தூக்கத்தில்... கேட்பது போலதான் இருந்தது... அவன் புரண்டு படுத்தான்....

தலை முட்டிக் கொண்ட தூரத்தில்....ஏதோ தட்டுப் பட்டது.... தூக்கத்தில் புகை வாசம் வருகிறதோ என்றுதான் மீண்டும் நினைத்தான்... விழித்தவன்... மெல்ல எழுந்தமர்ந்தான்....ஏதோ சப்தம்... முணுமுணுப்பது போல அவனை சுற்றி பரவியது.... தீயும் புகையும்... புரளும்.. உருவம் போல நிழல் ஒன்று அவன் கன்னத்தினோரம்.... செவ்வரி சமைக்க ... ஒரு மாதிரி தூக்கத்தை மெல்ல கழற்றி விட்டான்... படக்கென கனவுக்குள் புகுந்து விட்ட ஞாபகம் போல.... 

"அடக் கருமமே... செகண்ட் ஷோ படம் பார்க்க வந்துட்டு, எப்பவும் போல... சீட்டுக்கு அடியில படுத்து தூங்கிட்டேன்..." என்று முணங்கிக் கொண்டே எழ முற்பட... .. "யாரா நீ... எப்டி உள்ள வந்த....?"-  ஹிந்தியில் கத்திக் கொண்டே இருவர் அவனை நோக்கி ஓடி வந்து தாக்கத் தொடங்கினார்கள்..... 

"அட இலவுகளே.... போன்னா போக போறேன்..... எதுக்குடா அடிக்கறீங்க"-என்று அவசர அவசரமாக பேசிக் கொண்டும்...பின்.... அப்படி இப்படி சண்டை போடுபவன் போல கை கால்களை  ஆட்டி சமாளித்து கொண்டும், எழுந்து நகர...... நகர......... அப்போதுதான் கவனித்தான்....அந்த திரை அரங்கின் மத்தியில்..... ஒரு பெண்ணை அமர வைத்து...கைகளையும் கால்களையும் இருவர் பிடித்துக் கொண்டிருக்க.. எதிரே...பூசாரி ஒருவன் அமர்ந்து ஏதோ தீயிட்டு யாகம் நடத்திக் கொண்டிருந்தான். கிடைத்த நேரத்தில் கூர்ந்து கவனித்தது அவன் மூளை... 

night violet"எதோ பெரிய கேஸ் போல....." என்று யூகித்துக் கொண்டே....."அண்ணே..எனக்கு ஒன்னும் தெரியாது.... விட்ருங்க...... நான் போய்யர்றேன்.....' என்று கத்திக் கொண்டே...... பின்னோக்கி நகர நகர..... அவர்கள்....." விடாத.. விஷயம் வெளிய தெரிஞ்சா ஆபத்து.. அவனையும் போட்டுத் தள்ளு..."- என்று ஹிந்தியில் வந்த சத்தம் கத்த, இந்த ஊருக்கு வந்து இந்த 2 வருடங்களில் கத்துக் கொண்ட ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம் புரிய வைத்தது... வேற வழியே இல்லை... படாரென... இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்து ;கரக்.....கரக்...' என்று அவனை பிடிக்க வந்த இருவர் கைகளிலும் வீசினான்...கத்தி வீசுவதில் வல்லவன்.... என்று மீண்டும் நிரூபித்தான்.....

சட்டென காட்சி மாறி.. அவர்கள் பின்னோக்கி நகர....கண நேரத்தில் எகிறி இருவர் மண்டையையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து ஓங்கி முட்டி விட்டு.. அதே நொடியில் முன்னால் ஓடி சென்று பாய்ந்து... பூசாரி தொப்பையில் ஒரு கோடு போட்டான்...கோடு பொத பொதவென சகதியை கொட்டினாற் போல குருதியைக் கொட்டியது.... சுற்றும் முற்றும் நன்றாக பார்த்துக் கொண்டான்.. ஒரு சண்டைக்காரனின் உடல்மொழியோடு... அவன் கண்கள் எட்டு புறமும் சுழன்றது.  அதற்குள் அந்தப் பெண்ணை பிடித்திருந்தவர்களும் அவனை நோக்கி முன்னேற..... "கொம்மா... யாகம் நடத்தி பொம்பளைய பலி குடுக்கவா பாக்கறீங்க... விட்ருந்தான் நான் பாட்டுக்கு போயிருப்பேன்..... என்னையும் போடுவீங்களா....... கொய்யால.....வாங்கடா......" என்று அவர்களையும்..... கரக் கரக்.....ஆக்கி விட்டு......காற்றைப் போல.. அந்தப் பெண்ணை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு... திரை அரங்கம் தாண்டி... பின்னால் இருந்த இருட்டுக் காட்டுக்குள் ஒரு காட்டுப் பன்றியைப் போல ஓடத் துவங்கினான்......நொடிகளில் முடிந்த சண்டைக்காட்சியை கடந்திருந்தது கதை... 

அந்த பெண் மூச்சிரைத்து ஓட...... முடியாமல் ஆங்காகே சுழன்று நின்று அமர..... அவ்வப்போது விழுக......" அட..கருமமே.. ஓடி வா...... புடிச்சாங்கனா.. உன் கூட சேர்த்து என்னையும் பலி குடுத்துருவாங்க..... எல்லா நேரத்திலயும் கதாநாயகன் ஜெயிக்க முடியாது......"- இருட்டுக்குள் வெண்ணிலா.... ஒற்றையடி காட்ட... இரட்டைக் கிளவிகளென இருவரின் பாதங்களும்....' தப் தப்........ தப் தப்........'- என பதிந்து பதிந்து எழுந்தன...எழுந்து எழுந்து பதிந்தன....

காடு நீண்டுதான் கிடக்கும்... அறிந்தவன் போல.. வழி மாற்றி சாலையை அடைந்தான்.... மெல்லிய வெளிச்சத்தில்.. சாலை.... கருமை பூசி மினுங்கிக் கொண்டிருக்க.. மின் மினி பூச்சிகளாய் ஆங்காங்கே.....எப்போதாவது சில வண்டிகள் அவர்களை கடந்து கொண்டிருந்தன... கை காட்டி காட்டி டாட்டா போட்டது போல தோன்றியதுதான் மிச்சம்...ஒரு வண்டியும் நிற்கவில்லை.....

"டைம் என்ன இருக்கும்....?"-என்று பொதுவாக கேட்டவன்... அப்போதுதான் நினைவு வந்தவன் போல.. கொஞ்சம் ஆசுவாசத்தோடு......"ஆமா யார் நீ.. எப்டி அங்க மாட்ன... அவங்க நிஜமாவே பலி குடுக்கத்தான் அப்டி பண்ணாங்களா...."-என்றான்..... ஒரு வித வேகத்தோடு...அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு வண்டி வந்து, போன வேகத்தில்..... அந்த பெண்ணை சில நொடிகள்...பார்க்க முடிந்தது..... நீட்ட முகம்... முதிர்ந்த முகம்... பேன்ட் சடையில்... ஒரு கார்ப்பரெட் ஹெச் ஆர் போல இருந்தாள்... இதோ இன்னொரு வண்டி வந்து போக... காதோரம் நரைத்திருந்த முடி.. அவளை ஒரு வயதான பெண் என்று ஊர்ஜிதப் படுத்தியது...

மறந்தவன் நினைவு படுத்திக் கொண்டது போல..."ஏம்மா... உன் பேரு என்ன.... வீடு எங்க...?-சட்டென ப்ரேக் போட்டது போல ஒரு புள்ளிக்கு வந்தவன்....."ஓ.. பாஷை புரியாதோ...... என்னடா இது வம்பா போச்சு.... இப்போ எங்கன்னு போக...?"-தானாகவே பேசிக் கொண்டவன்..." முதல்ல இந்த ஏரியாவ விட்டு போகணும்..இல்லனா எப்டியும் மாட்டிக்குவோம்......."-என்று ஒரு முடிவுக்கு வந்தான்.... அவன் பார்வை.. அனிச்சையாக அந்தப் பெண்ணின் இருப்பை உணர்ந்தது... அவள்... இருட்டுக்குள் ஒடுங்கி நின்றிருந்தாள்.. வெண்ணிலா காட்டிக் கொடுத்த நிழலென...

அதே நேரம்.... ஒரு பெட்ரோல் லாரி வேகமாய் வந்து அவர்களின் முன்னால் நின்றது...சில் காற்று... உடலில்.. சூடாக அப்பியது போல.... முகம் உள் வாங்கினான்... 'என்ன..... யார்...' என்று பார்ப்பதற்குள்...எட்டிப் பார்த்த டிரைவர் பேசித் தொடங்கியிருந்தான்...

"ஹெலோ... வெள்ளைப் பாண்டி... வந்து வண்டில ஏறுங்க.. அவங்களுக்கு இன்னும் பேர் வைக்கலயாம்.... அப்புறம் வைச்சுக்கலாமாமா.......

வயசு மட்டும் 47ன்னு சொல்ல சொன்னாரு... வாங்க..... உங்கள.. புனேல இறக்கி விட்டுட்டு போறேன்... அப்புறம்... அவுங்கள கூட்டிட்டு போய் அவுங்க வீட்ல பத்திரமா விட்டுட்டு போவீங்கலாமா..."-டிரைவர் கத்தி கத்தி பேசினான்...

