தமிழகத்தில் அண்மைய ஆண்டுகளாக சாதிய ஆணவக் கொலைகளில் சுமார் 60 நபர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த பெண்களாகவோ தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களாகவோ இருப்பர்.

இத்தகைய சாதிய ஆணவக் கொலைகளை மேற்கொள்வது ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த பெற்றோர் பொருளாதார ரீதியாக வலு விருந்தால் அவர்களே அதைச் செய்துவிடுவர். இல்லையெனில் அச்சாதியினர் உள்ள கிராம ஆதிக்கச் சக்திகளாக இருப்பர். அவ்வாறும் இல்லையெனில் அச்சாதிகளைச் சேர்ந்த சாதிச் சங்க நிர்வாகிகளாக இருப்பர். அவர்கள் அதே வேளையில் பொதுவான பெயர்களில் அரசியல் கட்சிகளின்/ஏதாவது பெயரில் உள்ள பேரவை அல்லது கழகங்களின் உள்ளூர் அல்லது வட்டார அளவிலான நிர்வாகிகளாக இருப்பர்.

இக்கொலைகளை மேற்கொள்ளும் சாதிகளில் மூன்று சாதியினரே. முக்குலத்தோர், கவுண்டர், வன்னியர் முதன்மையாக இருக் கின்றனர். அவர்கள்தான் தமிழகத்தை கிராம அளவில்/வட்டார அளவில்/மாவட்ட அளவில் ஆதிக்கம் செலுத்துவதில் முதன்மையாக இருக்கின்றனர். இச்சாதியினர் அந்தந்த மட்டங்களில் அரசு எந்திரத்தை கட்டுப்படுத்து வோராகவும் இருக்கின்றனர். அத்துடன் அதிமுக, திமுக, தே.மு.தி.க., பா.ஜ.க. போன்ற கட்சிகளை கட்டுப்படுத்துவோரும் அவர்களே.

இவ்வாறாக இச்சாதியினர் கிராமம், வட்டாரம், மாவட்டம், அரசு எந்திரம், அமைச்சரவை, சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள், மைய நீரோட்ட பெரிய அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஆதிக்கம் செலுத்துவோராக விளங்கி வருகின்றனர். மேலும் கந்துவட்டி, மணல்குவாரிகள், கல் குவாரிகள், கனிமவள குவாரிகள், பேருந்து/லாரி போக்குவரத்து, திரைத்துறை அத்துடன் இவை எல்லாவற்றையும் தங்கு தடையின்றி செய்வதற்கு ரவுடி கும்பலையும் இயக்குவதும் இச்சாதியினரே முதன்மையானவர் ஆவர்.

இந்நிலையில் இச்சாதியினர் தம் சொந்த சாதிக்குள்ளும் ஏனைய இரு சாதிகளுடனும் மேற்காணும் வளங்களை/ஆதாரங்களை கைப்பற்றுவதில், தக்கவைப்பதில், திடப்படுத்து வதில் கடும் போட்டியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

மறுபுறத்தில் தமிழக கிராமங்களில் நிலவுட மைகள் பல காரணங்களினால் 93 விழுக்காடு சிறு மற்றும் குறு உடமைகள் என்பதாக துண்டு பட்டு சுருங்கிவிட்டன. விளைவாய் கிராமப் புறங் களைச் சேர்ந்த ஆதிக்கச் சக்திகள் நிலவுடமை விவசாயப் பொருளாதாரத்தில் முன்பைப் போல் உபரியை உறிஞ்ச முடியாது என்பதால் மேலே பார்த்தவாறு அரசு எந்திரம், கந்துவட்டி, இயற்கை வளங்கள் (மணல் குவாரிகள், கிரானைட் குவாரிகள், கல் குவாரிகள்/பேருந்து/லாரி போக்குவரத்து ஆகியவற்றின் வாயிலாக உபரியை அபகரிக்கின்றனர்.

இத்துடன் தொழிற்துறைப் பொருளாதா ரத்தை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத நுண்/சிறு/நடுத்தர ரக தொழிற் நிறுவனங்கள் சுமார் 30 லட்சம் இருக்கின்றன. மேலும் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் இருக் கின்றனர். இவை போதாதென்று அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் தனியாரின் பல துறை களிலும் ஏராளமான விதவிதமான ஒப்பந்த தாரர்கள் இருக்கின்றனர். இவை எல்லா வற்றிலும் இச்சாதியினரே முதன்மையாக ஆதிக் கத்தைச் செலுத்தி வருகின்றனர். இம்மூன்று சாதியினருக்கு அடுத்தபடியாக இந்த ஆதிக் கத்தில் நாடார்கள் இருக்கின்றனர். அவர் களுக்கும் அடுத்தபடியாக உடையார்கள் வருகின் றனர். எனினும் சாதிய ஆணவக் கொலைகளில் ஈடுபடுவோர் அம்முச்சாதியினரே ஆவர்.

