*

காபி டபரா தொடப்படாமல் அப்படியே இருந்தது. அதிலிருந்த காபி ஆறிவிட்டது. சிவரஞ்சனியின் பார்வை டேபிளில் காபி டபரா பக்கத்தில் கிடந்த நீர்த்துளிகள் மீது ஸ்தம்பித்திருந்தது.

எதிரில் உட்கார்ந்திருந்த லாவண்யா தன் காபியை நிதானமாக உறிஞ்சிக் கொண்டிருந்தாள். சிவரஞ்சனியே பேசட்டும் என்று காத்திருந்தாள். இருவருக்கும் நடுவே ஓடிக்கொண்டிருந்த யோசனையின் விளிம்பை தொந்தரவு செய்யாத அமைதி அந்த சிறிய ரெஸ்டாரன்ட் முழுவதும் வியாபித்திருந்தது.

'ப்ச்..' என்ற சலிப்பு சத்தமொன்று சிவரஞ்சனியின் உதட்டிலிருந்து வெளிப்பட்டது.

'என்னப்பா.?'

'பொண்ணா பிறந்திருக்கக் கூடாதோ லாவண்யா..'

'என்னடி இது?'

'தாய்நாடு. தாய்மை. தாய்வழி சமூகம். இதெல்லாம் பொய்டி. பிளான் பண்ணி வரலாறு எழுதி நம்மளை ஏமாத்தி பாடம் நடத்தி வச்சிருக்காங்க.'

லாவண்யா தன்னுடைய காபி டம்ளரை மெல்ல வைத்தபடி சிவரஞ்சனியை ஏறிட்டுப் பார்த்தாள்.

'விரக்தியா பேசாத சிவா'

'முடியலை தெரியுமா. இட்ஸ் ஹாரிபில். ரொம்ப சமாளிக்க வேண்டியிருக்கு'

'புரியுதுடி. கெளரி இப்படி மாறிடுவாருன்னு என்னால நம்ப முடியலை. எவ்ளோ ஸ்வீட் பர்ஸன்னு நான் எவ்வளவு சந்தோஷப்பட்டிருக்கேன் தெரியுமா. உனக்கு ஒரு லைப் நல்லா அமைஞ்சிருக்குன்னு தான் இப்போ வரைக்கும் மனசு நம்ப சொல்லுது'

'அப்போ, நான் பொய் சொல்றேனா ?'

'சே.. சே.. என்னடி இது லூசு மாதிரி.? நீ என் பிரண்டுடி. என்னால டைஜஸ்ட் பண்ணிக்க முடியலை சிவா. மனசு புலம்பிக்கிட்டே இருக்கு. சரியா தூக்கம் வரலை. நைட் முழுக்க தவிச்சுக்கிட்டே கிடந்தேன். உன்னைப் பார்த்தப்புறம் தான் சின்னதா ஒரு நிம்மதி வந்துச்சு.'

'ஏன்.. ஏதாவது பண்ணிக்குவேன்னு நினைச்சுட்டியா ?'

'ஹேய்..! ரப்பீஷ் மாதிரி பேசி என்னை அழ வைக்காதடி'

'நான் நிறைய கண்ணீர் சிந்திட்டேன் லாவண்யா. நீ ஹோல்ட் பண்ணிக்கோ. தேவைப்படும்'

லாவண்யாவுக்கு கண்களில் கண்ணீர் கோர்க்கத் தொடங்கியது.

'இவ்ளோ நெகட்டிவா பேசணுமா?'

'பாசிட்டிவ்வா பேசிப் பேசி தான் ஏமாந்து போயிட்டேனோன்னு தோணுது‘

லாவண்யாவுக்கு என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. சிவரஞ்சனியும் கௌரிசங்கரும் அவ்வளவு அன்னியோன்னியம். கல்லூரி இறுதி ஆண்டுகளில் ஒன்றாகப் படித்துக்கொண்டிருக்கும்போது சிவரஞ்சனியின் காதல் தான் இவர்களுக்கு ஹாட் டாக். கெளரிசங்கர் அப்போது விளம்பரத்துறையில் இளம் இயக்குனர்.

அந்த முதல் அறிமுக நாள் லாவண்யாவுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இதே மாதிரி ஒரு ரெஸ்டாரண்ட்டில் வைத்துத்தான் சிவரஞ்சனி அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

'திஸ் இஸ் மை மேன்' என்றபோது அவளுடைய முகத்தில் பூத்த புன்னகையின் சிவந்த நிறம் இப்போதும் பசுமையாய் நெஞ்சில் தேங்கிக் கிடக்கிறது. கெளரிசங்கரை பார்த்தவுடன் வேறெந்த கமெண்ட்டும் நெகட்டிவாக மனத்துக்கு தோன்றவில்லை. நைஸ் லுக்கிங். ஹேண்ட்சம். மென்மையான அளவான பேச்சு. எது சொன்னாலும் ஒரு தலையசைப்பு. சின்னதாய் ஒரு சிரிப்பு. யோசனைகள் தளும்பும் கண்கள்.

வெளிப்பட்ட சொற்ப வார்த்தைகளும் பயங்கர ஷார்ப்.