"என்னது 47 வயசா?" என்று இருட்டென்றும் யோசிக்காமல்... அவளைப் பார்த்தான்.. வெள்ளைப்பாண்டி..... வெள்ளை சட்டையில்... வேகம் குறையாமல்.. இருந்தது பெண்மை...லாரியின் வெளிச்சம்.... வலை போல சுழன்றது...

"அய்யோ...." என்று அவனாகவே ஒரு ஜெர்க் ஆகி....."ஆமா... நீங்க யாரு... எப்டி என் பேரு தெரியும்....என்னென்னமோ சொல்றீங்க..." என்றபடியே.. பக்கத்தில் நின்றவளிடம்......"நிஜ.......மா.......வே 47 ஆ....!" என்று முணங்கினான்...

பதில் இல்லை... 

"ஏன் வெள்ளைப் பாண்டி.. இது கேள்வி கேக்கற நேரமா..... எவ்ளோ பெரிய பிரச்சினைல மாட்டிருக்கீங்க... கம் ஆன்... எல்லாம் சொல்றேன்....."-கிட்டத்தட்ட எச்சரித்தான் டிரைவர்...

வண்டி மித வேகத்தில்... நீந்தத் தொடங்கியது,......

ஜன்னலோரத்தில் அந்தப் பெண்... இரவை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்... இடையில் அமர்ந்தபடி... ஒன்றும் புரியாமல்... பார்த்துக் கொண்டு வந்தான் வெள்ளைப்பாண்டி......

"என்னப்பா ரெண்டு பெரும் இப்டி உம்முன்னு இருக்கீங்க... எனக்கு எப்பவுமே ஜாலியா இருக்கனும்... இந்த வாழ்க்கை கொண்டாட தானே வெள்ளை... அத விட்டு உம்முனு இருக்கவா அழுதுட்டே பொறக்கறோம்..."

சாலையிடம் பேசுவது போலவே பேசிக் கொண்டிருந்த டிரைவரை உற்றுப் பார்த்தான்... வெள்ளை...

"என்னடா... தத்துவமா பேசறேன்னு பாக்கறியா....... அது சும்மா.. இந்த மனுஷங்கள கலாய்க்க தத்துவம் தேவைப் படுது..."-வாக்கிய முடிவுக்கு மெல்ல திரும்பி பார்த்தான்... ஒரு பேயைப் போல... 

சிலீர் இசை விழுந்ததைப் போல உணர்ந்த பாண்டி...... "சே ச்சே..... அப்டில்லாம் இருக்காது....." என்று மனதுக்குள் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு வண்டிக்குள் நோட்டம் விட்டான்...சுற்றிய கண்கள்.....கண்ணாடிப் பக்கத்தில்...குழி போல இருந்த இடத்தில் சரியாக உட்கார்ந்திருந்த பாதியாக குலுங்கிக் கொண்டிருந்த ரம் பாட்டிலில் இன்னும் ஒரு முறை வந்து நின்றது..... இம்முறை.... நிதானத்தோடு கொண்ட நிலையாக...

"ஹெலோ பாண்டி... காம் ஆன்.. எடுத்து அடிங்க... நைட் நேரம்... அதும் நெடுஞ்சாலைப் பயணம்...ஜிவ்வுனு இருக்கும்..."-டிரைவர்...கூறிக் கொண்டே... சிரித்துக் கொண்டான்...

"யாரு இவன்.. ஒன்னும் புரிபடலயே.. நம்பலாமா.....! வேண்டாமா....?.... ஏதும் பிரச்சனைல சிக்க வெச்சிருவானோ..." வெள்ளைப் பாண்டி மனம்.. பின்னோக்கி.. சரிவுகளில்.....ஆங்கங்கே தலை விரித்து ஓடிக் கொண்டிருந்தது...ஓட ஓடவே பக்கவாட்டில் திரும்பி  "பாரு.. கொஞ்சம் கூட பயமில்லாமல் இந்த பொம்பளை, என்னமோ சொந்த லாரியில போற மாதிரி போறத...." என்று மனதுக்குள் முணங்கிக் கொண்டே.. படக்கென்று பாட்டிலை எடுத்து பட படவென குடித்தவன்.."உங்களுக்கு......?" என்று ட்ரைவரைப் பார்த்துக் கேட்டான்...

தலையை ஆட்டிக் கொண்டே..."அது தப்பு.. வண்டி ஓட்டும் போது வண்டிதான் ஓட்டனும்.. சரக்கு போடக் கூடாது..... நாம போட்ட ரூல்ஸ நாம உடைக்கலாம்.. ஆனா அது, உங்க  வட்டம், உங்களோட மட்டும் இருக்கும் போது.. . இப்போ.. என்ன நம்பி நீங்க ரெண்டு பேர் இருக்கீங்க.......சோ.. நான்.. கரெக்ட்டா இருக்கணும்...... நீங்க அடிங்க......."என்ற டிரைவர்... லாவகமாக பட்டும் படாமல்...கியரை மாற்றினான்...எதிரே வந்த கார்.. சற்று உள் வந்து பின் வெளியே போய் மறைந்தது....

வெள்ளை டிரைவர் வார்த்தைகளை உள் வாங்க கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொண்டான்..

"லைப்...... அதோ அங்க பறக்கற பறவைக்கு ஒரு மாதிரி இருக்கும்.. இதோ இந்த அம்மாவுக்கு வேற மாதிரி இருக்கும்.. எல்லாத்தையும் போட்டு நேர்கோட்டுல குறுக்கு கோட்டுல நிறுத்தி நீட்டி பாக்க கூடாது..... பாண்டி...

"ஆமா என்னை எப்டிங்க தெரியும்.. என் பேரு எப்டி..... நீங்க யாரு....... பிளஸ்.. நாங்க பாதுகாப்பா இருக்கோமா...இல்ல பாதுகாவல்ல இருக்கோமா....."-பாண்டி... கண்கள் கூர்மையாக்கி... மூக்கு விடைத்துக் கேட்டான்...

"என்ன பாண்டி கமல் வசனமெல்லாம் பேசிட்டு....... வாங்க......வாங்க..... அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களே இந்த வாழ்க்கை......"-என்றவன்.... பாண்டி பார்த்த அர்த்த பார்வைக்கு..."சரி சரி விடுங்க.. எல்லாம் இங்க இருந்து எடுத்தது தான்.... இங்கயே கொடுக்க போறதுதான்..."என்று சொல்லி சிரித்தான்... 

வண்டி பஞ்சு போல பறந்து கொண்டிருந்தது.... அவள்.. மனதுக்குள்... இருந்த இருட்டை... அவள் திறக்கவும் இல்லை... வெளியே இருந்த இருட்டை அவளுக்குள் அவள் திணிக்கவும் இல்லை...

"என்ன பாக்கற பாண்டி... வா.... சரக்கு போட்லாம்..."- என்றபடியே... வண்டியை விட்டு இறங்கிய டிரைவர்... அங்கே இருந்த ரிசார்ட்டுக்குள் நுழைந்தான்..... பின்பனி... நிலவை உதிர்த்துக் கொண்டிருந்தது....

ஏற்கனவே... கொஞ்சம் போதையில் இருந்த பாண்டி......"என்னடா..... இது......." என்று யோசித்துக் கொண்டே....மீண்டும் யோசித்தான்..... மனம் ஏற்கனவே டிரைவர் பின்னால் போயிருந்தது... மீண்டும் யோசித்தான்..... மூளையும் இப்போது பின்னால் போகத் துவங்கி விட்டது...

"ஹெலோ... நீ இங்கயே இரு.....வந்தர்றேன்......"- என்றபடியே லாரியின் ஜன்னலோரம் ஏதோ குவிதலின் ஓரத்தில் அமர்ந்திருந்த அந்தபெண்ணின் பதிலுக்கு காத்திராமல்... லாரியை விட்டு இறங்கிய உடலோடு ஓடினான்.....

பச்சை பல்புகள் எரிய.... ரிசார்ட்... ஆங்காங்கே... குளிர்ந்தும்.....நெளிந்தும்......சூடாகவும்....... இரவுக் காடாகவும் இருந்தது... முன்னால் சில லாரி டிரைவர்கள்.. பேருந்தில் வந்த மக்கள் சிலர்.... கொஞ்சம் அதிகமாக முகப்பூச்சு பூசிய உதட்டு சாயம் தூக்கலான பெண்கள் சிலர்... பெண் போல சிலர்... என்று ஆங்கங்கே.... சிலர் தேநீர் அருந்திக் கொண்டும்...... சிற்றுண்டி அருந்திக் கொண்டும் இருக்க...... டிரைவர்... உள்ளே சென்று வழக்கமாக அமரும் இருக்கையில் அமர்ந்தான்.... அந்த அறையில்.... இருந்த அனைவருமே.. மது அருந்திக் கொண்டிருந்தார்கள்...அல்லது அவர்களை மது அருந்திக் கொண்டிருந்தது...

"என்ன சந்தோஷ் சார்... இன்னைக்கு என்ன வண்டி"- என்று கேட்டுக் கொண்டே....வந்த வெயிட்டர் ..... ஒரு புல் பாட்டில் சரக்கை கொண்டு வந்து மேஜை மேல் வைத்தான்...வழக்கம் போல... என்பது அவனின் உடல் மொழி கூறியது..

