இறையாண்மைக்கு அச்சுறுத்தல் உணர்கின்ற போதெல்லாம் கவிஞனின் தூவல் துவக்காகுகிறது. அன்பின் பாதையில் குழந்தைகளை காணும்போதும் பூக்களைக் காணுகின்ற போதும் அதே தூவல் வண்ணங்களைக் கொட்டித் தீர்க்கும் தூரிகையாகிறது. தமிழ் இலக்கியத்தை ஊன்றிப் படித்த பழந்தமிழ் இலக்கியங்களில் மேல் தீராக்காதல் கொண்ட நவீன கவிஞர்களின் ஆற்றாமையும் சங்கநாதமும்தான் கவிஞர் பூர்ணாவின் 'நிலமற்ற தானியம்' கவிதை நூல். குறிஞ்சி நிலத்தில் அடுக்ககம் அதிகமாகி விட்டது. மருத நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவிட்டன. முல்லை நிலம் பிளாட் ஆனது. இன்று ஐவகைக் களத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதனுடைய சமகால சறுக்கல்களை சாதிய சவால்களை அதிகார வன்முறைகளை கவிதை நெம்புகோல் கொண்டு புரட்டியுள்ளார். வீரியமிக்க வரிகளை அதிகமாக பயன்படுத்தி இருக்கிறார்.
கவிதை போல காத்திரமாகவும் காதலோடும் சொல்வதற்கு லாவகமான, சிறந்த இலக்கிய வடிவம் இல்லை. அறத்தின் பக்கம் நின்று புரையோடிப்போன சமூகத்தைப் பார்த்து கேள்வி கேட்கின்ற உரிமை கவிஞரைத் தவிர யாருக்கு உண்டு. தன்னை முன்னிலைப்படுத்தி பண் எழுதுவோருக்கு மத்தியில் மண்ணை முன்னிலைப் படுத்தி அதன் சிதைவுகளை முன்னிலைப் படுத்தி எழுதும் பெரும்பாணர் கவிஞர்.ஆர்பதம், புலரி, இற்செறிப்பு போன்ற பழந்தமிழ்ச் சொற்களை எல்லாம் கவிதைகள் பயன்படுத்துகிற உத்தி அவருடைய தனிச்சிறப்பாக நான் பார்க்கிறேன். நவீன கவிதைகள் இன்று பல்வேறு தன்மைகளில் எழுதப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் பழந்தமிழ் இலக்கியத்தின் உடைய சாரம் குறையாமல் நவீன மொழியில் எழுத முடியும் என்ற புது உத்தி அவருடையதாக இருக்கிறது.
"மீனவனுக்காகக் காத்திருந்த மீனவச்சியின் அந்தி தாளை மரத்தின் நுனிக்கிளையில் அமர்ந்திருந்த துப்பாக்கிக் குண்டு சத்தத்தில் அதிர்ந்து விழுந்தது" என்ற வரிகளில் நக்கண்ணையார் நற்றிணையில் பாடிய ஒரு அகப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது. நெய்தல் திணையின் கூறுகளை நெய்தல் நிலத்தின் அவலங்களை இதைவிடவும் சோகமாக யாரும் சொல்லிவிட முடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
ஒரு பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ்ந்த பண்பாட்டின் சிதைவு இங்கே தெரிகிறது.எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் எவ்வளவு தான் அறிவுத்துறையில் சிந்தித்தாலும் எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் இன்னும் சாதி என்பது புரையோடிப் போன ஒரு மிகப்பெரிய வியாதியாக இருப்பது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம். ‘யாயும் யாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்' என்ற கவிதையைப் படிப்பதற்கு இனிமையாக இருக்கிறது ஆனால் நடைமுறை வேறாக இருக்கிறது என்பதை அச்சு அசலாக அந்தக் கவிதை போலவே படைத்து இன்றைய சமூகத்தின் உண்மையை கவிஞர் இப்படி காட்டுகிறார்
"கீழத்தெரு எம் தாய் மேலத்தெரு
உம்தாய் அறுந்த செருப்பால் நம் தந்தைகளின் நட்பு
நன்கு அறிந்திருந்தோம் நம் குடிகளை
செங்குருதியில் நனைந்து மண்ணில் உடல்
அன்பு நெஞ்சில் தஞ்சம் கொண்டதால்"
இந்தக் கவிதையை படித்த பொழுது மேலே சொன்ன குறுந்தொகைக் கவிதை மனதில் நிற்கவே இல்லை. விவசாயம் இங்கு தொழில் அல்ல வாழ்க்கை முறை என்று சொல்வார்கள் அந்த வாழ்க்கையை இழந்தவர்கள் எங்கே செல்வார்கள் வேறெதிலும் மனம் லயிக்காமல் வேளாண்மையை மட்டும் நம்பிக் கொண்டிருக்கிறார்.