சிவரஞ்சனிக்காக பூரித்துப் போனாள் லாவண்யா. சிவரஞ்சனியின் கல்லூரி படிப்பு முடிந்து அவள் வீட்டில் கல்யாணப் பேச்சு எடுக்கும்போதெல்லாம் கௌரிசங்கர் நல்ல நிலைக்கு வந்துவிட்டதால், காதல் விவகாரத்தை தைரியமாகப் பேசித் தெளிவுப் பண்ணிவிட அவளால் முடிந்தது. சிவரஞ்சனியின் அப்பா அவளுக்குக் கிட்டத்தட்ட நண்பன் தான். புரிந்துக்கொள்ளக் கூடிய அற்புதமான மனிதர்.

கௌரிசங்கரோடு ஒரு பர்சனல் சந்திப்பு ஏற்பாடாயிற்று. அப்போதும் சிவரஞ்சனியோடு லாவண்யா மட்டும் உடன் இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவருக்கும் அவனைப் பிடித்துப் போய், கௌரிசங்கர் வீட்டிலிருந்து முறையாகப் பெண் கேட்டு வந்து எல்லாமும் ஒரு சிறிய தடங்கல் கூட இல்லாமல், மற்ற நண்பர்கள் எல்லோரும் பொறாமைப்படும் அளவுக்கு மிகச் சிறப்பாக நடந்த கல்யாணம் அது.

கல்யாணம் முடிந்த கையோடு சிவரஞ்சனி பெங்களூர் போய்விட்டாள்.

கௌரிசங்கரின் குடும்பம் பெங்களூரில் இருக்கிறது. கல்யாணமான புதிதில் அடிக்கடி போனில் பேசுவாள். சந்தோஷமாக இருக்கிறாள் என்று நம்பிக்கொண்டிருந்தாள் லாவண்யா.

ஆறு மாதங்கள் ஓடிய வேகம் தெரியவில்லை. தலைத் தீபாவளிக்கு சென்னை வந்திருந்தபோது இருவரும் ஜோடியாக லாவண்யாவின் வீட்டுக்கு வாய் நிறைய சிரிப்போடும் ஏகப்பட்ட பரிசுப் பொருட்களோடும் வந்து, இங்கும் ஏகபோக விருந்து முடித்து, கலகலப்பாகக் கழிந்தது பொழுது.

கௌரிசங்கரை லாவண்யாவின் வீட்டில் அம்மா, அப்பா, தங்கை உட்பட எல்லோருக்கும் பிடித்துப் போயிற்று.

முதல் சந்திப்பில் அறிமுகமான கௌரிசங்கருக்கும், கல்யாணத்துக்குப் பிறகான கௌரிசங்கருக்கும் நிறைய வித்தியாசம் இருந்ததை அப்போது உணர்ந்திருந்தாள் லாவண்யா.

அத்தனை டைமிங் சென்ஸோடு மனம்விட்டுப் பேசிச் சிரிக்கும் மனிதனாக லாவண்யாவின் கண்ணுக்கு அவன் பட்டான். காதலோடு கூடிய கல்யாணம், நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் போல என்று எண்ணிக்கொண்டாள்.

அத்தருணம் சிவரஞ்சனியின் கையைத் தன் கையோடு கோர்த்துவைத்துக் கொண்டாள். அந்த கதகதப்பான நட்பு ஸ்பரிசத்தில் லாவண்யாவின் அண்மை சிவரஞ்சனிக்கும் இதமாய் இருந்தது. அவளைத் தனியே லாவண்யாவின் அறைக்கு அழைத்துப் போய், அந்தரங்க விஷயங்கள் உட்பட பரிமாறிக்கொண்டாள். சந்தோஷத்தில் கண்ணில் நீர் மல்க தன் தோழியைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள் லாவண்யா.

சென்னைக்கே வரப்போவதாக சொல்லியிருந்தாள். கௌரிசங்கரின் வேலைகள் சென்னையை மையம் கொண்டிருப்பதாகவும், தனி பிளாட் ஒன்றை புக் பண்ணியிருப்பதாகவும் சொல்லியிருந்தாள்.

சொன்னதைப் போலவே இரண்டு மாதங்களுக்கு முன்பு கௌரிசங்கரோடு தனியாக வந்தும் விட்டாள். கௌரிசங்கரின் அம்மா, அப்பா, தம்பி அங்கே பெங்களூரில் சொந்த வீட்டில் இருக்க, இது தனிக்குடித்தனம் தான்.

காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்ட ஒருத்திக்கு அது ஒரு வரம் என்று நினைத்திருந்தாள் லாவண்யா. பின்னே..! நினைத்துப் பார்ப்பதையும் மீறி அனுகூலமாய் நடப்பதெல்லாம் ஒரு வரமில்லையா. மனத்துக்குள் மிகச் சிறியதாய் ஒரு பொறாமைக் கூட லாவண்யாவுக்கு அப்போது எட்டிப் பார்த்தது. அதற்காக இந்த நிமிடம் வருந்தினாள். சிவரஞ்சனி மீது தனக்கு அப்படியொரு குட்டிப் பொறாமை வந்திருக்கக் கூடாதோ. தன் கண்ணே அவள் மீது பட்டுவிட்டதோ என்று நெஞ்சு பொங்கியது.

சொன்னபடியே தனி பிளாட்டுக்கு குடித்தனம் பண்ண சென்னை வந்துவிட்ட புதிதில் இரண்டு முறை போனில் பேசிய சிவரஞ்சனி, அதன் பிறகு பேசவேயில்லை. அவளுடைய நம்பர் எப்போதும் ரிங் போய்க் கொண்டேயிருந்தது. எடுக்கவில்லை.

