தி. ஞானசேகரனின் “திருப்புமுனைத் தரிப்புகள்” சிறுகதையினூடான ஒரு தேடல்
டாக்டர் தி.ஞானசேகரன் “குருதிமலை” என்னும் நாவலினூடாக எனக்கு அறிமுகமான ஒரு படைப்பாளி. என்னுடைய இளமாணி பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் நோக்கில் மலையக நாவல்களை ஆய்விற்குத் தெரிவு செய்தபோது இவருடைய படைப்பாளுமையில் ஈடுபாடு கொண்டு சிறுகதைகளையும் தேடி கற்கத் தொடங்கினேன். மருத்துவப் பணிக்கு அப்பால் ஒரு இலக்கிய ஆர்வலனாக பரிமாணம் பெற்று தன்னுடைய எழுதுகோலால் நவீன இலக்கியங்களை எழுத்துலகுக்கு அளித்துக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி என்பதையும் மருத்துவப் பணியின் நிமித்தம் மலையகத்தில் வாழ்ந்தபோது தோட்டத் தொழிலாளர்களின் துயரங்களைக் கண்டு நெஞ்சுப் பொறுக்காது அம்மக்களின் வாழ்வியலை அவர்தம் உணர்வுகளுடனும் தேயிலைச் செடிகளுடனும் கலந்து யதார்த்தப்பூர்வமாக வெளிப்படுத்திய ஓர் ஆளுமை மிக்க படைப்பாளி தி. ஞானசேகரன் என்பதையும் அறிந்து கொண்டேன்.
இப் படைப்பாளியின் படைப்புகளில் அலாதியான ஈடுபாடு கொண்டு படிக்கத் தொடங்கிய படைப்பிலக்கியங்களில் “அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்” என்னும் சிறுகதைத் தொகுப்பும் குறிப்பிடத்தக்கது. இச் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் “திருப்புமுனைத் தரிப்புகள்” என்னும் சிறுகதை என்னை வெகுவாக பாதித்தது. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினை காலங்காலமாக அரங்கேறி வரும் வரலாற்று நிதர்சனம் ஆகும். ஆய்வாளர்கள் பலரும் இது தொடர்பான பல கருத்துக்களை முன்வைத்துள்ளமையை மலையகம் சார்ந்து வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகளினூடாக கண்டு கொள்ள முடிகின்றது. இச்சிறுகதையும் மலையக மக்களின் பிள்ளைகள் கல்வியில் எதிர்நோக்கும் சவால்களைத் தெளிவுப்படுத்துகின்றது. எனினும் “திருப்புமுனைத் தரிப்புகள்” என்னும் சிறுகதை “மலையகம்” என்ற பிரதேச உணர்வைத் தாண்டி கற்றலில் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களில் ஒன்றான சூழலின் வகிபங்கு குறித்து சிந்திக்க இடம் தருகின்றது. மருத்துவர் என்னும் நிலையைத் தாண்டி ஒரு படி மேலே சென்று கல்வி உளவியல் ஆலோசகராக இச்சிறுகதையில் தி. ஞானசேகரன் பரிணமிக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.
கற்றல் கொள்கைகளின்படி மாணவர்களுக்கான தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் போதுதான் முழுமையான கற்றல் வெற்றியளிக்கும் என கல்வி உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு மாணவனின் கற்றல் செயற்பாட்டில் கவர்ச்சி, கவனம், புலக்காட்சி, கற்பனையும் சிந்தித்தலும், ஆய்வுதிறன், பயிற்சியும் பழக்கமும் முதலிய காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.
“திருப்புமுனைத் தரிப்புகள்” என்னும் சிறுகதை ஒரு மாணவன் கல்வி கற்பதற்கு சூழல் தடையாக அமைவதையும் தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சவால்களை உடைத்தெறிந்து வைராக்கியத்துடன் மீண்டும் கல்வி கற்கத் தொடங்குவதையும் கருப்பொருளாக்கி படைக்கப்பட்டுள்ளது.
பெருமாள் ஒரு தோட்டத் தொழிலாளி. தன்னுடைய மகன் தங்கராசுவை ஒரு சிறந்த அறிவாளியாக உருவாக்க வேண்டும், உயர்ந்த உத்தியோகத்தில் அமர்த்திப் பார்க்க வேண்டும் என்னும் அவாவில் அதற்கான முழு பிரயத்தனங்களையும் செய்து வருகின்றான். ஆனால் இவற்றிட்கெல்லாம் பிரதான தடையாக அமைவது தான் வாழும் லயக் குடியிருப்பும் அங்கு வாழும் சூழல் இடையூறுகளுமாகும். இவற்றை இச்சிறுகதை ஆசிரியர் கதையின் பல இடங்களில் பதிவுசெய்துள்ளமையை காண முடிகின்றது.
