கதை நிகழ்ந்த காலத்தை கண்டடைதல்:
நிலமும் பொழுதும் ’முதற்பொருள்’ என்று சொல்கிறது செந்தமிழ் இலக்கணம். இலக்கியங்களில் பயின்றுவரும் களமும் காலமும் தமிழிலக்கியத்தின் செவ்வியல் பண்புகளுக்கு வலுச்சேர்க்கும் காரணிகள். ‘கறிச்சோறு’ நாவலின் கதை நிகழும் களம் என்பது, காவிரியாறு பாயும் தஞ்சை மண்டலத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் சாலியமங்கலத்தை ஒட்டிய கிராமங்களாக உள்ளன. இந்தக்கதை நிகழ்ந்த காலத்தை கதையின்வழி அறிய முயற்சிக்கலாம்.
நாவல், சிறுகதைகள் என்பது சமூகத்தின் பிரதிகள் என்ற பொழுதிலும் அவை சமூக நிகழ்வுகளை இடம், நாள், சம்பவங்களை ஒரு வரலாற்றுப் பதிவினைப் போல் குறிப்பிடுவதில்லை. வரலாறு என்பது சார்புத் தன்மையுடையது. வரலாறு அதிகார மையங்களையே முக்கியத்துவப்படுத்தும். எக்காலத்திலும் வரலாறு என்பது வெகுமக்களின் வரலாறாக இருந்தது இல்லை. நாட்டில் வாழும் பெரும்பான்மை தொகையினரின் சமுகக் பண்பாட்டு வாழ்வியல் சார்புகளையும் அவர்களது வாழ்வியல் நம்பிக்கைகளையும் வரலாறு தன்னகத்தே கொண்டிருப்பதில்லை. இந்தக்குறையை இலக்கியம் போக்கிவிடுன்றது. இலக்கியம் வெகுமக்களின் கதையைப் பேசுகின்றது. அவ்வாறு பேசும்பொழுது அந்தக்கதையைச் சொல்லும் எழுத்தாளரின் பார்வையும், விளக்கமுமாகவே இலக்கியங்கள் அமைவது தவிர்க்க முடியாதது.
இவ்வாறு, புனைவு இலக்கியங்கள் வரலாற்றுப் பதிவுகளிலிருந்து வேறுபட்டு நின்றாலும், அந்தக்களத்தில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு உண்மையான வரலாற்றுச் சம்பவங்களின் மீது தான் அந்தப்புனைவு எழ முடியும். எனவே, நாவல் எனும் பெருங்கதையாடல் நிகழ்த்தப்படும்போது, அதில் எத்துணைப்பங்கு உண்மை, எத்துணைப்பங்கு புனைவு என்பதனை தேர்ந்தெடுக்கும் உரிமை படைப்பாளனின் வசம் ஒப்புவிக்கப்பட்ட உரிமையாகின்றது.
ஆனால், எழுத்தாளன் ஒரு வாசகனிடம் அந்தப்புனைவை கடத்துவதற்கான உயர்நோக்கம் என்னவாக இருக்க முடியும்? நடந்த கதையை அப்படியே ஒரு வரலாற்றுப் பதிவாக தராமல், அந்நிகழ்வுகள் குறித்த தனது பார்வை ஒழுங்கை, தன்னையொத்த இன்னொருவனிடம், ஒரு வாசகனிடம் கடத்த வேண்டிய அல்லது குறைந்த பட்சம் அந்தக்கதையை இன்னொருவரிடம் சொல்ல வேண்டிய தேவை ஒரு படைப்பாளனுக்கு ஏன் எழுகின்றது?
நீல.பத்மநாபன், தனது ‘தலைமுறைகள்’ நாவலின் முன்னுரையில், அந்நாவலில் புனவின் தன்மை பற்றி பொதுவாகக் குறிப்பிடும்போது, “புனைவு என்ற பெயரில், உண்மையாகவே நடந்த அந்த கதையில் வரும், கதைமாந்தர்களின் பெயர்களையும், ஊர்களையும் மாற்றி எழுதுவதன் மூலம், அவர்கள் அவமானப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை” என்று கூறுவார். இது அண்மைக்கால வட்டார புனைவிலக்கியவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாகவே ஆகியிருக்கின்றது, என்பதற்கு அவ்விலக்கியங்களை படைக்கும் எழுத்தாளர்களின் வாக்குமூலத்திலிருந்தே அறிய முடிகின்றது.
நடுநாட்டு மக்கள் கதையை எழுதும், கண்மணி குணசேகரன் அவரது ‘அஞ்சலை’ நாவலில் வரும் முக்கிய கதாப்பாத்திரமான ‘அஞ்சலை’ அவரது தெருவில் இன்றும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி தான் என்று ஒத்துக்கொள்கிறார்.
ஆகவே, தற்கால புனைவிலக்கிய படைப்புகளில், கதைநிகழும் களம், கதைமாந்தர்களை பற்றியச் செய்திகளில் பெயர் மாற்றங்களைக்கூட விரும்பாத அசல் விவரணைகளே, வட்டார நாவல்களின் உயிர்த்துடிப்பாக இருக்க முடியும், என்று கோட்பாடு எழுந்து வருகின்றது.
இந்தப்புதிய கோட்பாட்டின் வழியமைந்த வட்டார நாவல்களின் படைப்பு வீரியத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்த கதை நிகழும் காலத்தை படைப்பினூடே சொல்ல வேண்டியது மிக முக்கியமானதாகிறது.
சான்றாக, ‘கறிச்சோறு’ நாவலின், நாயகியைப்போல வலம்வரும் ‘கமலா’ - ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் வயதிற்கு வந்துவிட்டதால், அத்தோடு படிப்பிற்கு முழுக்கு போடப்பட்டது. ஏனெனில் ‘வாகரக் கள்ளர்’ சாதி மரபில் வயதிற்கு வந்த பெண் வெளியில் செல்வதும், பிற ஆண்கள் பார்க்கும்படி நடமாடுவது என்பதெல்லாம் கிடையாது” என்று நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
தற்காலத்தில், இந்த மரபு வழக்கில் இல்லாததை பெண்கல்வியின் வளர்ச்சியிலிருந்து அறிந்துகொள்ள முடியும். ஆயின், படைப்பாளன் கூறுவதைப்போல வயதிற்கு வந்த ’வாகரச்சாதிப்பெண்களை’ வெளியில் அனுப்பும் வழக்கமில்லை, என்று எழுத்தாளர் பதிவுச்செய்வதை அந்த வழக்கமிருந்த காலத்தோடு அதைப்பொருத்திப் பார்த்துக்கொள்ள வாசகன் முயலும்போது, அவ்வழக்கம் எக்காலத்தில் நடப்பில் இருந்தது, என்பதனை அறிந்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் படைப்பாளன் தனது கதையில் காட்ட வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகின்றது. இல்லையெனில் அந்தப்பதிவின் நம்பகத்தன்மை குறித்து வாசகனுக்குள் ஐயங்கள் எழக்கூடும்!
அந்த வகையில் நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதையம்சத்தின் வழி, அது நிகழ்ந்த காலத்தை கண்டடைய முயல்வதற்கு சில நிகழ்வுகள் ஆதாரமாகக் கொள்ளலாம். ’வாகரக்கள்ளர்’ சாதி வழக்கத்தை மீறி, கமலாவின் அப்பா முத்துக்கண்ணு விசுவராயர், தெற்குச்சீமைக்கு மாப்பிள்ளை பார்க்கச் செல்கின்றார். தெற்குச்சீமையில் அறுத்தக்கட்டிக் கள்ளன்களோடு கொள்வினை கொடுப்பினை வைத்துக்கொண்டால், வாகரக்கள்ளர்களின் பெருமை குறைந்துவிடும், என்று உள்ளூர் சாதியத்தலைமைகள் (அவர்களே கிராமத்தலைவர்களுமாக இருக்கின்றனர்) எதிர்க்கின்றன.
இந்நிலையில், தெற்குச்சீமையில் சோத்துப்பட்டு மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து வரும் கடிதத்தில், ‘மாப்பிள்ளை பூண்டி வாண்டையார் கல்லூரியில் தொடர்ந்து படிக்க விரும்புவதால், அவனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க பெரும்பாடுப்பட்டதாக” நாவலில் வரும்.
’கறிச்சோறு’ நாவல் கதை நிகழும் காலத்தை கணக்கிடுவதற்கு, இந்தச்சம்பவத்தை நாம் கணக்கில் எடுத்துக்கோண்டேமேயானல், பூண்டி வாண்டையார் கல்லூரி 1956-ற்கு பிறகு தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதானால், இந்தக்கதை விடுதலைக்கு பிறகான காலக்கட்டத்தில் நிகழ்கிறது என்பதனை அறிய முடிகின்றது. அத்துடன் திருமணம் போன்ற நிகழ்வுகளில் இரு வீட்டாருக்கு இடையேயான செய்தித்தொடர்புகள் கடிதவழி நடைப்பெற்றுள்ளதால், விடுதலைக்கு பிறகான காலக்கட்டத்தில் குறிப்பாக எந்த காலக்கட்டத்தில் நிகழ்கிறது என்பதனை உறுதிப்பட சொல்ல இயலவில்லை. ஏனெனில், கடித வழிச்செய்தித்தொடர்புகள் சாமனிய மக்களிடையே எப்பொழுது தொடங்கியது, எப்பொழுது அது முடிவுக்கு வந்து, செல்போன் வழி தொடர்புகள் தொடங்கின என்பதனை அறுதியிட்டுச் சொல்ல முடிவதில்லை.