"ஓ.... உங்க பேர் சந்தோஷா...?.......இது ரெகுலரா வர்ற இடமா.....!?"- என்று கேட்டு கொண்டே.....சுற்றும் முற்றும் பார்த்தபடியே நெருங்கி வந்து எதிர் இருக்கையில் அமர்ந்த பாண்டி... முழுக் கவனத்தையும் இப்போது பாட்டில் மேல் வைத்திருந்தான்... அது ஒரு நிரப்பப் பட்ட மென் பொருள் மூளை போல.. ஜொலி ஜொலித்தது.........இரண்டு கண்ணாடி குவளைகள் வந்ததும்... மனதுக்குள் பனி சொட்டியது...நிரப்பப் பட்ட மறு நொடி...பாண்டி மட மடவென குடித்தான்....அதை அப்படித்தான் குடிக்க வேண்டும் என்பது போல சிரித்தான் சந்தோஷ்...

"எஸ்.. என் பேரு சந்தோஷ்....."என்று பாண்டியைப் பார்த்துக் கூறிக் கொண்டே...'என் மதுவை நான் குடிப்பேன்' என்ற உடல்மொழியோடு குடிக்கத் துவங்கியவனைப் பார்த்து..

'சார் இப்போ என்ன எழுதிட்டு இருக்கீங்க" என்று எப்போதும் போல கேட்ட வெயிட்டரை விநோதமாக பார்த்தான் பாண்டி...அந்த அறை ஜிகு ஜிகுவென சுழல்வது போல இருந்தது...சுழன்றது போலத்தான் இருந்தது...

"சரி.. சரி.. உன் குழப்பத்துக்கு எல்லாம் பதில் சொல்றேன்... நான் ஒரு எழுத்தாளன்... இந்த டிரைவர் வேலை அப்பப்போ போர் அடிச்சா... என்னை ரெப்ரெஷ் பண்ணிக்க வர்றது...... அவ்ளோதான்.... இப்போ கூட.. ஒரு கதைக்காகத்தான் அப்டியே சுத்திக்கிட்டு இருக்கேன்.  கதைங்கறது.....பேய் மாதிரி.... அதுக்கு உருவமே இருக்காது.. ஆனா உயிர் இருக்கும்.. அதை கரெக்டா பிடிச்சு அடைச்சிட்டா...ஒரு சிருஷ்டியா... இந்த பூமிய ஆளும்.........."-பேசிக்கொண்டே சந்தோஷ் இன்னொரு ரவுண்ட் போக.....பாண்டி இன்னொரு ரவுண்ட் போயே ஆக வேண்டும் போல பார்த்தான்... 

"அட பாவி......கதை எழுதறவன் டேஞ்சராச்சே..."-என்று யோசித்துக் கொண்டே குடித்த பாண்டி... மெல்ல சிரிப்பது போல முகத்தை வைத்துக் கொண்டான்...

"பழக பழக...சரக்கும் இனிக்கும்..." என்று சொல்லி தானாகவே சிரித்துக் கொண்டான் சந்தோஷ்....

சிரிக்க..... இனிக்க... திளைத்தது... நேரம்......

சட்டென திரும்ப தோன்றிய அன்- னிச்சையில்... பின்னால் ஒரு யானை போல நின்றிருந்தாள் அந்த வயலெட் பெண்... அவளின் சட்டை அந்த அறையின் நிறத்தையே மாற்றி விட்டதோ என்பது போல கூர்ந்து பார்த்தான் பாண்டி.....ஆனாலும் மனம் கேள்விக்குள் சிக்கிக் கொண்டிருந்தது..."இங்க ஏன் வந்தா...?"

இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே நின்றாள்.. சில கேள்விகளைப் போல......

சட்டென புரிந்து கொண்டவனைப் போல் பார்த்த, சந்தோஷ்..."-ஓ.... பசிக்குதா..... இந்தா.......சாப்டு......."- என்று ஆம்லேட்டை அவள் பக்கம் தள்ளி வைத்து.. உட்கார சொன்னான்.....

அதற்குள்... அவள்..பாண்டியின் கையிலிருந்த குவளையை படக்கென வாங்கி மட மடவென குடித்தாள்.....

பாண்டி பதறியபடியே.....'....ஏய்.... ஏய்... இது சரக்குப்பா... கூல் ட்ரிங்ஸ் இல்ல.....என்று கத்திக் கொண்டே அவளை வெளிறிய பார்வை பார்க்க.. அவள் சற்று நகர்ந்து சந்தோஷின் மேஜையில் இருந்த அவனின் குவளையையும் எடுத்து அதே மட மடவென அடித்தாள்.....

சந்தோஷும்.. பாண்டியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே... அவளையும் பார்க்க....."நீ என் இனமம்மா" என்றான் சந்தோஷ், சிவாஜி உடல்மொழியில்... 

வெயிட்டர்......"சரியா போச்சு"- என்றபடியே மீண்டும் ஒரு ஆம்லெட்டைக் கொண்டு வந்து வைத்தான்...

அடுத்த ரவுண்டுக்கு மூன்று குவளைகள் நிறைந்திருந்தன......

ப்ளேயரில் ஏதோ ஹிந்தி பாட்டுகள் ஓடிக் கொண்டிருக்க....... பாக்கெட்டில் இருந்த பென் டிரைவை வெயிட்டரிடம் கொடுத்து....." இத போடு கண்ணா..." என்று சொல்லி... "இப்போ பாரு".... என்று அவர்கள் இருவரையும் பொதுவாக  பார்த்துக் கொண்டே கூறிய சந்தோஷ்....எழுந்து நின்றான்....

பாண்டி அடுத்த ரவுண்ட் அடிப்பதில் மும்முரமானான்... ஆனாலும்....பார்வை... 'சந்தோஷ் என்ன செய்ய போகிறான்' என்பது போல அப்படி இப்படி போய் வந்து கொண்டிருந்தது... 

பென் டிரைவ்.... பாடத் தொடங்கியது.... படக்கென பாட்டிலை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு.. ரஜினி போல ஆடத் துவங்கினான்... சந்தோஷ்.....

"நா......................................ன்ன்ன்ன்ன்ன்..... பொல்லா.....தவன்....டங்க்கு டங்க்கு டங்க்கு..........பொய்ய்ய்ய்ய்ய்ய்......... சொல்ல்ல்லாதவன்..........டங்க்கு டங்க்கு டங்க்கு.....என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்...வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்.... கை கட்டி....... வாய் மூடி........ யார் முன்னும்.......... நான் நின்று, ஆ......தாயம் தேடாதவன்.... அந்த..... ஆ.....காயம் போல் வாழ்பவன்..."

பாட்டு ஓட ஓட அவன் ஆட ஆட.. படக்கென எழுந்த அந்த பெண்.. தலையை அவிழ்ந்த கூந்தலோடு சிலுப்பிக் கொண்டு... ஆடத் துவங்கினாள்......பாண்டி படக்கென சிமிட்டினான் உடலை...... உள்ளுக்குள்... ஆச்சரியக் குறி மலர்ந்திருந்தது.... 

"வரே.. வா.. செம்ம்ம்ம...... காம் ஆன்.... இதுதான் புரட்சி... ஆடு... ஆடு....ஆடு.....ஆடேய்........ தோணுச்சுனா ஆடிடனும்.... கற்பு பற்புன்னு பேசிகிட்டிருக்க கூடாது, சிலை வைச்ச மாதிரி...... பாண்டி நீயும் வா......."  என்று கத்தினான் சந்தோஷ்.... 

பக்கத்து மேசைகளில் இருந்த சிலரும் சேர்ந்து ஆடத் துவங்க...அந்த இடமே.. ஒரு கலை கட்டிய கச்சேரி போல காணப் பட்டது..

'நீங்க.... ஆடுங்க...' என்பது போல ஜாடை காட்டிய பாண்டி.....நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்தான்.... அவனையும் மீறி...அவன் கண்கள் அவளைத் தேடியது....கூட்டம் விலக்கிய மனதுக்குள்... ஒரு வயலெட் நிறம் திடு திடுமென பூத்தது போல.....தெரிந்தாள்

"இத்தன வயசுல... ஒரு மாதிரி வித்தியாசமா இருக்குதே....ஊரும் தெரியல... பேரும் தெரியல... யாரு ஒன்னும் புரியல..... ஆனா.. குடிச்சிட்டு ஆட்டத்த பாரு......." என்று யோசித்துக் கொண்டே.... மூளைக்குள்... அடுக்கிக் கொண்ட... சந்தேகத்தோடு...பார்த்தவனின் விழி முழுக்க அந்த வயலெட் நிற சட்டை நிறைந்து கிடந்தது.... காதோரம் நரைத்த முடி.. அந்த இரவில் அந்த வெளிச்சத்தில் மினுமினுங்கி விண்மீன்களானதோ என்று சரியாய் தப்பியது அவனின் தடுமாற்றத் துளிகள்.......வித்தியாசமான  ஒரு விதமான அழகு அவளிடம் இருப்பதாக நம்பினான்... மூக்குத்தி மின்ன.. கனத்த உதடுகளின் வரிகள்... ஆட்டத்துக்கு தகுந்தாற் போல விரிந்து மூடியது.... மூச்சு வாங்கிய மார்புகளின் வடிவம்.. அவனை ஒரு முறை தலையை சிலுப்பிக் கொள்ள செய்தது...ஒரு மாதிரி துரு துருவென இருள் சூழ்ந்து இருந்த அந்தப் பெண்ணின் பார்வை... கண நேரம் இவனிடமும் வராமல் இல்லை.....அது கவ்விய கனவுக் கூட்டமென நிறமாறிய மேகக் கூடுகளாய் இருந்தன...அவளின் உடல் மொழி..... ஒரு கட்டுடைப்பாக இருந்தது.... அதை உள் வாங்க முடிந்த பாண்டிக்கு... அவள் ஒரு சுதந்திர மனுஷியாக தோன்றினாள்....போதையாக கூட இருக்கலாம்.. அவனின் ஆழ்மனம் எச்சரித்தது... 

