kahaka satcha book 450சமயச்சார்பற்ற (secular) பழமையான பாடல்கள் முதன்முதலில் தமிழ் மொழியில்தான் தோன்றியிருக்கின்றன. அகத்திணைப் பாடல்களும் புறத்திணைப் பாடல்களும் நால்வேதங்களைப் போலவோ அல்லது மகாபாரதம், இராமாயணம் போலவோ சமயச் சார்பானவை அல்ல.  அவை காதல் வாழ்வை, போர் வாழ்வைச் சித்திரிப்பவை. 

இல்லற வாழ்விற்கு ஏற்றம் தருபவை.  இயற்கையை அரவணைத்துக் கொண்டு வாழ்வியல் பாதையில் பயணித்த பழந்தமிழரின் வரலாற்றுப் புதையல்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த சங்கப் பாடல்களுக்கு அடுத்தாற்போல பிராகிருத மொழியில்தான் சமயச் சார்பற்ற இலக்கியங்கள் தோன்றி இருக்கின்றன.

பிராகிருத மொழியில் தோன்றிய காஹாசத்தசஈ, வஜ்ஜாலக்கம் போன்ற தொகுப்புகள் சமயச் சார்பற்ற இலக்கியங்களாகும்.  பழந்தமிழ்ப் பாடல்களைப் போலவே, முறையே ஹாலர், ஜெயவல்லபர் ஆகியோரால் மேற்கண்ட பிராகிருத நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  செவ்வியல் இலக்கியத்தின் ஒரு முக்கியமான பண்பு அவை ஒரு காலத்தில் தொகுக்கப்பட்டு (anthology making)  காலந்தோறும் ஓதப்பட்டும் போற்றப்பட்டும் வந்துள்ளன என்பதாகும்.  இவையும் செவ்வியல் இலக்கியங்கள் தான்.

காஹாசத்தசஈ, வஜ்ஜாலக்கம் ஆகிய இரு நூல்களுமே தமிழ் மொழியில் இராஜபாளையத்தைச் சார்ந்த தமிழறிஞர் மு.கு.ஜகந்நாதராஜா என்பவரால் ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து தற்போது காஹாசத்தசஈ 251 பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டு அன்னம் (2018) வெளியீடாக வெளிவந்துள்ளது. இப்பாடல்களைக் காந்திகிராம பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சுந்தர்காளியும் அவரோடு பரிமளம் சுந்தர் என்பவரும் இணைந்து மொழிபெயர்த்துத் தந்து உள்ளனர்.  நூல் வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது.  காஹாசத்தசஈ நூலுக்கு ஓர் அறிமுகம் இடம்பெற்று உள்ளது. 

கங்காதரமூர்த்தியின் (சிவன் கங்கையைத் தலையில் தாங்கி வைத்துள்ள நிலை) சிற்பமொன்று அட்டைப்படமாக அமைந்துள்ளது. சிவனைக் குறியீடாக வைத்துப் படைக்கப்பட்ட விரசக் காதல் பாடல்கள் வஜ்ஜாலக்கத்தில் இடம் பெற்றுள்ளன.  அவற்றை நினைத்துப் பார்க்கும்போது அட்டைப்படம் பொருத்தமாகவே காணப்படுகின்றது. இனி, மொழிபெயர்ப்பிலிருந்து ஒருசில பாடல்களைக் காணலாம்.

தேனீக்கள்-ரீங்காரம்

தேனீக்கள் அகத்திணைப் பாடல்களில் தலை வனுக்குக் குறியீடாக அமையும்.  தலைவனின் பல்வேறு காதற் செயற்பாடுகளைப் புலவர்கள் தேனீக் களைக் குறியீடாக வைத்துப் புனைந்துள்ளனர். காஹாசத்தசஈ பாடல்களிலும் தேனீக்களைக் குறியீடாக வைத்து புனையப்பெற்ற பாடல்கள் ஒருசில காணப்படுகின்றன.

வெள்ளிய தாமரையின் இதழ்களில்

கள்ளுண்ட தேனீக்கள் அசையாது அமர்ந்திருக்கின்றன

கதிரவனின் கதிர்களால் மறைக்கப்பட்ட

சிறு கரும்புள்ளிகளைப் போல                        (பக். 95)

தலைவன் தலைவியிடம் பெறும் புணர்ச்சி இன்பத்தை உணர்த்தும் பாடலாக இது அமைந் துள்ளது.  புணர்ச்சி இன்பம் பெற்ற தலைவன் அது கிடைக்காதபோதும் அதற்காக வந்து ஏமாந்து போவதை ஒரு பாடல் பின்வருமாறு உணர்த்துகிறது. 

காய்ந்த மல்லிகைச் செடி வெற்றுக் குச்சிகளாய் நிற்கிறது.