சரி, அவள் நல்லபடியாக செட்டில் ஆகிவிட்டாள் என்ற நினைப்போடு, நேரம் கிடைக்கும்போது அவளே அழைக்கட்டும் என்று இவளும் இருந்துவிட்டாள்.

லாவண்யா தான் வேலைப் பார்க்கும் ஐ.டி கம்பெனியின் வேலை அழுத்தத்தால், கிடைக்கும் ஒற்றை ஞாயிற்றுக் கிழமையை வீட்டிலேயே கழிக்கப் பழகிக்கொண்டிருந்தாள். சிவரஞ்சனியைத் தேடிப் போகவேயில்லை.

நேற்று நள்ளிரவு, சிவரஞ்சனியிடமிருந்து வந்த போன் கால் இருவரையும் இன்று சந்திக்க வைத்திருக்கிறது.

'திடீர்ன்னு எப்படி லாவண்யா ஒரு மனுஷனால டோட்டலா மாற முடியும்?'

'நிறைய பேசிப் புரிஞ்சு.. எக்கச்சக்க லவ். அப்படித்தானே இது நடந்துச்சி? எங்க தான்டி தப்பு?'

'தெரியலை. யோசிச்சு யோசிச்சுப் பார்த்து, ரொம்பவே குழம்பிப் போயிருக்கிறேன். அந்த லவ் இப்போ இல்லை. வெறும் உடம்பா பார்க்கப்படறேனோன்னு தோணுது. பழகும்போது காதல் மயக்கத்துல சரியா புரிஞ்சிக்கலையோன்னு அல்லாடுறேன். நிறைய கட்டுப்பாடுகள் போடறார். என் உணர்வை ஷேர் பண்ணிக்க ஆள் இல்லை. கொஞ்சம் கொஞ்சமா நான் என்னோட சுதந்திரத்தை இழந்துக்கிட்டு வர்றேனோன்னு தோணுது. ரொம்பவே அழறேன். வேறென்ன செய்ய முடியும்ன்னு தெரியலை. காஸ்ட்லியான லைப் தான். ஆனா ஒரு ரிமோட் மாதிரியே இருக்கு எல்லாம். இப்போதைக்கு குழந்தை வேண்டாம்ன்னு ஒரு அடம் இருக்கு அவர்கிட்ட. தொழில் நிமித்தமா பல பெண்கள்கிட்ட பேசுறாரு. டவுட் படவும் முடியாது. எல்லாத்தையும் வெளிப்படையா என்கிட்டே பேசியே என்னைத் தயார் பண்ணிட்டாரோன்னு நினைக்கத் தோணுது. அவுட் ஆப் மை மைன்ட் லாவண்யா. குழந்தை விஷயத்துல ஏன் இவ்ளோ கறார் பண்ணனும்? எனக்கான திருமண பைண்டிங்கை நான் உருவாக்கிக்கனும்ல! அம்மா கிடந்து நச்சரிக்கிறாங்க. தெரியாத்தனமா அவர்கிட்ட அதையும் சொல்லித் தொலைச்சுட்டேன். பளிச்சுன்னு ஒரு பதில் வந்தது. இனி அம்மா வீட்டுக்கு போவுற ஐடியாவ விட்டுருன்னு. பக்குன்னு இருந்திச்சி. பெங்களூர்ல இருக்கும்போது கூட பரவாயில்லை. சென்னை வந்துட்டப்புறமும் போகக்கூடாதுன்னா எப்படி? உன்கிட்டக் கூட பேசக்கூடாதுன்னு லிமிட் பண்ணும்போது கம்ப்ளீட்லி அப்சட் ஆயிட்டேன் லாவண்யா. ஆர்கியூ பண்ண முடியலை. செஞ்சு வச்ச சாப்பாட்டை அவாய்ட் பண்ணிட்டு மனுஷன் கிளம்பிப் போயிட்டே இருக்காரு. பைத்தியம் பிடிக்குது எனக்கு.'

'பேசவே ரெடியா இல்லையா அவர்..?'

'இல்லையே. என்கிட்டே என்ன தப்புன்னே எனக்குத் தெரியலை. அதையாவது சொல்லலாமில்ல. ரொம்பவும் காம்ப்ளக்ஸா பீல் பண்ண வைக்கிறார். ரெண்டு அடி அடிச்சிட்டா கூட பரவாயில்லைன்னு நினைக்கத் தோணுது. அப்படி நினைச்சதை நினைச்சா இன்னும் கேவலமா இருக்கு'

'கெளரி உன்னை அடிச்சிருக்காரா சிவா.. ?'

'இதுவரை இல்லைடி.. அவரோட கோபமே அமைதியா தான் வெளிப்படுது. அவ்ளோ பெரிய பிளாட்ல, அத்தனைப் பொருளுக்கு நடுவுல நானும் ஒரு பொருள் போலவே ஆயிடுவேன். எதுவும் எதோடயும் பேசிடாதுல்ல.. அப்படி நேரத்துல மனசைக் கொஞ்சம் சமன் பண்ணிக்கலாம்னு நினைச்சா.. டிவி, பாட்டுன்னு எதையுமே கேட்க விடமாட்டார்.. அனுமதி கிடையாது..'

