நினைவோடை

 வாஸ்து பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல! வாஸ்து என்றாலே கட்டிய வீட்டை இடிப்பது என்று அர்த்தம். குபேர மூலை, சனி மூலை, அக்னி மூலை என்று பலவகை மூலைகளை தன் கைவசம் வைத்திருக்கும் வாஸ்துவை நம்பி என் தந்தையார் ஆடல் பாடலாக கட்டி வைத்திருந்த வீட்டை இடித்து கந்தரகோலம் செய்து எந்த முன்னேற்றமும் காணாமல் இன்னும் ஒட்டுப் பொறுக்கிக் கொண்டு தான் திரிகிறேன்.

 என்னைத் தேடிவரும் நண்பர்களை எந்த நேரம் தலையில் விழுமோ என்ற பயத்தில் முன்பொரு காலத்தில் தாத்தா கட்டிய மண்சுவர் வீட்டினுள் படுக்க வைத்து நானும் படுத்துக் கொள்கிறேன். வாஸ்துவில் எனக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது என்றாலும் வீட்டார் சொல்படி நடக்கும் சிறுபிள்ளை தான் நான். எதையும் அனுபவப்பட்டு அவரவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது தான்.

 எழுத்திற்கு வந்து விட்ட பிறகு ஆன்மீகப் புத்தகங்களிலிருந்து சமையல் கலை புத்தகங்கள் வரை புரட்டிப் பார்க்கும் நான், நண்பர் ஒருவர் வீட்டில் வாஸ்து சாஸ்திரம் புத்தகத்தை பிரித்துப் பார்த்து மிரண்டு போனேன். கட்டம் கட்டி மூலைகளைப் பிரித்து பட்டையைக் கிளப்பி இருந்தார்கள். இன்ன இன்ன ராசிக்காரர்கள் இன்ன இன்ன திசைபார்த்து கதவு வைக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். அதன்படி பார்த்தால் என் தந்தையார் சரியாகத்தான் அவர் மனைவிக்கான வசந்த மாளிகையை கட்டி வைத்துவிட்டு செத்துப் போயிருக்கிறார்.

 அவர் செத்ததற்கு காரணமே கதவு தான் என்று குறி சொன்னார்கள் சிலர். தவிர அந்தக் கதவை மூடாவிட்டால் நானும் போய்ச் சேர்ந்து விடுவேன் என்று குறிகாரர்கள் கூசாமல் சொன்னார்கள். அவர்கள் சொல்லும் அற்புத வார்த்தை ஒன்று உள்ளது. அது- காசு பணம் போனால் சம்பாதிச்சுக்கலாம். உசுரு போனால் சம்பாதிக்க முடியுமா? சரி இதை விடுவோம். புத்தகத்தினுள் சீன வாஸ்து என்று வேறு போட்டு இருந்தார்கள். நண்பர் என்னிடம் அவருக்கு அந்தப் புத்தகம் தேவை என்றும், ஓசியில் அடுத்தவர்க்கு புத்தகம் தரும் பழக்கம் அறவே கிடையாதென்றும், பேப்பரில் உட்கார்ந்து குறிப்பெடுத்துக் கொண்டு செல்லும்படியும் கூறினார். இந்தக் கருமத்தை இனி குறிப்பு வேறு எடுத்துக் கொண்டு போகணுமா?

 மாணிக்கம் சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் எல்லக் காட்டில் வசிக்கிறார். வயதும் ஐய்ம்பத்தி எட்டு ஆகி விட்டது. அந்த வயதிற்கான பக்குவம் துளி அளவேனும் இல்லாதவர் அவர். ஒரே பையன் திருப்பூரில் சாயப்பட்டறை வைத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டான். ஆடிக்கொருமுறை அம்மாவாசைக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து போவான். வீட்டில் இவரும் இவர் மனைவி பொன்னாயாளும் தான்.

 கையில் நூறு ரூபாய் நோட்டு இருந்ததென்றால் எல்லக்காட்டில் டாஸ்மார்க் கடையில் மாணிக்கத்தைப் பார்க்கலாம். இதற்காக அவரை ஒரு சிறந்த குடிகாரர் என்று நான் சொல்ல மாட்டேன். வெறும் மாணிக்கம் வாஸ்து மாணிக்கமான கதை சுவாரஸ்யம் இல்லாததால் அதை நாம் பேசப் போவதில்லை. நாலு பேருக்கு எதையோ சொல்ல அதில் இருவருக்கு இவர் சொன்ன மேட்டர் வொர்க் அவுட் ஆக வாஸ்த்து இவர் பெயருடன் ஒட்டிக் கொண்டது கடந்த ஆறேழு வருடங்களில் தான்.