நாவலின் இன்னொரு இடத்தில், உள்ளூர் வாகரக்கள்ளர்களின் பகையை தவிர்க்கும்பொருட்டும், கமலா-சாம்பசிவம் காதல்கதை ஊரறிந்த செய்தியாக விட்டப்படியாலும், கமலாவின் திருமணத்தை உடனடியாக நடத்த வேண்டிய கட்டாயத்தில் முத்துக்கண்ணு விசுவராயர் இருக்கிறார். தெற்குச்சீமைக்கு சம்மந்தம் போட போய் வந்த பிறகு, அதைக் கண்டித்த தருமையா நாட்டாரை,
‘எனது மகளுக்கு எந்தவூரில் வேண்டுமானாலும் மாப்பிள்ளை பார்ப்பேன்; இந்தவூர்க்காரன் என்ன செஞ்சிடாவோன்னு நானும் பார்த்துப்புடுறேன்”,
என்று ஆவேசமாகப் பேசியவர், அதே தருமையா நாட்டாரிடம் சென்று, ‘வாகரக்கள்ளர்ச் சாதியிலேயே’ தனது பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கு ஏற்பாடு செய்யுமாறு வழிக்கு வந்துவிடுகின்றார்.
’வாகரக்கள்ளர்’ சாதியிலேயே, முத்துக்கண்ணு விசுவராயர் தரத்திற்கு ஏற்ற மாப்பிள்ளையை, தருமையா நாட்டார் தேடிப்பிடித்து நிச்சயம் பண்ணுவித்த சில நாட்களில், நிச்சயம் செய்த மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஒரு கடிதம் வருகின்றது. அந்தக் கடிதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘திவ்ய சமூகம்’, ‘நமஸ்காரம்’, ‘சௌக்கியம்’, ‘இஸ்டப்பந்துக்கள்’ போன்ற சமஸ்கிருத சொற்களின் பயன்பாட்டைப் பார்க்கும்போது, சாமானியர்கள் எழுதும் கடிதங்களில் இத்தனை சமற்கிருத சொற்கள் இடம்பெற்றிருக்கிறது என்றால், இக்கதை சுமார் 1970-1980 அல்லது 1970-1990 காலக்கட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
இன்னொரு இடத்தில், கமலாவைக் காதலிக்கும் இளைஞன் சாம்பசிவத்தைப் பற்றிச் சொல்லும்போது,
‘சாம்பசிவம் சட்டையில்லாத உடம்போடு தலைமுண்டாசுடன் தொறட்டிக் கம்பைத் தோளில் வைத்தப்படி ஆட்டுக்கிடா ரெண்டை ஓட்டிக்கொண்டு’ போவதாக குறிப்பிடுகிறார்.
தொறட்டிக்கம்பைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடு மேய்க்கும் இளைஞர்களை இன்று காண்பதரிது. எனவே, இத்தகையச் சூழல் ஒரு தலைமுறைக்கு முன்பு நிலவியிருக்கக்கூடும்!
இலக்கியம் ஏன் எழுதப்படும் என்பதுப்பற்றி கூறுகையில், ”மனிதகுல வரலாறு எனும் நெடும்பரப்பில், ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள், ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வாழ்ந்த மானுடச்சமூகத்தின் வாழ்வியல் நம்பிக்கையாக எது இருந்தது என்பதனைப் பதிவுச் செய்வதற்காகவே இலக்கியங்கள் எழுதப்பட வேண்டும்”, என்று எழுத்தாளர் இமையம் தெளிவுப்படுத்துவார்.
’கறிச்சோறு’ காட்டும் மானுடச்சமூகத்தின் வாழ்வியல் நம்பிக்கையாக சாதி இருந்திருக்கின்றது, என்பது நாவலின் ஒவ்வொரு பக்கங்களிலிருந்தும் அறிய முடிகின்றது.
இமையம் குறிப்பிடும் அந்தக் குறிப்பிட்ட கால எல்லையை கண்டடைவதன் நோக்கம், இடமும் பொருளும் காலத்தோடு பொருந்தி வரும்பொழுது தான் கதைச்சொல்லியின் இலக்குகளும், நோக்கங்களும் குறைந்தபட்சம் படைப்பாளன் எழுதும்போது அவனுக்குள் எழுந்தநின்ற உணர்வு நிலையை வாசகனிடம் கடத்த முடியும்!
ஏனெனில், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலேயே நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக இனத்தின் வாழ்வியல் பண்பாட்டுக்கூறுகள், காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன என்பதனை தான் ‘தலைமுறைகள்’ நாவலில் நீல.பத்மநாபன் உணர்த்துவது. ஒரு சமூகம் ஒரு தலைமுறையில் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் இன்னொரு காலத்திற்கேற்ப மாற்றமுடைந்துள்ள தலைமுறைக்கும் பொருத்திப்பார்த்துவிட வாய்ப்புண்டு!
புனைவு இலக்கியங்கள் பெரும்பாலும் நிகழும்போதே எழுதப்படுவதில்லை. படைப்பாளனின் வாழ்வனுபத்தின் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் அவனுக்குள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்களை அவனது நினைவு அடுக்கிலிருந்து உருவி எடுத்துக்காட்டுகின்றான். அவ்வாறு நினைவுக்கூறும்பொழுது, சம்பவங்களுக்கு இடையே உள்ள ஒருமைப்பாட்டின் விளைவாக, ஒரு காலத்தில் நடந்த ஒரு நிகழ்வோடு, இன்னொரு காலத்தில் நடந்த ஒரு நிகழ்வினை காலப்பொருத்தமின்றி எடுத்துக்கூறிவிட நேரிடலாம். அது படைப்பாளன் அறிந்து செய்கின்ற வேலையல்ல. அது நினைவுக்குறிப்புகளின் தன்னிச்சையான இணைப்புகளினால் ஏற்படும் இயற்பிழையே!
இந்த எனது கருதுகோளிற்கு சான்று காட்டுவெதெனில், இந்தக்கட்டுரையில், நாவலில் வருவதாக நான் சுட்டிக்காட்டிய கடிதம், முத்துக்கண்ணு விசுவராயர் தெற்குச்சீமையான நெல்லுப்பட்டுக்குப் போய் வந்த மாப்பிள்ளை பார்த்துவிட்டு வந்த பிறகு, மாப்பிள்ளை வீட்டார் எழுதியக் கடிதமே. ஆனால், இக்கட்டுரையில் தருமையா நாட்டார் மூல வாகரைக்கள்ளச்சாதியிலேயே கமலாவிற்கு ஒரு சம்பந்தம் பேசி நிச்சயம் முடித்த பிறகு அவர்கள் எழுதிய கடிதமென குறிப்பிட்டுள்ளேன். இந்தப்பிழை ஏன் நேர்கின்றது?
வாசிப்பனுபவம் ஏற்படுத்திய மனச்சித்திரத்தில், ஒத்த நிகழ்வுகளுக்கு இடையே சிந்தை தானாகவே ஏற்படுத்திக்கொண்ட இணைப்பு தான் அதற்கு காரணம். ’கமலாவிற்கு மாப்பிள்ளைப் பார்த்தல்’ என்ற இரண்டு ஒத்தச் சம்பவங்களுக்கிடையே உருவாக்கிக்கொண்டு இணைப்பினால் அது நிகழ்கின்றது. இதேப்பிழை படைப்பிலும் எழ வாய்ப்புள்ளது என்றாலும், அதனை படைப்பாளன் கடத்தும் உயர் உணர்ச்சியினால் சமன் செய்துவிடுவான்.
படைப்பாளன் என்பவன், கதை நிகழும் காலத்தின் பேரெல்லையைப் பற்றி கவலைப்படுபவன் அல்ல. மாறாக, கதைமாந்தர்களின் மனவோட்டத்தில் கணத்திற்கு கணம் அவர்களது மனத்தினுள் எழுகின்ற எண்ணிலடங்கா பன்மை எண்ணவோட்டங்களைப் பற்றிப் பதிவுச் செய்வதில் தான் தனது கவனத்தை குவிப்பான் போலும்!
தெற்குச்சீமை நெல்லுப்பட்டில் கமலாவிற்கு மாப்பிள்ளைப் பார்த்து விட்ட வந்த பிறகு, எழுந்த ஊராரின் எதிர்ப்புக் குரலின் பிரதிநிதியாக வரும் தருமையா நாட்டார் இதுகுறித்து, முத்துக்கண்ணு விசுவராயிரிடம் பேசிக்கொண்டிருக்கும் உரையாடலின் போது ஒரு கட்டத்தில்,
“ஊரப்பகச்சிகிட்டு ஒங்களாளா ஒண்ணும் பண்ணிர முடியாது. நீங்க தெக்கு சீமப்பக்கம் சம்பந்தம் போடப் போறதை ஊரு ஜனம் மொத்தமும் ஊரோட கௌரவம்னுதான் எடுத்துட்டிருக்கு”,
என்று கூற, பதிலுக்கு முத்துக்கண்ணு
“ஓ… அப்படியா சங்கதி… நா தெக்குச்சீமையில ஏ பொண்ணுக்கு சம்மந்தம் போடாம தூங்கப்போறதில்ல… மச்சா… முடிஞ்சா பாருங்க…”
என்று வீராப்பாய் பேசினாலும், உள்ளுக்குள் ஒரு நடுக்கம் இருந்தது என்பது தான் உண்மை. உள்ளுக்குள் எடுக்கும் இந்த உதறல் ஒரு கோணத்திலிருந்து அவரை தாக்கியது என்றால், அவரது மகள் கமலாவைப் பற்றியச் சந்தேகம் இன்னொரு பக்கத்திலிருந்து தாக்கியது. சோத்துப்பட்டுக்கு மாப்பிள்ளைப் பார்க்கச் சென்று வந்த அந்த நாளின் இரவில், நடுச்சாமத்தில் யதேச்சையாக கொல்லைப்புறத்திற்கு எழுந்த வந்தபோது, தனது வீட்டுக்கொல்லைபுறத்தில் ஒரு ஆணும் பெண்ணும் ரகசியாமய் சந்தித்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட அவர், அந்தப்பெண் தனது மகள் கமலா தான் இருக்கும் என்று சந்தேககப்பட ஆரம்பிக்கின்றார்.
