ஒரு விதமான துயர மொழியால் நிகழ்ந்திருப்பவை இந்த கவிதை நூல்.

அடுத்தடுத்த முடிச்சுகளால் கரும்பின் சுவையை உள் கொண்டிருக்கும் இவ்வாழ்வின் பெருங்கதவுகளை எல்லாம் சிறு சிறு கவிதைகளால் திறந்து விட எடுத்திருக்கும் முயற்சியை பாராட்ட வேண்டும். இறகென இருத்தல் தான் சிரமம். சிறகிலிருந்து தனித்து வந்த இறகிற்கு இந்த வானம் அத்தனை இலகுவல்ல. மானுட பேராவலின் தகிப்பு ஓர் தனித்த இறகின் இம்சையில் இருக்கிறது. அது தான் இந்த கவிதை நூல். நிழற்ற நெருப்பற்ற காற்றற்ற ஆகாயமற்ற ஒரு துளி என்ன செய்யுமோ அதைத்தான் செய்கிறது.... இந்த நூல்.

karthika poem bookஇந்த மென்னடையில்.. வழியெங்கும்... சிறு பூக்கள். சிறுபூக்களில் உட்புகும் சிறுபூச்சிகளின் வாழ்வுக்குத்தான் பெரிய பிரயத்தனங்கள் தேவையாய் இருக்கிறது. பிரார்த்தனைகளோடு பிரியும் ஒவ்வொரு பக்கத்திலும்.... ஒரு புதிரற்ற வாழ்வு தன்னில் புத்துயிர் கொள்கிறது.

புத்தகம் பிரித்து பார்த்த முதல் பார்வையிலேயே இந்த கவிதை தான் கண்ணில் பட்டது.

"எதிர்பார்ப்புகளை ஏமாற்றி விட்டு
இந்த மாதமும்
பீறிட்ட அழைப்புக்குப் பின்
நாப்கின் வாங்க
மருந்தகம் போகிறேன்
ஒருவர் பேம்பர்ஸ் வாங்கிக் கொண்டிருக்கிறார்
இன்னொருவர் ஆணுறை வாங்கிக் கொண்டிருக்கிறார்"

மறுபடியும் படித்துப் பார்த்தேன். ஒரு வாழ்வின் தீரா பக்கம் என்னை படித்துக் கொண்டிருந்தது. இது ஒரு முரண். திருமணமும்.. அதன் நீட்சியென வரும் குழந்தையின் அற்புதமும்.. சேர்ந்து கலந்த ஆற்றாமையின் அசூசை. ஒரு பெண்ணின் தனித்த குமுறல் இது. இந்த வெளி எல்லா வண்ணங்களையும் சிதறடித்து கொண்டு தான் இருக்கும். அங்கே நாம் மட்டும் கருப்பு வெள்ளையில் நிற்பது.... ஒருவர் இன்னொருவராக ஆகவே முடியாத கூற்றின் நிதர்சனம்.

"தெரியாது வந்தது என்ற
உன் முதல் கங்குக்கு பின்"
என்று ஆரம்பிக்கும் முதல் கவிதையிலேயே என்னுள் காட்டு தீ பரவ ஆரம்பித்தது. தூக்கத்தில் கூட ஒலிக்கும் வெங்குரலை நான் கண்டேன். மிக நடுக்கத்தோடு.. கவிதையாய் இருப்பினும் ஓர் அவசரத்தை வைத்து கொண்டு முடிவை இப்படி சொல்கிறார்.

"நீயில்லா என் இருத்தல் பற்றி சொல்ல
உண்மையில் இல்லை தான் ஒன்றுமே"

ஒரு சூனிய வெளியில் சூத்திரமற்று அமர்ந்திருக்கும் ஒரு நெடுந்துயரத்தை இப்படி போகிற போக்கில் சொல்லி விட்டு எனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல பார்க்கும் ஆசிரியரின் ஆழ்மனதை ஸீரோ டிகிரிக்கும் குறைவான குளிரில் நான் அசை போடுகிறேன்.

இன்னொரு கவிதை மிக நெருக்கமாக எட்டிப் பார்க்க வைத்தது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒரே மாதிரியான சம்பவத்தின் வெளிப்பாடு கவிதையாகியிருக்கிறது.