இம்முச்சாதியினர் மேற்காணும் வளங் களை கைப்பற்றி உபரியை கொள்ளை யடிப்பதற்கு சாதி  எனும் அடையாளம் மிகவும் பயன்படுகிறது. எந்த அடையாளத்தின் கீழ் வளங்களை கைப்பற்றி உபரியை தமதாக்க முடியுமோ அந்த அடையாளமே கையாளப் படும். இன்றைக்கு சாதி எனும் அடையாளமே இன்றைய இயங்குநிலையில் (dynamics)  அப்பாத்திரத்தை ஆற்றி வருகிறது. அத்தகைய பாத்திரத்தை ஆற்றி வரும் சாதி எனும் அடையாளத்திற்கு களங்கமோ தீட்டோ ஏற்பட்டுவிட்டால் இப்போதைக்கு எந்த அடையாளத்தின் கீழ் அந்த வளங்களை தக்க வைக்க முடியும் என்ற கேள்விக்குறி இருப்பதால் இந்த சாதிய ஆணவக் கொலை கள் அவசியமாகின்றன.

தமிழகத்தில் சுமார் 1200 ஆண்டுகளுக்கும் மேலாக சாதியக் கட்டமைப்பின்/அடையா ளத்தின் கீழ் வளங்களை திடப்படுத்திக் கொண்ட தமிழ்ச் சமூகத்தில் விவசாயத்திலும் தொழிற்துறையிலும் சேவைத் துறையிலும் இன்னமும் ஒப்பீட்டளவில் சிறு வீத அளவில் உற்பத்தியும் உடமையும் மூலதனமும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் இவற்றை தக்க வைப் பதோ திடப்படுத்திக் கொள்வதோ அதே அடையாளத்தின் கீழ்தான் ஒப்பீட்டளவில் பரவலாக இப்போதும் சாத்தியமாகிறது.

முதலாளியக் கட்டமைப்பானது தமிழ் நாட்டில் காலனிய காலத்தில் மேலிருந்து திணிக்கப்பட்டதால் நிலவுடமைச் சமூகத்தின் அங்கமாக தோற்றமெடுத்த சாதியக் கட்டமைப் பிலான வளங்களை/உபரியை அபகரித்தல் என்பது இன்னமும் நீடித்து வருகிறது. உருவான முதலாளிகளே சாதியக் கட்டமைப் பின் உடைவிலிருந்து தோன்றியதாகவும் இவ்வாறு இருந்து வருகிறது.

தமிழ் நாட்டில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக முதலாளியம் நடைமுறையில் இருந்தாலும் காலனியத்தால் அது திணிக்கப்பட்டு கட்டுப் படுத்தப்பட்டதால் அது 1947 வரை பெருவீத அளவில் ஓரளவிற்கு மேல் வளர முடியாமல் போனது. அதற்குப் பின்னர் வரம்புக்குட்பட்ட அளவில் பெருவீத உற்பத்தியும் மூலதனத் திரட்சி யும் மேற்கொள்ளப்படுவது தொடங்கியது.

எனினும் 1980களின் தாராளமயக் கொள்கை யின் அமலாக்கமும் உலகமயமாக்கல் ஏற்படுத்திய எதிர்மறை விளைவும் ஒரு புறம் மூலதனக் குவிப்பை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் ஏற்படுத்தியது. அதன் விளைவாக விவசாய நிலக் கட்டமைப்பு துண்டு துண்டாகி 93 விழுக்காடு குறு மற்றும் சிறு உடமைகளாகச் சுருங்கி விட்டது. இதனால் பெருவீத உற்பத்தி நடை பெறவில்லை. எந்திரமயமாக்கலானது படிப் படியாக அதிகரித்து வந்தாலும் கார்ப்பரேட் பாணியிலான விவசாயத்திற்கான நிலக்குவிப்பு முழு வீச்சில் நடைபெறவில்லை.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முதலா ளியம் நடைமுறைக்கு வந்த சில பத்தாண்டு களிலேயே விவசாய நிலக் கட்டமைப்பில் குவிப் பும் அதன் விளைவாக பெருவீத உற்பத்தியும் மிக வேகமாக ஏற்பட்டது போல் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை.