ஊராரை எதிர்த்து தெற்குச்சீமையில் தனது மகள் கமலாவிற்கு சம்பந்தம் போட முயற்சித்ததால் எழுந்த ஊராரின் எதிர்ப்பினால் அவருக்குள் ஏற்பட்டிருந்த கிலி ஒருபக்கம், அதேநேரத்தில் தனது மகள் கமலா யாரோ ஒருவனைக் காதலிக்கிறாள் என்ற சந்தேகம் ஏற்படுத்திய மனக்கிலேசம் இன்னொரு பக்கமென இரண்டும் சேர்ந்துகொண்டு முத்துக்கண்ணு விசுவராயரை முடக்கிப் போடுகின்றது. அவரது அன்றாடச் செயல்பாடுகளைக்கூட செய்ய நாட்டமின்றி சிந்தனையில் குழம்பிக்கிடக்கின்றார்.
இத்தகைய ஒரு இக்கட்டானச்சூழலில் முத்துக்கண்ணு விசுவராயரின் மனதில் கணத்திற்கு கணம் எழும் மாறுபட்ட எண்ணவோட்டங்களில் முன்னுக்குப்பின் உள்ள முரண்பாடுகளை மட்டும் 4 பக்கங்களுக்கு மேல் எழுதிச் செல்கிறார் எழுத்தாளர் சி.எம்.முத்து.
ஊரை எதிர்க்கும் துணிவு எழும் அடுத்தக்கணமே, ஊரைப்பற்றிய பயமும் எழுகின்றது.
தனது மகளின் மீதான சந்தேகம் வலுக்கும் அடுத்தக்கணமே, ‘ச்சே.. அப்படியெல்லாம் இருக்காது..” என்ற நம்பிக்கையும் வருகின்றது.
ஊரார்களைவிட, சாதிச்சமாச்சாரத்தில் அதிக அக்கறை உள்ளவன் தான் நான், எனும் எண்ணம் எழும் அடுத்த விநாடியில்,
‘தனது வீட்டு விவகாரத்தை சட்டையைக்கூட ஒழுங்கா போடத்தெரியாத பயகளெல்லாம் பேசுகிறார்களே”, என்று நினைக்கும்போது,
‘மனிசரகாட்டிலும் என்ன சாதி வேண்டியிருக்கு; சாதியான்…சாதி.. மயிருசாதி” என்ற வெறுப்புணர்ச்சியும் எழுகின்றது.
தனது மகன் தங்கவேலு போக்கிரித்தனமாக சுற்றிக்கொண்டிருப்பது வெறுப்பை உண்டுபண்ணினாலும், ‘ஊரானுங்க எத்தினிப்பேரு படதெரண்டு வந்தாலும் கவலாப்படாதீங்க; நா பாத்துக்குறன்; ஆறுலயும் சாவு நூறுலயும் சாவு” என பேசியபோது அவன் மீது நம்பிக்கை எழுகின்றது.
புற உலகை உள்வாங்கி அக உலகில் அசைப்போடும் தருணங்களில் தான், புற உலகு தனக்கு காட்டியிருக்கின்ற பாதை கரடுமுரடாண, முற்கள் நிறைந்த மென்மையான பாதங்களை, குத்திக்கிழிக்கின்ற பாதை; அதைத்தான் சமூகம் தனக்கு அமைத்துக் கொடுத்திருக்கின்றது என்ற உண்மை புலப்படுகின்றது. அந்தப்பாதைகளுக்கு மாற்றாக, மகிழ்ச்சியான, சிக்கலில்லாத வாழ்விற்கான வழிகளை மனம் தேடுகின்றது. புதிய மாற்றுப்பாதைக்கான தர்க்கங்களை தேடுகின்றது. அந்தத்தேடல், சாதரண சம்சாரிகளையும் மனிதச்சமூகம் குறித்தும், அதன் வாழ்க்கைக் குறித்தும் சிந்திக்கும் தத்துவ விசாரணைக்குள் கொண்டுபோய் செலுத்திவிடுகின்றது. அந்த தத்துவ விசாரணைகளை செழுமைப்படுத்தி புதிய மாற்றுப்பாதைகளை கண்டடையும்போது, அந்தப்புதிய மாற்றுப்பாதைகளிலும் மனிதன் பேண்டு வைத்த ’சாதி’ எனும் மலங்களின் நாற்றம், குடலைப்பிடுங்கி அப்படியே வேளியேப்ப்போடும் அளவிற்கு கொடிந்தீவினைகளை தனது இயபுகளாகக் கொண்டிருக்கிறது என்று தெரிய வரும்போதுதான், சாதியச்சமூகத்தின் மீதான வெறுப்பும், கடுப்பும் தலைக்கேறி,
“அடேய் மனுசா! நல்ல புத்திமானாடா நீ..! மனுச இனத்தில் சாதி என்ற முத்திரையைக்குத்தி, நொறுங்கிப்போன கண்ணாடித் துண்டுகள மாதிரி எத்தனை சில் பண்ணியிருக்கின்றாய்…?”
என, முத்துக்கண்ணு விசுவராயர் போன்ற சாதி அபிமானிகளையே கலங்கடித்து, சாதிக்கு எதிராக இயங்க துணியவைக்கின்றது.
இவ்வாறு, வறுத்தும் புறச்சூழலின் விளைவாக எழும் சிந்தனைகள் கணங்கள் தோறும் மாறி மாறித் தோன்றும் அந்த நுண் கால எல்லைக்குள் புகுந்து, அந்த எண்ணவோட்டங்களை அப்படியே படம்பிடித்து காட்டுவதையே, ஒரு எழுத்தாளர்கள் தான் இயங்க வேண்டிய காலப்பரப்பு எல்லைகளாக தேர்வு செய்கின்றார்கள்!
கதைத்தொடங்கும் அந்த முனையிலிருந்து, அது முடியும் எல்லைவரை பரவி நிற்கின்ற அகன்ற கால எல்லையை படம்பிடிப்பதைக் காட்டிலும், ஒரு கதாப்பத்திரத்தினுள் நுழைந்து, ஒரு சில நிமிடங்களில் அவருக்குள் எழும் அந்த மனப்பிம்பங்களை, தன்னால் முடிந்து மட்டும் பெரியச்சித்திரமாக வரைந்து காட்டுவதில் தான் எழுத்தாளர்களின் கவனம் குவிகின்றது.
புனைவெழுத்தாளனுக்கு ஆண்டுகளைவிட, கணங்களே முக்கியம்
ஆண்டுகளை விட சில கணங்கள் ஒரு மனிதனுக்குள் ஏற்படுத்தும் உற்சாகமும், ஆர்வமும் வலிமை மிக்கவை என்பதனை படைப்பாளன் கண்டு கொள்கிறான். கமலா-சாம்பசிவம் காதல் விவகாரம் ஊரறிந்த செய்தியானப் பிறகு, குடும்பத்தில் கலகம் வெடிக்கின்றது. கமலாவின் காதல் விவகாரம் ஏற்படுத்திய கோபத்தில் ஒருநாள், முத்துக்கண்ணு விசுவராயர் இடுப்பில் கட்டியிறுந்த வாரினை உருவி தன் மகள் கமலாவை விலாசி எடுத்துவிடுகின்றார்.
”வந்தாரங்குடி சாதிக்கெட்ட அறுத்தக்கட்டி கள்ளனுக்கு, வாகரக்கள்ளன் வீட்டுப் பெண் கேக்குதா”
என்று ஊர் நாட்டாமை தருமையா நாட்டார், சாம்பசிவத்தை நடு வீதியில் நிற்கவைத்து அவமானப்படுத்தியப் பிறகு, சாம்பசிவம் மனதாலும், உடலாலும் ஓ… வென்று ஒடிந்துபோய் விடுகின்றான்.
இச்சம்பவங்கள் நடந்து முடிந்து எல்லாம் சற்று அமுங்கி நாட்கள் பல கடந்த நிலையில் ஒருநாள், சாம்பசிவம் தெரு வழியாக கமலா வீட்டு நெருக்கத்தில் நடந்து சென்றபோது, கமலா அவன் வருவதைக்கண்டு வாசலிலேயே அழகுக்காட்டி நிற்கின்றாள். தெருவில் யாரும் இல்லை.
ஒரு கணம் இருவரின் பார்வைகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட போது, எங்கிருந்தோ வந்த இடியொன்று அவர்களுக்கேத் தெரியாமல் எதிரெதிர் திசையில் நின்றிருந்த அவர்கள் இருவரையும் தாக்கியது போல் ஓர் உணர்வு, இருவருக்குள்ளும் ஒரே சமயத்தில் எழுந்தது. இத்தனை நாட்களாக தனது மனதிற்குள் தேக்கி வைத்த விசயங்கள் எல்லாம் இறகு முளைத்து பறப்பது போலவும், வாய்முளைத்து பேசுவது போலவும் ஓர் உணர்ச்சி. அடங்கிக்கிடந்த அத்தணை உணர்ச்சிகளும் கண நேரத்தில் பொங்கி எழும் இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது?