இத்தனை நாட்கள் உள்ளே அழுந்திக் கொண்டிருந்த அழுத்தம் மடை உடைந்து பீறிடுவது போல இருந்தது, அவளின் ஆட்டம்...... ஆசை தீர ஆடுவது... ஆசைக்கு ஆடுவது... ஆசை ஆசையாய் ஆடுவது... ஆட ஆட ஆடுவது... என்று எல்லாமுமாக ஆடினாள்... சந்தோஷின் உடல் அசைவுக்கு தகுந்தாற் போல அவளும் ஆடியது.. அந்தக் கூட்டத்தில் பயங்கர கரகோசத்தைக் கொடுத்தது....

"நீ என்ன...... நான் என்ன... நிஜம் என்ன...பொய் என்ன...... சந்தர்ப்பம் தெரியாதடி...ஏதேதோ நடக்கட்டும்.......... எங்கேயோ கிடக்கட்டும்......... எனக்கென்ன உனக்கென்னடி..........எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள்......உலகத்தில் கிடையாதடி........இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக இதுபோல ஆனேனடி........"

கூட்டம் ....."ஹேய்ய்ய்......." எனக் கத்தியது.....

"நான்..... பொல்லாதவன்....டங்க்கு டங்க்கு டங்க்கு..........பொய்......... சொல்லாதவன்..........டங்க்கு டங்க்கு டங்க்கு.....என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்...வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்.... கை கட்டி....... வாய் மூடி........ யார் முன்னும்.......... நான் நின்று, ஆதாயம் தேடாதவன்.... அந்த ஆகாயம் போல் வாழ்பவன்..."

வேர்க்க விறுவிறுக்க......... அவள் ஆடிய ஆட்டம்... அவனை நிதானம் இழக்க வைத்தது... அவள் மீது திடும்மென ஒரு வகை அன்பை பூக்க வைத்தது... "யாரிவ... எப்டி அங்க மாட்னா...?... என்ன மொழி பேசுவா......?...... ஒன்னும் தெரியலயே... ஒரு வேளை ஊமையா இருக்குமோ.... எந்த ஊருக்காரி....... "அவன் அவனுக்குள்ளேயே கேட்டுக் கொண்டே, பார்த்துக் கொண்டிருக்க...... அடுத்த பாடலுக்கு தாவியது கூட்டம்... நேரம் ஓட ஓட... தலை கவிழ்ந்து மூச்சிரைக்க வந்து அமர்ந்தான் சந்தோஷ்..

அவனைப் பார்த்தபடியே புன்னகைக்க....... முயற்சிக்க அதற்குள்..."என்ன பாண்டி...உனக்கு வாழ்க்கைய வாழவும் தெரியல.....ராத்திரில ஆடவும் தெரியல...... .... நாங்க எப்டி..." என்று பாண்டியப் பார்த்துக் கூறிய சந்தோஷ்.. அதே பேச்சோடு...... பின்னால் திரும்பி..."ஹே....மின்மினி...... வா... போதும்" என்றான்....

"என்ன மின்மினியா......!?"

"அட ஆமாப்பா... நானே பேர் வெச்சிட்டேன்...... நான்....... நான் சொல்லிக்கறேன்...... வாங்க போலாம்......." என்றபடியே... ரிசர்ட்டுக்கு உள்ளே நடந்தான்....சந்தோஷ்...

பின்னால் நடந்த பாண்டி..."யாருகிட்ட சொல்லிக்கறேன்னு சொல்றான்... அய்ய்யோ.... ஒன்னும் விளங்கல"- என்று முனங்கிக் கொண்டே... "ஏன் இங்க தங்க போறோமா...?"என்று கேட்டான்.....லேசாக தள்ளாடிய கால்களுடனே..... பின்னாலேயே மின்மினியும் சென்றாள்....அதே தள்ளாட்டத்துடன்...

"பின்ன.. இவ்ளோ மப்புல வண்டிய ஒட்டுனா.. அதுதான் என்ன ஓட்டும்... ஹ ஹஹா..... வாங்க வாங்க.. காலைல போவோம்.." என்றபடியே மேல் தளத்துக்கு கூட்டி சென்றான்......

அங்கே வரிசயாக நான்கைந்து அறைகள் இருக்க, முன்னால் இருந்த அறையை காட்டி..."உங்களுக்கு இந்த ரூம்... எனக்கு அந்த ரூம்... காலைல பார்ப்போம்... ஒழுங்கா தூங்கனும்...." என்று இருவரையும் ஒரு மாதிரி பார்த்து..... கண் அடித்து விட்டு வலது புறம் இருந்த அறைக்கு சென்றான் சந்தோஷ்....

ஒரு கணம் நின்று யோசித்தபடியே.. உள்ளே சென்றான் பாண்டி... பின்னால் பூனை போல வந்தவள்... தலை கவிழ்ந்து நின்றாள்.......

"வயசாகிடுச்சு.. இப்டி குடிக்கற.......... அவன்தான் சொல்றானா.....நீ குடிப்பியா ......"என்று அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே மெதுவாக கேட்டான்...

அவள் அவனைப் பார்த்துக் கொண்டே கதவை அடைத்தாள்...

"ஹெலோ மின்மினி,...... உன் பேரு என்ன..?"-என்று கேட்டவன்... சட்டென ஒரு கணம் நிறுத்தினான்...அவள் சிரித்து விடுவது போல பார்த்தாள்...

"சரி சரி... இப்போதைக்கு அதுதான் பேரு..."-என்று அவனையே சமாதானப் படுத்திக் கொண்டு....." சரி நீ எங்க போகணும்... யார் நீ... இப்டி என்கூடயே இருந்தா எப்டி... எங்க போகணும்னு சொல்லு.. காலைல அனுப்பி விட்டறேன்... பாக்க பாவாம இருக்குனு பார்த்தா..... என்ன ஆட்டம் போடற நீ"-என்றவன்.. சட்டென சுதி மாறி......"ஹே... ஏய்..... ஏய்....என்ன பண்ற......."என்று அவன் கத்த கத்தவே...... அவள்... பட படவென தன் ஆடைகளை கழற்றி விட்டு விட்டு... உள்ளாடைகளுடன் பெட்டில் படுத்துக் கொண்டாள்...

பேய் அறைந்தவன் போல... கண்கள் வெறித்து... உச்சி வியந்து..."அய்யோ......யம்மா... தாயே.... என்ன முடிக்காம விடமாட்ட போல....பெரிய இங்கிலீஷ்காரி..... இப்டித்தான் தூங்குவா போல..." என்று முணங்கியபடியே கட்டிலை விட்டு தெறித்து கீழே விழுந்தான்... களுக்கென்று சப்தம் வர..... மெல்ல எட்டிப் பார்த்தான்... அவள் சிரித்துக் கொண்டே திரும்பிக் கொண்டாள்...

கீழே படுத்தவன் மனதுக்குள் சாத்தான் தட்டிக் கொண்டே நின்றான்.. கண்கள் சுழல... மூளை பிரள.. மெல்ல எழுந்தான்... கால் பக்கத்தில் இருந்த போர்வையை எடுத்து அவள் மீது போர்த்தி விட்டு......."குண்டுஸ்... அழகாதான் இருக்கா..."- என்று முணங்கிக் கொண்டே மறுபடியும் கீழே சரிந்தான்.......

தூக்கம் கண்களை சுட்டது.... நிழலுக்குள்... நிறைந்து வழிந்த வெற்றிட வேர்வையில்... ஒன்றுமில்லாமல் போயிருந்தது உடல்...உறக்க நிலையே உன்னத நிலை என்பது போல... பிணங்கள் இரண்டு அங்கே கிடந்தது என்றே நம்பிய அந்த அறைக்குள்.. திடும்மென சுழன்ற வெப்பச் சுழலுக்குள் சுழன்ற மணித்துளிகளில் காதுக்குள்... கம்பியை வைத்து குத்தியது போல.. அலறிக் கொண்டு எழுந்தான் பாண்டி.... அவன் பக்கத்தில்... அவனைக் கட்டிப் பிடித்தபடி அவள் அலறிக் கொண்டிருந்தாள்.....

"என்ன..... என்ன... என்னாச்சு.........."- என்று கத்திக் கொண்டே பதறியடித்து...பார்த்தான்.  பக்கத்தில்.. அத்தனை சூட்டோடு அவள்..அவனை உள்ளாடை களோடு கட்டிப் பிடித்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தவனாக.....படக்கென்று அவளை விலக்கியபடியே தானும் விலகிக் கொண்டே "ஏய்.... அயோ... ஹெலோ... என்ன இது... நீ முதல்ல போர்வையை சுத்திட்டு நில்லு... வம்பா போய்டும்...." என்றான்...