தொழிற்துறைப் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டோமெனில் மேலே பார்த்த வாறு பதிவு பெற்ற/பதிவு பெறாத நுண்/சிறு/நடுத்தர ரக தொழிற்நிறுவனங்கள் சுமார் 30 இலட்சங்கள் என்ற அளவில் இருக்கின்றன. இவற்றில் பெரும் எண்ணிக்கையில் இருப்பவை நுண்/சிறு தொழிற்நிறுவனங்களே. அதே போல் சேவைத் துறையினை எடுத்துக் கொண்டாலும் இலட்சக்கணக்கான நிறுவனங்களில் முதன்மை யாக இருப்பது சிறு வீத மட்டத்திலான தொழில் முனைவோர் கட்டமைப்புதான் ஆகும். 

தமிழ்நாட்டில் பெருவீத மட்டத்திலான பெரு முதலாளிகளை எடுத்துக் கொண்டோ மானால் முதல் பெரிய 25 தொழிற் குழுமங் களை நடத்துவது பெரும்பாலும் பாரம்பரிய ஆதிக்கச் சாதிகளே ஆகும். இவற்றில் அதிக எண்ணிக்கையில் பார்ப்பனர்கள்தான் இருக் கின்றனர். அதற்கு அடுத்ததாக வருவோர் நாட்டுக் கோட்டை செட்டியார்களே ஆவர். பின்னர் நாயுடுகள் வருகின்றனர். பெருவீத அளவில் மூல தனம், சந்தை போன்றவற்றை இச்சாதியினரே கட்டுப்படுத்தினாலும் கடந்த 100 ஆண்டு கால சமூகப்-பொருளாதார-அரசியல் மாற்றங்களினால் சில கவுண்டர்களும் நாடார்களும் மேலே பார்த்த முதல் 25 தமிழகப் பெரு முதலாளிகள் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பல தொழிற்நிறுவனங்களை உள்ளடக்கிய குழுமங்களாக செயற்படும் இப்பெரு முதலாளிகள் முதன்மையாக தமது குழுமத்திற்குள்ளே இல்லை யெனில் தமது சாதியைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களிடையேதான் தொழில் உறவைக் கொள்கிறார்கள்.

தமிழக/இந்திய அரசு எந்திரத்தின் மையத்தை பார்ப்பனர்கள் கட்டுப்படுத்துவதால் அதைக் கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த பார்ப்பன பெருந் தொழில் முதலாளிகள் ஆட்டோமொபைல், ஊடகம், தகவல் தொழில்நுட்பம், நிதி, காப்பீடு, வங்கி ஆகிய துறைகளில் அதிகமாக ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். அவர்கள் ஆட்டோ மொபைல் துறையில் இந்தியாவிலேயே 15 விழுக்காட்டைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

ஆட்டோமொபைல் துறையில் தமிழ் நாட்டில்/இந்தியாவில் முன்னணியில் உள்ள தமிழகப் பார்ப்பன தொழிற் குழுமமான டிவிஎஸ் குழுமமானது அசோக் லேலண்ட், டாடா மோட் டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பார்ப்பன தலைமை அதிகாரிகளின் சாதிய வலைப் பின்னலின் கூட்டோடு இன்று சீனா, இந்தோ னேசியா போன்ற நாடுகளில் முதலீட்டை மேற் கொள்ளும் அளவுக்கு வளர்ந்தோங்கியுள்ளது.

டிவிஎஸ் குழுமமானது தனக்கு தேவையான ஆட்டோ உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்கு பார்ப்பன தொழில் குழுமமான அமால்கமேஷன் என்ற குழுமத்திற்கு ஆர்டர் கொடுத்து அதை உலகளாவிய தொழில் குழுமமாக வளர்த்து விட்டது.