இந்த அதிசயங்கள் கணப்பொழுதுகளில் தான் நிகழ்கின்றன. இத்தகைய அதிசய கணங்களுக்காக, மானுடம் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருக்க தயாராக இருக்கின்றது. அந்த அதிசயக் கணங்களை ஆண்டுமுழுவதற்கும் நீட்டிக்க விரும்புவதில்லை. மாறாக, ஆண்டுகள் பலவற்றை நீட்டித்து அந்த அதிசயக்கணத்திற்காக ஏங்கித் தவிக்கின்றது மனம்.
ஒருகணம் நிகழ்த்திய அந்த அதிசயத்தை இன்னொரு கணம் நிகழ்த்தமாட்டானா…, என்ற ஏக்கத்தில் கமலா, அவன் தெருக்கோடி போய் மறையும் வரை பார்த்துக்கொண்டே நிற்கின்றாள்.
சாம்பசிவனின் பார்வை நிகழ்த்திய அந்த சுகமான வேதனையை அனுபவித்தவாறு அவள் வீட்டிற்குள் நடக்கின்றாள். அப்படி நடக்கும்போது, ஒலிக்கும் வளையும், குலுங்கும் கொலுசும், உதட்டில் சிரிப்பும் இணையும் அந்தக்கணத்தில் அவள் முற்றிலும் புதியவளாக தென்படுகின்றாள். அழுது அழுது வீங்கிப்போயிருந்த அவளது முகம், வெட்கத்திலும், சிரிப்பிலும் மலர்ந்திருக்கும் அந்த அதிசயத்தைக்கண்டு, அவளது அம்மா பூரணியே ஒரு கணம் ஆச்சர்யப்படுகின்றாள். சில கணங்கள் அசாத்தியமான ஆச்சரியங்களை நிகழ்த்த வல்லவை.
இந்த அதிசயக்கணங்கள், காதலினால் மட்டும் தோற்றுவிக்கப்படுவதில்லை. வேறு பல இடங்களிலும், தருணங்களிலும் கூட அவை நிகழ்கின்றன.
ஒட்டுமொத்த ஊரும் தனக்கு எதிராக இருக்கின்றது என்ற எண்ணமும், வந்தாரங்குடி என்பதனால் தனக்கென்று ஆதரவுக்கரம் நீட்ட ஓராளில்லை என்ற ஏக்கமும், ஏற்படுத்திய துக்கத்தோடு சாம்பசிவம் ரோட்டுப்பக்கம் சென்றபோது, அங்கே மதகுக்கரையில் அமர்ந்திருந்த கமலாவின் அண்ணன் தங்கவேலு ‘மச்சா’ என்ற அழைத்த, அந்தக்கணத்தில் உலகத்து சந்தோசமெல்லாம் தனது நெஞ்சில் வந்து கொடிக்கொண்டுவிட்டதைப்போல அந்த ஒரு சொல் அவனுக்குள் புகுந்து வேலைச் செய்கின்றது. உலகமே ஓரணியாகப் படைத்திரண்ட வந்தபோதும் தனக்கு ஆதரவாக தங்கவேலு மட்டும் நின்றால் போதுமே, என்ற பரவசம் உடலெங்கும் சீறிப்பாய்கின்றது.
தங்கவேலு அவனிடம் பேசிவிட்டு போன பிறகு சாம்பசிவம் தனியாக அங்கேயே அமர்ந்து சிந்தித்துக் கொணிட்ருந்தபொழுது அவனது மனம் எங்கெங்கோ ஓடியது. அந்நேரத்தில், வயலுக்கு நடவு போடப்போகும் பெண்கள் சாரைசாரையாய், ஒய்யார நடையிட்டு வரப்பில் நடந்தப்போகும் அந்தக் காட்சியை கண்ட கணத்தில், அந்தக்காட்சியும், அவர்களது சிரிப்பும், பாவனைகளும் அவனுக்குள் அந்தக்கணத்தில் ஏற்படுத்திய உற்சாகம், அவனுக்குள் தேங்கியிறுந்த துன்பங்களை எல்லாம் ஒரேயடியாகத் துடைத்து எறிந்துவிடுகின்றது.
இது கணங்கள் நிகழ்த்தும் அதிசயம். உலகில் வாழும் பெரும்பாலான மனிதர்களுக்கு அவர்களின் வாழ்வின் பெரும்பகுதி துன்பமும், வலியும், வேதனையும் மிகுந்ததாகவே இருந்தபோதிலும், மனிதர்களுக்கு வாழ்க்கையின் மீது உண்டாகின்ற தீராத விருப்பும் காதலும் பற்றும், வாழ வேண்டும் என்ற அளவுகடந்த ஆசைகளும் ஏன் தோன்றுகின்றன?
சில கணங்கள், சில விநாடிகள், சில நிமிடங்கள் ஒரு மனிதனுக்குள் ஏற்படுத்தும் சொல்லொணா இன்ப அனுபவங்கள், அதுதான் வாழ்க்கையின் மீது தீராத காதலை உண்டுபண்ணுகின்றது. அந்தச் சிறியப்பொழுதுகளை தொடர்ந்து வரும் நாட்களும், ஆண்டுகளும் பெருந்துயரம் கொண்டதாக இருப்பினும், மனதை இலகுவாக்கிய, இன்பங்களை எளிமையாகப் பருகிய அந்தக்கணங்கள், தனக்கு மீண்டும் வாய்க்கக்கூடும், என்ற நம்பிக்கையில் தான் தனது வாழ்க்கையை ஒவ்வொரு மனிதனும் தொடர்கின்றான் போலும்!
நாவலில், கமலாவிற்கும், சாம்பசிவத்திற்கும் இடையே நடக்கும் நேரடியான காதல் சந்திப்புக் காட்சிகளும் உரையாடல்களும் ஒப்பீட்டளவில் மிகச் சொற்பமே. கமலாவிற்கு மாப்பிள்ளைப் பார்க்க நெல்லுப்பட்டுக்குப் போன அன்று, சாம்பசிவத்தை சந்திக்கும் நோக்கில் குடுமுருட்டி வாய்க்காலில் குளித்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் இருவரும் நேரடியாக சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததை கோபால் குச்சிராயர், மகள் நீலா அவளது கொல்லையில் இருந்த மூங்கில்குத்து மறைவில் நின்று பார்த்து விடுகின்றாள். அந்தச்செய்தியை, நீலா கோபால் காதில் ஓதிவிட்டது தான் தாமதம். கதைச்சொல்லி குறிப்பிடுவதைப்போல, “ஊரில் நடக்கும் முக்கிவாசிப் பிரச்சனைகளுக்கு மூலக்கருத்தாவன” கோபால் குச்சிராயர், குளத்தங்கரை மரநிழலில் அவ்வூர் இளைஞர்களைக் கூட்டி, கமலாவும் சாம்பசிவமும் குடமுருட்டி வாய்க்காலில் ரகசியமாய் சந்தித்து பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து முடித்துவிடுகின்றார்.
நெல்லுப்பட்டுக்கு மாப்பிள்ளைப் பார்க்க போய் வந்தச் செய்தியை எப்படியும் சாம்பசிவத்திடம் தெரிவித்து விட வேண்டும், என்ற துடிப்பில் அன்று இரவு கமலா வீட்டுக்கொல்லையில் ரகசிமாய் சந்தித்து பேசியதை, கமலாவின் அப்பா, முத்துக்கண்ணு விசுவராயர் பார்த்து விடுகின்றார். இதுதான் கமலாவிற்கும் சாமபசிவத்திற்கும் இடையே நடக்கும் மற்றொரு காதல் சந்திப்பு.
இந்த இரண்டு காதல் சந்திப்புகளும், அதன் விளைவுகளுமே நாவலாக விரிகின்றது. முதல் சந்திப்பு ஊருக்குள்ளும், இரண்டாவது சந்திப்பு வீட்டிற்குள்ளும் புயல் மையங்களை தோற்றுவிக்கின்றன. இரண்டு புயற்கண்களும் ஒரு கட்டத்தில் கைகோர்த்துக்கொள்ளும்போது, அந்தக்கொடும் புயலுக்குள் சிக்கிச் சீரழிந்துபோவது கமலாவின் காதல் வாழ்வு மட்டுமல்ல, அன்பு, கருணை போன்ற மானுடப்பண்புகளும் தான். சாதி எனும் சமூகக்கட்டுமானம், மானுடச்சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு, என்பதனை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், கதாபாத்திரங்களின் வழியேயும், கதைச்சொல்லி என்ற முறையில் தன்னிலை விளக்கமுமாக ஆற்றாமையோடும், அன்பின் பெருங்கோபத்தோடும் பதிவு செய்கின்றார் சி.எம்.முத்து அவர்கள்.
தனது தங்கையின் காதற்பொருட்டு, சாதிக்கு எதிராக இயங்கும் கமலாவின் அண்ணன் தங்கவேலு, ஊரின் எதிர்ப்பையும், குடும்பாத்தாரின் எதிர்ப்பையும் மீறி தனது தங்கை கமலாவை சாம்பசிவத்திற்கே திருமணம் செய்துவைக்க துடிக்கின்றான். இதுகுறித்து ஒருநாள், தாயிற்கும் மகனுக்கும் ஏற்படும் கடும் வாக்குவாதத்தின் ஒருகட்டத்தில், தங்கவேலுவின் அம்மா பூரணி,
“நம்ம வூட்டுக்குள்ள ஒரு சாவு வுழுந்ததான், ஊரு வாயி அடங்கும்”,
என்று கூற அதற்கு தங்கவேலு,
“மூனும் பேரும் சேந்து முடிவு பண்றது ஆரு சாவுறுதுன்னம்மா….? என்ன வரமுற வச்சிருக்கானுங்க கம்னாட்டிங்க…! சாதியான் சாதி… மயிருசாதி”, என்பான்.