“… தங்கராசுவிற்கு மட்டும் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டால் அமைதியாகப் படிக்க முடிவதில்லை. புத்தகத்தை மூடிவைத்துவிட்டுச் சத்தம் ஓயும் வரை சுவருடன் சாய்ந்து கொள்வான்.”
“தங்கராசுவின் வீட்டில் அவனது தாயிற்கும் தங்கைக்கும் அம்மை வருத்தம் வந்திருந்தபோது, இஸ்தோப்பின் மூலையில் இருந்து படிக்க வேண்டியிருந்தது. பக்கத்துவீட்டு அம்மாயி கரகரத்த குரலில் நடுக்கத்தோடு பாடிய மாரியம்மன் தாலாட்டுத்தான் அவனுக்கு மனதில் பதிந்ததேதவிர பாடங்கள் மனதில் பதியவில்லை.”
“பக்கத்து காம்பரா கந்தையா புதிதாக வாங்கிய ரேடியோவில் உச்சஸ்தாயில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. படித்துக் கொண்டிருந்த தங்கராசு தனது இரு காதுகளுக்குள்ளும் சுட்டு விரல்களைச் செலுத்திக் காதுகளைப் பொத்திக்கொண்டு அன்றைய பாடத்தை உரத்துப் படிக்கத் தொடங்கினான்.”
என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இச்சிறுகதையில் வரும் பாத்திரங்களினூடாகவும் சிறந்த கற்றல் செயற்பாட்டிற்கு ஆரவாரமான சூழல் தடையாக அமைவதை சூழல் ஞானசேகரன் குறிப்பிட்டுச் செல்கின்றார்.
“இதென்னடா மசிரு பூசாரி, எந்தநாளும் உடுக்கு அடிச்சு ஆளுங்கள ஏமாத்திக்கிட்டிருக்கான்… லயத்தில ஒரே சத்தம், புள்ளைங்க படிக்கேலாது. இப்பவே போயி செவிட்டில ரெண்டு குடுத்து உடுக்கைப் புடுங்கிக்கிட்டு வாரேன்.” என பெருமாள் என்னும் பாத்திரம் குறிப்பிடுகின்றது. மேலும் தங்கராசு படிப்பதற்கு சூழல் தடையாக இருப்பதால் அடிக்கடி அவன் தந்தை பெருமாள் பக்கத்துக்காம்பராக்காரர்களுடன் சண்டையிடுவதும் வழக்கமாக இருந்தது. இதனை,
“கந்தையா ஆக்குரோசத்துடன் வெளியே வந்தான். ‘இந்தா பெருமாளு தேவையில்லாத பேச்சுப் பேசாத. போன கெழம சுப்பன் கங்காணி வீட்டில சடங்கு நாலுநாளா ஸ்பீக்கர் போட்டாங்க… அப்ப மட்டும் சத்தம் இல்லியா… அந்த நேரம் ஒம்புள்ள படிப்பு எங்க போச்சு…?” என வரும் சான்றுகளும் கற்றல்சார் செயற்பாடுகளில் சூழல் வகிக்கும் பங்கினை எடுத்துக் காட்டுகின்றது.
ஒரு பிள்ளை கல்வி கற்கும்போது அமர்வதற்கும் எழுதுவதற்கும் தளபாடங்கள் இருப்பதுடன் அவை வசதியாக இருப்பதும் இன்றியமையாததாக இருத்தல் வேண்டும் என கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதுமட்டுமல்லாது பிள்ளைகளின் கல்வி தொடர்பான விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு இருப்பதும் இன்றைய காலகட்டத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. இச்சிறுகதையில் வரும் தங்கராசுவின் தகப்பன் பெருமாள் ஓரளவு கற்றல் செயற்பாட்டில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை அறியக் கூடியவனாக இருந்தபோதும் அவனின் தாயிற்கு அவ்வாறான சிந்தனைத் தெளிவு குறைவாக இருப்பதையும் தி.ஞானசேகரன் தெளிவுபடுத்தியுள்ளார்.
காற்றோட்டமுள்ள, போதியளவு வெளிச்சமிக்க, அமைதியான சுகாதாரமான சூழல் அமையும்போது கற்றல் இலகுவாகும். எனினும் தங்கராசுவிற்கு அவ்வாறான சூழல் இன்மையை பின்வரும் சிறுகதை சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன.
“ ‘என்ன ஆயா, எந்தநாளுந்தான் சொல்லிக்கிட்டிருக்கேன். நான் படிக்க ஒக்காந்தேன்னா நீயும் அடுப்பில பொகையப் போடுற… எனக்குக் கண்ணு எரியுது@ படிக்க முடியல்ல’ என்றவாறு கண்களைக் கசக்கியபடி நிமிர்ந்தான் தங்கராசு.”