ஆனாலும் அவள் அப்படியே நிற்க... அவளை ஒரு கணம் நன்றாக பார்த்து விட்டு......"ம்ஹும்ம்ம்ம்ம்........." என்று ஒரு பலி ஆடைப் போல தலையை சிலுப்பிக் கொண்டபடியே...."சரி.....என்னாச்சு.....எதுக்கு கத்துன....." என்றான்.... சுயநினைவு வந்தவனாக...

அவள் பேனை கை காட்டினாள்...அந்த அறை புழுக்கத்தில் நெளிவதைப் போல இருந்தது அவளுக்கு... அவளின் உடல் வேர்த்து முத்துக்களை கொட்டிக் கொண்டிருந்தது...

அவள் நீட்டிய கையின் நீட்சி விரலாகி முடிய அதன் தொடர்ச்சி நீண்டு அவன் இடைவெளி நிரப்பிய பார்வையை பேனில் கொண்டு நிறுத்தினான்...

"பேனுக்கு என்ன.......?....பேன்ல என்ன........!"-அவனும் பேனை உற்றுப் பார்த்தபடி கேட்டான்...

அவள் பேனையே பார்த்துக்  கொண்டேயிருந்தாள்....

பார்வையை அவள் பக்கம் திருப்பியவன்... "ம்க்கும்.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........" என்று தனக்குள் முணங்கிக் கொண்டு..."பேசாம படு.. கனவு கண்டுருப்ப...... ஆட்டம் போட்டல்ல.. அதுதான்...."என்றபடியே அவளைப் பிடித்து கட்டிலில் தள்ளி விட்டான்... பொத்தென்று விழுந்தவள் மெத்தென்று கிடந்தாள்...

விரக்தியாக..... "ம்ம்ம்ம்...." என்று சொல்லிக் கொண்டே.. மீண்டும்.....கீழே சரிந்தான்... போதை வந்து வந்து போய்க் கொண்டிருந்தது.... 

நகர்ந்த காலத்தில்.... மீண்டும் இருண்மை பூசும் தூக்கம்.. உயிரற்று போக போக....படக்கென விழித்தவள்....மீண்டும் கத்திக் கொண்டே எழுந்தாள்.......

வெறுக்கென துள்ளி எழுந்த பாண்டி... பாவமாய் பார்த்தான்......

"என்னாச்சு குண்டம்மா.... தூக்கம் வரலன்னா உக்காந்திரு......ப்ளீஸ்ஸ்....... நான் தூங்கறேன்.. தலை கிண்ணுனு இருக்கு...."- என்றான்....கடுப்போடு..

அவள் மீண்டும் பேனைக் காட்டினாள்...

மின்மினியையும் பேனையும் மாறி மாறி பார்த்தவன்... அவளை மட்டும் கொஞ்சம் அதிகமாகவே பார்த்தான்..."நம்பியார் ஆகாம விட மாட்டா போல..." என்று உளறிய தெளிந்த முனகலுடன் 'சரி'- என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக அவளுக்கு அருகே சேரைப் இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்.... இப்போது அவள் அவனையும் பேனையும் மாறி மாறி பார்த்தாள்....அவன்.. மெல்ல புன்னகைத்தபடியே....."இப்போ படுத்து தூங்கு என்பதாக ஒரு ஜாடை காட்டினான்... கண்களாலும் கைகளாலும்....

நின்றிருந்த மின்மினி... அவனைப் பார்த்துக் கொண்டே...  கட்டிலில் சரிந்தாள்....போர்வையை இழுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டு குறுக்கிப் படுத்தவள்...  தூங்கிப் போனாள்....

வயசாக வயசாக ஒரு வித அழகு முகத்தில் மிளிர்வதை யாரும் உற்று நோக்குவதில்லை...அவன் நோக்க அனுமதித்த இந்த சூழலை அவன் விரும்பினான்... அவனுக்குள்... ஒரு நிறைவு வந்தது போல உணர்ந்தான்... அவனின் வெறுமை.. ஒரு வீணையின் கையில் மாட்டியது போல இருந்தது.......அவளை பார்த்தான்.... ஆழமாக பார்த்தான்... பார்வையினாலே திறந்தான்... "யாரிவள்...?" கன்னத்தை கிள்ள வேண்டும் போல தோன்றியது..."வாய பாரு...ஆரஞ்சுப் பழம் மாதிரி........"-அவன்.... தானாக புன்னகைத்துக் கொண்டான்.. போதை மூளைக்குள்.. பூந்தோட்டம் விதை போட்டது....."ஏன் பேச மாட்டிங்கறா.....?......இல்ல.... ... மாட்டிங்கறாங்க... என்ன விட 17 வயசு பெருசு.... மரியாதை இல்லாம அவ இவனு பேசக் கூடாதுல்ல..." அவனாக முணங்கிக் கொண்டவன் எப்படியோ ஒரு புள்ளியில்.........தூங்கி வழிந்தான்....தூக்கம் முழுக்க கனவுகளை அவள் கொட்ட பூந்தோப்பு நட்டுக் கொண்டிருந்தான் பாண்டி.........

விடிந்தது......

எத்தனை எழுப்பியும் சந்தோஷ் எழுந்தபாடில்லை...புரண்டு படுக்கவும் முடியாத அசைவில்.. வாய் மட்டும் அசைந்தது...கை அன்னிச்சையாய் எங்கிருந்தோ பணத்தை எடுத்து...நீட்டிக் கொண்டே.... 

"இந்தா இந்த காச வெச்சுக்கோ...... கிளம்புங்க......என் வேலை முடிஞ்சது.... பார்த்து போங்க... காலம் அனுமதித்தால்... மீண்டும் சந்திப்போம்..." என்று வாய்க்குள்ளேயே முணங்கினான் சந்தோஷ்..

யோசித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பொதுவாக பார்த்த பாண்டி, இனி இவனை எழுப்பி பயனில்லை என்று புரிந்து கொண்டு..... "சரி சந்தோஷ் சார்....நாங்க கிளம்பறோம்.... ஆனா  என்னை எப்டி தெரியும்னு மட்டும் சொலுங்களேன்... ப்ளீஸ்....மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு"- என்று காதுக்குள் ரகசிய அம்பை சத்தமாகவே விட்டான்......

தூக்கத்திலேயே சிரித்துக் கொண்ட சந்தோஷ்....."அது..... பாண்டி... இந்த கதைய எழுதற 'கவிஜி' நம்ம ப்ரெண்ட்தான்.. அவர்தான் உங்களுக்கு ஆபத்து.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணி விடுங்கன்னு சொன்னாரு... அதான் வந்தேன்.. இனி கதைய எப்டி கொண்டு போக போறார்னு எனக்கு தெரியாது... நீங்க ரெண்டு பேரும் என்ன விட்டு, இங்கிருந்து கிளம்பனும்னுதான் ஸ்கிரிப்ட்ல இருக்கு....... கிளம்புங்க....பார்ப்போம்..." என்று சொல்லி மீண்டும் அமைதி ஆனான்......

"என்ன இவன்.. உளர்றான்.....என்ன கதை....அது யாரு கவிஜி...."- என்று யோசித்துக் கொண்டே தன் அறை நோக்கி நடந்தான் பாண்டி......

அறைக்கு நுழைந்ததுமே....கண்கள் குளிர.... பளிச்சென நின்றிருந்தாள்......மின்மினி.......

அவனைப் பார்த்து மெல்ல சிரித்தாள்....." சிற்பம் சிரிச்ச மாதிரி"ன்னு அவன் உள் மனம்...பிதற்றத் துவங்கியது....."இப்பவே இவ்ளோ அழகுன்னா.... சின்ன வயசில எப்டி இருந்திருக்கும்..."-பிதற்றிய மனம்....தன்னையே இணுங்கிக் கொண்டது...

பார்வையில் வேறு சொல்லிருக்க.. வாயினில் வந்த சொல்....."மின்மினி....போலாமா" என்றது...

அவள் தலை ஆட்டினாள்..."பூத்துவிட்ட நரைக்குள்.... வெண்ணிற ரோஜா.. முளைப்பதாக கனா கண்டேனடி.... தோழி...."- மூளைக்குள் வயலின் வாசித்தது... 80களின் இளையராஜா....

சாவியை வரவேற்பரையில் கொடுக்க...அருகினில் நின்ற வெய்ட்டர்......."சார்.. நைட் ரூம்ல ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?!" என்றான் தயங்கியபடியே...

'ஏன்' என்பது போல பார்த்தான் பாண்டி... மின்மினி புரிந்தும் புரியாமல் பார்த்தாள்......

"இல்ல சார்... எல்லா ரூமும் புல் ஆகிருச்சு...... அதான் அந்த ரூம்ம உங்களுக்கு தந்தோம்..... அந்த ரூம்ம கொஞ்ச நாளா யாருக்கும் தர்றதில்ல..... ஆறு மாசத்துக்கு முன்னால ஒருத்தன் பேன்ல தூக்கு போட்டு செத்து போய்ட்டான்... ரெம்ப தொந்த்ரவ்னு கஸ்டமர்ஸ் கம்ப்ளைன்ட்.....ஆனா நேத்து வேற வழில்லாம தந்துட்டோம்.... அதான் ஏதும் பிரச்சனை இருந்துச்சான்னு கேட்டேன்...... அனேகமா இருந்திருக்காது நினைக்கறேன்... இல்லையா... இருந்திருந்தா.. அப்பவே  வெளிய வந்து சொல்லிருப்பீங்கல்ல..."- என்று சொல்லி அவனாகவே சிரித்தும் கொண்டான்.....