இது தங்கவேலுவின் மனசாட்சி பேசும் பேச்சல்ல. சாதிக்கு எதிராக எழுத்தாளனுக்குள் எழும் அன்பின் பெருங்கோபம்!
படைப்பிற்குள் இயங்கும் கதாப்பாத்திரங்கள் சாதிக்கு ஆதரவாகவும், சாதிக்கும் எதிராகவும் சரிசமமாய் நின்று சமர் செய்கின்றன. கமலாவை தான் கரம்பிடித்தால், ஊருக்கே விருந்து வைப்பதற்காக அவன் வளர்த்த நெய்ப்பசையேறிய இரண்டு ஆட்டுக்கிடாக்களை, கெடுவாய்ப்பாய் போன சூழலினாலும், அதனால் தனது மனதுக்குள் தீட்டிய வஞ்சனையினாலும், காத்தாயி அம்மன் கோவில் திருவிழாவில், முனிஸ்பர தேவதைகளுக்கு பலியிட்டு ஊருக்கே கறிச்சோறு போடுகின்றான்.
’கறிச்சோறு’ தின்னும் ஆசையில், ஊரே சப்புக்கொட்டி நிற்கின்றது. இப்பொழுது, சாம்பசிவத்தின் வந்தாரங்குடி அடையாளமோ, சாதிக்குள்ளே சாதியாக ‘அறுத்துக்கட்டிக்கள்ளன்’ என்ற அடையாளமோ விருந்திற்கு வந்திருந்தவர்களின் மனதில் இருந்து காணாமல் போய்விடுகின்றன. ‘சோற்றில் ஏதுடா சாதி…” என்பது அவர்களது கோட்பாடு. பந்தியில் இலைப்போட்டு, கறிவறுவல், கறிபிரட்டல், கறிஉருண்டை, கறிகோலா, கறிபொடுமாசு, எழும்புக்குழம்பு என விதவிதமாக பரிமாறி, சாப்பிடும் போகும் சமயத்தில், ஊர் நாட்டாமைக்கும், சாம்பசிவத்திற்கும் நடக்கும் வாக்குவாதத்தின், ஒரு பகுதியில் இப்படி வருகின்றது:
“சாதியே இல்லாதப்ப சாதிக்குள்ளேயே சாதி வேறப் பாக்குறீங்க…”
“சாதி இல்லன்னு ஆருடா… சொன்னா…?”
“ஏன் பொஸ்தகத்துல படிக்கல.. நாடவம் பாக்கல… சினிமாலகூட பேசுறாங்களே… தலைவருங்கு மைக்கு வச்சி பேசுறதெல்லாம்…”
“அம்புட்டும் பொய்யிடா.. ஊர ஏமாத்துறத்துக்குச் சொல்றானுவ… ஒன்ன மாறி ஆளுங்கள பித்துக்குளி பயலாக்குறா… சாதி உண்டுடா…”
“மாமாவ்… துமரடியா சொல்லாதீங்க… தலைவருங்க கண்டா ஒங்க நாக்க அறுத்துப்புடுவாங்க…”
“அவங்கெடக்காண்டா மயிராண்டி… நானும் இந்த கிராமத்துக்கு தலைவன் தான் சொல்றே கேட்டுக்க… சாதி உண்டுடா.. சாதி உண்டு… மாடறுக்குற பறயங்குள்ள எத்தன சாதிருக்குன்னு தெரியுமாடா… தலைவனாம் தலைவன்… அவனுக்கென்னாதடா மசுரத்தெரியும்… அப்பன் பாட்டன் பாட்டனுக்கும் பாட்டன் காலத்துலேயே சாதிய ஏ பிரிச்சி வச்சன் தெரியுமா…. எல்லாம் ஒரு வகையில அடங்குனும்னுதாண்டா… ஒன்ன மாதிரி ஆளுங்க துமரடியா பேசப்பேசத்தான் சாதி வளர்ந்துகிட்டு இருக்கு… சாதியப்பத்தி தெரியாதவனுக்கெல்லாம் தெரியவச்சிப்புட்டானொவோ… எலே மயிரு.. ஆரு என்ன பேசுனா என்னாடா… கள்ளன் கள்ளந்தான்.. பள்ளன் பள்ளந்தான்… பாப்பான் பார்ப்பாந்தான்…போடா மயிரு…”
இந்த உரையாடலுக்குப் பிறகு, சாதி ஏற்பு, சாதி மறுப்பு என்ற இந்த எதிர்க்கூறுகளின் முரணியக்கத்தில், எழுத்தாளர் எந்தப்பக்கம் நிற்கின்றார், என்ற ஐயம் இயல்பாகவே ஒரு வாசகனின் உள்ளத்தில் எழ வேண்டும்.
கமலா-சாம்பசிவம் காதல் இணையர், தங்கவேலு, வெறுப்படையும்போது முத்துக்கண்ணு விசுவராயர், பொதுவாகவேப் பெண்கள் என, நாவலுக்குள் சாதிக்கு எதிராக இயங்கும் கதாப்பாத்திரங்களின் வழி தனது சாதி எதிர்ப்பை, வாய்ப்பு நேரும்போதெல்லாம் வெளிப்படுத்தி நிற்கிறார் எழுத்தாளர். ஆனால், இவற்றைக்கடந்து, ஒரு கதைச்சொல்லியாக கதாப்பாத்திரங்களின் உரையாடல்களுக்கு அப்பால் நின்று எழுதும் தன்னிலை விள்க்கங்களில் தான் அவருடைய உண்மையான சாதி எதிர்ப்பு மனநிலையை வாசகர்கள் கண்டுகொள்ள முடியும்!
அத்தகைய ஒரு பதிவினை இந்நாவலில், அத்தியாயம் 7-ல் அவர் தன் இச்சிக்கு வாசகனிடம் சொல்லும் ‘சங்கதிகள்’ முக்கியமானவை என்று நான் கருதுகின்றேன். அதன் முக்கியத்துவத்தைக் கருதி, அவற்றை அப்படியே தருவது சாலப்பயக்கும் நன்மை எனக் கருதுகின்றேன்:
“இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற ந்மது இளைஞர்களுக்கு அப்பாக்களோ-அம்மாக்களோ –ஊரார்களோ கட்டுப்பாடு விதிக்காத பட்சத்தில் அவர்கள் சாதிவிட்டு கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தயார்தான். ஆனால், தருமையா நாட்டார், கோபால்குச்சிராயர் போன்ற ஆசாமிகளால் போடுப்படுகிற முட்டுக்கட்டை, அவர்களின் இளமை வாழ்க்கையையே நாசாமாக்குகிறது, என்ற உண்மையை அவர்கள் எங்கேயாவது அற்கிறார்களா?
மனசுக்கு பிடித்த பெண் இருந்தால் போதுமென்று நினைக்கிற இளைஞர்களின் மத்தியில் தருமையா நாட்டார் போன்ற நச்சுக்கள், ஊடே புகுந்து அவர்களின் மனசையே மாற்றிவிடுகிற உண்மையை ஒவ்வொரு இளைஞர்களும் அறிந்திருந்தும் கூட அதை எதிர்க்க வேண்டுமென்ற திராணி, இன்னும் இந்த இருபதாம் நூற்றாண்டு கண்ட இளைஞனுக்கு வரவே இல்லை!
நல்ல விசயங்கள் மனசுக்குள் வேலைச்செய்ய வெகுகாலம் எடுத்துக்கொள்ள, கெட்ட விசயங்கள் உடனே ‘லபக்’கென்று பிடித்துக் கொள்வதற்கு, மனிதர்களுடைய பலஹீனங்களும், விசித்திரமான கற்பனைகளும், குணாதிசயங்களுமே காரணம், என்ற உண்மையை இவர்களில் எத்தனைப்பேர் அறிந்திருக்கிறார்கள்?
கோபால்குச்சிராயர் போன்ற நச்சுக்கள் சொன்ன சங்கதிகளுக்கெல்லாம், இளைஞர்கள் பூம்பூம்மாடு மாதிரி தலையைத்தான் உலுக்கினார்களே தவிர, ஒருத்தராவது அது தவறானதென்று சொல்ல முன் வரவில்லையே?”
இந்த, ஆற்றாமையின் வெளிப்பாட்டில் தான் படைப்பாளனைக் கண்டுகொள்ள முடியும்!
நாவலில், கமலாவின் வழி அவர் காட்ட விரும்பும் பெண்ணின் அற்புத ஆற்றல்கள் வியக்கத்தக்கது. பூப்படைந்து விட்டாலே, பொதுவெளியில் நடமாட முடியாது என்று இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள ‘வாகரக்கள்ளன்’ வழியில் பிறந்த கமலா, தனது இளமை அழைத்துச்செல்லும் வழியில் சென்று, வந்தாரங்குடி ‘அறுத்துக்கட்டிக்கள்ளன்’ சாதியில் வந்த சாம்பசிவத்தை காதலனாக மனதிற்குள் நிறைத்துக்கொள்கிறாள். தனது காதலனைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில், காலங்காலமாக அவளது சமூகம் பெண்ணிற்கு விதித்திருக்கும் அத்துணை கட்டுப்பாடுகளையும் சாமர்த்தியமாக நொறுக்கிவிட்டு, குடமுருட்டி வாய்க்காலில் குளிக்கபோகும் சாக்கில், தனது காதலன் சாம்பசிவத்தோடு அவர்களது காதலின் எதிர்காலம் குறித்துப் உரையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில், சாம்பசிவத்திற்கு கமலாவை கல்யாணம் செய்துகொள்வோம், என்ற நம்பிக்கையே இல்லாமல் விரக்தியாகப் பேசுகின்றான். அச்சமயத்தில் கமலா சொல்வாள்,
“அப்டி முடிவு பண்ணிராதீங்க மச்சா, நான் நினைச்சிப்புட்டா உங்களால என்ன தான் முடியாது?” என்று.