 வாஸ்து மாணிக்கத்திற்கு குடி அளவு ஒரு கோட்டர் தான். பிராந்தி, விஸ்கி, ரம் என்ற வகைப்பாடுகள் அவர் குடிக்கும் மது வகைகளில் உள்ளன என்பதை அறியாதவர். கம்பிச் சந்தினுள் காசு நீட்டினால் பாட்டில் வருகிறது என்பதை உணர்ந்தவர். அரசாங்கம் மதுப்புட்டிகளின் விலையை உயர்த்தி அட்டகாசம் செய்கிறது என்றபோது உலக மகா கடுப்பானவர் சாக்னா கடையில் மது அருந்தியபடி இருந்த தெரிந்த முகங்களிடம் கொந்தளித்து விட்டார்.

 குடிகாரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி சென்னிமலையில் தேர்முட்டிக்கு அருகே அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூச்சல் போட்டார். அவரது உணர்ச்சிகரமான பேச்சில் மயங்கி போதையின் விளிம்பில் இருந்த அனைத்து முகங்களும், “செஞ்சிடலாங்க மாமா” என்றன. ஒரு பாட்டில் பியருடன் எப்போதும் கிளம்பிவிடும் நான் விசயம் சுவாரஸ்யமாக இருக்கவே மீண்டும் அமர்ந்து விட்டேன்.

 “அட மாப்பிள்ளைங்களா! கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, டீசல், பெட்ரோல் விலை உயர்வு, கரண்டு தட்டுப்பாடு இப்படி எது நடந்தாலும் கூட்டம் சேர்த்து சாலை மறியல், பந்த் எல்லாம் பண்றாங்க தானே! நாமளும் ஒரு வாரம் குடி நிறுத்தப் போராட்டம் செஞ்சோம்னா அரசாங்கம் நிதிப் பற்றாக்குறையில தவிக்கும்ல? தன்னப் போல அவங்க விலையை குறைச்சிடுவாங்க.

 எனக்கொரு சந்தேகம் மாப்பிள்ளைகளா! இந்த அரசாங்கம் நம்மளை என்னன்னு நெனச்சுட்டு இருக்குது? இவனுக ஆளாளுக்கு வீட்டுல பணம் காய்ச்சி மரம் வச்சிட்டு இருப்பானுக! காசு பணம் வேணுங்கறப்ப மரத்தை ஒரு உலுக்கு உலுக்கி விழுற பணத்தை எடுத்துட்டு ஓடியாந்து டாஸ்மார்க்குல குடுத்துட்டு போயிடறானுகன்னு நெனச்சிட்டு இருக்குமாட்ட!” என்றவரை சாக்னாகடை ராமு மேலும் கீழும் பார்த்து முறைத்தான்.

 “ஒரு கோட்டருக்கும் மேல அரைக் கட்டிங் இன்னிக்கி உள்ளார போயிடுச்சாட்ட இருக்குதா! பேச்சு பலமா இருக்குதே! ஊட்டுல பொன்னாயா இன்னிக்கி முண்டுக் கட்டையில ரெண்டு போட்டத்தான் சாமி மலை ஏறும் போல” என்றான் ராமு.

 “ஒரு ரூவா தண்ணிப் பாக்கெட்டை அஞ்சு ரூவாய்க்கி வித்துட்டு இருக்குற நீ பொன்னாயாளைப் பத்தி பேசக் கூடாது. பொன்னாயா யாருன்னு நெனச்சே? எலிசபெத் மகாராணிடா. என் டார்லிங்! ஆமா உன்னை கிழக்க பாத்து கல்லா பொட்டியை வைக்காதே ஏவாரம் சரியா நடக்காதுன்னு சொல்லி எத்தனை நாளாச்சு நானு. வடக்க வார்த்து வையி ராமு காசு கல்லாவுல குமியும்.

 இப்பிடியே இருந்தீன்னா அடுத்த வாரம் வேற ஆள் தான் இந்தக் கடையை எடுத்து நடத்துவான். வெளியூர் போனீன்னா அங்கெல்லாம் சாக்னா கடையில திங்கறதுக்கு எத்தனை ஐட்டம் இருக்குதுன்னு பார்த்து எந்தப் பொருளு அதிகமா சேல்ச் ஆவுதுன்னு பாரு. அதை உட்டுட்டு போனவாரத்து வெம்பிப் போன கொய்யாப்பழத்தையும், காரப்பொரியையும் வெச்சுட்டு ஏவாரம் பண்ணினா கல்லா எப்ப நம்பும்?” என்றார்.