நிலம் சுரண்டப்பட்டு தொழில் மயமாக்கப்பட்டு எத்தனையோ பேரின் தலைமேல் செங்கல் கட்டும் சூளைகள் அமைத்து அவன் வாழ்க்கையை சுக்குநூறாக உடைத்து விட்டார்கள். அதை ரத்தமும் சதையும்நிரம்பிய அவன் வாழ்க்கை பறிபோன வேதனையின் உச்சத்தினைக் கவிஞர் பதிவு செய்கிறார்.
"நிலத்திலிருந்து வெட்டப்பட்ட சதைத் துண்டு
வேர்களுக்கு விடாமல் திருடப்பட்ட நீர் ரத்தம்
அழிக்கப்பட்ட வனத்தின் எலும்புக்கூடு."
கூலியின் உறிஞ்சப்பட்ட காலம். வர்க்கப் போராட்டத்தில் குரல் கொடுப்பவன் காதலும் வர்க்கப் போராட்டமாகத் தான் இருக்கிறது. வலிகளை சுமந்து கொண்டே இருப்பவன் காதலும் வலியாய்த் தான் இருக்கிறது. காணும் இடமெல்லாம் பக்தியை காண்பது பக்தி மார்க்கத்தில் உள்ளோர் சொல்லுகின்ற எழுத்துமுறை எங்கே போனாலும் வறுமையையும் வர்க்கத்தையும் சுமந்த மனிதர்கள் எழுத்திலும் அதுதான் அதிகமாக வெளிப்படுகிறது.
"கிராமத்திலிருந்து சோற்றை ஊற்றிக்கொண்டு
மினி பஸ் பிடித்து கட்டட வேலைக்கு கால்கடுக்க நின்று
இன்று ஆள் போதும் நாளை பார்க்கலாம்.
என்ற சொல்லை சுமந்து வீடு திரும்பும் முதியவரை போன்றது
உன்னைப் பார்க்காமல் திரும்புவது.."
இந்த கவிதை என்னை ஏதோ செய்கிறது. காதலை இப்படி கூட சொல்ல முடியும் என்ற புதிய பாதையை காட்டியவன்" இரண்டு நாள் தூக்கத்தை கெடுத்தவன். ஆட்டு குட்டி, நாய் குட்டி, காகம் மாடு பஞ்சாரம் நொச்சி மரம் புளிய மரம் ஒன்று இயற்கை சார்ந்த வாழ்வியல் சூழல் எழுத்துக்களில் பறந்து கிடப்பதைக் காணலாம்.
"மூச்சுக்காற்றை இறைத்திறைத்து
விற்கிறான் பலூன்காரன்
ஒவ்வொருவரும் முத்தமிட்ட பிறகு
பறக்கத் தயாராகிறது
சிறகடித்துப் பறக்கும் பலூனை
வியப்புடன் பார்க்கும் சிறுவர்கள்..."
தார்ச்சாலை விளிம்பில் தள்ளுவண்டியில் கொட்டிக்கிடக்கும் பச்சைக் கடலையில் ஒட்டி இருக்கும் நிலம் கரிசக்காடு விரிந்தது. கரம்பை நிலத்தை உடலாகவும் நெய்தல் நிலத்தை மாற்றிக் கொண்ட முதியவர்.
மருதநிலம் வெள்ளரியாய் கூடையில் நிரம்பி தொண்டையை நனைத்தது. இப்படி விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையையும் ஐவகை நிலங்களின் மாறிப்போன தன்மையை வேதனையோடும் எள்ளல் தன்மையோடு கூடிய சமூகப் பகடியோடு அவர் கவிதைகளில் திறம்பட பதிவு செய்கிறார்.
கைத்தடிகள் என்ற கவிதை வர்க்கத்தின் சாதியின் அடிமைத்தனத்தை தோலுரித்துக் காட்டுகிறது.வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் சோக வாழ்வை கவிதையின் கண்ணீரோடு வடித்து வைத்திருக்கிறது. கிராமங்களில் நகரமயமாதல் சூல் கொண்டதை பாட்டி வடை சுட்ட கதையை புதிய பாணியில் சொல்லியிருக்கிறார். மிட்டாய் மரம் என்ற கவிதையை குழந்தைகளின் உலகத்திற்கு உள்ளே சித்தரிக்கப்பட்டுள்ளது.
அப்பொழுது பிறந்த தங்கைக்காக வாழைப்பழம் வாங்கி வரும் அண்ணனின் பாசத்தில் கிராமங்களின் சூழ்நிலையை கண் முன் விரிக்கிறது. நிலம் சார்ந்த ஒரு வாழ்வை இனக்குழு வாழ்வைப் பறிகொடுத்த ஒரு ஆதித் தமிழனுடைய போராட்ட குரல் இந்த புத்தகம் எங்கும் விரவிக் கிடக்கிறது அதனுடைய விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையும் குழந்தைகளுடைய உலகமும் நம் கண் முன்னே வண்ண வண்ணமாய் விரிகிறது. இன்னும் பல நூல்களைப் படைக்க வாழ்த்துக்கள்..
நிலம் அற்ற தானியம் | பூர்ணா
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
விலை - ரூ.80/-
- முனைவர் யாழ் ராகவன்