வெயிலில் பறக்கும்
பன்றிக் குட்டியைப் பார்த்தேன்
ஆச்சரியமாக இருந்தது.
அக்கா பையனுக்கு
இது எப்படி
தோன்றியதென்றே தெரியவில்லை‌‌.

சாயந்தரம் வீட்டுக்குச் சென்றபோது
அவன் தோட்டத்தில் பன்றியைக்
கொஞ்சிக் கொண்டிருந்தான்.
'கால் தான் வரையணும்
எப்டிடா ரெக்கை வரஞ்ச' என்றேன்.
கோயிலில் பசுவுக்கு
இறக்கை இருப்பதாகச் சொன்னான்.
அவன் மேலும் என்னிடம்
'பசு பறக்கும்போது
பன்றி பறக்கக்கூடாதா மாமா' என்றான்.
நான் சொன்னேன்
பெரிய ரெக்கை வரிடா மாப்ளயென்று.

சொல்லும்போதே
கையில் இருக்கும் பன்றிக் குட்டி
என்னைப் பார்த்து புன்னகைத்தது.

- துங்கன்