ்சை" (The gold finch) அழியாத காவியமாக வரைந்த "காரல் பேப்ரிட்டிஸின்" ஓவியம் அட்டையை அலங்கரிக்கிறது. 

மொத்தம் மூன்று பகுதிகளாகவும், பகுதிக்கு ஒன்று என 32 + 3 = 35 மேற்கோள்கள். இவரின் மேற்கோள்கள் ஒவ்வொன்றும் அத்தியாயங்களுக்கு மிகச் சரியாய் பொருந்தியுள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்களின் மேற்கோள்களை எடுத்தாளப் பட்டிருப்பதே ஜெபின் உழைப்பைப் பறைசாற்றுகின்றன.

அம்மா, அக்கா, மனைவி, மகள்,வளர்ப்பு நாய், வாழவைக்கும் பூமி, பிரிந்துசென்ற அப்பா என தன் உயிர்ஒப்ப உறவுகளை இழக்கும் ஒரு சாதாரணின் கதை. ஒவ்வொரு இழப்புகளோடும் அவன் தன்னுயிரையும் மாய்த்துக் கொள்ள முயன்று தட்டுத்தடுமாறி வாழ்ந்து வரும் சாதாரணின் அசாதாரணக் கதை.

 மேலோட்டமாக வாசித்தால் "மரணம்" தான் "சா" நாவலில் மையமாய் தெரிந்தாலும் ஜெபி உள்ளர்த்தமாக வைத்திருப்பது நம்பிக்கைதான். 

பத்தாவது மாடியிலிருந்து குதிக்க முற்படும் 50 வயது மனிதனுக்கும் அவனின் மனசாட்சிக்குமான உரையாடலில் தூங்கும் நாவல் முழுக்க முழுக்க அவன் பார்வையிலேயே விவரிக்கப்படுகிறது.

 முதல் சில அத்தியாயங்களில் மரணத்தின் குணம், வாசனை, நிறம் என வாசகரை உள்ளிழுக்கும் கதையோட்டம்.

 மரணம் ஒரு பொருளா? ஒரு நிலையா? பௌதிகமா? வேதிகமா? எதுவாயினும் மரணத்தின் அடிநாதம் அறமாக இருப்பதை, "பிறர் அழுவதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திற்காகவே நீ இறந்திட வேண்டும்" என்ற வரிகளில் பேசுகிறது "சா".

 பத்துமாடி உயரம் என்பது ஒரு உச்ச நிலை. ஞானம், பைத்தியம், குழப்பம்... உச்ச நிலையை நாம் அடையும்போது நமக்கு அனைத்தும் சமமாகத் தெரிகிறது மரணத்திற்கும் தன்முன் உள்ள மக்களின் முகங்களை கண்டறிய முடியவில்லை அதன் உயரமும் முகமும் அப்படி வாழ்வின் வாசனையை சுவாசித்து அறியலாம். 

மரணத்தின் வாசனையை? வெகுசிலரே அறித்திருக்கக் கூடிய வாசனையை " ஜெபி" நம் நாசிக்குக் கடத்துகிறார். " சாமந்திப்பூ" நாம் பல மரண வீடுகளில் பார்த்திருப்போம். மரணத்தை அலங்கரிக்கும் சாமந்திப்பூவின் வாசனையை பக்கம்தோறும் வீசிப்போகிறது சா.

ஒரு பேருந்துப்பயணம் ரோட்டோரம் சென்றுகொண்டிருக்கும் சாவு ஊர்வலத்தில் வீசப்பட்டு, பேருந்து இருக்கையில் விழுகிற சாமந்திப்பூ அதை கையில் எடுத்து வைத்துக் கொள்கிறாள் அங்கு அமரவரும் பெண் கொஞ்சம் நேரத்தில் சாலையில் அடிபட்டு இறந்தக் குரங்கு குட்டியின், உறைந்திருந்த ரத்தக் கரையில் இந்த சாமந்திப்பூவை வைக்கிறாள். மரணத்தில் துவங்கி மரணத்தில் முடிகிறது "சா".

இயல்பாகவே மனித கைகளில் இருப்பதைவிட மரணத்தின் கைகளில் இருக்கவே விரும்புகிறதோ சாமந்திப்பூ? 

தயவுசெய்து என் இறப்புக்கு யாரும் சாமந்திப் பூ மாலையைக் கொண்டு வராதீர்கள் என்று எழுதி வைத்துவிட்டு சாக வேண்டும்.. சதா மரணம் நிகழும் வீட்டுக்காரனின் உளவியல் இது. மரணத்தின் வாசனை சாமந்திப்பூவாக இருக்கும் பொருட்டு மரணத்தின் நிறமும் சிவப்பிலிருந்து மஞ்சளாக வெளிறிக் கொண்டிருக்கிறது.

சாந்தி அக்கா சிறுவயதிலேயே மரணித்த அம்மா அப்பா என்று இருந்து இவன் பால்யத்தை வளர்த்த தேவதை சாந்தி அக்கா.