அடேய்.... அடேய்.... என்பது போல... அவனைப் பார்த்த மின்மினியும்.. பாண்டியும் அவர்களையும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டார்கள்.....இருவரின் கண்களும்... வெளியே வந்து விழுந்து விடும் போலிருந்தது...அவளின் மனக் கண்களில்... நேற்றிரவு பேனில் தொங்கிக் கொண்டிருந்த உருவம்... மீண்டும் நிழலாடியது.... அவன் கைகளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள்........ அவன், தான் சேரில் உட்கார்ந்து கொண்டிருந்த போது.. அவனையே பார்த்துக் கொண்டு அவன் அருகே அந்த உருவம் அமர்ந்திருந்ததாக யோசித்தான்.... "அய்ய்ய்ய்ய்ய்யோ...."- என்று உடல் சிலிர்த்து...பேயறைந்தவன் போல வெளியே வந்தான்... மிரண்டு அவன் முதுகுக்கு பின்னால் ஒளிவது போலவே அவளும் வந்தாள்...

சாலையில் நடக்கத் துவங்கிய இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு..... சிரிக்கத் துவங்கினார்கள்.... கைகள் மெல்ல அவர்களையும் அறியாமல் கோர்த்துக் கொண்டது...

அவளின் பார்வை.... அவனை துளைப்பது போல இருந்தது...அவனும் தோட்டாக்களை பூக்களாக்கும் மெய்ம் மறத்தலின் நிலைக்குள்தான் இருந்தான்...

"சொல்லு இப்பவாது சொல்லு.... யார் நீ......எங்கிருந்து வந்த.. எப்டி அங்க மாட்ன... இப்போ எங்க கொண்டு போய் உன்ன விடனும்.... நான் பேசறது புரியுதா.. ஹிந்திகாரியா..... தமிழா...... தெலுங்கா..... கன்னடமா...... சொன்னாதான உன்ன கொண்டு போய் சேக்க முடியும்......" என்றவன், "நீ என்ன ஊமையா...?" என்றான்...அழுத்தமாக.....

அவள் எங்கோ திரும்பிக் கொண்டு வெற்றிடம் வெறிக்கத் துவங்கினாள்......

அவளை ஒரு கணம் அர்த்தத்தோடு பார்த்த பாண்டி..."லூசு லூசு..... என்று  முணங்கிக் கொண்டே அவளின் கைப்பையை படக்கென பிடுங்கி உள்ளே துழாவினான்...சில கட்ட அசைவுக்குள்ளாகவே கையில் கிடைத்த ஒரு சிறு நோட்பேடை வேகவேகமாய் திருப்பினான்... முதல் பக்கத்திலேயே முகவரி இருந்தது....

"ஓ... கன்னியாகுமரியா.... இத சொல்றதுக்கென்ன...?" என்றவன்... பேர் என்ன... என்ன......நியந்தாவா...?"-பேடில் எழுதி இருக்கும் பேரை ஊன்றிப் பார்த்து விட்டு அவளையும் பார்த்தான்... பின் அவனாகவே தலையை ஆட்டிவிட்டு..." ம்ஹும்......மின்மினிதான் நல்லா இருக்கு...... மின்மினின்னே இருக்கட்டும்...." என்று அவளைப் பார்த்து வாய்க்குள்ளேயே கூறியவன்.....பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினான்......

பின்னால் நடந்து கொண்டிருந்த மின்மினி...பேருந்து நிலையத்தை தொட்டது போல.. ஒரு மூக்குத்திக் கடை இருக்க.....சட்டென நின்றாள்... நிற்காமல் சுழன்றது பார்வை......

"என்னடா பின்னால் வந்த பிம்பத்தைக் காணோமே..."என்று மூளையில் ஏதோ ஒரு மூலையில் அனிச்சை துளிர்க்க...உணர்ந்து தானாக நின்று அவசரமாய் திரும்பிப் பார்த்தான் பாண்டி. மின்மினி ஒரு குண்டு குழந்தையைப் போல... கண்கள் விரிய மூக்குத்தி குத்துவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...

"என்ன...... இது...ஏய்....... மின் மினி... வா.. போலாம்.. டைமாச்சு..... ஏன் நின்னுட்ட....!?"- என்றபடியே அவளை நோக்கி பின்னால் வந்தவன் கண்களிலும்...... அந்த மூக்குத்திக்காரன் ஒரு பெண்ணுக்கு மூக்குத்தி குத்திக் கொண்டிருந்தது தெரிந்தது... பின் பார்வை அவள் பக்கமும் திருப்ப அவள் தன் கையால் தன் மூக்கை தொட்டுக் கொண்டிருந்தாள்... அது ஒரு சிறு பிள்ளையின் மிட்டாயின் சப்புக் கொட்டுதல் போல இருந்தது..........

அவள் அவன் பக்கம் திரும்பவேயில்லை....

"ஓ... மேட்டர்... இப்படி போகுதா...."என்று யோசித்தவன்..."தம்பி..... இவுங்களுக்கும் குத்தி விடுங்க......."என்று மின்மினியைப் பார்த்து கை காட்டினான்...

படக்கென்று திரும்பினாள் மின்மினி... அவளின் கண்கள்... ஒரு முறை பொங்கி பின் உள்ளேயே கரைந்தது....இருவர் கண்களும் சந்தித்தாலும்... மைக்ரோ நொடியில்.. விலகிக் கொண்டன... மனம் மட்டும் உற்று நோக்கின...

மூக்குத்தி குத்திக் கொண்டிருந்த 'காதலாரா'..... "என்ன ஒரு மணி நேரத்துக்கு முன்னாலயே வருவீங்கன்னு கவிஜி அண்ணே சொன்னாரு... சரி வாங்க....மின்மினி... உட்காருங்க..."என்று முன்னால் இருந்த இருக்கையைக் காட்டினான்.. பின் அவனே தொடந்தான்.....

"உணர்ச்சி வசப்பட்டு, பேசிடாதிங்க.. நீங்க பேசக் கூடாதுங்கறதுதான் கதை... அண்ணே சொன்னாரு... சரி சரி கொஞ்சம் முன்னால வாங்க ..."- என்று பேசிக் கொண்டே லாவகமாக மின்மினியின் கொரியா மூக்கில்... பட்டும் படாமல்...... குத்தி விட்டான்.......சுருக்கென்று நுழைகையில்.. மூக்கின் மென்மை....."ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...." என்று சப்தமிட்டது.... அத்தனை கிட்டத்தில் மின்மினியின் கண்களை பார்த்த காதலாரா...."உலகில் மிகச் சிறந்த நட்சத்திரத்தை மூக்கில் அணிந்து விட்டேன்.....பெண்ணே.... இத்தனை பெரிய கண்களைக் கொண்டு... இன்னும் நீ எத்தனை மீன்களை பிடிக்க போகிறாய்..." என்றான், காதலுக்கான குரலில்......

"அலோ.... மூக்குத்திக் காரரே...குத்திட்டா விடுங்க..... போகணும்...." என்று வெடுக்கென்று பேசினான் பாண்டி.......அவன் காது படக்கென்று கூர்ந்து கவனித்தது...."என்னமோ சொன்னானே... சிவாஜி வசனம் மாதிரி...." காதுகள் இரண்டும் தனி தனியாக புலம்பின..... 

"பாண்டி.. கவிஜி அண்ணங்கிட்ட சொல்லிடாதிங்க....ஸ்க்ரிப்ட்ல இல்ல..... இதெல்லாம் நானா விட்டது... என்ன பண்ண... கவிஞனா இருக்கறது காலக் கொடுமை.... பார்த்து பத்ரமா போங்க......"என்ற காதலரா, "அட..... காசு வேணாம்னே... காசு வாங்குனா..... கவிஜியண்ணே கவிதை சொல்லியே சோலிய முடிச்சிருவாரு....."-என்று சொல்லி சிரித்துக் கொண்டே.... "ஒகே... .. பாய்..." என்று அடுத்த ஆளுக்கு குத்த நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டிருந்தான்....

"யாரு அந்த கவிஜி... எங்க போனாலும் அவன் பேராவே இருக்கு.... இது என்ன கதை... நான் ஏன் இந்தக் கதைக்குள்ள இருக்கேன்.. இந்த மின்மினி யாரு.. அயோ ராமா......" ஒன்னும் புரியலையே என்று புலம்பிக் கொண்டே அவளைப் பார்க்க அவள்.. மீண்டும் பிறந்த தேவதையைப் போல ஜொலித்துக் கொண்டிருந்தாள்...ஒரு மூக்குத்தி ஒரு முகத்தையே மாற்றி விடுகிறது... அழகை பேரழகாக மாற்றி விடுகிறது... தீராத மௌனத்தை அந்த முகத்துக்கு தந்து விட ஒற்றை மூக்குத்திக்கு முடிகிறது...ஒரு முறை தொட்டு பார்க்க ஆசை கொண்ட மனம்... மூக்குத்தி தோட்டம் செய்து கொண்டிருந்தது...  