இதுதான் பெண்சக்தியை அடையாளம் காட்டுவது. ஆணாதிக்கச் சாதியச் சமூகம், பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் தனது விருப்பத்திற்கேற்ப ஆட்டி வைக்க முடியும் என்ற அசட்டு நம்பிக்கையில் உருவாக்கப்பட்டுள்ள கர்வமிக்க போலிச்சங்கிலிகளை, சட்டென்று அறுத்தெறிந்து விடும் வல்லமை தனக்கு உண்டு என்று ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்தே தான் இருக்கின்றாள். அந்தப்பெண்ணாற்றல் தான் இறுக்குமான சாதியக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தும், அதனை மீறி வெளியேற நினைக்கும் கமலாவின் சொற்களில் வெளிப்படுகின்றது.
சாதியச்சமூகத்தில் பெண், ஆணுக்கு நிகரான ஆதிக்கங்களையும் அதிகாரங்களையும் கொண்டிருப்பவளில்லை. காலந்தோறும் வழங்கிவரும் பாலின சமத்துவமின்மையின் கொடுமைகளை சாதியச்சமூகத்தில் அனுபவித்துக் கொண்டிருப்பவள். பெண், சாதியை அடுத்த தலைமுறைக்கு கடுத்தும் கருவி மட்டுமே.
சாதியச்சமூகத்தில் பெண் அதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்துப்படுவதால், அவள் எக்காலத்திலும் சாதியத்திற்கு வெளியே நிறுத்தப்படுபவளாகின்றாள். பெண்கள் சாதியச்சமூகத்திற்குள் வாழ்ந்தாலும், அவர்கள் சாதிய அதிகாரங்களுக்கு புறத்தே நிறுத்தப்படுவதனால், எக்காலத்திலும் பெண்கள் சாதியற்றவர்களாகவே வாழ்கின்றனர்.
ஒரு சாதி இந்துவின் வீட்டில், வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய் போன்ற உயிரினங்கள் எப்படிச் சாதியச் சமூகத்தின் வேர்களை தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு கடுத்துவதில், அதனை நிலை நிறுத்துவதில் எந்தப்பங்கும் வகிக்காமல், ஒரு கருவியாக மட்டும் பயன்படுகின்றனவோ, அதைப்போலவே தான் சாதியச்சமூகத்தில் வாழும் பெண்களின் நிலையும். அவர்கள் வெறும் கருவிகள் மட்டுமே; பங்கேற்பாளர்கள் அல்ல. மனித இனத்தில் ஆணுக்கு எதிர்நிலைப் பாலினம் பெண், என்ற இயற்கையியலின் அடிப்படையில் சாதியச்சமூக ஆண்களோடு பெண்கள் உறவுக்கொள்ள நேரிடும்போது, சாதியத்தின் பண்புக்கூறுகள் அவர்கள் மீது ஒப்பிற்காக பண்பேற்றம் செய்யப்படுகின்றது. இந்நடைமுறை ஒரு வழக்கமாகத் தொடரும்பொழுது, பெண்களும் சாதியச்சமூகத்தின் அங்கமே என்றொரு தோற்றம் பொதுவெளியில் உருவாகியிருக்கின்றது. இந்த தோற்றத்தின் பின்னால், இருக்கக்கூடிய உண்மையென்னவென்று ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்தே இருக்கின்றார்கள். சாதியச்சமூகத்தில் தானொரு அதிகாரமிக்க பங்காளியாக இல்லாமல், ஒரு கருவியாக மட்டுமே இருப்பதனால், பெண் அந்த சாதிச்சமூக அமைப்பிற்குள் இருந்து எளிதாக வெளியேற முடிகின்றது. அவ்வாறு வெளியேறுவதற்குரிய எல்லாத் தார்மீக அடிப்படைகளும், அதற்கான ஆற்றலும் பெண்ணிற்குள் இருக்கின்றது என்பது தான், கமலாவின் வார்த்தாயில்
“நான் நினைச்சுப்புட்டா…”
என்று வெளிப்படுகின்றது.
பெண்கள் பிறக்கும்போதே, தாய்மைப்பண்போடு தான் பிறக்கின்றார்கள்! அவனைப்பெற்ற தந்தைக்கும் கூட அவள் தாயெனக் கருதத்தக்கவள். பெண்களின் தாய்மைப்பண்பு என்பது, காக்கும் பண்பு. முட்டையிடும்போது, இல்லாத வலிமை, குஞ்சுப்பொறிக்கும்போது ஒரு தாய்க்கோழிக்கு எப்படி வருகின்றது? கவுச்சி ஏறிய ஆட்டுக்கிடாவையும், வேட்டையாடும் நாய்களையும் ஒரே நேரத்தில் விரட்டி அடிக்கும் அந்த வல்லமை கற்பனை செய்ய முடியாதது. பெண்ணிற்குள் இயங்கும் அந்த பெருஞ்சக்தியை அடையாளம் கண்டுகொள்பவன் தான் எழுத்தாளன். “பெண்ணிற் பெருந்தக்க யாவுள” என்று வள்ளுவன் வியப்பதும் இந்த பெண்சக்தியைத்தானே!
”Red Sorghum” என்ற முக்கியப் படைப்பிற்காக, நோபல் பரிசினைப்பெற்றுள்ள சீன இலக்கியவாதி மோ யான் (Mo Yan), பெண்ணாற்றலைப் பற்றி குறிப்பிடும்போது, ”பெண்களின் வலிமையை நாம் கற்பனையே செய்ய முடியாது; ஆதலால் எனது நூல்களில் வரும் பெண் பாத்திரங்களின் காலணிக்குள் நான் என்னை நுழைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்” என்பார்.
எழுத்தாளர் சி.எம்.முத்து அவர்களும் தனது ’கறிச்சோறு’ நாவலில் அந்தப்பெண் சக்தியை நமக்கு அடையாளம் காட்டுகிறார். பெண்ணியல் குணங்களை வியந்து பாராட்டுகின்றார். அத்துடன் பெண்ணிற்குள் இயங்கும் உளவியலையும் தொட்டுக்காட்டுகின்றார். நெல்லுப்பட்டு சம்மந்தத்தை கைவிட்டு, முத்துக்கண்ணு விசுவராயர் ‘வாகரைக்கள்ளன்’ வழியிலேயே, மாப்பிள்ளைப் பார்க்க தருமையா நாட்டாரிடம் சொன்னதையடைத்து, காரியத்தை கச்சிதமாக முடிக்கின்றார் தருமையா நாட்டார்.
முத்துக்கண்ணு விசுவராயரின் தகுதிக்கு ஏற்றாற்போல, அவர் பெரிதும் விரும்பிய, எழுத்தாளரின் வார்த்தைகளின் குறிப்பிட்டால், “சூத்துப்பெருத்த பொம்பளைகள், பாப்பாத்திக் கணக்கா, கழுத்தில் புடிபுடியா நகைகளைப்போட்டுக்கொண்டு”, வருவதைப்பார்த்து ஊரே அசந்து போனதைப்போலவே, கமலாவும் அசந்துபோகின்றாள். சாம்பசிவத்தின் நினைப்பைப்போலவே, அந்தச் சூழலும் கைவிடப்பட முடியாதப்படிக்கு அவளுக்குள் ஒரு குதூகலத்தையே உண்டு பண்ணுவிடுகின்றது. அந்தச்சூழல் ஏற்படுத்திய பரவசமும் அவளுக்குள் தொற்றிக் கொள்கிறது. அந்தப் பரவசத்தின் உச்ச வளர்ச்சியானது, ‘மாப்பிள்ளை வந்திருப்பாரா?’ என்று அவளுக்குள் அவளே கேட்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றது.
இது பெண்ணிற்குள் இயங்கும் ஒரு வகையான யதார்த்த உளவியலை காட்டும் முயற்சி. இதன் பொருள், ’பெண்ணிற்கு இரண்டு மனம்’ என்று முடிவு கட்டுவதன்று. ‘சூழலுக்கு ஆட்படுதல்’ வழி தன்னை அதனுள் முழுதாகப் பொருத்திக்கொண்டு, அதில் லயிப்பது என்ற பெண்ணின் பண்புநலனே இது.
பெண்ணின் ஆற்றல், ஆணாதிக்கச் சமூகக் கட்டுமானத்தின் வழி மட்டுப்படுத்துப்படுவதனால், அவளது ஆற்றலை வெளிப்படுத்தும் இயக்க வடிவங்களை அவள் பயன்படுத்திக் கொள்கிறாள். சமூக வாழ்வியற் இயக்கங்களில் தன்னை முன்னிறுத்துகின்ற இடங்களிலும் செயல்களிலெல்லாம் பெண் தன்னை நிறுவிக் கொள்கிற முயற்சி தான் இது.
கமலா தனது நிச்சயதார்த்த நிகழ்வில் பரவசத்தோடு பங்கேற்பது என்பது, தனக்கு இரண்டு மனம் என்றுகாட்டி, சாம்பசிவத்தை பகடிச்செய்வதாகப் பொருள் கொள்ளாலாகாது. மாறாக, தன்னை நிறுவிக்காட்டி ஒட்டுமொத்த ஆணாதிக்கச் சமூகத்தையே பகடிச்செய்வது ஆகும். இது கமலா சாம்பசிவத்திற்கு காட்டும் எதிர்வினையன்று. மாறாக ஒரு பெண், தன்னை அதிகாரத்திற்கு உட்படுத்தும் ஒட்டுமொத்தச் சமூகத்தை பகடி செய்யும் வாய்ப்பு எனக் கருத இடமுண்டு.