'ஏன்..?'

'ப்ளீஸ்.. இதையெல்லாம் கேட்டு மைண்டை டைவர்ட் பண்ணிக்காத. நடந்ததை யோசி.. அதான் நல்லது. இல்லைனா எனக்கும் டிஸ்டர்ப் ஆகிடும்ன்னு சொல்லி வாயை அடைச்சிடுவாரு. அதெல்லாம் நான் கிளம்பி வெளியே போனப்புறம் கேட்டுக்கோ. இப்போ வேணாம்பாரு. அவ்ளோ தான் பேச்சு. அதோட, ஷெல்ப்ல இருந்து தடியா ஒரு புக்கைக் கையில எடுத்துக்கிட்டு முதுகுக் காட்டி டேபிள் லைட்டைப் போட்டுக்கிட்டு உக்காந்துடுவாரு. குறைஞ்சது மூணு மணி நேரம் அந்த இடத்தை விட்டு நகர மாட்டாரு மனுஷன். எந்த போன் காலையும் எடுக்க மாட்டாரு. மொத்த ரூமும் வைப்ரைட்டர் மோடுக்கு வந்திட்ட மாதிரி இருக்கும். உறைஞ்சுப் போய் உட்கார்ந்திருப்பேன்'

லாவண்யாவுக்கு பேசுவதற்கு வார்த்தைகள் அகப்படவில்லை. நெருங்கிய தோழியின் சந்தோஷம் மொத்தமும் கண் முன்னாள் வடிந்துக் கொண்டிருப்பதை தாங்க முடியவில்லை அவளால். இதற்கு என்ன சொல்லிட முடியும். இதெல்லாம் இப்படித் தான் இருக்குமா? தனக்கும் வீட்டில் ஒரு வரன் அமைந்துவிட்டதே. பெண்ணுக்கு திருமணம் சிக்கல் தானா?

ஓர் ஆணுடனான வாழ்க்கை என்பதை அத்தனை சுலபத்தில் லகுவாக்கிக் கொள்ள முடியாத சூழலில் தான் உழன்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும்போதே ஒரு பயம் அடிவயற்றை மெல்ல கவ்விப் பிடிப்பதை உணரத் தொடங்கினாள்.

'நான் வேணா பேசிப் பார்க்கட்டுமா..?' – நம்பிக்கையே இல்லாமல் கேட்டாள் லாவண்யா.

'வாய்ப்பே இல்லை. உன்கிட்ட இருந்து ஒவ்வொருமுறை போன் வரும்போதும் அது என் கண் முன்னாடியே தான் இருக்கும். ரிங் போயிட்டே இருக்கும். எடுக்கக் கூடாதுங்கறது கட்டளை. கெளரி சைக்கோவா மாறிட்டாரான்னு கூட ஒரு முறை யோசிச்சேன். வீட்டுல டெஸ்க் டாப், லேப் டாப்ன்னு எல்லா மண்ணாங்கட்டியும் இருக்கு. ஆனா ஒரு நெட் கார்ட் கூட கிடையாது. கையோடு கொண்டு போயிடுவாரு. மக்கு மாதிரி வீடியோ கேம்லாம் கூட விளையாண்டு பார்த்தேன். ஒரு கட்டத்துல அந்தக் கேம்ஸ்ல கிறுக்கு மாதிரி வந்து போற பொம்மையெல்லாம் நான் தானோன்னு நினைக்க ஆரம்பிச்சு, கடுப்பாயிட்டேன். அத்தோட அதை விட்டுட்டேன். அதுவும் போச்சு. எனக்கு என்னத்தான் நடக்குதுன்னு எனக்கே புரிய மாட்டேங்குது லாவண்யா.'

சிவரஞ்சனி தலையைப் பிடித்துக்கொண்டாள். லாவண்யாவுக்கு துக்கம் போன்ற ஒன்று நெஞ்சை அடைத்துக் கொண்டது.

'அப்பாகிட்ட சொன்னியா?'

'இன்னும் இல்லை. தெரிஞ்சா உடைஞ்சிடுவார்.'

'அதும் சரி தான். ஆனா வீட்டுல யாருக்காவது ஒருத்தருக்கு தெரியப்படுத்தறது நல்லது சிவா. அந்த ஒருத்தர் நிச்சயமா அப்பா தான்.'

'அதெல்லாம் யோசிக்காம இல்லை. கௌரிய நானா விரும்பி செலெக்ட் பண்ணேன். இப்போ வரை எல்லோருக்கும் நல்ல அபிப்பிராயம் இருக்கு அவர் மேல. சொன்ன நிமிஷத்துல அது நொறுங்கும். அதுலருந்து என் மேல விழப்போற பரிதாபப் பார்வை, வந்து சேரக் காத்திட்டிருக்கிற ஆறுதல் வார்த்தை, அதையெல்லாம் நினைச்சாலே பூரான் மாதிரி உடம்பெல்லாம் ஊருது. அப்புறம் அதை என்னென்னைக்கும் சரி பண்ணவே முடியாம போயிடும்ன்னு பயப்படறேன். அதனால என் சாய்ஸ் ஆப் லைப்ல நான் தோத்து போயிடுவேனோன்னு ஒரு கில்டி இருக்கு. இல்ல, ஆல்ரெடி தோத்து போயிட்டேனோங்கற குழப்பமும் இருக்கு. என்ன பண்ணனும் இப்போன்னே ஒரு தெளிவுக்கு வரமுடியலை லாவண்யா. நல்லாத்தானே பார்த்துக்கிறேன் அவரை. இப்பவும் எனக்கு கெளரி மேல இருக்கிற லவ் துளிக்கூட குறையலையே லாவண்யா. இன்னும் மனம் அவரை முழுசா வெறுத்திடலையே. எங்க மிஸ் ஆகுது? ம்ம்..'