 “போராட்டத்தை கைகழுவீட்டு என்னை புடிச்சுட்டீங்களா? போராட நீங்க சென்னிமலை போகாட்டி என்ன? இவத்திக்கே நாளைக்கி ரோட்டுல உக்காந்து மறியல் பண்ணுங்க. நான் வேணா சென்னிமலை தினமலர் பேப்பர் நிருபர் சுப்பிரமணியை வரச்சொல்லி போட்டா புடிச்சு பேப்பர்ல போடச் சொல்லிடறேன். இல்லீன்னா விஜயகாந்த் டிவிக்காரங்களுக்கு போனுப் போட்டு வரச் சொல்லி நியூஸ்ல காட்டச் சொல்லிடறேன்.

 இப்பவே கூட காரும், பஸ்சும் ரோட்டுல போவுது. போராட நேரம் காலம் வேணுமா? இப்பவே போயி நடு ரோட்டுல குக்கிக்கங்க! பிரேக் பிடிக்காம எவனாவது கொண்டாந்து ஏத்தினான்னா உங்க டார்லிங் கழுத்துல கெடக்குற கவுத்தை எடுத்துட்டு மொட்டைக் கழுத்தா இருப்பாங்க. சாயப்பட்டறையை மூனு நாளைக்கி சாத்தீட்டு உங்க சன் வந்து காரியம் பாப்பாரு. மூனா நாளு மீசையை சரைச்சுட்டு நிம்மதியா போயிடுவாப்ல!” ராமு துணைக்கு என்னையும் இழுத்துவிட்டுப் பேச, ஆமாம் போட வேண்டியதாகி விட்டது. வாஸ்து மாணிக்கமோ விட்டபாடில்லை.

 “அட ராமு தம்பி இன்னிக்கி அஸ்டமி. அஸ்டமில ஆடு கூட புலுக்கை போடாது தெரிஞ்சிக்க. நாளைக்கி நவமி. ஆடு அடக்கி வச்சிருந்து காலம்பர நேரத்துல புலுக்கை போடும். பக்தி இல்லாத பூனை பரமண்டலம் போச்சாம் நெத்திலி மீனை வாயில கவ்வீட்டுங்ற மாதிரி பேசிறாம் பாரு பேச்சு. இதுக்குத்தான் பெரியவங்க சிறு கல்லெடுத்து துடைக்கக் கூடாதுன்னு சொன்னாங்க.” என்று முனகியபடி நழுவிப் போனார்.

 குடிநிறுத்தப் போராட்டத்திற்கு குடிமக்களே வராத காரணத்தினால் போராட்டம் சென்னிமலையில் நடவாமல் போனது அவருக்கும், வேடிக்கை பார்த்த எனக்கும் வருத்தமான விசயம் தான். இருந்தாலும் இந்த குடி அபிமானிகளின் பிரச்சனைகளுக்காக ஒரு நாள் குடியை நிறுத்தி தனி மனிதர்களாக வாஸ்து மாணிக்கத்தினாலும், என்னாலும் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட முடியவில்லை. ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து விடலாம்… ஆனால் குடியாமை கசப்பான விசயம்.

 வாஸ்து மாணிக்கத்தைப் பற்றி அறிந்தவர்களிடம் விசாரித்ததில் கதை கதையாய் சொன்னார்கள். ஒரு நாவல் எழுதலாம் என்பது போல் தகவல்கள் சேகரமாகியது. இருந்தும் எனக்கு அதில் ஒன்று பிடித்திருந்தது. அது சம்பவங்களாக கீழே!

 ஆடிக்கொரு முறையோ, அம்மாவாசைக்கு ஒருமுறையோ கையில் சுத்தமாக பைசா இல்லையென்றால் சென்னிமலை கொளத்துப்பாளையம் பஸ் ஏறி விடுவாராம் வாஸ்து மாணிக்கம். அங்குதான் பனியம்பள்ளி அக்கா மகள் மகேசுவரியும், அவள் தங்கை புவனேசுவரியும் இருக்கிறார்கள். இவருக்கு புவனேசுவரியை அவ்வளவாகப் பிடிக்காது. வார்த்தைக்கு வார்த்தை சொல்லுங்க மாமா! என்று மாமா போட்டுப் பேசும் மகேசுவரியைத் தான் பிடிக்கும்.