டிவிஎஸ், அமால்கமேஷன் ஆகிய தமிழகப் பார்ப்பன தொழிற் குழுமங்கள் உற்பத்தி செய்யும் வாகனங்களை வாங்குவதற்கு கடன் வழங்கி இன்று உலகளவில் நிதிக் கழகமாக வளர்ந் துள்ளது தமிழகப் பார்ப்பன குழுமமான ஸ்ரீராம் குழுமம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் 25 பெரு முதலாளியக் குழுமங்களில் ஒன்றான சக்திக் குழுமமானது தமிழ்நாட்டில் சாதிய ஆணவக் கொலைகளில் முதன்மையாக ஈடுபடும் முச்சாதிகளில் ஒன்றான கவுண்டர் சாதியைச் சேர்ந்ததாகும். இன்று சக்தி குழுமத்தின் அங்க மாக உள்ள சக்தி மோட்டார்ஸ் என்ற தொழில் நிறுவனமானது இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களில் நான்கில் ஒரு பங்கு கார்களுக்கான ஸ்டியரிங் வீல் என்ற உதிரிப்பாகத்தை சப்ளை செய்து வருகிறது.

சக்தி மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தேவை யான உதிரி பாகங்கள் கவுண்டர் சாதியைச் சேர்ந்த நுண்/சிறு தொழில் நிறுவனங்களே சப்ளை செய்து ஒன்றையன்றைச் சார்ந்து பயன்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்கின்றன.

இவ்வாறு பல எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மேலே பார்த்த எடுத்துக்காட்டுகளில் டிவிஎஸ் குழுமம், சக்தி குழுமம் போன்ற பெருவீத அளவி லான பெருந்தொழில் குழுமங்களுக்கே சாதி என்ற அடையாளமானது இன்று வரையிலும் தேவைப்படும் நிலையில் கிராம/வட்டார/மாவட்ட அளவிலான ஆதிக்கச் சக்திகளும் சாதி அடையாளத்தின் கீழ்தான் வளங்களை அடையவோ, கட்டுப்படுத்தவோ, மேலும் அதிகமான அவசியத்திற்கு ஆளாகின்றனர்.

அத்துடன், இந்த அளவிற்கு அவர்களுக்கான வளர்ச்சியை சாத்தியமாக்கிய அரசியல் அதிகாரத்தை மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை பெற்றதற்கு சாதி எனும் அடை யாளமே காரணம் ஆகும். இந்த அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பதற்கும் திடப் படுத்திக் கொள்வதற்கும் விரிவாக்கிக் கொள் வதற்கும் அதன் வாயிலாக வளங்களை/உபரியை கைப்பற்றவும் தேவையான அந்த அடையாளத் திற்கு எதிராகச் சாதி மறுப்பு காதலோ திருமண மோ இருப்பதால் அவர்கள்  சாதிய ஆணவக் கொலைகளை மேற்கொள்கின்றனர்.

இன்று தமிழ் நாட்டை ஆளும் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரில் சுமார் 75 விழுக்காடு அந்த முச்சாதியினரே ஆவர். திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் நிலையும் இதுவே.

தமிழ்நாட்டு அரசாங்கத்தின் 290க்கும் மேற் பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 60 நபர்கள் மட்டும் தஞ்சாவூரைச்சேர்ந்த அகமுடையார் சாதியைச் சேர்ந்தோர் ஆவர். ஏனைய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளில் கணிசமானோரும் முச்சாதியினரே ஆவர்.

இத்தகைய அரசியல் அதிகாரம்தான் இளவரசன், கோகுல்ராஜ் போன்றோரின் இறப்புகளுக்கு காரணமானோரை இன்னமும் காப்பாற்றி வருகிறது.

தமிழ் நாட்டில் சாதிகளின் தோற்றமானது வட்டார அளவில்/பிராந்திய அளவில் நடந் தேறியதால் அதுவே இன்று வளங்களை அடை வதற்கோ பெருவீத அளவிலான விவசாய/தொழிற்துறை உற்பத்திக்கோ தடையாக இருந்து வருகிறது. மறுபுறத்தில் இத்தகைய நிலைமை யானது சாதியக் கட்டமைப்பையும் அந்த அடையாளத்தின் கீழ்தான் வளங்களை அடை வதையும் நீடிக்க வைக்கிறது.

வட இந்தியாவிலும் மேற்கு இந்தியாவிலும் சாதியக் கட்டமைப்பில் சாதிகளானவை கிராமம்/வட்டாரம், மாவட்டம், மாநிலம், தேசிய இனங்கள் ஆகியவற்றிற்கு அப்பால் ஒரே சாதி (ஜாட், யாதவர், குஜ்ஜார், ரஜபுத்திரர், காயஸ்தா,...) நிலவுவதால் அங்கு வளங்களை கட்டுப்படுத்துவது தமிழ்நாட்டை விட இந்தக் கோணத்தில் எளிது.

