ஆறு வருடங்களாக நான் பவித்ராவைக் காதலிக்கிறேன். அவள்தான் என் சுவாசக் காற்று, வருங்கால மனைவி. ஆனால் எங்கள் காதல் சற்று வித்தியாசமானது. நான் இன்னமும் அவளை நேரில் சந்தித்ததில்லை. இன்றைக்கு நான் ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கு அவள்தான் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.

lady 348மார்ச் 20, 2009 இரவு சென்னைக்குச் சென்று கொண்டிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு பெரிய விபத்துக்குள்ளானது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அந்த விபத்திற்குப் பிறகுதான் எனக்கு பவித்ரா அறிமுகமானாள்.

அன்று நான் ரயிலிலிருந்து தூக்கி எறியப்பட்டு மயக்கமடைந்தேன்.

மருத்துவ மனையில் முழித்துப் பார்த்தவுடன்தான் நான் எடுத்துவந்த பெட்டியும் அதில் இருந்த ஒரிஜினல் கல்விச் சான்றிதழ்களும், உயர் கல்விக்கான பிற படிவங்களும் விபத்தில் தொலைந்து விட்டது புரிந்தது. சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு நேரில் சென்று நிலைமையை விளக்கி, போலீஸ் எப்.ஐ.ஆர் நகலுடன் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு மாற்றுச் சான்றிதழ்களுக்காகக் காத்திருந்தேன். பி.ஈ உயர் படிப்பிற்கான முயற்சியில் இருந்தேன்.

அடுத்த ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் என் சான்றிதழ்கள் அனைத்தையும் பவித்ரா அனுப்பி வைத்தாள். அத்துடன் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தாள். அதில் அந்த விபத்தில் அவளும் சிக்கிக் கொண்டதாகவும், என்னுடைய பெட்டி அவளருகில் கிடந்ததாகவும், அதை தற்போதுதான் அவளால் அனுப்பி வைக்க முடிந்ததாகவும் எழுதியிருந்தாள்.

அன்று பரஸ்பர மரியாதையில் தொடங்கிய எங்களின் நட்பு, காதலாக வளர்ந்தது. அடிக்கடி மின்னஞ்சலில் தொடர்பு கொண்டோம். மொபைலில் பேசிக் கொண்டோம். நான் சென்னை ஐ.ஐ.டி யில் சேர்ந்து என் இஞ்சினியரிங் படிப்பைத் தொடர்ந்தேன். அவள் இருப்பது கோயமுத்தூர்.

தினமும் என்னைத் தொடர்பு கொண்டு என்னை நன்கு படிப்பதற்கு உற்சாகமூட்டுவாள். நல்ல எண்ணங்களையும், உயர்ந்த சிந்தனைகளையும் என் மனதில் விதைத்தவள் பவித்ரா. மின்னஞ்சல் மூலமாக நாங்கள் புகைப் படங்களை அனுப்பிக் கொண்டபோது, அவள் அழகு என்னை அடித்துப் போட்டது நிஜம். முகத்தில் நல்ல தேஜஸுடன் அழகான புன்னகையில் லட்சணமாக இருந்தாள். தபால் படிப்பு மூலமாக எம்.ஏ முடித்து விட்டு விளிம்பு நிலை மனிதர்களுக்காக கோயமுத்தூரில் ஒரு அனாதை ஆசிரமம் நடத்திக் கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கு செய்யும் தொண்டும், சேவையும் ஏகாந்தமான நிம்மதியையும், ஆத்ம திருப்தியையும் அளிப்பதாக பெருமையுடன் அடிக்கடி சொல்வாள்.

நான் பி.ஈ முடித்துவிட்டு காமன் அட்மிஷன் டெஸ்ட் எழுதி அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நேர்முகத் தேர்விலும் வென்று, ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் சேர்ந்தேன். இரண்டு வருடங்கள் அங்கு மார்க்கெட்டிங் படித்துவிட்டு தங்க மெடலுடன் வெளியே வந்தேன்.

நான் வாங்கிய தங்க மெடலுக்காக என்னை விட அதிகம் சந்தோஷப் பட்டது பவித்ராதான். வேலைக்காக ஏகப்பட்ட நிறுவனங்களிலிருந்து அழைப்பு வந்தாலும் சென்னையிலுள்ள ஒரு பிரபல பன்னாட்டு நிறுவனம் என்னைக் கவர்ந்தது. அதில் சேர்வதற்கு முன் பவித்ராவை ஒரு முறை நேரில் பார்த்து என் உற்சாகத்தை பகிர்ந்து கொள்ளத் துடித்தேன். ஆனால் அவள் என்னிடம், “ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமலே காதலித்து பிறகு மணந்து கொள்வதில் கிடைக்கும் சுவாரசியம் ஒரு முறை நேரில் பார்த்துவிட்டால் போய்விடும்” என்று சொல்லி மேலும் என் எதிர்பார்ப்பை பன் மடங்கு உயர்த்தினாள்.