 இவரின் தலை தெரிந்ததும் சிக்கன் ஒரு கிலோ, மட்டன் ஒரு கிலோ என்று கறிக் கடைக்கு றெக்கை கட்டிப்போய் வாங்கி வந்து வாய்க்கு ருசியாக சமைத்துப் போடுவாள் மகேசுவரி. நீங்களோ நானோ வரவேற்பு பலமாய் இருக்கும் வீட்டுக்குள் தான் எப்போதும் நுழைவோம். புவனேசுவரியோ வாங்க மாமா என்று ஒரு வார்த்தை கேட்பதோடு சரி. ஒரு காபித்தாண்ணி கூடத் தரமாட்டாள். நல்லா இருக்கியாம்மா? புருசங்காரனால தொந்தரவு ஒன்னும் இல்லியே! என்று பேச்சுக் கொடுப்பார்.

 “நான் நல்லா இருக்கேனுங்க! அவரும் நல்லா இருக்காரு. பிள்ளைங்களும் நல்லா படிக்குதுக. உங்களைப் பார்த்தாத்தான் அவட்டை கழண்டு போனவரு மாதிரி தெரியறீங்க. ஊட்டுல அத்தை சரியாவே உங்களை கவனிக்கிறது இல்லியாட்ட இருக்குது! இந்தக் காக்காயிக வேற காத்தால புடிச்சி கத்தீட்டே இருந்துச்சுக. மகேசுவரியக்கா வீட்டுக்கு வர்ற ஒரம்பறைக்கி இதுக எம்பட மரத்துல உக்காந்து கத்துதுக!” என்பாள்.

 பனியம்பள்ளி மச்சான் தான் தன் பிள்ளைகளை அண்ணன், தம்பிகளுக்கே கட்டிக் குடுத்துட்டு ஒரே இமுசு. அட இவளுக மாமனாராச்சிம் தனித் தனியா வேற வேற இடத்துல வீட்டைக் கட்டிக் குடுத்திருக்கலாம், அதை உட்டுப்போட்டு பெருசா வீட்டை கட்டி நடுவுல செவுத்தை வச்சு அந்தப்பக்கம் அண்ணங்காரன், இந்தப்பக்கம் தம்பிகாரன்னு உட்டுட்டு நீட்டா ஈங்கூர் தோட்டத்துல பழைய வீட்டுல சோத்தை ஆக்கித் தின்னுட்டி மாடு கன்னுகளை பாத்துட்டு உக்காந்துட்டாரு…! இப்படியான நினைப்பில் மகேசுவரி வீட்டுக்குள் மாணிக்கம் நுழைந்தார். சன்டிவியில் நாடகம் பார்த்தபடி படுத்திருந்தவள் எழுந்து “வாங்க மாமா” என்று சொல்லி சமையல் அறைக்குள் போய் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

 “அப்புறமம்மிணி.. பிள்ளைங்க எல்லாரும் பள்ளிக்கோடம் போயாச்சா?”

 “ஆமாங்க மாமா, நீங்க வந்துட்டுப் போயி மூனு மாசம் ஆயிப் போச்சுங்களே. எங்க மாமனாரு தீவாளிக்கி எங்க ஊட்டுக்காரருக்கு பத்தாயிரம், புவனேசுவரி வீட்டுக்காரருக்கு பத்தாயிரம் செலவுக்கு குடுத்தாருங்க. நீங்க தான் வீட்டு முன்னாடி கிழகோட்டுல லெட்டின் ரூமு இருக்கப்புடாதுன்னு சொன்னீங்களே மாமா! குடும்பத்துல நோவு நொடி தீரவே தீராதுன்னு வேற சொன்னீங்களே!”

 “நாஞ் சொன்னனா அம்மிணி? வரவர ஞாவக மறதி சாஸ்தியாப் போச்சு எனக்கு. என்ன பண்ணுனே அம்மிணி?”

 “தெக்கே காம்பெளண்டு சுவத்துக்கிட்ட கிழகோட்டுல புதுசா லெட்டின் ரூமு கட்டிப் போட்டனுங்க. எங்க ஊட்டுக்காரருக்கு அடிக்கடி சளிப்புடிச்சி இருந்துச்சுங்கள்ள.. இப்ப மட்டுப்பட்டுகிச்சுங்க மாமா. நீங்க சொன்னதா போயி சின்னவகிட்ட எதைப் போயி சொன்னாலும் அவள் கேக்கறதே இல்லீங்க மாமா. மேகோட்டுல பாத்ரூமு இருக்கப்படாதுன்னு மாமன் சொல்லுதுன்னு சொன்னேன். அவ என் பேச்சை இந்தக் காதுல வாங்கி அந்தக்காதுல உட்டுட்டா. மாமனாரு குடுத்த காசைக் கொண்டி துணிமணியில கொட்டி வாங்கி வச்சுக்கிட்டு ஊருக்குள்ள பையைத் தூக்கிட்டு போய் சேலை, பாவாடை, ஜாக்கெட் துணி ஏவாரம் பண்ணுறா! கடனுக்கு துணியை குடுத்துட்டு வாரா வாரம் நடையா நடந்து வசூல் பண்ணீட்டு இருக்கா மாமா!”