தேனீக்களோ முன்பு அதில் மொக்குவிட்ட

மலர்மணத்தின் நினைவில்

அந்தச் செடியையே வலம் வருகின்றன

தலைவியை வீட்டுக்குள்ளேயே அடைத்து விட்ட நிலையில் தலைவன் சென்று ஏமாந்துவிட வாய்ப்புள்ளதன்றோ?  இன்னொரு பாடலில், தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தமையை நாடுகின்ற இன்பம் தேனீக்களின் வழியாக உணர்த்தப்பட்டுள்ளது.

ஓ தேனீயே

ஒரு கணம் தாமரைகளை வலம் வருகிறாய்

மறுகணம் தொட்டாச்சுருங்கியைத் தொட்டு நீங்குகிறாய்

பிறகு மல்லிகையில் மொய்த்துக் கிடக்கிறாய்

ஒரு வேளை

ஊமத்தம் பூக்கள் மருந்தாகலாம்

உன் ஓடுகாலித்தன நோய்க்கு.

இவைபோன்ற பல பாடல்கள் காஹாசத்தசஈ மொழிபெயர்ப்பில் இடம் பெற்றுள்ளன.  இவை யாவும் நம்முடைய சங்கப் பாடல்களோடு மீண்டும் மீண்டும் ஒப்பிட்டுக் காணத்தக்கவை.  நம்முடைய சங்க இலக்கியங்களில் தேனீக்களின் வருணனை அகப்பாடல்களிலிருந்து புறப்பாடல்களுக்கும் சென்றுள்ளது. திருமுருகாற்றுப்படையில், அழகிய சிறகுகளையுடைய வண்டுகளின் பெருங்கூட்டம் தாமரைப் பூவில் இராப்பொழுதில் தூங்கி விடியற் காலத்தில் தேன் கமழும் நெய்தற் பூவிற் சென்று தேனையுண்டு சூரியன் உதித்த உடனே சுனையின்கண் உள்ள குவளைப் பூவில் சென்று ஒலிக்கும் (திருமுரு. 72-77) என்று வந்துள்ளது. இவ்வாறெல்லாம் ஒப்பிட்டுக் காண இம்மொழிபெயர்ப்பு நூல் நமக்கு உறுதுணையாக விளங்குகின்றது. ஆய்வுகளும் மேற்கொள்ளலாம்.

நெஞ்சொடு கிளத்தல்

நமது அகத்திணைப் பாடல்களில் நெஞ்சொடு கிளத்தல் என்ற வகையில் பாடல்கள் ஏராளம்.  காஹாசத்தசஈயில் ஒருசில பாடல்கள் நெஞ்சோடு கூறுவது போல அமைந்துள்ளன. ஒரு பாடல்,

ஓ என் இதயமே

பற்றி எரிவதெனில் எரி

வெந்து போவதெனில் வேகு

உடைந்து சிதறுவதெனில் உடை

நானோ அன்பில்லாத அவன் உறவைத் துறந்துவிட்டேன்

(பக். 28)

என்று வருகிறது.  துயரமும் ஆற்றாமையும் மேலிடு வதால் இத்தகைய கூற்றுகள் நிகழ்கின்றன.  இன்னொரு பாடல்,

ஓ என் பதறும் இதயமே

திடீரென என்ன செய்யத் தொடங்கிவிட்டாய்

அப்போது நம் காதலர் புறப்படுகையில்

அவர் நாட்களின் வரம்பை ஒத்துக் கொண்ட பிறகு

(பாடல் 23, பக். 29)

திருவள்ளுவர் நெஞ்சொடு கிளத்தல் என்ற ஓர் அதிகாரமே படைத்துள்ளார்.  நெஞ்சொடு கிளத்தலாவது ஆற்றாமை மீதூரத் தனக்கு ஓர் பற்றுக்கோடு காணாத தலைமகள் தன் நெஞ்சொடு செய்திறன் அறியாது சொல்லுதல் என்று விளக்குகிறார்.  ஒரு தலைவி தன் காதல் நோயைத் தீர்க்கும் மருந்தொன்று உனக்குத் தெரிந்தால் எனக்குச் சொல் என்று தன் நெஞ்சிடமே கேட்கிறாள்.  அது மட்டுமன்று; Ôநெஞ்சே நீ அவரிடம் சென்றுவிட்டாய்.  இந்த என் கண்களையும் கொண்டு சென்றுவிடு.  அவை என்னைத் தின்கின்றன -  அவரைக் காணும் ஆசையில்Õ என்றும் புலம்புகிறாள். இவ்வாறு தமிழ் இலக்கியப் பாடல்களோடு ஓராற்றல் ஒப்பிட்டுக் காணத்தக்கப் பாடல்களைக் காஹாசத்தசஈ மொழிபெயர்ப்பில் காணமுடிகின்றது.

