dalit girl lovers

ஆமாம்... வெகு நாட்களுக்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும். சொல்லாததற்கு, எனது சோம்பேறித்தனம், சம்பந்தப்பட்டவர்களின் அந்தரங்கம் என்று இரண்டு காரணங்கள் இருக்கின்றன. இப்போது சொல்வதற்குக் காரணம் வெட்டிக் கொல்லப்பட்ட சங்கரும், இன்னமும் உடலளவில் சாகாத கௌசல்யாவும்தான்.

இந்தக் கதையில் சொல்லப்பட்ட நிகழ்வுகளின் சாரம் உண்மை. சம்பந்தப்பட்ட தம்பதியினரின், குறிப்பாக, அந்தப் பெண்ணின் அந்தரங்கத்தை மறைப்பதற்காக சம்பவங்கள், இடம், காலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பையனைப் பார்த்தபோது எனக்கு எந்தக் கருத்தும் தோன்றவில்லை. ஒடிசலாக இருந்தான். முகம் ஒட்டிப் போயிருந்தது. கருப்பாக இருந்தான்.‘இன் செய்த‘ சட்டைக்குள் அவன் வயிறு ஒட்டியிருப்பது தெரிந்தது. பேராசிரியன் ஆகிய எனது ஆய்வுக்குத் துணையாக அவனை பல்கலைக்கழகம் அனுப்பியிருந்தது. பருவ நிலை மாற்றமும், கடற்பாசி எடுக்கும் பெண்களின் வாழ்வாதாரமும் என்றதொரு தலைப்பில் கடற்கரை ஆய்வுக்கு என் துணையாக அவன் வந்திருந்தான்.

நான் பேருக்குத்தான் ஆசிரியன்; மற்றபடி கம்யூனிஸ்ட். பாடம் எடுப்பதை கொஞ்சமும், கலகம் செய்வதை நிறையவும் செய்யும் நபர். என் மீது கை வைக்க நிர்வாகம் பயந்ததால் பிழைப்பு ஓடிக் கொண்டிருந்தது. இப்போது இல்லை என்பது வேறு கதை.

நிற்க.. ஆய்வு முடியும் சமயத்தில் என்னில் இருந்த கம்யூனிஸ்டை அவன் அடையாளம் கண்டுகொண்டான். ஒரு உதவி கேட்டான். வழக்கம் போல, ‘அதற்கென்ன... செய்யலாம்‘, என்று சொல்லிவிட்டு அதன் பின், ‘என்ன உதவி?‘ என்று கேட்டு மாட்டிக் கொண்டேன்.

அவன் தன்னோடு கல்லூரியில் படித்த பெண்ணை நேசிக்கிறானாம். அவளும் நேசிக்கிறாள் என்றான். 9 வருட காதலாம். அவளை அழைத்துக் கொண்டு ஓடி வருவதாகவும், கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் சொன்னான். அவர்களின் காதல் அவளின் அப்பனுக்குத் தெரியுமாம்.

நான் பின் சிந்தனையாக அவளின் அப்பன் பற்றிக் கேட்டேன். அப்பன் தேசியக் கட்சி ஒன்றின் மாவட்டத் தலைவராம். உரக் கடை வைத்திருக்கிறானாம். எட்டுப்பட்டியும் அந்த மனிதனின் கையிலாம்.

‘சிக்கினான் சிக்கந்தர்’ என்று என் நிலையைப் பற்றி எனக்குத் தோன்றியது. இருந்தாலும்,‘நாம பெரிய ஆளுள்ள‘ என்று நினைவு படுத்திக்கொண்டு, அப்புறம் ‘இப்ப ச்சும்மாவாச்சியும் சொல்லி வைப்போம்... வந்துடவாப் போராங்க‘ என்று நம்பியபடி... ‘அழைத்து வா.. முடித்து வைக்கிறேன்‘ என்று சொல்லிவிட்டேன்.

அந்தப் பாவிப் பயல் ஆறு மாதத்தில் அழைத்தான். ‘சார் நாளைக்கு அவ தப்பிச்சி வரா சார். நேரா உங்கள் வீட்டுக்குத்தான் வரோம்’, என்றான்.