 ”வாஸ்துங்கறது ஒரு வீட்டுக்கு பெரிய பலம் அம்மிணி சீன வாஸ்துல சாப்புடற தட்டுல இருந்து டேபிள், டிவி, கடியாரம் மாட்டுற இடம் வரைக்கும் ஒரே வாஸ்து மயம் தான். சீனாவுல வாஸ்து முறைப்படி தான் கட்டடம் கட்டுறவங்களே கட்டுவாங்க. உலவத்துலயே எல்லா நாட்டு ஆட்களுமே எதெது எங்கெங்கெ அங்கங்க வச்சு வசதியா வாழுறாங்கம்மிணி. சீனாவுல போன வாரம் தண்ணி வாக்க பாத்ரூமுக்குப் போனவன் சோப்பு வழுக்கி உட்டு விழுந்து செத்துப் போயிட்டான். அவன் வீட்டு நாயை யூக்கலிப்டஸ் மரத்துல சங்கிலியால கட்டிவச்சு வளர்த்துட்டு இருந்தானாம். வீடு பூராவும் வாஸ்து முறைப்படி அவன் சிறப்பா செஞ்சிருந்தாலும் ஒரு நோய் நொடி இல்லாம வாழ்ந்தாலும் கெரகம் விட்டுச்சா பாரு அம்மிணி அவனை.

 நாயை கட்டி வச்சு வளர்த்தக் கூடாது. வீட்டுக்குள்ள குளிப்பாட்டி, சீராட்டி வளர்த்தோணும். அதும் யூக்கலிப்டஸ் மரத்துல அவன் நாயை கட்டியிருக்கப்புடாது. சீன வாஸ்துல முக்கியமான மரம் அது. அதுல இரும்பு சாமான் படவே கூடாது.” என்று எடுத்து ஓட்டினார் மாணிக்கம். கேட்பவர் கேணை என்றால் கேரளாவில் எலி எலிக்காப்டர் ஓட்டுச்சு என்றும் கூட கூறுவார்.

 வாஸ்து சொல்பவர்களுக்கு வாய் தான் மூலதனம். வாய் பேசாதவன் வாஸ்து சொல்ல அருகதையற்றவன். கேட்பவர் வாய்க்குள் குருவியே போய் வர வேண்டும்.

 “ஏனுங் மாமா, நீங்க சொல்றது நம்ம நாட்டு வாஸ்துங்களா?”

 “இல்லையம்மிணி, நம்ம நாட்டு வாஸ்து எல்லாம் பொய், பித்தலாட்டம் தான். தோணினதை எழுதி வச்சுட்டுப் போயிட்டாங்க. இப்ப நீ வீட்டுக்கு நீலக்கலர் அடிச்சு வச்சிருக்கே. ப்ளோரசண்ட் ஆரஞ் பூசணுமுன்னு நம்ம வாஸ்து சொல்லுது. அதுக்கு உன் வீட்டுக்காரனோட ராசி கும்ப ராசியா இருக்கோணும். ஆமா அம்மிணி அவருக்கு என்ன ராசி?”

 “அவருக்கு விருச்சிக ராசிங்க மாமா, பையனுக்கு சிம்ம ராசி”

 “அப்பிடியா! நீ அப்ப மஞ்சள் கலரு தான் வெளிய பூசோணும். உள்ளார மட்டும் பெயிண்ட்டுல மஞ்சள் பூசிக்க. வெளிய டிஸ்டெம்பர் போதும். வீடு மங்கள்கரமா ஆயிடும். நல்ல கோம்பை நாய்க்குட்டி கெடச்சா கட்டிப் போடாம உன் பிள்ளைகள்ல ஒன்னா நெனச்சு வளர்த்தம்மிணி. காங்கேயத்துல நம்ம பொன்ராசு வீட்டுல ரெண்டு நின்னுதுக. இது மார்கழி மாசம் தான். முட்டி கெடச்சாலும் கெடைக்கும். விலை கேப்பானே அவன்?”

 “ஒரு மூனாயிரம் கேப்பாருங்களா மாமா?”