சொல்லாமல் நேரில் சென்று அவளை திக்குமுக்காட வைக்கலாம் என்றால் அவளின் முகவரி என்னிடம் இல்லை. அவள் மொபைல் சர்வீஸ் புரொவைடரிடம் அவளின் முகவரி கேட்டேன். தர இயலாது என்று சொல்லி விட்டார்கள். கோயமுத்தூரில் உள்ள அனாதை ஆசிரமங்கள் என்று தேடினால், ஏகப்பட்ட ஆசிரமங்கள் இருந்தன. அதனால் பவித்ராவின் முகவரியை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.

நான் அந்த பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. என்னுடைய வித்தியாசமான மார்க்கெட்டிங் அணுகு முறையினால் அந்த நிறுவனம் கொழித்தது. அதனால் எனக்கு மிக முக்கியத்துமும் பதவி உயர்வும் கொடுத்து என்னைச் சீராட்டினார்கள்.

எல்லாம் மிக நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் பவித்ராவைப் பார்க்கும் ஆவல் என்னுள் அதிகரித்து அதுவே எனக்குள் ஒரு ஏக்கமாகிப் போனது.

பெற்றோர்கள் எனக்குப் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்தனர். அவர்கள் எனக்கு உற்ற நண்பர்கள். எனவே நான் பவித்ராவைப் பற்றி அனைத்து விவரங்களையும் எடுத்துச் சொல்லி அவளைத்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொன்னேன். அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று எங்கள் திருமணத்திற்குப் பிறகு, சென்னைக்கு அருகிலேயே பெரிய அனாதை ஆசிரமம் கட்டித் தரலாமென்றும், விளிம்பு நிலை மனிதர்களுக்கான ஆசிரமச் சேவையை அவள் தொடர்ந்தால் எங்கள் வாழ்க்கை நல்ல விதமாக ஆசீர்வதிக்கப் படும் என்று சொன்னபோது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

இதை உடனே நான் பவித்ராவிடம் சொன்னபோது, அவள் ஒரு குண்டை தூக்கிப் போட்டாள். அவள் தந்தை எங்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையாம். என் பெற்றோருடன் கிளம்பி நேரில் வந்து முறைப்படி அவளைப் பெண் கேட்பதாகச் சொன்னேன். அதற்கு அவள், படிக்காத தன் தந்தை மிகுந்த கோபக்காரர் என்றும், ஜாதிக்காக கெளரவக் கொலைகள் செய்யப் படுவதை தீவிரமாக ஆதரிப்பவர் என்றும், அவரை மீறி அவளால் எதையும் செய்ய முடியாது எனவும், என்னை அவளுக்காக காத்திருக்க வேண்டாம் என்றும் சொன்னபோது நான் துடித்து விட்டேன்.

என்னால் அவள் சொன்னதை நம்பவே முடியவில்லை. ஆறு வருடங்கள் ஒருத்தனைக் காதலித்து அதன்பின் அப்பாவை மீறி தான் எதுவும் செய்ய முடியாது... கெளரவக் கொலை அது இது என்று சாக்குப் போக்கு சொல்வது எப்படிச் சாத்தியம்....? அதெப்படி உண்மையான காதலாக இருக்க முடியும்? நான் வேறு ஜாதி என்று தெரிந்தேதானே என்னை விரும்பினாள்? எனக்கு அவள் மீது எரிச்சல் வந்தது.  

என் பெற்றோர்களிடம் இதைச் சொன்னபோது, என் ஆசைக்காக என் தந்தை, பவித்ராவின் தந்தையுடன் மொபைலில் பேசி அவரை சம்மதிக்க வைக்க முயற்சி செய்வதாகச் சொன்னார். அவர் மொபைல் நம்பரை நான் பவித்ராவிடம் கேட்டபோது, தர மறுத்து விட்டாள்.

எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

என் திருமணத்தை என் பெற்றோர்களின் முடிவுக்கே விட்டு விட்டேன்.

பவித்ராவிடம் பேசுவதை அறவே நிறுத்தி விட்டேன். ஆறு வருடங்களாகக் காதலித்தவளைப் பிரிவது எவ்வளவு வேதனையான விஷயம் என்பது காதலித்தவர்களுக்கு மட்டும்தான் நன்கு புரியும். அந்த வலி என்னையும் வாட்டியது.

எந்த ஒரு மன வலியும், பிரிவும், வேதனையும் காலம் என்கிற மருந்து ஆற்றிவிடும். எனக்கும் அது நடந்தது.