"என்ன கம்பீரமா இருக்கா... சாரி.. இருக்காங்க...." அவன் மூளை.. அவளை மொய்த்தது........அவளும்... கண்களாலே கேட்டாள்.... "மூக்குத்தி நல்லாருக்கா...?"- கண்கள் ஒரு முறை ஒதுங்கி.. பின் பெரியதாகி...... அவனை "வா....." என்றது போல இருந்தது.... அந்த மாலை வேலை....

பயணங்கள் முடிவதில்லை.... பாதைகள் தீர்வதில்லை.. இருக்க இருக்க இருந்து கொண்டேதான் இருக்கிறது. இளையராஜாவின் பாட்டோடு இரவின் பயணம் என்பது.. மின் மினி தேசத்தில்...மலை உச்சி காற்று போல.  அவன்.....அவ்வப்போது அவளை பார்ப்பதும்.....அவள்... கண்கள் மூடிக் கொண்டே வண்டியின் ஆட்டத்துக்கு தகுந்தாற் போல.....ஜன்னல் கம்பியில் கன்னம் அழுந்த.. வளைந்த மலரென முகம் அலைய...வந்து போகையில் அவளைக் கண்டு நின்ற காற்றினில்... கரைந்து நெளியும் நிலவும் கூட அவளோடு... இனிதே பயணித்துக் கொண்டிருந்தது......

"தாலாட்டுதே வானம்.....தள்ளாடுதே மேகம்..." பாடலின்  தனிமை... இசையின் பெரும் மௌனம்.. அந்த இரவை நிஜமாகவே தாலாட்டதான் செய்தது.......

"இந்த முகத்தில் ஏன் இத்தனை மௌனம்..... ஏன் இத்தனை அவநம்பிக்கை....... ஏன் இத்தனை துக்கம்...... கூட ஏன் இத்தனை அழகு...!"- அவன் பார்த்துக் கொண்டே யோசித்த வெற்றிடத்துள் அவளின் காதோரம் நரைத்த முடிகளில்.....எதிரே வந்து பக்கவாட்டில் ஒரு புயலைப் போல.. போன வண்டிகளின் வெளிச்சம் பட்டு சிவந்த மஞ்சளை..... தெளித்துப் போனது. கண்டும் காணாமல் பூத்து விட்ட நிகழ்வைப் போல மிக மெல்லிய ரிதமாகிக் கொண்டிருந்தது ஜன்னலோர அவளின் இருத்தல். ஒற்றை மூக்குத்தியில்... இந்த கொரியன் மூக்கழகி....சித்திரமாய் பேசினாள்.... சிவந்து கிடந்த வரிகளின் ஊடாக உதடுகள்.. கனத்துக் கிடந்தன....காணக் காண கண்டு கொண்டேயிருக்கும்..... காட்சிக்குள் எல்லாம் கடக்க கடக்க இவள் முகமே....."- என்று சிறகுகளின் சிந்தனையோடு... கண்கள் அசந்து விட்ட ஒரு தருணத்தில்.. வெறுக்கென்று கண் விழித்தான்... மின்மினி அவன் நெஞ்சுப் பக்கம் ஆட்காட்டி விரலால் சுரண்டிக் கொண்டிருந்தாள்......

"கண்மணியே காதல் என்பது கற்பனையோ...... காவியமோ...கண் வரைந்த ஓவியமோ...." பாடல்... பேருந்தெங்கும் மிதந்து கொண்டிருந்தது.. இரவை கசிய விட்டு... இருளைக் கிழித்துக் கொண்டு.. விரைந்து கொண்டிருந்த பேருந்து..... முடிவெடுத்த மீன் போல நீந்திக் கொண்டிருந்தது.......

"என்ன......?" என்று இருட்டின் பாஷை பேசினான் வெள்ளைப்பாண்டி......

அவள் கண்கள் மட்டும்.. அத்தனை கிட்டத்தில்...இருக்கும் ஒளியையும் கிழித்துக் கொண்டு... கத்தியாய் அவனைப் கீறியது... கீறினாலும்... இனித்த நொடிகளை தூக்கத்தில் பிடித்து போட்டுக் கொண்டே... தலையை ஆட்டியபடியே...." என்ன வேணும் ?" என்றான்.. ஒரு குழந்தையிடம் கேட்பது போல...

அவள்.. சுரண்டிய விரலை இன்னும் அழுத்தமாக்கி மீண்டும் சுரண்டினாள்...

முகத்திலிருந்து பார்வையை மெல்ல கீழே இறக்கியவன்... பேருந்துக்குள் கசிந்து கொண்டிருந்த ஸீரோ வாட்ஸ் வெளிச்சத்தில்...விரலின் தீர்க்கம் புரிந்து......."ஓ ... இதுவா.... சரி...... இரு..."என்றபடியே எழுந்து பேருந்து ஓட்டுனரிடம் சென்று விஷயத்தை கிசுகிசுத்தான்...

புலம்பிக் கொண்டே வண்டியை ஒரு ஆமையைப் போல நிறுத்த....... மின்மினியை பேருந்துக்கு பின்னால் போக சொல்லி விட்டு பேருந்தைப் பார்த்து ஒட்டினாற் போல திரும்பி நின்றான்... 

மின்மினி அவன் பின்னாலேயே நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்...

"என்னடா...... இன்னுமா....!" என்று யோசித்தபடியே பட்டும் படாமல் மெல்ல திரும்ப.. இன்னும் அவள் தன் பின்னாலேயே ஒரு இரவைப் போல நிற்பதைக் கண்டு... வெருக்கென்று துள்ளினான்..... 

'ஐய்ய்யோ....' என்று முணங்கிக் கொண்டே... தலையில் அடித்தபடி......"இன்னும் நீ போகலயா....." என்று ரகசியமாக ஆனால் சத்தமாக பல்லைக் கடித்துக் கொண்டே கேட்டான்.....பின் அவனே தொடர்ந்தான்......"அட சீக்கிரம் போயிட்டு வாப்பா.. பஸ் நமக்காக நிக்குதுல்ல.....?"-கையை குறுக்காக கட்டிக் கொண்டான்... ஒரு வகை சில் காற்று அங்கே மிதந்து கொண்டிருந்ததை உணர்ந்தபடி. அவளோ அவனையும் பார்த்து பின்னால் பரவிக் கிடக்கும் இருட்டையும் திரும்பி பார்த்தாள்......

"ஏன் தயங்குறா......"- என்று மனதுக்குள் ஓடிய பட்டாம் பூச்சியை படக்கென்று பிடித்து விட்ட மனநிலையில்....... அவளைத்தாண்டி எட்டிப் பார்த்த பாண்டி.......-இருட்டுக்குள் கண்கள் மொய்க்க.. காட்சியற்ற மய மயவை உணர்ந்து....." ஓ..... இருட்டா...... சரி நானும் வரேன்.. வா....." என்று இருட்டுக்குள் இரண்டடி அவளைத்தாண்டி வைக்க..... அதற்கும் அவள் சம்மதிக்காதவளாக அவனைப் பிடித்து பின்னால் இழுத்தாள்......

"அயோ லூசு.. டைம் வேற ஆச்சு.. சொன்னா புரியாதா.. சரி உள்ள.. வா.. வேற பக்கம் போய் போய்க்கலாம்...... வா....." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே டிரைவர்....கத்த துவங்கினார்... 

"சார் கொஞ்சம் சீக்கிரம் வரீங்களா..... டைம்மாச்சு...இவ்ளோ நேரமா...... என்னதான் நடக்குது......?"-சலித்துக் கொண்டார் டிரைவர் 

"ஒன்ன்ன்ன்னும் நடக்கல டிரைவர்...... இருங்க.....ரெண்டு நிமிஷம்.... வந்தர்றோம்..."-பாண்டியும் சலித்துக் கொண்டே கூறினான்.... பார்வை... மின்மினி மேல் இருந்தது...

மின்மினி போயே ஆக வேண்டும் என்பது போல.. நின்று கொண்டிருந்தாள்...

"மின்மினி விளையாடாத.. டைம் ஆச்சு... கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்..இப்போ போறியா.. இல்லையா......"- என்று அவளை பிடித்து இருட்டுக்குள் தள்ள..... அவள் அவன் கையை பிடித்து கொண்டு பேருந்தின் பக்க வாட்டு வெளிச்சத்துக்குள் வந்து நிற்க.......அவர்களுக்குள் தள்ளு முள்ளு... மாறி மாறி நடந்தது....

"ம்ம்ம்... செம டெக்னிக்பா... இருட்டு... ரோடு.... காவலுக்கு பஸு.....ம்ம்....... ரசனைக்காரங்க போல..."- முணங்கிவன் திரும்பிப் படுத்தான்... கடைசி ஜன்னலோரம்....

ஒரு முறை ஜன்னலோரத்தைப் பார்த்த பாண்டி "அய்யோ.... மானம் போகுது...'- என்று வாய்க்குள்ளேயே கூறியபடி......"இரு.... இரு.." என்ற ஒரு யோசனையின் கைப் பிடித்தான்...சட்டென தன் சட்டையைக் கழற்றி சட்டையின் ஒரு கையை அவளிடம் கொடுத்து விட்டு மறு கையை பிடித்து நின்றான்...."எப்படி  என்பது போல" தெரிந்த அவனின் சில் அவுட் காட்சியைக் கண்டு கொண்டே மெல்ல புன்னகைத்தபடி பின்னால் இருட்டுக்குள் சென்றாள் மின்மினி.... சட்டையின் நீளம் வரை சென்று இருட்டுக்குள் மறைந்தாள் மின்மினி.......