 “போதும் உனக்குன்னு ஆயிரத்தை மட்டும் குடுத்துட்டு குட்டியை தூக்கிட்டு வந்துடறேன். எனக்கும் காங்கேயத்துல ஒரு சின்ன சோலி ஒன்னு நாளைக்கி இருக்குது”

 “எப்பிடியாச்சும் எனக்கு இந்த உதவியப் பண்ணிருங்க மாமா”

 “உனக்குப் பண்டாம யாருக்கம்மிணி நானு பண்டப்போறேன்? வீட்டை ஒட்டி கிழக்கு மூலையில தண்ணித் தொட்டி நெலத்தோட ஒட்டினாப்பிடி கட்டீட்டியாட்ட இருக்குது. இப்பப் வர்றப்ப பார்த்தனே”

 “போனவாட்டி வந்தப்ப சொன்னீங்க மாமா, அதான் பாத்ரூமு கட்டுறப்ப அதையும் சேர்த்தி கட்டீட்டேன். எம்பட வீட்டுக்காரரு இப்பெல்லாம் எங்கிட்ட சண்டை கட்டுறதே இல்லீங்க. அந்த தொட்டி கட்டுறதுக்கு ஆறு ரூவா ஆயிப்போச்சுங்க”

 “செங்கல்லு, சிமெண்ட்டு ஒவ்வொன்னும் ஆனை வெலை குதிரை வெலை ஆயிப் போச்சுல்ல அம்மிணி. எட்டுக்குடம் தண்ணித் தொட்டியில எப்பவும் இருக்கோணும் பார்த்துக்க. ஏமாந்துறாதே. தெரியாம ஒன்பது குடம் ஊத்தீட்டீன்னு வச்சுக்கோ, மெனிமோர் ப்ராப்ளம் வந்துடும். நான் சொன்னது ஆப்பிரிக்க வாஸ்து.

 ஆப்பிரிக்காவுல செத்த முதலையோட கெட்டித் தோல் மேல அம்மணமா உட்கார்ந்து முனிவர் எழுதுனது. மொத்தம் நூத்தம்பது சாஸ்திரம் எழுதி முடிக்கிறப்ப ரத்தமா ஒழுகி எழுதினவரு செத்துப் போயிட்டாரு. அதுல ஒன்னுதான் தண்ணித் தொட்டி. உள்ளார தவளையோ, ஒடக்கானோ, பல்லியோ விழுந்து சாவக்கூடாது. ஆனா நீ தகரம் போட்டு பத்திரமா மூடி வச்சிருக்கே. யாரு இந்த வீட்டுக்கு செய்வினை செஞ்சாலும் பலிக்காது பாத்துக்க”

 “மஞ்சள் கலரு உடனே பூசிடோணுமுங்களா மாமா?”

 “காசு இருந்தா பூசீடு அம்மிணி. நாளை தள்ளிப் போட்டுட்டே போகப்படாது. சமையல் கட்டுல முதல்ல பூசிடு. ஆமா கிழகோட்டுல அருந்த அடுப்பை நடுவாண்ட வைக்கச் சொன்னனே! நம்மாளுங்க தான் அக்னி மூலைன்னு பெரளி பேசிட்டுத் திரியறாங்க”

 “வெள்ளிக்கிழமை நாள்ல வந்துட்டீங்களே மாமா, இல்லீன்னா ஓடி சிக்கன வெட்டீட்டு ஓடியாந்திருப்பேன்”

 “சிக்கன் கெடக்குது உடம்மிணி. நாளைக்கி நாயோட கொளத்துப்பாளையம் வந்து இறங்கிடறேன். உன் தங்கச்சிகாரிகிட்டயும் மஞ்சள் பூசச் சொல்லிடு. துணி யேவாரம் பிச்சுக்கும். புருசனை ஊட்டுல உக்காத்தி வச்சு சோறு போடற நிலமைக்கு வந்துடுவா சீக்கிரம்”

 “போங்க மாமா, நான் போயி மாமன் இப்படி சொல்லுதுன்னு சொன்னா காதுலயே வாங்கிக்க மாட்டீங்கறா. அவ சின்ன வயசுல இருந்தே அப்படித்தானுங்களே மாமா. உங்களுக்குத் தான் தெரியுமே. அவளுக்குத் தோணிணதை மட்டும் தான் செஞ்சுட்டு இருப்பா. இதென்ன எந்திரிச்சுட்டீங்க? பேசிட்டே ஒரு டீ கூட வெக்கிலப்பாரு நானு”

 “வலசு வரைக்கும் ஒருத்தரை பாக்க வந்தனம்மிணி. உன்னை ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேன். டீ வேண்டாம், நான் புறப்படுறேன்”