நமக்கு மீசை சின்னது, ஆனாலும் வீரம் பெரியது என்பதால் வரச் சொல்லிவிட்டேன். ஆனால், அவளின் அப்பன் பற்றி விசாரித்து வைத்திருந்தேன். மேற்கு மாவட்டங்களில் ஆட்டம் போடும் சாதிச் சங்கத்தில் இருந்தான், அந்த அப்பன். பண்ணை வீடு வைத்திருக்கிறான். அடியாள்கள் அதிகம். வட்டிக்கு விட்டு வசூலிப்பவன்.

அப்புறம் சொல்ல மறந்துவிட்டேன். நமது கதாநாயகன் கன்னியாகுமரியைச் சேர்ந்தவன். தாழ்த்தப்பட்ட சாதிக்காரன். அவன் சாதி பெயர் சொன்னால் உங்களுக்கு இனம் காண முடியாது. தமிழகத்தில் அவர்கள் சொற்ப எண்ணிக்கையினர். அதனால்தான், அவளின் அப்பன் படித்து ஆய்வு வேலையில் இருக்கும் பையனை ஏற்றுக் கொள்ளவில்லை.

அப்புறம் அந்த உயர் சாதி அப்பனுக்கு செல்வாக்கு அதிகம். எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், மந்திரிகள் வந்து அவன் பண்ணை வீட்டில் இரகசியமாகத் தங்குவார்கள்… எதற்காக என்று நான் சொல்ல வேண்டுமா?

எல்லாவற்றையும் கணக்குப் போட்டு ஒரு திட்டம் வகுத்தோம், நானும் என் தோழர்களும்.

வந்து நின்ற பெண்ணைப் பார்த்தவுடன் இவனுக்கு நேர் எதிராக இருந்தாள். நல்ல நிறம். உடல் செழுமையாக இருந்தது. சாதாரண உடையில் இருந்தாலும் இவனுக்குப் பொருத்தமற்ற பேரழகி என்று பட்டது. காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள், அது தவறு. காதலுக்கு அகக்கண் உண்டு. அவள் தன் பணக்கார உயர் சாதி வாழ்க்கையில் பெறாததை, இந்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனின் அன்பில் பெற்றிருக்கிறாள் என்பதை எனக்குப் புரிய வைத்தாள்.

நான் வழக்கம் போல எதிர்க்கட்சி வக்கீல் வேலை பார்த்தேன். ‘நீங்க உருப்படாம போகத்தான் வாய்ப்பிருக்கு ... உன் அப்பன் போலீசுடன் வந்து உன்னைக் கடத்திக் கொண்டு போய், உன்னை உன் காதலன் கடத்தினான் என்று புகார் செய்ய வைப்பான்’, என்றெல்லாம் அவளை மிரட்டிப் பார்த்தேன். அவள் என் கண்ணைப் பார்த்துச் சொன்னாள்... ‘மனுஷியா ஒரு நாள் நான் வாழ்ந்தா போதும். அப்புறம் செத்துப் போறேன்‘.

அவள் கண் அசையவில்லை. அதன் உக்கிரம் தாளாமல் நான்தான் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.

அப்புறம் என்ன? ஒரு காரில் ஒரு தொலை தூர கோவிலுக்குப் பயணம். அங்குத்தான், அப்போது - இப்போது இல்லை- கல்யாணம் ஆனால், கல்யாணச் சான்றிதழ் உடனே கிடைக்கும். அந்த கோவில் அர்ச்சகரைக் கையாளும் திறன் உள்ள கட்சியமைப்பு எமக்கிருந்தது.

கல்யாணம் முடிந்தது. அவர்களை எமது கட்சியின் செல்வாக்கில் உள்ள ஒரு கிராமத்தில் தங்க வைத்தேன். எதிர்பார்த்தது நடந்தது. அவனின் பெற்றோரை சுற்றி வளைத்த காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அந்த தகவல் வந்தவுடன் நான் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சென்றேன். அதிகாரியிடம் பேசினேன். என்னுடன் எமது கட்சி மாவட்டச் செயலாளர் வந்திருந்தார்.