சாந்தி அக்காவின் மரணம் தான் இவனை பாதித்த முதல் மரணம். அதன்பின் எந்த உயிரற்ற உடலைப் பார்த்தாலும் இவனுக்கு தீயில் எரிந்து கிடந்த மூக்கழகி அக்காவின் மூக்குதான் நினைவுக்கு வருகிறது.

அக்காவின் மரணமும் தந்தையின் தொலைதலும் சாமந்திப் பூவின் வாசனையும் இவனை நகரை நோக்கி ஓட வைக்கிறது. நகரம், பசி, டீக்கடை, ஓட்டல் வேலை மீண்டும் ஊர் திரும்பும் இவனின் வாழ்வில் பச்சையங்கள் ராஜபாண்டி மாமா, சாவித்திரி, சாதனா வடிவில் துளிர்க்கின்றன.

சாந்தி அக்கா மேல் கொண்ட காதலாலும் கொடுத்த வாக்காலும் ராஜ பாண்டி மாமா இவனை தன் வாழ்நாள் முழுவதும் காத்து நிற்கிறார். அன்பு மனைவி சாவித்திரியும் ஆருயிர் மகள் சாதனாவும் இவன் வாழ்வின் மறுபக்கமாகிறார்கள்.

 நடனமும் இசையும் கைவந்த சுட்டிப் பெண்ணான சாதனா மதிப்பெண் கல்வியிலும் சாவித்திரியின் கண்டிப்பிலும் தன்னை மாய்த்துக் கொள்ள இவன் வீட்டில் மீண்டும் சாவின் நிழல் படியத் தொடங்குகிறது.

குற்ற உணர்வின் மிகுதியால் தாய் சாவித்திரி வலிந்து மெலிந்து நொடிப்பொழுதும் சாதனா சாதனா என்று அரட்டி உச்சரித்து மரத்துப் போக மீண்டும் சாவின் பிடி இறுக இவன் ஓடி ஓடி இதோ இப்போது பத்தாவது மாடியில் வந்து நிற்கிறான்.

இடையறாத உளக்கேள்விகளால் தன் முன் நிற்கும் வாழ்தல் /சாதல் இரண்டில் இவன் தன்னை வாழ்விற்கு ஒப்புக் கொள்கிறான். நாவலின் உயிரும் இந்தப் பகுதிதான் இங்குதான் இவனும், ஜெ பியும், நாமும் மரணத்தை தாண்டிச் செல்கிறோம். தாண்டி போகக்கூடிய ஒன்றின் மீது பயத்தின் பிடி தளர்கிறது.

அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளியாக வேலைக்குச் சேர்பவன் யாருடனும் பேசுவதில்லை. எச்சில் நாற்ற விசில், குடியிருப்புவாசிகள் மீந்த உணவு, எதைப் பற்றியும் புலம்பவில்லை. சாமியை பார்த்து மட்டும் புன்னகைப்பான்.

சாமி பெயரே அவருக்கான அடையாளம் ஒற்றை விபத்தில் தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழந்த அவர் தன் வாழ்வை பிறருக்காக வாழ்ந்து அர்த்தப்படுத்திக் கொள்கின்றார். 

அம்மா, அக்கா, மனைவி, மகள், அப்பா, தோட்டம் அனைத்தையும் ஒருவர் இழக்க முடியுமா? ஒவ்வொருவரும் யாரோ ஒருவரை ஏதோ ஒன்றை இழந்திருக்கத்தான் வேண்டும்.

அப்படிப் பார்க்கையில் இது ஒவ்வொருவரின் கதையும் கூட.

          தத்துவமாகவும்... சுய நம்பிக்கையாகவும்... அதிகாரப்பகடியாகவும்....

கதையாகவும்.... உயிர்வதையாகவும்... காதலாகவும்...நீளும் இழப்பாகவும்.. சமூக அவலமாகவும்.... உத்வேகமாகவும்.. சூழலியலாகவும்..

தன் பக்கங்களில் நின்று நிதானித்து தெளிவாக அழுத்தி பேசுகிறது "சா". யாவும் மரணத்தோடு முடிந்து விட்டால் வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும் என்று 50 வயது ஆளாக பேசுகிறார் இருப்பத்தி ஆறே ஆன ஜெபி. 

ஒரு படைப்பு உள்வாங்கப்பட்டதும் ஒன்று சமன்குலைக்கும் அல்லது சமன்படுத்தும் "சா" தன்னளவில் இரண்டையுமே செய்கிறது. தொடக்கத்தில் சமன்குலைத்து கனப்படுத்தி முடிவில் சமன்படுத்தி லகுவாக்குகிறது. இவ்வகையில் தமிழின் முக்கிய நாவலாக மலர்ந்து கொண்டிருக்கும் இந்த மரணப்பூ.

நூலின் பெயர்: சா

நூலின் ஆசிரியர்: கு.ஜெயபிரகாஷ்

நூலின் வகை: புதினம் 

பதிப்பகம்: ஆதி பதிப்பகம்

விலை: 120/-

- கவிஞர் நான் ராம்