தமிழ்நாட்டில் பெருவீத அளவிலான நிலவுடமை உற்பத்தி முறையினை பேரரசுகளை (பல்லவர் ஆட்சி, பிற்காலச் சோழர் ஆட்சி) கட்டி யமைப்பதற்கு ஏதுவாக சாதியக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அது வரையிலும் ஒப்பீட்டளவி லான சிறு வீத உற்பத்தியில் இருந்த பழங்குடிகள், இனக்குழுக்கள் ஆகிய சமூகப் பிரிவினர் உள் வாங்கப்பட்டனர். அப்பெருவீத சாதிய நிலவுடமை உற்பத்தி முறையினால்தான் பல்லவ ஆட்சியாளர்களும் பிற்காலச் சோழ ஆட்சி யாளர்களும் தங்களது பேரரசை இன்றைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பைத் தாண்டி ஏன் பிற்காலச் சோழப் பேரரசர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் தெற்காசியா, தென்கிழக் காசியா, ஆப்பிரிக்கா வரையிலும் படையெடுத்து விரிவாக்கினர். அதைச் சாத்தியமாக்கிய சாதியக் கட்டமைப்பானது அதன் அக முரண்பாட்டின் இயங்குநிலைக்கேற்ப படிப்படியாக பலவீன மடைந்து இன்று சிறுவீத உற்பத்தியை மட்டுமே சாத்தியமாக்குகிறது. அதன் வாயிலாக சிறுவீத அளவில் மட்டுமே வளங்களை/உபரியை/உடமை யை தக்கவைக்க முடிவதால் எதிர்புறத்தில் சாதி அடையாளத்தின் கீழ்தான் அதை செய்ய வேண்டிய கட்டாயம் வருகிறது. அந்த அடையா ளத்திற்கு வேட்டு வைக்கின்றன சாதி மறுப்புத் திருமணங்கள்/காதல், அதற்கான எதிர்வினையே சாதிய ஆணவக் கொலைகள் ஆகும்.

சாதி மறுப்பு காதல்/திருமணங்களை ஊக்கு விக்கும் தளத்தைப் பார்ப்போமானால், சாதிய ஆணவக் கொலைகளை அரங்கேற்றும் அதே கிராமங்களின் இன்றைய நிலைமை ஆகும்.

தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் நிலவும் சாதியக் கட்டமைப்பும் அதன் மீது திணிக்கப் பட்ட முதலாளிய பொருளாதாரமும் அங்குள்ள வாழ்வாதாரச் சிக்கலைத் தீர்க்காததால் 100 ஆண்டுகளுக்கும் மேல் மக்கள் வெளியேறத் பாய்ச்சல் வேகத்தில் நடந்தேறியுள்ளது. விளை வாய் கிராமங்களில் பெண்களும் முதியோருமே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

அத்துடன் பெரும் எண்ணிக்கையில் தமிழகப் பெண்கள் உழைப்பில் இறங்கிவிட்டனர். கல்வி கற்கவும் தொடங்கிவிட்டனர். குடும்பத் தலைவர் களாக, பெண்கள் பொறுப்பேற்பதும் குடும்பத்தின் முதன்மையான சம்பாதிப்போராக ஆவதும் அதிகரிப்பதும் அக்கம் பக்கமாக நடக்கிறது. விளை வாய் ஜனநாயக உணர்வும் சுதந்திர உணர்வும் அவர்களிடம் தழைத்தோங்குகிறது. இதனால் தம்மைவிடக் கீழ்ச்சாதியைச் சேர்ந்த ஆண்களை ஜனநாயக உணர்வுடனும் சுதந்திர உணர்வுடனும் பிரக்ஞையுடனே விரும்பித் தேர்வு செய்கின்றனர். ஜீன்சுக்கும் கூலிங்கிளாசுக்கும் ஆசைப்பட்டு அல்ல.

அத்துடன் அவர்கள் சட்டரீதியாக சொத்துரி மையை  கோருவதால் உடமையானது உடைந்து சொந்தச் சாதியிலிருந்து தாழ்த்தப்பட்டச் சாதிக்கு கைமாறுகிறது. தாழ்த்தப்பட்டச் சாதியினரின் உழைப்பிலிருந்தும் உடமை நீக்கத்திலிருந்தும் உடமையைப் பெருக்கிக் கொண்ட/பெருக்கிக் கொள்ளும் சாதியினர் அதை ஏற்கத் தயாராக இல்லாததால் அவர்களின் உடலிலிருந்து உயிரையே நீக்குகிறார்கள்.