ரெஸ்டாரன்ட் பேரர் கையில் சிறிய குறிப்பு நோட்டோடு அருகில் வந்து பவ்யமாய் நின்றார். சிவரஞ்சனியின் முன்னே ஆறிப்போய் தொடாமலே இருந்த காபி டம்ளரை ஒரு கணம் பார்த்தார். லாவண்யாவின் முகத்தைப் பார்த்தார்.

'சூடா ஒரு காபி குடி சிவா. இன்னொன்னு ஆர்டர் பண்ணவா?'

'வேண்டாம் அதுவும் ஆறித்தான் போகும்.'

லாவண்யா அவர் பக்கம் திரும்பி..

'பில் கொண்டு வந்துடுங்க' – என்றபடி.. அவர் நகர்ந்ததும்..

'இதை சொல்லு.. இப்போ மட்டும் எப்படி வந்த..? எப்படி அலோவ் பண்ணினாரு?'

'அதிசயமா நேத்து சாயந்திரம் எங்க வீட்டுக்கே கொண்டு வந்து விட்டுட்டாரு'

ஆச்சரியமாகக் கண்கள் விரிய அவளை ஏறிட்டாள் லாவண்யா.

'அப்படிப் பார்க்காத. வாசலோடு விட்டுட்டுப் போகலை. உள்ள வந்து இருந்து எல்லார்கிட்டயும் சிரிச்சு.. பேசி.. நைட் டின்னர் சாப்பிட்டுத்தான் கிளம்பினார். ஒரு விளம்பரம் விஷயமா லொகேஷன் பார்க்க டெல்லி போயாச்சு. நானும் அப்பாவும் கார்ல கூடவே போய் ஏர்போர்ட்ல பிளைட் ஏத்தி விட்டுட்டு தான் வந்தோம். நம்ம மாப்பிள்ளை மாதிரி வருமான்னு அம்மாவுக்கு ஒரே பெருமிதம். வீடு அடங்கினதுக்கு அப்புறமா தான் உன்கூட ப்ரீயா ராத்திரி பேச முடிஞ்சுது.'

'எனக்குத் தலை சுத்துது சிவா.'

'நான் சீக்கிரம் மென்ட்டல் ஆயிடுவேன்னு தெரியுதுல்ல..? அப்பாக்கிட்ட சொன்னாலும் நம்புற மாதிரி இல்ல என் சிச்சுவேஷன். நல்லவேளை நீ நேத்து போன் எடுத்த. எங்கே கோவத்துல எடுக்காம விட்டுருவியோன்னு பயந்துட்டேன். தேங்க்ஸ்டி.'

சேலை முந்தானையால் சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

பில்லை மறைத்துவைத்த லெதர் அட்டையோடு, பேரர் வந்தார். எவ்வளவு என்று புரட்டிப் பார்த்துவிட்டு அதற்குரிய பணத்தை டிப்ஸ் சேர்த்து வைத்துக் கொடுத்தனுப்பினாள் லாவண்யா.

'எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிருச்சி சிவா'

சிவரஞ்சனி சட்டென்று கண்கள் மலர்ந்து, டேபிளுக்கு அந்தப் பக்கத்திலிருந்து எட்டி லாவண்யாவின் இரண்டு கைகளையும் தன்னுடைய கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டாள். சிவரஞ்சனியின் உதடுகள் மெல்லத் துடித்தது. வார்த்தைகள் வெளிப்பட மறுத்தன. லாவண்யாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

'என்னடி. இப்படிப் பார்த்தா என்ன அர்த்தம் ?'

சிவரஞ்சனியிடமிருந்து ஒரு சிறு புன்னகை மட்டுமே அரும்பியது.

'அதைச் சொல்லி உங்க ரெண்டு பேரையும் இன்வைட் பண்ணத்தான் நான் உனக்கு தொடர்ந்து போன் பண்ணினேன். தனியா கௌரிக்கும் பண்ணினேன் அவரும் எடுக்கலை. உனக்கு ஈமெயில் அனுப்பினேன். எதுக்குமே ரெஸ்பான்ஸ் இல்லை. உன் மேல அப்போ எனக்கு லேசா ஒரு கோபம் இருந்துச்சித்தான். ஆனா, நாள் ஆக ஆக, என்னவோ ஏதோன்னு பதட்டம் தான் கூடிப் போச்சி. இப்படி ஒரேயடியா ரெண்டு பேரும் என்னை அவாய்ட் பண்ண வேண்டிய அவசியம் என்னன்னு கண்ட கண்ட லாஜிக்கெல்லாம் யோசிச்சு ஒரு கட்டத்துல டயர்ட் ஆகிட்டேன். அப்பாவுக்கு போன் பண்ணிக் கேட்கவும் தயக்கம். உங்க ரெண்டு பேரால, உன் வீட்டுலயும் இன்னும் என் கல்யாண விஷயத்தை நான் சொல்லலை. அம்மா என்னைப் பயங்கரமா திட்டப் போறாங்க. அதையெல்லாம் எப்படி எதிர்க்கொள்றதுன்னு எப்பவோ யோசிச்சு முடிச்சுட்டேன். ஆனா.. நீ நேத்து பேசப் பேச.. என் கால் தரையில நிக்கலைடி சிவா. யாரோ எங்கயோ பாதாளத்துல இருந்து இழுக்கற மாதிரி இருந்திச்சி.‘

சிவரஞ்சனியின் பிடி லாவண்யாவின் கைகளில் மேலும் அழுத்தமாய் இறுகியது.