மீனா என்கிற மீனலோச்சினியுடன் என் திருமணம் சென்ற மாதம் மதுரையில் சிறப்பாக நடந்தது. மறக்காமல் பவித்ராவுக்கும் பத்திரிக்கை அனுப்பினேன். திருமணமான சில நாட்களில் என் மனைவியிடம் பவித்ராவைப் பற்றிய எல்லா உண்மைகளையும் சொன்னேன். அவள் “அதெப்படி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ளாது ஆறு வருடங்கள் காதலித்தீர்கள்...?” என்று ஆச்சரியப் பட்டாள்.

மீனலோச்சினி எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம். என்னிடம் பாசத்தையும் காதலையும், என் பெற்றோர்களிடம் அன்பையும், பணிவையும் காட்டினாள். என் அம்மா “லோச்சினி, லோச்சினி” என்று உருகினாள்.

அவளுடன் நல்ல புரிதலுடனும், சந்தோஷத்துடனும் நாட்கள் நகர்ந்தன.

அன்று என் அலுவலக முகவரிக்கு ஒரு ரிஜிஸ்டர் தபால் வந்தது. அனுப்புனர் ‘பவித்ரா’ என்ற முகவரியைப் பார்த்ததும் வெறுப்பும் கோபமும் அதிகரிக்க என் தனியறையில் இருந்த குப்பைத் தொட்டியில் அதை எறிந்தேன். அதன் பிறகு அதை மறந்து அலுவலக வேலையில் மூழ்கி விட்டேன்.

மாலை ஐந்து மணிக்கு குப்பைத் தொட்டியை மாற்ற வந்த ஹவுஸ் கீப்பிங் பையன், “சார், இதுல பிரிக்கப் படாமல் ஒரு பெரிய கவர் இருக்கு” என்றான். ஒன்றும் தெரியாதவன் மாதிரி, “சரி, டேபிள் மேல வச்சுட்டுப் போ” என்றேன். அவன் சென்ற பிறகு அந்தக் கவரை நிதானமாகப் பார்த்தேன். கனமாக இருந்தது. சரி என்னதான் எழுதியிருக்கான்னு பார்க்கலாமே... ஆறு வருஷம் பழகிய தோஷத்துக்கு படிச்சு பார்த்துட்டு கிழிச்சுரலாம் என்று நினைத்து பிரித்துப் படித்தேன்.

“அன்பானவருக்கு,

தங்கள் திருமணப் பத்திரிக்கையை அழைப்பாக இல்லாமல் அறிவிப்பாக எடுத்துக் கொண்டேன். தங்களுக்கு என் மீது இருப்பது மிக நியாயமான கோபம்.

தங்களுக்குத் தெரியும் 2009ம் வருடம் நடந்த ரயில் விபத்தில் அடிபட்டு மருத்துவ மனையில் இருபத்தைந்து நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் நான் இருந்ததும், விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட உங்களுடைய பெட்டியை என்னுடையது என்று நினைத்து போலீசார் என் தந்தையிடம் ஒப்படைத்ததும், வீட்டிற்கு சென்ற பிறகு அது என்னுடையது இல்லை என்கிற உண்மை தெரிந்து, பெட்டியினுள்ளே இருந்த சில படிவங்களின் மூலமாக தங்கள் முகவரியைத் தெரிந்துகொண்டு அவைகளை உடனே அனுப்பி வைத்ததும்...

அதன் பிறகுதான் நம் பரஸ்பர மரியாதை, நட்பாகி பின்பு காதலானது. தாங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவர். அதனால்தான் சிறிய சிகிச்சைக்குப் பிறகு நல்லவிதமாக மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டீர்கள்.

ஆனால் தங்களுக்குத் தெரியாதது, அந்த விபத்தில் என் இரண்டு கால்களையும் நான் இழந்தது. பதினாறு வயது துடிப்புடன் துள்ளித் திரிந்த நான் அந்த விபத்தில் என் இரண்டு கால்களை இழந்ததும் நொறுங்கிப் போனேன். அடுத்த இரண்டு மாதங்கள் துக்கத்திலும், அழுகையிலும் நான் துடித்தேன். பிரத்தியேகமாக அளவெடுக்கப்பட்டு என் தந்தை எனக்கு இரண்டு ஜெய்ப்பூர் கால்கள் வாங்கி அணியச் செய்தார். இருண்டு போன என் வாழ்க்கையில் ஒரு சின்ன வசந்தத்தை விதைத்தது நம் காதல்தான். அந்த வயதின் கிளர்ச்சியில் தங்களின் அன்பும், காதலும் எனக்கு மிக முக்கியமாகப் பட்டது. அந்த வேதனையான நாட்களில் தாங்கள் ஒருவர்தான் என் வெளி உலகத் தொடர்பு. மற்ற நேரங்களில் நான் தனிமையைத்தான் விரும்பினேன்.