உடமை துண்டுபட்டுவிடும் என்பதற்காக பெண் சிசுக்கொலைகளை அரங்கேற்றி வரும் கவுண்டர் சாதி அதனால் தனியுடமையை காப் பாற்றுவதற்காக வாரிசு இல்லாத நிலையைப் போக்குவதற்கு கவுண்டர் சாதியினர் செறிவாக வாழும் மேற்கு தமிழக மாவட்டங்களில் வேறு சாதிப் பெண்களை திருமணம் செய்து கொள் வதற்கு மாறாக கேரளாவினைச் சேர்ந்த ஏதோ ஒரு சாதிப் பெண்ணை (அது தாழ்த்தப்பட்ட சாதியாக இருந்தாலும்) மணம் புரிவதும் நடந் தேறி வருகிறது. இப்பொழுதோ கவுண்டர்கள் அதிகம் வாழும் மவட்டங்களில் கவுண்டர் சாதிப் பெண்கள் தாழ்த்தப்பட்டச் சாதி ஆண் களை மணம் புரிந்து உடமை துண்டுபட்டு தாழ்த்தப்பட்ட சாதியினருக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகக் கவுண்டர் சாதியில் பெண் சிசுக்கொலைகளுக்கு எதிராக விழிப் புணர்வு இயக்கத்தை நடத்தி அடுத்த தலை முறையைச் சேர்ந்த கவுண்டர் சாதி ஆண்களுக்கு எண்ணிக்கையில் குறைவாக உள்ள சொந்தச் சாதி பெண்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி உடமையானது சொந்த சாதிக்குள்ளேயே இருக்குமாறு எத்தனித்து வருகிறது பெருமாள் முருகன் என்ற எழுத்தாளரைக் ‘கொன்ற’ ஈஸ்வரனை பொதுச் செயலாளராக உடைய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி.

மேலே பார்த்தவாறான நிகழ்வுப் போக்கினால் நடைபெறும் சாதிய ஆணவக் கொலைகளை அரங்கேற்றும் முச்சாதியினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக அரசாங்கம், அரசு எந்திரம், மைய நீரோட்ட அரசியல் கட்சிகள் இக்கொலைகளை தடுக்கத் தயாராக இல்லாதது இயல்பானதே. இன்னொரு புறத்தில் ‘தமிழர் ஒற்றுமை’ என பேசும் பெரும்பாலான தமிழ்த் தேசிய அரசியல் அமைப்புகளும் இக்கொலைகளை பெரிதாக எதிர்ப்பதில்லை. ஏனெனில் தமிழர் ஒற்றுமை பாதிக்குமாம். இத்தகைய தமிழ்த்தேசிய அரசியல் அமைப்புகளும் இம்முச்சாதிகளின் முதன்மை யான கட்டுப்பாட்டிலே இருப்பதால் இக்கொலை களை அவர்கள் எதிர்க்காதது வியப்பன்று.

அத்துடன் இத்தமிழ்த்தேசிய அமைப்புகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை எதிர்க் கின்றன. ஆதிக்கச் சாதிச் சங்கங்களைத் தடை செய்யக் கோருவதையும் இக்கொலைகள் செய்வோரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோருவதையும் எதிர்க்கின்றன. இளவரசன், கோகுல்ராஜ் ஆகியோரின் மரணங் களை தற்கொலை என்று சீமான் கூறும் அளவிற்கு இத்தகையோரிடம் ஆதிக்கச் சாதிவெறி தலைவிரித்தாடுகிறது.

வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தை எதிர்க்கும் இந்து பாசிச சிவசேனை, அதே நிலைப்பாட்டை மேற்கொள்ளும் பா.ம.க. தலைமையில் உருவான அனைத்து (ஆதிக்கச்) சாதி கூட்டமைப்பு, அரசியல் கட்சிகளாக மாற்றிக்கொண்ட முந்நாளைய சாதிச் சங்கங்கள் ஆகியவற்றிற்கும் பெரும்பாலான தமிழ்த் தேசிய அமைப்பு களுக்கும் இவ்விசயத்தில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.