“தங்கராசுவிற்கு மூக்கு அரித்தது. பலமாக இரண்டு தடவை தும்மிவிட்டு மூக்கிலிருந்து வடிந்த நீரைப் புறங்கையால் துடைத்தபடி நிமிர்ந்தான். முன்புறமாகக் குனிந்திருந்து எழுதியதால் முதுகு வலிக்கத் தொடங்கியது. சம்மணங்கொட்டிய கால்களை விரித்து நீட்டிநிமிர்ந்து உட்கார்ந்தான்.
“தங்கராசு படித்துக்கொண்டிருக்கும் போது, குப்பி விளக்கிலிருந்து வெளிவந்த புகையும் அடுப்புப் புகையுடன் சேர்ந்துகொண்டது. கண்களில் எரிச்சல் அதிகமாகியது. வெளியே எழுந்து சென்று அவன் மூக்கைச் சிந்திவிட்டு மூலையிலிருந்த அலுமினியக் குடத்திலிருந்து கோப்பையில் தண்ணீரை ஊற்றிக் கண்களையும் முகத்தையும் கழுவிக் கொள்கிறான்.”
பிள்ளை படித்துக் கொண்டிருக்கும்போது கவனம், சிந்தனை சிதறாமல் இருப்பதுடன் வேறு வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டளையிடுவதும் அப்பிள்ளையை பாதிக்கும் ஒரு முக்கிய விடயமாகும். மலையகத் தோட்டத் தொழிலைப் பொருத்தவரையில் குழந்தை பராமரிப்பில் வீட்டிலுள்ள வளர்ந்த பிள்ளைகளும் பிள்ளைக்காம்பராவும் பிரதான பங்கினை வகிக்கின்றது. இச்சிறுகதையில் வரும் தங்கராசு படித்துக்கொண்டிருக்கும்போது அவனுடைய தாய் பல இடையூறுகளை ஏற்படுத்துவதையும் காண முடிகின்றது.
“தங்கராசு மீண்டும் படிக்கத் தொடங்கியபோது தங்கச்சிப் பாப்பா அழுகையோடு நெளியத் தொடங்கினாள். ‘அடே தங்கராசு அம்மாப்புள்ளய கொஞ்சம் ஆட்டிவிடு. சோறு வடிச்சுக்கிட்டு இருக்கேன்.” என கூறியதிற்கு பதிலாக தங்கராசு தாயை நோக்கி
“ ‘என்ன ஆயா, கொஞ்சங்கூட படிக்க வுடமாட்டேங்கிற. வேலை வச்சுக்கிட்டு இருக்கே…’ எனச் சினத்துடன் கூறிக்கொண்டே எழுந்த தங்கராசு தொட்டிலை ஆட்டத் தொடங்கினான்.” என வரும் உரையாடல் பகுதியும் சான்று பகர்கின்றது.
எனவே தொகுத்து நோக்கும்போது கற்றல் செயற்பாட்டில் மாணவர்கள் திறமையாகச் செயற்படுவதற்கும், கற்கும் விடயங்களை உள்வாங்கிக் கொள்ளவும் ஆரோக்கியமான சூழலும் ஒரு காரணியாக அமைவதை தி.ஞானசேகரனின் “திருப்புமுனைத் தரிப்புகள்” என்னும் சிறுகதை எடுத்துக் காட்டுகின்றது. பொதுவாக கற்றல் செயற்பாடுகளில் மலையகத் தோட்டப்புறங்கள் வெற்றியளிக்காமையை மையப்படுத்தி இச் சிறுகதை இடம்பெற்றாலும் “கற்றல் - சூழல்” என்னும் எண்ணக்கருக்களை வைத்து நோக்கும்போது பொதுவாக மாணவர்களின் கற்றல் செயற்பாட்டின் பாதகங்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றது. மலையகம் என்ற உணர்வை விடுத்து இச்சிறுகதை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு படிப்பினையை ஏற்படுத்தி அவர்களை சிந்திக்கத் தூண்டுவதாக அமைவதையும் அறிய முடிகின்றது. ஆகவே ஒவ்வொரு பெற்றோர்களும் பிள்ளைகளின் கற்றல்சார் செயற்பாடுகளை செம்மைப்படுத்துவதற்கு முன்னர் வீட்டுச்சூழலை முதலில் கருத்தில் கொண்டு பின்னர் அவர்களின் கற்றலை முன்னெடுத்து செல்வது சாலச் சிறந்ததாகும்.
- சி.ரஞ்சிதா