"பாட்டி விறகில் எரித்தார்
அம்மா மண்ணெண்ணெய்
நான் எரிவாயு உருளை
மகள் மின்னணு அடுப்பு
தவிர மாற்றமேதுமில்லை
சமையலறை ஒன்று தான்"

எனக்கு தெரிந்த ஒரு நூற்றாண்டு பெண்களின் நிலையை ஆறடியில் சொல்லி விட்டார். சமையலறையில் சுற்றும் வியர்வையில்தான் "சும்மாதானயிருக்க" என்ற பெண்ணின் நிலைப்பாடு வேக வைக்கப் படுகிறது.

"வண்ண வண்ண
சாயங்களால்
வார்த்தெடுக்கப் பட்ட
விநாயகரை

இவ்வருடமும்
அதே ஆடல் பாடலொடு
தாரைகள் பல முழங்க

ஊரை வலம் வந்து
ஆற்றங்கரையில்
இறக்கி விட்டு
திரும்பியாயிற்று

இன்னும் நகராது
கரையாது கிடக்கிறார்
மணல் நீச்சல் தெரியாத
விநாயகர்"

நீரும் ஆறும்... நதியும் குளமும்... குட்டையும்... கண்மாயும்... ஏரியும்... எல்லாமும் மணலாகி போன கதையை.. அல்லது மணலெல்லாம் லாரியில் துளியாகி போன கதையை.... அல்லது.... விநாயகரை திடும்மென அழைத்து வந்து தென்னகத்தில் ஊர்வலமேற்றிய கதையை.... அல்லது... ஒரு மிக நுட்பமான அரசியலை இக்கவிதை பேசுகிறது.

சாயங்களால் அழிவுற்ற இனம் நாம். அறிவார்ந்த சிந்தனையின் வாயிலாகத்தான் மீட்டெடுக்க வேண்டி இருக்கிறது.

கவிதைக்காரர்களுக்கு சற்று பிரத்தேயகமான் வாழ்வு தான் அமையும். இந்த நூலின் ஆசிரியர் கார்த்திகாவுக்கு அது தான் நிகழ்ந்திருக்கிறது. அவரின் வரிகளில்.... நிறைவுறாத திருப்பங்களை நான் உணர்கிறேன். அம்மாச்சி ஊரில் உருவானது தான் இந்த நூலில் ஒவ்வொரு பக்கமும் என்று நம்புகிறேன். அம்மாச்சிகள் அம்மாச்சிக்களாக மட்டும் இருப்பதில்லை. ஆசான்களாவும் இருக்கிறார்கள். அம்மாச்சி ஊரில் தான்....ஆன்ம யோசனைகள் குடி கொண்டிருக்கும். அவை தான் பின்னெப்போதோ கவிதைகளாக வரம் தந்திருக்கும். தந்தவை எல்லாம் வரம் தான். ஆனால் பெற்றவை எல்லாம் வரமா என்றால்.. தவம் நீண்டிருக்க வேண்டும். நீளும் என்று தான் நம்புகிறேன். நிறைய படிக்க வேண்டும். நிறைய மானுட பயணங்கள் நிகழ வேண்டும். நித்திரைக்குள்ளிருந்து கனவுகள் வரலாம். மனத்திரையற்ற கவிதைகள் மானுட யாத்திரையில் தான் நிகழும்.

முதல் தொகுப்பில் இருக்கும் குறைகளும் கணக்கட்சிதமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அட்டைப்படம் மாற்றி இருக்க வேண்டும். இத்தனை மெல்லியதாக இறகோடு நின்றிருக்க வேண்டாம்... தலைப்பு. அறிவுரை சொல்லும் பாங்கை அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டால்.. இலக்கிய அனுபவம் படிப்போருக்கு வாய்க்கும் என்பது அறிவுரை அல்ல. அக்கறை.

பாதிக்குப் பாதி கவிதைகள் கை கூடி இருக்கின்றன. மீதி பாதியில்.. சில கை கடித்திருக்கின்றன. சில பார்ம்க்கே வரவில்லை. மற்றபடி....முதல் தொகுப்பில்... ஹாப் செஞ்சூரி அடித்திருக்கும் ஆசிரியர் கார்த்திக்கு வாழ்த்துக்களை சொல்லலாம்.... கூட ஒரு பூங்கொத்தோடு ஒரு புன்னகையையும்.......

வாங்கி படிப்போருக்கு...

நூல் : இறகென இருத்தல்
ஆசிரியர் : செ. கார்த்திகா
விலை : ரூ 60/-
கிடைக்குமிடம் : 9095507547

- கவிஜி

Pin It