தமிழ் நாட்டில் சாதிக்கு எதிராக கிராமங்கள் தோறும் பரப்புரை செய்த பெரியார் மேற் கொண்ட பல்வேறு இயக்கங்களினால் அதிகளவில் பலன்பெற்ற பார்ப்பனரல்லா/தமிழர் அல்லாத ஆதிக்கச் சாதிகள் சாதியைக் கட்டிக் காக்கும் வகையில் அனைத்து அரங்கு களிலும் அமர்ந்து கொண்டு மேற்கொள்ளும் சாதிய ஆணவக் கொலைகளை தடுக்க முடியா மல் இருக்கின்றன இன்றைய பெரியாரிய அமைப்புகள்.

அதை தன்திறனாய்வுக்கு உட்படுத்தாமல் இன்னமும் பழம்பெருமை பேசி வருகின்றன. தமிழக கிராமங்களில் பார்ப்பனர்கள் இல்லை யென்றாலும் சாதி இருப்பதும் அதன் அங்கமாக ஆயிரக்கணக்கான கிராமங்களில் இரட்டைக் குவளை முறை இன்னமும் நீடித்து வருவதாக அந்த அமைப்புகளே நடத்தும் அமர்வுகள் கூறுவதும் கண்கூடாக இருக்கின்றன. இதற்கும் சாதிய ஆணவக் கொலைகளுக்கும் உறவு இருக் கிறது. இதையெல்லாம் செய்வது பார்ப்பனர் அல்லாத/தலித் அல்லாத ஆதிக்கச் சாதிகள்தான் என்பதை அங்கீகரிக்கவோ இந்த ஆதிக்கச் சாதி களுக்கு சாதியை காப்பதும் சாதிய ஆணவக் கொலைகளை மேற்கொள்வதும்  பலன் அளிக் கின்றன என்பதை அங்கீகரிக்கவோ தயாராக இல்லை.

இந்தச் சாதிய ஆணவக் கொலைகளை நேரடி யாக மேற்கொள்வது அந்த முச்சாதிகள் என்றா லும் இதில் பார்ப்பன ஆளும் வர்க்கத்திற்கு ஒன்றும் பெரிதாக சம்பந்தமில்லாதவாறு அவர் களை அப்பாவியாகக் காட்டி எல்லாம் திராவிட இயக்கம்/ஆட்சிகளால் வந்த வினைதான் என பார்ப்பன ஆதரவு தலித் அறிவுஜீவிகள் சித்தரிக் கின்றனர். தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அரசு எந்திரத்தின் மையத் தலைமைப் பாத்திரத்தை இன்னமும் ஆற்றி வருவது பார்ப்பன அதிகார வர்க்கம் என்பதை இவர்கள் வசதியாக மறைக் கிறார்கள்.

கோகுல்ராஜை கொலை செய்த யுவராஜை காப்பாற்றி வருவது இந்து மக்கள் கட்சி. இக் கொலைகளை தடுக்காத/கண்டிக்காத அதிமுக, திமுகவை போலவே மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் நடந்து கொள்கிறது. இம்முச்சாதி களில் வன்னியர் சாதி தவிர ஏனைய இரண்டு சாதிகளையும் தனது அடித்தளமாக மாற்றி வருகிற பாஜக, இம்முச்சாதிகளின் மூலமே தமிழக கிராமப்புறங்களில் முதன்மையாக சாதியை கட்டிக் காக்க முடியும் என்பதால் அவைகளோடு அது தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள முடியும்.

இத்தகைய கொலைகளுக்கு ஆதரவான அரசியல் சூழலை உருவாக்கிய பா.ம.க.வையும் அது போன்ற அரசியல் அமைப்புகளான கொங்கு பெயரில் உள்ளவற்றை சேர்த்துக் கொண்டுதான் பா.ஜ.க.வானது 2014இல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.

பா.ம.க. 2012இல் தொடங்கி வைத்த இச்சூழ லானது மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் மேலும் மோசமடைந்து இந்து பாசிசமானது இதைப் பயன்படுத்தி தமிழ்ச் சமூகத்தை எல்லா அரங்கு களிலும் ஒரு மட்டத்தில் கட்டுப்படுத்தும் அம் முச்சாதிகளிடையே அடித்தளமிட்டு ஜெயலலி தாவின் உடல்நிலையின் காரணமாக ஏற்பட்டுள்ள அதிமுகவின் எதிர்கால நிச்சயமின்மையை தனக்கு சாதகமாக்கி ஆட்சியைப் பிடிக்க எல்லா விதங்களிலும் எத்தனித்து வருகிறது.