'அச்சச்சோ.. ரொம்ப ரொம்ப ஸாரிடி. உன் சிச்சுவேஷன் தெரியாம நான் பாட்டுக்கு எல்லாத்தையும் சொல்லி உன்னைக் கஷ்டப்படுத்திட்டேனோ.. ஓவரா குழப்பிட்டேனோ லாவண்யா..?'

'அதெல்லாம் இல்லை. முதல்ல இங்க இருந்து கிளம்புவோம். நேரா என்னோட வீட்டுக்கு வா. இப்போவே அப்பாவுக்கு போன் போட்டு சாயந்திரம் தான் வருவேன், லாவண்யா வீட்டுக்குப் போறேன்னு சொல்லிடு. வந்து எங்க வீட்டுல எங்க அம்மாவை முதல்ல சமாதானம் பண்ணு. மத்ததெல்லாம் போற வழியில பேசிக்கலாம். நான் உனக்கு சூடா ஒரு காபி போட்டுத்தரணும் போல இருக்கு.. வா.. கிளம்பு..'

தன் கைப்பையைப் பிரித்து அதிலிருந்து தன்னுடைய செல்போனை வெளியில் எடுத்தபடியே மறுபேச்சு பேசாமல் எழுந்தாள் சிவரஞ்சனி.

ஆனால் போகும் வழியில் இருவரும் ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை. பேசுவதற்கு எதுவும் அவசியப்படாத அந்த மௌனத்தை நகரத்தின் பேரிரைச்சல் விழுங்கிக் கொண்டிருந்தது.

சென்னை டிராபிக்கில் அடர்ந்து ஓடும் எண்ணற்ற வாகனங்களில் அந்த பிங்க் நிற ஸ்கூட்டி பெப்பில் இரண்டு இளம்பெண்களும், கடந்துப் போகும் பல கண்களுக்கு ஓர் அழகிய காட்சியாக மட்டுமே இருந்திருக்க முடியும்.

லாவண்யாவின் வீட்டுக் கேட்டைத் தாண்டி உள்ளோடிய சிறிய பாதையைக் கடந்து, வரிசைக்கட்டி பார்டர் அமைத்திருந்த பூந்தொட்டிகளை அணைத்தபடி சென்று, ஸ்கூட்டி நின்றது.

சிவரஞ்சனி ஸ்கூட்டியிலிருந்து இறங்கி..

தொட்டிச் செடிகளில் ஒன்றில் பரவலாய் முளைத்திருந்த பட்டன் ரோஸ் பூக்களில் நாலைந்தை ஆவலோடு பறித்துக் கொண்டாள்.

லாவண்யாவின் அப்பா வீட்டில் இல்லை. தங்கை ஷாலினி டிவியில் பாட்டுப் பார்த்துக் கொண்டிருந்தவள் சிவரஞ்சனியைப் பார்த்ததும் விலுக்கென்று சோபாவிலிருந்து துள்ளி எழுந்து ஓடி வந்தாள்.

'ஹை..! அக்கா..' – என்றபடி சிவரஞ்சனியைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

'நல்லா படிக்கிறியா நீ ?'

'ம்ம்.. ஏன்க்கா உங்க வழக்கமான பெர்பியூம் போடலை? நீங்க வாசனையாவே இல்லை இப்போ'

சிவரஞ்சனி அவளுடைய தலையிலிருந்த பச்சைநிறப் பட்டாம்பூச்சி ஹேர் கிளிப்பை அட்ஜஸ்ட் பண்ணிவிட்டபடியே ஒரு பட்டன் ரோஸை அதில் செருகிவிட்டு லேசாகச் சிரித்தாள்.

'அம்மா எங்கடி ?'

'மாடில துணி எடுக்கப் போயிருக்காங்கக்கா.. கூட்டிட்டு வரட்டுமா.. ?'

'இரு இரு.. நானே போறேன். இந்தா இந்தப் பூவையெல்லாம் பத்திரமா வை' – என்று ஷாலினியிடம் மிச்சப் பூக்களைத் தந்தபடியே லாவண்யாவைப் பார்த்தாள்.

'நீ போடி.. நான் காபி ரெடி பண்ணுறேன்' என்றாள் லாவண்யா.

'மாடிக்கு நானும் வர்றேன் சிவாக்கா.. மாமாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல. நீங்க மட்டும் தனியா வந்திருக்கீங்க..?'

'ஏய்..! நீ என்கூட கிச்சனுக்கு வா.. வெங்காயம் கட் பண்ணிக்கொடு பஜ்ஜி போடலாம். சிவா நீ டக்குன்னு கிளம்பு. அம்மாவை மாடியிலேயே பிடி'

லாவண்யாவை கீழ்ப்பார்வைப் பார்த்துக்கொண்டே ஷாலினி, அவளைப் பின்தொடர்ந்தாள்.