‘சார். பெரிய இடத்துப் பெண் சார், மந்திரி போன் பன்றார். அவன் ஏதோ ஒரு கீழ் சாதியாமுல்ல.. அந்தப் பெண் ... சாதி சார்.. எப்படி ஒத்துப்போகும்’, என்றார் இன்ஸ்பெக்டர். நான் சில உடலியல் உண்மைகளைச் சொல்ல நினைத்தேன். அப்புறம் கெட்ட வார்த்தை பேசியதாக ஆகும் என்பதால் அதைப் பேசவில்லை.

வேறு ஒன்றைச் சொன்னேன். “அவள் மேஜராகி 10 வருஷம் ஆகுது. கல்யாணச் சான்றிதழ் என் கையில் இருக்கிறது. அவர்களைச் வரச்சொல்கிறேன். அத்துடன் பத்திரிகையாளர்களும் வருவார்கள். உங்கள் மந்திரியையும் வரச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு அவர் எதிரில் அமர்ந்து போன் செய்தேன்.

அவர்கள் வந்த பின்னர், சான்றிதழ்களைச் சரிபார்த்த காவல் அதிகாரி அப்பனையும் அவளையும் அழைத்துப் பேசினார். பின்னர் பையனை அழைத்து மனைவியை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார்.. நான் அவர்கள் பாதுகாப்பிற்கு தோழர்களை உடன் அனுப்பினேன்.

தனியாக நின்ற என்னிடம் அவள் அப்பன் வந்தான்... ‘ஒரு நாளு என் துப்பாக்கி உன் கணக்கைத் தீர்க்கும்’, என்றான். நான் சிரித்தபடியே அவருக்குக் கை நீட்டினேன். அந்த கதர் சட்டை போட்ட, கோபக்கார நாட்டாமை... திரும்பி பார்க்காமல் நடந்தார். இந்தக் கதை எழுதும்வரை நான் துப்பாக்கியால் சுடப்பட வில்லை என்பது மட்டும் உண்மை.

ஆனால், கதையின் கிளைமாக்ஸ் இன்னமும் வரவில்லை. சரியாக ஒரு மாதம் கழித்து அவன் மதுரை மருத்துவமனையில் அட்மிட் ஆனான். சில கோடி பேர்களில் ஒருவருக்கு வரும் நோய்த் தொற்று அவனுக்கு. அது என்ன என்பது பிரச்சனையில்லை. அவன் செத்துப்போனான் என்பதுதான் பிரச்சனை.

அவனது பல்கலைக்கழக நண்பர்களை அழைத்து விசாரித்தேன். அவனின் பெற்றோர் அவளை ஏற்றுக் கொள்ளவில்லையாம். அவளைக் கல்யாணம் செய்ததுதான் அவனின் மரணத்துக்குக் காரணமாம். அவள் ஜாதகம் சரியில்லையாம். அவனின் பிணத்தை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குப் போய்விட்டார்களாம். ஜாதகம் எல்லாம் பொய் என்று எனக்குத் தெரியும். அந்த உயர் சாதிப் பெண்ணை, பல்கலைக்கழக சம்பளம் வாங்கும் பையன் இல்லாத நிலையில் தாழ்த்தப்பட்ட சாதி, கூலித் தொழிலாளி எப்படிப் பராமரிப்பார்கள்?

அப்புறம் அவள் கதி என்று அவர்களைக் கேட்டேன். ‘எங்களோட இருக்காங்க தோழர். நாங்கதான் பாதுகாப்பு‘ என்றார்கள் அந்த அறிவுள்ள ஆசிரியர்கள்.

அப்புறம் ஓர் ஆண்டு கழித்து அவள் தன் பெற்றோரோடு சென்றாளாம். தமது சாதியில் பணக்கார பையனைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்களாம், அவள் பெற்றோர்கள். இப்படி தகவல் சொன்னது அவளின் தோழிகள்.

அவள் நல்ல வாழ்க்கை வாழ்கிறாளா என்று நான் கேட்கவில்லை. காதலன்றிப் போனால், சாதல் நன்று என்று எனக்குத் தெரியும். அவள் செத்த பின் வாழும் வாழ்க்கை பற்றி நான் யோசிக்க விரும்பவில்லை.

- சி.மதிவாணன்

Pin It