 “அப்ப இருங்க சித்தே. ஆயிரம் ரூவா எடுத்துடாந்து தர்றேன்” என்ற மகேசுவரி பக்கத்திலிருந்த படுக்கை அறைக்குள் நுழைந்தாள். வாஸ்து மாணிக்கத்துக்கு மனசு இனிப்பானது. பீரோவை உள்ளே அவள் இழுத்து திறக்கும் சப்தம் பாட்டில் மூடியை தட்டித் திறப்பது போன்றே இவருக்கு கேட்டது. பணம் கிடக்குது கழுதை. மனுசன் தான் முக்கியம் என்றொரு குரலும் கூடவே கேட்டது அவருக்கு. மனுசன் கிடக்கான் பன்னிப்பய! காசு தான் முக்கியம்! என்ரு முனகிக் கொண்டார். மகேசுவரி ஆயிரம் ரூவாயைக் கொண்டு வந்து இவரிடம் நீட்டினாள். வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டவர், “அப்ப நான் புறப்படறேன் அம்மிணி” என்று கிளம்பினார்.

 வெளிவந்து வாசலில் கிடந்த மிதியடிகளை தொட்டுக் கொண்டு புவனேசுவரி வீட்டின் சாத்தியிருந்த கதவை வெறித்துப் பார்த்தபடி கடந்தார். இவள் வசமா சிக்க மாட்டீங்கறாளே!

 மாமனுங்காட்டி அஞ்சு பைசா வாங்காம வாஸ்துல இப்படி இருக்குதுன்னு ஓசீல நமக்கு சொல்லீடுது. அதும் ஆப்பிரிக்கா வாஸ்து. இங்கெல்லாம் எவனுக்கு அது தெரியப்போவுது? எதையோ ஒன்னைச் சொல்லி பணம் புடுங்கறதிலியே குறியா இருப்பானுக. மாமா சென்னிமலையில ஒரு ஆபிஸ் போட்டு, இங்கு ஆப்பிரிக்க வாஸ்து பார்க்கப்படும்னு போர்டு வச்சுட்டு உக்காந்தா இந்த வயசுலயும் சம்பாதிச்சுப் போடும். ஆனா காலு ஒரு கெடையில இவருக்குத் தங்காதே! பம்பரமா சுத்துறதுல தான் குறியா இருக்கும்! என்று தான் மகேசுவரி நினைப்பாள்.

 தன் நாய்த் தேவைக்காக மகேசுவரி தந்த பணத்தை ஒரு வாரத்தில் அரசாங்கம் மாணிக்கத்திற்கு கோட்டர் பாட்டில்கள் தந்து பிடுங்கிக் கொண்டது. நாய் பிரச்சனையை மகேசுவரி மறந்துவிடும் வரை இரண்டு மாதம் போல் இவரும் அவள் வீடு போகப் போவதில்லை.

 இரண்டு மாதத்திற்குப் பிறகு காற்று வாக்கில் இவருக்கு செய்தி கிடைத்தது. மகேசுவரி வீட்டுக்காரர் பைக்கில் செல்கையில் பேருந்து மோதி ஈரோடு எல்.கே.எம் மருத்துவமனையில் ஒரு மாதம் படுத்துக் கிடந்து வீடு வந்துள்ளதாய். இடதுகை முறிவுக்கு ப்ளேட் வைத்து ஆப்ரேசன் செய்திருக்கிறார்களாம். நல்ல பிள்ளைகளுக்குத் தான் கெடுதலே நடக்குதப்பா! என்று முனகினார் செய்தி கேள்விப்பட்டதும்.

 மேலும் இரண்டு வாரங்கள் கழித்து கொளத்துப்பாளையம் சென்றார் வாஸ்து மாணிக்கம். மகேசுவரி தன் வீட்டின் பகுதியை மஞ்சள் வர்ணம் பூசியிருந்தாள். புவனேசுவரியின் வீட்டுப்பகுதி பழைய நீலவர்ணத்திலேயே இருந்தது. தண்ணீர் தொட்டி இருந்த இடம் மூடப்பட்டிருந்தது. இவர் கதவருகே நின்று, “அம்மிணி” என்றார். கதவு நீக்கி வெளிவந்தவள் புவனேசுவரி. இவள் எப்படி மகேசுவரி வீட்டில்?