இருவரும் சேர்ந்து மொத்த பஜ்ஜியையும் சுட்டு முடித்து.. பாலை அடுப்பில் வைத்தபோது, அம்மாவும் சிவரஞ்சனியும் கீழிறங்கி வந்தார்கள். சிவரஞ்சனியின் கைகளில் வழிய வழிய கொடியிலிருந்து உருவி வந்த துணிகள் தொங்கியது. அம்மா கையில் கிளிப் டப்பா இருந்தது.

சிவரஞ்சனியின் கண்கள் சிவந்து போய், கன்னங்கள் மேலும் லேசாக உப்பியிருந்தது.

ஆனால் இருவரும் சிரித்துக் கொண்டே வந்தார்கள்.

ஷாலினி பக்கத்தில் பக்கத்தில் வந்து நின்றுக்கொண்டாள். சிவரஞ்சனியிடமிருந்து துணிகளை வாங்கிக்கொண்டாள். அவளுக்கு என்ன புரிந்தது என்பதை லாவண்யாவால் யோசிக்க முடிவதில்லை. காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறாள். சின்னச் சின்ன வித்தியாசங்கள் புரியாமலும் இருக்காது.

வெவ்வேறு வயது வித்தியாசங்கள் கொண்ட பெண்கள் சூழ்ந்த அந்தக்கணம் ஒரு புதிர் போல இருந்தது லாவண்யாவுக்கு.

'லாவண்யா.. நீ இப்படி வா.. நான் காபி போடுறேன்.. நீங்க பேசிட்டிருங்க.. அட..! பஜ்ஜியா..? உப்பு கரெக்டா சேர்த்தீங்களாடி.. ?' – என்றபடி ஒரு பஜ்ஜியைப் பிச்சு டெஸ்ட் பண்ணிப் பார்த்தாள் அம்மா.

அவள் முகத்தில் ஒரு திருப்தி இருந்தது.

'ஏய் ஷாலு.. அதை அப்புறம் மடிச்சிக்கலாம்.. பஜ்ஜியை தட்டுல வச்சு.. எடுத்துட்டுப் போ..'

'அப்பா வர லேட் ஆகுமா லாவண்யா..?'

'போன் பண்ணிட்டேன்டி.. பண்டிகை நேரம்ல.. கடையில கூட்டம் இருக்கும். ஆனா இன்னும் ஒன் ஹவர்ல வந்திருவாரு..'

ஷாலினி ஏதேதோ காலேஜ் கதைகள் சொல்லிக் கொண்டிருந்தாள். டிவியில் தொடர்ந்து பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது.

சிவரஞ்சனி அவள் சொல்வதையெல்லாம் ஆர்வமாய் கேட்பதைப் போலக் கேட்டுக்கொண்டிருந்தாள். லாவண்யா அடிக்கடி சிவரஞ்சனியின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்மா, கையில் காபி கோப்பைகளோடு வந்து சேர்ந்தாள்.

'லாவண்யா..! இன்விடேஷன் டிசைன்ஸ் உன் ரூம்ல தான இருக்கு..?'

'ஆமாம்மா..'

'சிவாவை கூட்டிட்டுப் போய் காட்டு.. காபியை எடுத்துக்கிட்டு போங்க.. ரெண்டு பேரும்'

'ஹை.. நானும்' என்று எழுந்த ஷாலினியை, அம்மா கையைப் பிடித்து இருத்தினாள்.

'இரு.. முந்திரிக்கொட்டை மாதிரி எதுக்கெடுத்தாலும் ஓடாத. அவங்க ஏதாவது பேசிட்டிருப்பாங்க. பேசிட்டு வரட்டும். வந்தப்புறம் ஒட்டிக்கோ. முதல்ல காபியை குடி.. குடிச்சிட்டு இதையெல்லாம் மடிச்சிரலாம். உங்க அப்பா வந்தா என்னைய திட்டுறதுக்கு..'

லாவண்யாவின் அறை, பிங்க் நிறத்தில் மிளிர்ந்தது. தன் இருப்பிடத்தை ஒரே மாதிரி மெயின்டைன் பண்ணத் தெரிந்தவள் லாவண்யா. அதை அடிக்கடி வியந்து பாராட்டுவாள் சிவரஞ்சனி. கல்லூரி நாட்களில் இருவருக்குமான தாய்மடி அந்த அறை. அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் உண்டு. அது தோழிகள் இருவருக்கும் மட்டுமேயான பிரத்யேக அந்தரங்கப் பொதுப் பெயர்கள்.

இப்போது இருக்கும் மனோநிலைக்கு பிங்க் நிறம் நிறைந்த இந்த அறை இன்னும் மனத்துக்கு நெருக்கமாய் இருந்தது அவளுக்கு.

இன்விடேஷன்ஸை எடுத்து அவளிடம் காட்டினாள். அவற்றைக் கையில் வாங்கியபடி கட்டிலில் உட்கார்ந்துக் கொண்ட சிவரஞ்சனியின் அருகில் தானும் உட்கார்ந்துக்கொண்ட லாவண்யா..

'அம்மாகிட்ட ரொம்ப நேரம் பேசினப் போல..'