"இன்னுமா......!" என்றபடியே சட்டையை ஆட்டிக் கேட்டான்... பதிலுக்கு இருட்டுக்குள் இருந்தும் சட்டை ஆடியது...

"யப்பா.... டேங்க் புல் போல..." என்று முணங்கி சிரித்துக் கொண்டான்... சட்டை வேகமாய் ஆடியது...

சரி சரி என்பது போல.. பதிலுக்கு ஆட்டினான்.......சில நொடிகளில்... சட்டை மெல்ல மெல்ல இருட்டுக்குள் இருந்து வெளியே வர...... புன்னகைத்துக் கொண்டே இருட்டைப் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.. அவனும்....எங்கோ பார்த்து புன்னகைப்பது போல... பேருந்துக்குள் ஏற.... மிக நெருக்கமாக அவன் பின்னால் அவளும் ஏறினாள்......

"என் கண்மணி.... உன் காதலன்..." பாடல்... மீட்டிக் கொண்டிருக்க..... அவன் கண் அசந்தான்..... வண்டி ஒரே சீராக செல்வது....தாலாட்டுவது போலவே இருந்தது.......கொஞ்சம் திறந்திருந்த ஜன்னலை முழுக்க அடைத்தாள்... மனதுக்குள் சூடு நிரம்பி வழிந்தது.... பார்த்துக் கொண்டிருந்த அவள் மெல்ல மெல்ல மெல்ல பூனை போல நெருங்கி அவன் இதழில்... பட்டும் படாமல்.. முத்தமிட்டாள்....அவன் மெல்ல அசைந்து கொடுத்தான்.. கண் திறக்க வில்லை... 'அயோ'- என்று நாக்கு  கடித்துக் கொண்ட மின்மினி சப்தம் வராமல் சிரித்துக் கொண்டாள்.... பின் அவன் நெஞ்சில் ஒரு பூவைப் போல சாய்ந்து கொண்டாள்.... பின் தூங்கவே இல்லை....

கன்னியாகுமரியில்- தென்கரையில்----ஒரு வீட்டின் முன்...

"ஆமா இது எங்க அக்கா பேக்குதான்... உங்களுக்கு எப்டி கிடைச்சது... ...எங்க அக்கா ஆறு மாசம் முன்னால காணாம போய்ட்டாங்க.. கொஞ்சம் மன நிலை சரி இல்லாதவங்க... ஆனா இவுங்க எங்க அக்கா இல்ல.....நீங்க எங்க அக்காவ பாத்திங்களா?" என்று அந்த வீட்டுக் காரர்கள்..கூறிக் கேட்க...... பாண்டி சட்டென திரும்பி......" என்ன மின்மினி... இது உன் வீடு இல்லையா....!?" என்றான்....

மின்மினி எப்போதும் போல... மௌனமாய் நின்றாள்....  

பாண்டி ஏதேதோ யோசித்தபடியே, பின் அவனாகவே "அட ஆமா... மின்மினியை காப்பற்றிக் கூட்டி வருகையில் மின்மினியைத்தாண்டி மீண்டும் பின்னால் ஓடி வந்து பேக்கை நாமதானே தூக்கிட்டு வந்தோம்... அப்டினா... இந்த பேக்குக்கு சொந்தாரப் பொண்ண அவுங்க ஏற்கனவே பலி குடுத்ருக்கணும்..."- அவனுக்கு எல்லாம் விளங்கியது.... தான் செய்த தவறு.... மின்மினி அர்த்தத்தோடு அவனைப் பார்த்தாள்... "அப்பவே சொல்லிருக்கலாம்ல.." முணங்கிய பாண்டி அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தான்....பெருத்த அமைதிக்குள்.... அவன் இல்லாத பொருளை நோக்கி போவதாக யோசித்தான்...."இவள் ஏன் இப்படி இருக்கிறாள்.. இவளுக்கு என்னதான் பிரச்சினை...?" அவன் மனம்.....தவித்தது....... பின், நடந்த கதையைக் கூற.. அந்த வீடே அழுது புலம்பத் துவங்கியது....

இவர்கள் மௌனமாக நடக்கத் துவங்கியிருந்தார்கள்....இனம் புரியாத சுழலுக்குள்... உணர முடியாத அகம் கொண்டு, அவன்... மெல்ல மெல்ல... யோசித்துக் கொண்டே நகர்ந்தான்..... "அடுத்து எங்கு.. யாரிவள்... இத்தனை வயதுக்கு பின் இப்படியொரு தனிமைக்குள் எப்படி இவள்..? வழி தெரியா வேகம் கொண்டு சுழல எது காரணம்.... உறவற்று.. உணர்வற்று.. ஒட்டிக் கொண்ட இவளை என்ன செய்வது....?...ஒரு வேளை ஊமைதான் போல..." அவளின் வாயையே ஒரு கணம் பார்த்தான்...

பாண்டியின் மனதுக்குள் கடல் போல விரிந்து கொண்டே போனது, சிந்தனை... முடிவெடுக்க முடியாத புள்ளிக்குள்... அச்சற்ற நிழலாய் அவன் மனம் தவிக்கத் துவங்கியது..."எந்த தைரியத்தில்.. எந்த ஆதாரத்தில் இவளைக் கூட்டிக் கொண்டு இத்தனை தூரம் வந்திருக்கிறேன்.. இனி எங்கு போவது..."- என்று யோசித்துக் கொண்டே ஒரு வனாந்தரத்தில்..... வானம் தொடுவது போலொரு அபத்தம் அவனுள் மிதந்து கொண்டிருந்தது..... அவளின் புதிர் அவிழாத கிட்டத்தில் அவளும் அவனோடு...அவன் பாதங்களைத் தொடரத் துவங்கி இருந்தாள்....

மனதின் மனது.... சொல்லும் மாய தத்துவத்தின் விளிம்பில் நின்று சட்டென வேண்டும் போல தோன்றிய புள்ளியில் திரும்பினான்....மின்மினியைக் காணவில்லை.... பதறிய மனதில்.... சிதறிய கவனத்தோடு... இதயம் பட படக்க.. மூளை ததும்பியது... 

"மின்......மினி......மின்மினி.........."- கத்திக் கொண்டே வந்த வழியே பின்னால், பக்கவாட்டில் என்று ஓடி நடந்து தேடினான்... அழுகை முட்டிக் கொண்டு வந்தது....... பரிதவிக்கும் முகத்தோடு அவன் ஒரு சிறுபிள்ளையைப் போல கூட்டத்தில் தொலைந்து கொண்டேயிருந்தான்....."கடவுளே...... எங்க போயிருப்பா....?"-இரு துளி, கண்ணைத்தாண்டி வந்தே விட்டது...........

ஏதோ ஒரு கை தோள் தொட, தொடும் உணர்வு மூளைக்கு செல்லும் முன்... என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்த பாண்டி படக்கென்று திரும்பினான்...எதிரே சலனமற்ற முகத்தில், உடல்மொழியில்... மீன்காரன் கோபி நின்றிருந்தான்......... 'என்ன' என்று கேட்பதற்கு முன் அவனாகவே பேச்சைத் தொடங்கினான்.........

"இந்தக் கதையை இந்த இடத்திலயே...இப்டியேதான் முடிச்சாகனும்...... ஏன்னா,.... மலை ஏறும் போது கவிஜி ஸ்க்ரிப்ட்ட தவற விட்டுட்டாராம்.....எவளோ தேடியும்.... கிளைமாக்ஸ் பேப்பர் கிடைக்கவே இல்லையாம்................ " சொல்லி விட்டு கிளம்ப...யத்தனித்தான் கோபி...

"கவிஜி..... கவிஜி........ கவி........ஜி......... யார்ரா..... அந்த கவிஜி.......... என் வாழ்க்கைய தீர்மானிக்க அவன் யாரு........?"- என்று கத்திக் கொண்டே பாண்டி... கோபியைப் பிடித்து உலுக்க.......

இந்தக் கதையின் ஸ்கிரிப்ட்..... மலையேறிக் கொண்டிருந்த கவிஜியின் பேக்கில் இருந்து... தவறி விழுந்து கொண்டிருந்த.....காட்சி.... டீச்சர் ரியாவின் கண்களில்.....ஒரு கனவைப் போல தெரிந்தது.... அது, இதுவரை சேர்த்து வைத்திருந்த காதலின் வயலெட் நிறம்......வெண்பனி மலையில் ஒரு நீரோடையைப் போல .... கசியத் துவங்கி இருந்தது....மின்மினியைப் போல ஒரு ஞாபகம்.. அவனுக்கு இனி இல்லாமலும் போகலாம்...

யோசித்துக் கொண்டே விழித்துக் கிடந்த ரியாவின் வீட்டுக் கதவு தட்டப் பட....... கதவைத் திறந்தாள்....

வெளியே, 'பசிக்குது' என்று ஜாடை காட்டியபடி நின்றிருந்தாள் மின்மினி....

இந்தக்காட்சியைத் தொடர்ந்து, ரியா இன்னும் எழுதிக் கொண்டே இருந்த கதைக்குள்... பாண்டி எப்போது வருவான் என்று நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்...

- கவிஜி 

Pin It