படைப்பாளரின் இசை அனுபவப் பகிர்வு நாவலில் ருசியாக பரிமாறப்பட்டிருக்கின்றது. நாவலின் முக்கால் பாகத்தைக் கடக்கும்போது, அதன் இறுதிப்பகுதி ஒரு கொலைக்களத்தை நோக்கிச் செல்லவிருக்கின்றது, என்ற பீதியை வாசகனிடத்தில் உருவாக்கிவிட்டு, படைப்பாளர், காத்தாயி அம்மன் கோவில் திருவிழாவில் நடைபெறும் குறவன் – குறத்தி ஆட்டத்தில் லயித்து விடுகின்றார். குறவன் – குறத்தி ஆட்டத்தைப் பற்றிச் சொல்லும்போது அவருக்குள் இரட்டிப்பு குதூகலமும், ஆர்வமும் பொங்கி வருகின்றது. அதனை விளக்கும் அவரது எழுத்தில் பயின்று வரும் உற்சாகத்தொணி வாசகனிடமும் தொற்றிக் கொள்கிறது.
ஒவ்வொரு இசைக்கருவியிலிருந்தும் பிறக்கும் இசை வடிவங்களைப்பற்றி, கிளுகிளுப்பை உண்டுபண்ணும் சொற்களில் வருணிக்கின்றார். கச்சேரியில் வாசிக்கும் ஒவ்வொரு கலைஞனின் கைகளும் எப்பொழுது ஆரம்பிக்கலாம், என்று பரபரக்கின்றன.
அந்தால ஒருத்தன் ஆரம்பிச்சிட்டான்.
டும் டும்டும் டுடும்டுடும்டுடும் டும்டும்டும்…
அடுத்தவன் சும்மாயிருப்பானா…..? அவன் பங்கிற்கு….
‘பூம்பூம்.. பூம்பூம்பூம்…. பூம்பூம்…’
இன்னொருத்தன் எகிறிக்கொண்டு,
டிங் டிக்கு டிக்கு டிங்டிக்கு டிக்கு டிக்கு டிங்டிக்கு டிக்கு டிக்கு….
இன்னொருத்தன் பாய்ந்துகொண்டு…
‘கித்.. கித்தா… கித்தா… கித்கித்கித்கித்தா….. ‘
இப்பொழுது எல்லோரும் சேர்ந்துகொண்டு,
‘நகநகநகநகநகநகநகநகநகநகநக…..” வென்று தட்டி கிடுகிடுக்கின்றது, என்று கதைச்சொல்லி, அதற்கேற்ப ஆடும் குறவன் – குறத்தியின் ஆட்டத்தினை சொற்களாலன ஒரு வண்ண ஓவியமாய் வரைந்து காட்டும்போது, வாசகனின் மனம், அந்த அழகிய ஓவியத்தை மனத்திரையில் ஓடவிட்டு ‘போடு… அசக்கு டப்பா. அசக்கு டப்பா.. அசக்கு டப்பா..’ என்று ஆட்டம்போடுகின்றது.
ஊருக்குள் வினையையும், சூழ்ச்சியையும் விதைத்துக்கொண்டிருந்த கோபால் குச்சிராயரின் மூத்தமகள் நீலா, முற்றி வெடித்த தனது இளமையின் ரகசியங்களை, அவள் வீட்டு பண்ணைக்காரன் ‘பள்ளக்கேசு’-வோடு (பள்ளன் + கேசு; கேசு என்பது அவனது பெயர்) பகிர்ந்துகொள்ள, அதன் விளைவாக அவளது வயிறு மெத்த வீங்கி, அவள் பகிர்ந்துகொண்ட ரகசியத்தை ஊராருக்கு அம்பலப்படுத்திவிட்டது. கொல்லையில் கிடந்த பயித்தம்பொக்கு மறைவில் வைத்து தனது இளமையின் ரகசியங்களை, நீலா பண்ணைக்காரனோடு பகிர்ந்துகொண்டதை, கோபால் குச்சிராயர் நேரடியாகவே பார்த்துவிட்ட அந்த நாளிலிருந்து முடங்கிப்போனவர் தான்.
திருமணம் ஆகாமலேயே, நீலா கர்ப்பமுற்றிருக்கும் செய்தியை எப்பாடுப்பட்டாவது தடுத்திட முயலும் கோபால் குச்சிராயர், எழுத்து மறையும் நேரத்தில், நீலாவைக் கூட்டிக்கொண்டு காத்தவராயன் கோவில் பூசாரியும், மருத்துவனுமான செங்கானிடம் அழைத்தச் செல்லும்போது, அங்கே செங்கான், தலையை விரித்துப்போட்டுக்கொண்டு, ஆவேசமாய் உடுக்கையைத் தட்டி கணீரென்று பாடுகின்றான்.
ஏ என்ன செய்வேன் ஏதுசெய்வேன்
ஏ மாயவனே மணி வண்ணா
ஏ எனக்காரும் நல்ல துணையுமுல்லே….
என்று இரவிற்கும் சோகத்திற்கும் சொந்தமென அவன் உச்சஸ்தாயில் பாடிக்கொண்டிருப்பதை, எழுத்தாளர் வர்ணிக்கும்போது நாட்டுப்புற இசையில் அவருக்கிருக்கும் பரிச்சயம் வெளிப்பட்டு நிற்கின்றது.
கமலாவின் நிச்சயத்தன்று, வாசித்த மேளக் கச்சேரியைப் பற்றி மட்டும் 4 பக்கத்திற்கு எழுதிச் செல்கின்றார். அவருக்கு கர்நாடக சங்கீதத்தில் நல்ல அறிமுகமும், நாட்டுப்புற இசையில் நல்ல பரிச்சயமும் உண்டு என்பதனை எழுத்தாளர் சி.எம்.முத்து அவர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது அறிந்தேன்.
சாதியை தனது உள்ளியக்கு ஆற்றலாகக் கொண்டு நடமாடும் மாந்தர்கள், சமூகத்தோடு இடைவினையாற்றும்போது வெளிப்படுகின்ற பல்வேறு வகையான இயக்கங்களை (motion) பற்றி நாம் உணர முடிகின்றது. பள்ளிப்பருவத்தில் ‘ரெங்கா’-வாக இருந்தவர், திருமணத்திற்கு பிறகு ‘ரெங்கக்கோணார்’ ஆவதும், கையில் காசேறும்போது புறச்சமூகத்தில் தன்னை உயர் ’அந்தஸ்து’ உடையவராக அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்போது, ‘ரெங்கப்பிள்ளை’-யாகவும், பிறகு சுயசாதிப்பற்றுக்கு கேடு விளைவிக்கா வண்ணம் அதனோடு ஒரு சமரசம் புரிந்துகொள்ளும் பொருட்டு ‘ரெங்கப்பிள்ளைக்கோனார்’ ஆவதைப் பற்றிய சமூக யதார்த்த நடைமுறைகளை எழுத்தாளர் குறிப்பிடுகின்றார்.
சாதிச்சமூகம் காலந்தோறும் வழங்கி வருவதற்கு மிக முக்கியமானக் காரணம், சாதியத்தின் அதிகாரங்கள், உள்ளூர் மட்டத்தில் ஜனநாயகபடுத்தப்பட்டிருப்பது தான். ஒரு கிராமத்தில் வசிக்கும் சாதிப்பிரிவினர்களிலேயே, படிநிலையில் யார் மேல்நிலையில் உள்ளார்களோ, அவர்களே சாதியத்தலைமைகளாக பொறுப்பேற்றுக் கொண்டு சாதியைக் காப்பாற்றி விடுவர். சாதிய அதிகாரம் உள்ளூர் மட்டத்தில் ஜனநாயகப் படுத்தப்பட்டிருப்பதன் விளைவு தான், ‘ரெங்கா’- ‘ரெங்கக்கோனார் – ‘ரெங்கப்பிள்ளை’ – ‘ரெங்கப்பிள்ளைக்கோனார்’ என்று தனது விருப்பிற்கேற்ப தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்கான சாத்தியங்களை வழங்குகின்றது.
ஊர் நாட்டாமை தருமையா நாட்டார் வைத்திருக்கும் 5 வைப்பாட்டிகளும் கீழ்ச்சாதிக்காரர்கள் தானாம்….!, என்று எள்ளலோடு குறிப்பிடுவதும், தனது மனைவி யாருடனோ படுத்து வந்திருக்கிறாள் என்ற சந்தேகத்தில், அவளை கொலைச்செய்து, பிறகு அவளை தூக்கில் தொங்கவிட்டு, ‘தற்கொலை’ என்று நாடகமாடிய மாயாண்டி கொத்தப்பிரியனை, ’வாகரைக்கள்ளர்’-களின் சுயசாதிப் பெருமிதத்தைக் காப்பாற்றும் பொருட்டு, கமலாவை ’வந்தாரங்குடி’ சாம்பசிவத்திற்கு கட்டிவைக்கத் துடிக்கும் தங்கவேலுவைத் தீர்த்துக்கட்ட ஊர் நாட்டாமை பெரியவீட்டு நாயக்கரும், தருமையா நாட்டாரும் போடும் சதித்திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்வதும், அந்தப்பழிக்கு ஊர் பொறுப்பேற்கும் என்று அவனை உற்சாகப்படுத்துவம், சாதியச்சமூகத்தின் இயங்குமுறைமைகளை காட்டுவதாகும்.