'தாங்க முடியலடி. அவங்களைப் பார்த்ததும். தோள்ல சாஞ்சு அழுதுட்டேன்....'

லாவண்யா, சிவரஞ்சனியின் கையில் இருந்த தன் கல்யாண இன்விடேஷன் மாடல்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளே தொடரட்டும் என்று காத்திருந்தாள்.

'எல்லாத்தையும் ஓரளவு சொல்லிட்டேன்..'

'ஏன்டி..?'

'உன்கிட்ட சொன்னது மாதிரி டீடெயில்டா இல்லை. கெளரி மேல இருக்கிற இமேஜ் கெட்டுறாத மாதிரி தான் சொன்னேன். எனக்கது முக்கியம். ஆனா.. அம்மா டேலன்ட். டக்குன்னு விஷயத்தைப் பிடிச்சிட்டாங்க..'

லாவண்யாவுக்கு ஆவலாய் இருந்தது. அம்மா என்ன சொல்லி இருப்பாள்.

'அவங்க... தன்னோட சில பர்சனல்ஸ என்கிட்டே ஷேர் பண்ணிக்கிட்டாங்கடி.. மலைச்சுப் போயிட்டேன். நினைச்சே பார்க்கலை. டோட்டலா ஒன்னு தெரிஞ்சுக்கிட்டேன். வீடுங்கறது ரெண்டு பேர் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. ஆனா.. அதே நேரம், ஆரம்பம் அவ்ளோ ஈஸி இல்லைன்னு மட்டும் புரியுது..'

அதற்குமேல், அது என்னவாக இருக்கும் என்று லாவண்யாவுக்கு தெரிந்துக்கொள்ள வேண்டியிருக்கவில்லை.

கம்ப்ளீட் கம்ப்பேரிஸன் பொதுவா ஒத்துவராது. எல்லாமே வேற வேற. ஆனா.. ஒவ்வொன்னும் அடிப்படையில ஒன்னுதான் போல. லாவண்யாவுக்குள்ளும் எங்கோ ஒரு நதி ஊற்றுக்கண் திறந்து போல இருந்தது. ஆனாலும் பனி விலகினபாடில்லை.

'டிஸைன் நீ செலெக்ட் பண்ணிக் கொடுடி.. சிவா' - என்றாள் வாஞ்சையோடு.

'ஊஹும்.. உன் டிஸைனை நீயே செலெக்ட் பண்ணு.. லாவ்.. அது எப்பவுமே உனக்கு கரக்டா இருக்கும்..'

தன்னை அவள் செல்லமாக 'லாவ்' என்று அழைத்ததிலேயே சிவரஞ்சனி நார்மலுக்கு வந்துவிட்டாள் என்ற பூரிப்பு லாவண்யாவின் கண்களில் மின்னியது.

இருவரும் காபியை நிதானமாகப் பருகத் தொடங்கினார்கள்.

'சமாளிச்சிருவேன்டி... நம்பிக்கை இருக்கு அம்மாகிட்ட பேசினப் பிறகு. என்கிட்டே இருந்து பூர்த்தியாகாத ஏதோ ஒரு தேவை இன்னும் கௌரிக்கு வேண்டியிருக்கு. ஆர்கியூ பண்ணிக் கத்திக்கிட்டே இருந்திருக்கேன். எதையோ எனக்கு உணர்த்தத்தான் அவ்ளோ ரூடா அதையெல்லாம் செஞ்சிருக்காரோ. பெங்களூர்ல கொண்டுபோய் விட்டுடாம என் வீட்டுல விட்டுட்டு.. இருந்து சாப்பிட்டு நல்லாப் பேசி.. சிரிச்சு.. ம்ம்.. வேற மீனிங்ல ஓடுது எல்லாம் இப்போ. ப்ச்.. என் சைடு மட்டும் யோசிச்சிட்டேன் போல, ரொம்பவும் செல்பிஷா.. ம்ம்ம்.. ரிவர்ஸ் எபெக்ட் லாவ். ரொம்ப புலம்புறேன்ல..? பட், உண்மையில அம்மா கிரேட் டி.'

'காபி ஆறிடப்போவுது குடி..' – என்ற லாவண்யாவின் தோளில் ஒரு கைப் போட்டு தன் பக்கம் இழுத்து அணைத்துக்கொண்டாள் சிவரஞ்சனி.

'உண்மையிலே உன்னோட ரூம்ல இருக்கிற இந்த பிங்க் கலர்.. மனசை வருடுது லாவ்..'

'ம்ம்.. எனக்கு என்ன தோணுது தெரியுமா ?'

'என்ன ?'

'நான் போகப் போற இடத்துல, எனக்கு இதே பிங்க் கலர் கிடைக்காது. அதுக்காக நான் கொஞ்சம் வெயிட் பண்ண வேண்டி இருக்கும்..'

சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்து புருவம் உயர்த்தினாள் சிவரஞ்சனி.

அறை வாசலில் நிழல் ஆடியது. கவனம் கலைந்து இருவரும் திரும்பிப் பார்க்க.. ஷாலினி நின்றிருந்தாள்..

'அக்கா..! அப்பா வந்தாச்சு..'

இருவரும் சிரித்துக் கொண்டார்கள். அந்தச் சிரிப்பு பிங்க் நிறத்தில் இருந்தது.

******

- இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It