பா.ம.க.வானது ஒரு புறத்தில் இவ்வாறு இருந்துவரும் நிலையில் மறுபுறத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியானது சாதிய ஆணவக் கொலைகளை தடுக்காத/கண்டிக்காத அ.தி.மு.க., திமுக, தேமுதிக, காங்கிரஸ், தமாக, பாஜக போன்ற கட்சிகளை அதற்காக பெயர் குறிப்பிட்டுச் சொல்லாததோடு அக்கட்சிகள் இருக்கும் அணியில் தான் இருக்காது என முடிவெடுக்கவும் தயாராக இல்லை. மாறாக இச்சாதிய ஆணவக் கொலைகளை அனுமதிக்கும் தேர்தல் அரசியலில் பா.ம.க., பா.ஜ.க. அல்லாத மேலே பார்த்த கட்சி களுடன் கூட்டணியை அமைக்கவும் ஆட்சியில் பங்கைக் கோரவும் செய்கிறது. அத்துடன் பா.ம.க, கொங்கு பெயரிலான கும்பல்கள் போன்றவை சாதி மறுப்பு திருமணங்களை முன்கூட்டி தடுக்கும் அளவிற்கு செயற்படா விட்டாலும் பரவாயில்லை, இக்கொலைகள் நடக்கும் முன்னரும் அதற்குப் பின்னரும் சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் சக்தி களிடத்தில் சமரசம் செய்துகொள்கிறது.

முடிவாக, இத்தகைய சாதிய ஆணவக் கொலைகளின் பலனை அனுபவிக்கும் ராமதாஸ்/ கொங்கு பெயரிலான கும்பல்கள்/பா.ஜ.க. வகை யறாக்களின் சாதியப் பயங்கரவாதச் செயலுக்கு எதிராக ஆதிக்கச் சாதிகளின் உழைக்கும் வர்க்க மானது தாழ்த்தப்பட்ட சாதிகளின் உழைக்கும் வர்க்கத்துடன் அணிசேர்ந்தாக வேண்டும்.

இதில் ஆதிக்கச் சக்திகளின் பின்னால் அதே சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் அறியாமையால் அணிதிரட்டப்படுகின்றனர். தருமபுரி நத்தம் காலனி தாக்கப்பட்டதற்கு பின் இவர்கள் சாதி பயங்கரவாதி ராமதாசின் தலைமையில் அணிதிரண்டுள்ளனர்.

நவீன தாராளமயமாக்கலின் கீழ் மிக வேக மாக மாறிவரும் சமூக மாற்றங்களையும் குறிப் பாக சாதியக்குடும்ப சிதைவுகளை அதிலும்  குறிப்பாக சாதி அகமணமுறை சிதைவதை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். காதலுக்காக இளவரசன் கொலை செய்யப்பட்ட பிறகு, இப்பொழுது பேசியதற்காகவே கோகுல் ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த அபாயகரமான சூழ்நிலையில் உழைக்கும் மக்களை காட்டி ஆதிக்க சக்திகள் பயன்பெறு வதை முறியடிக்க வேண்டிய தேவை உள்ளது. இதை உழைக்கும் மக்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுடன் ஒன்றிணைவதில்தான் அவர்களின் விடுதலை உள்ளது என்பதை உணர்த்த வேண்டியுதுள்ளது.

இதே போல், இட ஒதுக்கீட்டில் வர்க்க பிளவை ஏற்படுத்த வேண்டி உள்ளது. தமிழகத்தில் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினரைத் தவிர இதர அனைத்து சாதி பிரிவுகளிலும் பொருளாதார வரம்பு (கிரிமிலேயர்) நிர்ண யிக்கப்படவேண்டும்.

இடஒதுக்கீடு இராமதாசுக்கோ, சேதுராமனுக் கோ, ஈஸ்வரனுக்கோ போய்ச்சேரக்கூடாது. அதே சாதியைச் சேர்ந்த சாதாரண கீழ்மட்ட இராமசாமிக்கோ, அர்த்தநாரிக்கோ, மாயாண்டிக் கோ போய்ச் சேரவேண்டும்.

எனவே, ஆதிக்க சாதிகளில் வர்க்கப் பிளவை ஏற்படுத்துவதும் அதில் உள்ள உழைக்கும் மக்களை தாழத்தப்பட்ட மக்களுடன் அணிதிரட்டி தமிழ்த்தேச விடுதலைக்கு போராடுவது நமது கடமை யாகிறது. மேலும், இடஒதுக்கீட்டில் சாதிக் குள் பொருளாதார வரம்பிற்காக போராடு வதும் நமது வரலாற்றுக் கடமையாகிறது.

Pin It