வாழ்க்கையில் எனக்கு ஒரு பிடிப்பு ஏற்படவும், என் தனிமையை விரட்டவும், என் தந்தை எனக்காக இப்போதுள்ள அனாதை ஆசிரமத்தை தொடங்கிவைத்து அதை நன்றாக நடத்தச் சொன்னார். அதை நான் திறம்பட முழு ஈடுபாட்டுடன் நடத்த ஆரம்பித்தேன். என் கால்கள் விபத்தினால் துண்டாடப் பட்டதை மறைத்து, உங்களை நேரில் பார்ப்பதையும் நான் தவிர்த்து வந்தேன். என்னைப் பற்றிய உண்மையை தங்களிடம் மறைத்தது என்னை உவ்வா முள்ளாக குத்தத் தொடங்கியது.

பி.ஈ. படிக்கும்போது என் மீதுள்ள தூய்மையான காதலையும் பராமரித்து, கல்வியின் மீதும் முழுக் கவனத்தையும் செலுத்தி, தாங்கள் சிறப்பாக செயல் பட்டீர்கள். நான் உண்மையைச் சொன்னால் தங்கள் கவனம் படிப்பிலிருந்து சிதறக் கூடும் என்பதால் அவ்விதமே தாங்கள் தொடர வேண்டும், அதன் பிறகு ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும், அதுவரை நம் காதல் தங்களுக்கு ஒரு ஆரோக்கியமான கவசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன் பிறகு நடந்த உண்மைகளைச் சொல்லிவிடலாம் என்கிற எண்ணத்தில்தான் இருந்தேன்.

தாங்கள் பி.ஈ. முடித்துவிட்டு, அகமதாபாத்தில் ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ படித்து தங்கப் பதக்கம் பெற்று மிகச் சிறந்த வேலையில் அமர்ந்தீர்கள்.

நம் காதலின் மூலமாக தாங்கள் மிகவும் பெருந்தன்மையானவர் என்பதை நான் புரிந்து வைத்திருந்தேன். ஒரு வேளை நான் அப்போதாவது உண்மையைச் சொல்லியிருந்தாலும் தாங்கள் என்னை மனமுவந்து மனைவியாக ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அது என்னுடைய பேராசையின் வெளிப்பாடாகத்தான் இருந்திருக்கும். அதனால்தான் என் அப்பாவின் பெயரைச்சொல்லி உங்களிடமிருந்து பிரிந்தேன்.

காதலர்கள் சேர்ந்து வாழ முடிந்தால் அது மிகப் பெரிய அதிர்ஷ்டமே. எல்லா காதல்களும் திருமணத்தில் முடிவதில்லை. உண்மையான காதல் என்பது தியாகமும், விட்டுக் கொடுத்தலும்தான்.

நான் புன்னகையுடன் இருக்கும் மார்பளவு புகைப் படத்தைத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தற்போது என் ஜெய்ப்பூர் கால்களுடன் இரண்டு விதமான புகைப் படங்களும், செயற்கைக் கால்கள் அணியாமல் துண்டிக்கப்பட்ட நிலையில் இயற்கையாக இரண்டு புகைப் படங்களும் தங்களது பார்வைக்கு அனுப்பியுள்ளேன். இதுதான் இப்போதைய பவித்ரா.

தங்களின் திருமணப் பரிசாக இத்துடன் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு காசோலை அனுப்பியுள்ளேன். அந்தப் பணத்தில் கால்கள் இழந்த எவரையேனும் தேடி ஜெய்ப்பூர் கால்கள் செய்யச் சொல்லி உங்கள் கையால் தயவு செய்து பரிசளியுங்கள். எனக்காக மெனக்கிடுங்களேன்...

தயவு செய்து என்னை மன்னித்து, தங்கள் மனைவியுடன் என் ஆசிரமத்திற்கு ஒரு முறை வருகை தர வேண்டும்.

இன்னமும் நான் தங்களைக் காதலிக்கிறேன். அறம் சார்ந்த காதல்.

என்றும் உங்கள்,

பவித்ரா

கடிதத்தை படித்து முடித்ததும் வேதனையில் வெடித்து அழுதேன். வீட்டிற்கு வந்து என் மனைவியிடம் கடிதத்தை கொடுத்து படிக்கச் சொன்னேன்.

சோகம் அப்பிய முகத்துடன், “பவித்ராவைப் பார்க்க வர சனி, ஞாயிறு நாம கோயமுத்தூர் போகலாங்க” என்றாள்.

- எஸ்.கண்ணன்

Pin It