 “அக்கா ரொம்ப கஷ்டப்பட்டுப் போனாள் மாமா. அவசரத்துக்கு மாமனாரும் கையை விரிச்சுட்டாரு. நான் சமயத்துல பசங்களுக்குன்னு தனியா ரூமு ஒன்னு கட்டலாம்னு இருந்தே. அதெல்லாம் வேண்டாமுன்னு அக்கா எனக்கே இந்த வீட்டையும் வெலைக்கு குடுத்துட்டு குமராபுரி போய் வாடகை வீட்டுல தங்கி இருக்காள் மாமா. என்ன கீழயே பார்த்துட்டு இருக்கீங்க? தண்ணித் தொட்டியப் பாக்குறீங்களா? அதை என் வீட்டுக்காரரு மூடிட்டாரு” என்றாள் புவனேசுவரி. மாணிக்கம் அவளிடம் சொல்லிக் கொண்டு குமராபுரியில் வந்து இறங்கினார். மகேசுவரியின் வீட்டை கண்டு பிடிப்பதில் அவருக்கு சிரமம் இருக்கவில்லை. எப்படி அவள் முகத்தில் விழிப்பது என்ற சங்கடத்துடனே, “அம்மிணி” என்றார். பழைய பாசத்துடனேயே அவள் வாங்க மாமா! என்று வீட்டினுள் கூப்பிட்டாள்.

 “வீட்டுக்காரர் இப்பத்தான் ஈரோடு ஆஸ்பத்திரிக்கி போனாப்ல. புண்ணெல்லாம் ஆறிப்போச்சுங்க மாமா. நல்லாத்தான் இருக்காரு. அந்த தண்ணித் தொட்டிக்குள்ள தவளை ஒன்னு செத்துக் கெடந்துச்சுங்க மாமா. அந்தன்னைக்கித் தான் இவருக்கு இப்படி ஆயிடிச்சு”

 “இப்படி மேக்கு வாசல் வீட்டுல வந்து உக்காந்துட்டியேம்மா! கிழக்கு வாசல் உள்ள வீடாப்பார்த்து புடிச்சு மாறிக்கோ” என்றார்.

 “இந்த வீடு கெடச்சதே பெரிய விசயம் மாமா. ஒன்னு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே மாமா! வாஸ்தும் இல்ல ஒன்னும் இல்ல எங்கியும். இனிமேலாச்சிம் எங்கீம் சொந்த பந்தத்துல போய் தொட்டி கட்டு, கலரு பூசு, பாத்ரூமு கட்டுன்னு ரீல் ஓட்டீட்டு இருக்காதீங்க மாமா. இன்னிக்கி எனக்கு குதிரை மேய்ச்சா குபேரன் ஆகலாமுன்னு சொல்ல வந்தீங்களா மாமா?” என்ற மகேசுவரி கண்களில் கண்ணீர் துளிகள் நின்றது.

 “என்னை மன்னிச்சுடும்மா” என்று கும்பிட்டு விட்டு வாஸ்து மாணிக்கம் கிளம்பினார்.

 இப்பிடியாப்பட்ட மாணிக்கம் அன்றே சங்கடப்பட்டு வாஸ்து சொல்வதை விட்டு விட்டாரா? என்று நீங்கள் கேட்கலாம். சொறி புடிச்சவன் கை சும்மா இருக்காது என்று பழமொழி ஒன்று உண்டு. அவர் சும்மா இருந்தாலும் அவர் வாய் சும்மா இருக்காதே. மறுமுறை அவரை எல்லக்காடு சாக்னா கடையில் பார்த்த போது, ஒரு பத்து ரூவாய் இருக்குமாப்பா? என்று என்னிடம் வந்தார். அதை நான் கொடுத்ததும் வெளியேறியவர் ஒரு கோட்டருடன் வந்தமர்ந்தார் அருகில். டேபிளில் யாரோ குடித்துவிட்டு வைத்துப் போன டம்ளரையே எடுத்து அதில் சரக்கை ஊற்றிக் குடித்தார். தண்ணீர் பாக்கெட் கூட வாங்கி உள்ளே மிக்சிங் ஊற்றவில்லை. என்னைக் கேட்காமலேயே என் தட்டில் இருந்த ஆரஞ்சு துண்டுகளை எடுத்து வாயில் போட்டு மென்றார். அவரிடம் நான் ரூம் ஒன்று போடும் திட்டத்தை மெதுவாகச் சொன்னேன். மறு நிமிடமே….

 “வடக்கு வாசல் வச்சிக்கோ..” என்று ஆரம்பித்தவர் ஏனோ தன் வாயை கையால் பொத்திக் கொண்டார்.

 “இல்ல தம்பி, இப்படியெல்லாம் அடுத்தவிங்க கிட்ட கேக்காதீங்க. பாக்கெட்டுல பத்துப் பைசா இல்லாதவங்கெல்லாம் பத்தாயிரம் ஐடியா சொல்லுவானுக” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார். மாணிக்கம் தன் அடையாளத்தை கூடிய சீக்கிரம் இழந்துவிடுவார் என்று எனக்குத் தோன்றியது அந்த சமயத்தில்.

- வா.மு.கோமு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It