வட்டார நாவல்களின் முக்கியமானப் பண்புக்கூறு என்பது, அதன் மொழிதான். குறிப்பிட்ட எல்லைக்குள் அது பரிணாமம் பெற்று வளர்ச்சியடைந்து இருப்பதனால், அது எந்தச்சமூகத்தினால், வளர்க்கப்பட்டதோ, அந்தச்சமூகத்தின் அனைத்து வாழ்வியல் அசைவுகளையும் தனது உள்ளடக்கமாகக் கொண்ட உக்கிர வெளிப்பாட்டுத்தன்மை வட்டாரமொழிகளின் சிறப்புப் பண்புகளாகின்றன.
அத்தகைய கூர்மையான, உக்கிர வெளிப்பாட்டுத்தன்மைக் கொண்ட வட்டார மொழியோடு தொடர்புடைய எழுத்தாளன், அவன் வாழ்ந்த வாழ்க்கையை, அவன் அனுபவித்த வாழ்க்கையை எழுதுவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் மொழி, அவர் அன்றாடம் புழங்கும் மொழியாக அமைந்திருப்பது, படைப்பின் ஆழ அகலங்களை தான் உணர்ந்தது போலவே வாசகனிடம் கடுத்த வழிவகுக்கும்.
நவீன இலக்கியவாதிகள் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் கோட்பாட்டுச் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளாமல், புனைவில் நேர்மை குன்றாது, சமூக யதார்த்தை அப்படியே பதிவுச் செய்ய முயல்கிறார் எழுத்தாளர். ”எழுத்தாளன் வாழும் தெருவில் நடந்த கதைகள் தான் உலகின் ஒவ்வொரு மொழியிலும் இலக்கியமாக்கப்பட்டிருக்கின்றது”, என்று எழுத்தாளர் இமையம் சுட்டிக்காட்டவர். ‘கறிச்சோறு’ நாவலும் எழுத்தாளன் வாழ்ந்த சமூகத்தில் நடமாடிய கதைதான்.
”நான் பார்த்த வாழ்க்கை முழுவதையும், எழுது தீர்த்துவிட்டேன். என்னிடம் இனி எஞ்சிய நினைவுகள் ஏதுமில்லை என்கிறபொழுது, எனது கதாப்பாத்திரங்கள் மீது நான் கற்பனையை ஏற்றுகின்றேன்” என்று நோபல் பரிசுப்பெற்ற எழுத்தாளர், மோ யான் (Mo Yan) குறிப்பிடுவார். ஆனால் எழுத்தாளர் சி.எம். முத்து கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் வலம் வருபவர். 40 ஆண்டுகள் எழுதியும் இன்னும் எழுதுவதற்கு ஏராளமான வாழ்க்கைப்பாடுகள் மிச்சமிருக்கின்றன என்பதுபோல் ‘கறிச்சோறு’ நாவல், மாய யதார்த்தம், பின்நவீனத்துவம் போன்ற எந்த கற்பனை நாடகீயத்தன்மைகளின் உதவியையும் நாடாமல், முழுக்க முழுக்க அசல் வாழ்க்கையைப் பதிவு செய்வது போல் நாவலின் கதையைச்சொல்லிச் செல்கின்றார்.
’தேவை தான் கண்டுபிடிப்புகளின் தாய்’ என்பான் சமூக அறிவியல் மாமேதை எங்கெல்ஸ். தேவைகள் என்பன பொருளாதாரத் தேவைகளோடு சுருங்குவதல்ல. முன்னோக்கிச் செல்லும் காலம், அதற்கேற்ற புதிய அரசியல், பண்பாட்டு, சமூகத் தேவைகளை முன்வைக்கின்றன. விடுதலைக்குப் பிறகான தமிழக அரசியலின் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக உருவெடுக்கும் ‘கள்ளர் சமூகம்’ தங்களுக்கிடையே உள்ள உட்சாதி முரணைக் களைந்து ஓரணியாக ஒன்று திரள வேண்டிய சமூகப்பண்பாட்டுத் தேவையின் ஒரு வெளிப்பாடு தான் ‘கறிச்சோறு’ என்று புரிந்துகொள்வது, இலக்கியத்தின் உயர்நோக்கத்தை குறுகிய எல்லைக்குள் சுருக்கி விடுவதாக சிலர் கருதக்கூடும். ஆனாலும் அந்த பொருண்மை விளக்கத்திலிருந்து எந்த இலக்கியத்திற்கும் விலக்கு அளிக்க முடியாது, என்பதே உண்மை.
எழுத்தாளர்கள், வரையறுக்கப்பட்ட நோக்கங்கள் எதையும் தனது இலக்கிய ஆக்கத்திற்கு வைத்துக்கொள்வதில்லை. ஆனாலும், அவர்களது திட்டமின்மையைக் கடந்து, வரையறுக்கப்பட்ட நோக்கங்கள் கதைவெளிக்குள் இருப்பதை அவர்களால் தடுக்க இயலாது.
வரையறுக்கப்பட்ட அந்த நோக்கங்களோடு மட்டும் நாவலைப் பொருத்திப் பார்ப்பது தட்டையான புரிதலுக்கு வழிவகுக்கும். இலக்கியவாதிகளின் இறுதி நோக்கம் மானுட விடுதலை தான். அந்த விடுதலையை, அவன் தான் வாழும் காலத்திலேயே, தன்னோடு தொடர்புடைய சமூகத்திற்கு கிடைக்க வேண்டும், என அவன் இலக்கியம் செய்யும்பொழுது, அதற்கொரு வட்டாரத்தன்மை வந்த விடுகின்றது. வட்டார விடுதலையல்ல எழுத்தாளனின் நோக்கம்; வைய விடுதலை!
அத்தகைய ஒரு விடுதலைப் போராட்டத்தை கமலா, தனது சாதியச்சமூகத்திற்கு எதிராக நடத்தும்போது, கூட்டுச்சமூகத்தின் அசுர ஆற்றலின் பிரதிநிதியாக வரும் மாயாண்டி கொத்தப்பிரியனின் அரிவாளுக்கு தனது அண்ணன் தங்கவேலுவின் தலை இரையாகி முண்டமாக விழுவதைக் கண்டு அழுது புலம்புகிறாள். இந்தச் சாதியப் படுகொலைக்கு மூலகர்த்தாவாகிய, ஊர் நாட்டமை, வாகரைக்கள்ளர்களின் சாதியக்காவலர், ‘பெரிய வீட்டு நாயக்கரை’ துரத்திக்கொண்டு, முத்துக்கண்ணு விசுவராயர் ஓடுகின்றார். தனது வருங்கால மச்சானை கொலை செய்த மாயாண்டி கொத்தப்பிரியனையும், அவனது கூட்டாளிகளையும் துரத்திக்கொண்டு சாம்பசிவம் ஓடுகின்றான். மலரும் இரவின் கருமையிலிருந்து அமைதியை மட்டும் பிரித்தெடுக்கும் கலேபரங்கள், கூச்சல்கள், அழுகுரல்கள்….
“சீறிப்பாயும் வேங்கைகளின் வெறியினும் கடுமையான சாதிவெறி கொண்டலையும் இந்த மனிதர்களின் மத்தியில் அமைதியும் அன்பும் கருணையும் எப்போது திரும்பும்..?” என எழுத்தாளன் ஆற்றமையோடு ஏங்குகிறார்.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும், மாயாண்டிக் கொத்தப்பிரியனை துரத்துக்கொண்டுச் சென்ற தனது காதலன் சாம்பசிவம் திரும்பி வருகிறானா…? என ஏதிர்பார்ப்போடு வழியைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள், கமலா.
இந்த எதிர்பார்ப்பு கமலாவுடைய எதிர்பார்ப்பல்ல; சாதியச் சமூகத்தின் கோரப்பிடியில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு மனிதனின் எதிர்பார்ப்பு. சாதி நிகழ்த்தும் கொடுந்தீவினைகளின் மீதான ஏற்பு-மறுப்பு உரையாடல்களிலிருந்தும் விசாரணைகளிலிருந்தும் விலகி, அப்பாற்நின்று தனக்கு வாய்த்த இந்த அற்புதமான வாழ்க்கையை, எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இன்றே வாழ்ந்து விட வேண்டும் என்பது உயிரின் உடைமை; உயிரின் உரிமை. அந்த உரிமைக்கு எதிரான கூக்குரல்கள் உலகோடு வரினும் கெடும்!
தனது அண்ணன் தங்கவேலுவின் ஆதரவோடு, சாம்பசிவத்தைக் கூட்டிக்கொண்டு ஊரை விட்டு ஓடிவிட, குடமுருட்டி வாய்க்காலில் கமலா காத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், கோபால் குச்சிராயரின் வீட்டுப் பக்கமிருந்து, ஐயோ… அம்மா… என்று அலறித்துடிக்கும் நீலாவின் குரல், திருமணம் ஆகாமலேயே, தானொரு பிள்ளைப்பெற்றுக் கொள்ளப் போவதை அறிவிக்கின்றது.
அதனைத் தொடர்ந்து வரும் சில நிமிடங்களில், மாயாண்டி கொத்தப்பிரியன் தங்கவேலுவின் தலையை சாதிப்பெருமைக்காக காவு கொடுக்கின்றான்.
சாதியச் சமூகம் தொடரும்போது, சாதியைக் காப்பாற்றும் கொலைகளும், சாதியை உடைக்கும் பிறப்புகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும், என்ற அசரீரி கதைசொல்லியின் குரலாக ஒலிக்கின்றது!
- ப.பிரபாகரன்