கற்பனை நயம்

ஒப்பிடுதல் ஒருபுறமிருக்க, பிராகிருதக் கவிஞர் களின் கற்பனைத் திறனையும் படைப்பு உத்தி களையும் ஒருவாறு அறிந்துகொள்ள இந்த மொழி பெயர்ப்பு நூல் மிகவும் பயன்படும்.  ஒரு பாடலில் காஹா பெண்ணின் முலைகளோடு ஒப்பிடப்படு கின்றது.  காஹா என்பது ஆசிரியப்பா போல ஒரு பாடல் வகை.

ஒரு பெண்ணின் முலைகளுக்கு மயங்காதார் யார்?

அவை

ஒரு கவிதையைப் போல

கைக்கொள்வதற்கு இனியவை

கனமானவை

திரட்சியானவை

அணிகளால் அழகூட்டப்பட்டவை

இந்தப் பாடல் சிலேடையில் அமைந்துள்ளது.  மொழிபெயர்ப்பில் சிலேடையை ஓரளவு நயம்படப் புரிந்து கொள்ளவும் முடிகிறது.  கவிதையில் பொருள் திரண்டிருப்பதைப் (compressed) போலவே பெண்ணின் மார்பகங்களும் திரண்டுள்ளன என்ற கவிஞரின் கற்பனை பாராட்டத்தக்கது.  நமது இலக்கியங்களில் இறைச்சிப் பொருளும், உள்ளுறை உவமமும் இருப்பது போலவே காஹாசத்தசஈ பாடல்களில் தொனிப்பொருள் பொதிந்துள்ளது.  தொனிப் பொருளை உணர்ந்தால்தான் காஹாவை இரசிக்க முடியும் என்று கூறுவார்கள்.  ஒரு காஹா

இது என் மாமியாரின் படுக்கை

இது என்னுடையது

இவை வேலையாட்களினுடையவை

பயணியே

இரவில் கண் தெரியாமல்

என் மீதில் தவறி விழுந்துவிடாதே     (பக். 87)

என்றுள்ளது. இக்காஹாவில் தலைவி தன் இருப் பிடத்தைத் தெரிவிப்பதோடு தன் புணர்ச்சி வேட்கையையும் தெரிவித்து விடுகிறாள்.  எச்சரிக் கையாக வருமாறு மறைமுகமாகக் கூறுகிறாள்.  இதே கருத்தில் அமைந்த இன்னொரு பாடல்

பயணியே

மீண்டுமொரு முறை உன் மனைவியைக்

காணவேண்டுமெனில்

வேறு பாதையில் போ

ஏனெனில் இந்த நாசமாய்ப்போன ஊரில்

விரக்தியின் உச்சத்தில்

வலையை விரித்துக் காத்திருக்கிறாள்

பண்ணையாரின் மகள்

இங்கேயும் பயணியின் புணர்ச்சியை விரும்பி பண்ணையாரின் மகள் Ôவேறு பாதையில் சென்று விடாதே; ஊர் மோசமானது; எச்சரிக்கையாய் வர வேண்டும்; முன்பு ஒருமுறை வந்ததைப் போலவே மீண்டுமொருமுறை வரவேண்டும்; உனக்காகக் காத்திருக்கிறேன்’ என்றெல்லாம் தொனிப்பொருள் தோன்ற பாடலின் பொருளை விரித்துக் காணலாம்.  பழங்கால இந்தியாவில் சமயச் சார்பற்ற காதல் பாடல்கள் இவ்வாறு விரசமாகவும் அமைந்துள்ளன.  தொனிப்பொருள் இருப்பதால் கவிதை மெருகடை கின்றது.

மொழிபெயர்ப்பு தற்காலத் தமிழ் வழக்கில் அமைந்திருப்பதாலே நமக்குப் பழைய பாடல்களில் கிடைக்கும் இன்பம் மொழிபெயர்ப்பில் குறைந்து விடுகின்றது.  சிலேடையாக வரும் பாடல்களை இரு வேறு பொருள்களையும் வெளிப்படையாக மொழி பெயர்த்துக் கொடுக்க வேண்டும்.  ஏற்கெனவே ஆங்கிலத்தில் மார்தா ஆன் செல்பி என்ற அறிஞரும், ஜார்ஜ் ஹார்ட் அவர்களும் தமிழ்ப் பாடல்களையும் காஹாசத்தசஈ பாடல்களையும் ஒப்பிட்டு நூல்கள் எழுதியுள்ளனர். அவை தமிழறிஞர்களை எந்த அளவிற்குச் சென்று சேர்ந்திருக்கும் என்று தெரியவில்லை. இதனால் இந்த மொழிபெயர்ப்பு மிகவும் வரவேற்கத் தக்கது.

காஹா சத்தசஈ
மொழியாக்கம்: சுந்தர் காளி, பரிமளம் சுந்தர்
வெளியீடு: அன்னம் - அகரம் பதிப்பகம்
விலை : ` 100/-

Pin It