கீற்றில் தேட...

காற்றில் பறந்து வந்த
கற்பலகையொன்று
என்னிடம் இருக்கின்றது.
அது இதுவரை கண்டெடுத்த
அகழ்வாராய்ச்சி
பொருட்களைக் காட்டிலும்
பல ஒளியாண்டுகள்
பழமையானதென்ற உறுதிமொழியும்
அதில் இருக்கின்றது.

குழந்தையற்ற பெண்
அதில் எழுதிய
பரிகாரத்தை செய்ததால்
பிள்ளைகள் பெற்ற சந்தோசம்
நடந்திருக்கின்றது.

நலிந்து போன பணக்காரர்
அதைப் படித்துவிட்டு செய்ததில்
நகரம் போற்றும் பணக்காரராக
அது ஆக்கிவிட்டது.

தீராத வியாதியுடையவர்
பார்த்துவிட்டு செய்ததில்
நானே திடுக்கிடும்படியாக வியாதிகள்
அவருக்கு மறைந்து போனது.

அரைவேக்காட்டு அரசியல்வாதியை
அழைத்து வந்து செய்த சோதனைதான்
ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக
அவனை அன்றே
அமைச்சராக உயர்த்திவிட்டது.

குறத்தியைக் கெஞ்சி
கூட்டிவந்து
படித்துக் காட்டி
செய்ய வைத்ததால்
அவள் உங்கள் கனவுக்கன்னி நடிகையான கதை
அவள் மறுத்தாலும்
என்னிடம் காட்சிப்பதிவாக
ஆவணமிருக்கிறது.

சொல்லக் கூடாத
சூட்சும இரகசியம்
எதுவும் அதில் எழுதியில்லை என்றாலும்
நீங்கள் ஏற்க மாட்டீர்களென்பது
எனக்குத் தெரிந்தாலும்
சொல்லத்தான் வேண்டியதாக உள்ளது.

பசி தீர்க்கும் ஆகார அரிசியை
அந்த நாளில் அடுத்தவருக்கு
வாங்கிக் கொடுத்து
அரிசி திருதி கொண்டாடென
கிருதா யுகத்தின்
முதல் பதிவென
எழுதி இருக்கின்றது.

ஒரு நாள் செய்தியாக
அரசிடம் கொடுத்து
ஆவணமாக்காமல்
அதைத் திருநாள்
திருவிழாவாகக் கொண்டாட
எங்களுக்கு
சில மெய்யன்பர்களின்
உதவி தேவையாக இருக்கின்றது.

காற்றில் வந்த
கல் பலகையும்
கடவுள் நம்பிக்கையற்ற நானும்
அட்சய திருதியை
பரப்பிய
அந்த சோதிட சிகாமணிகள்,
ஆச்சார்ய சிரோன்மணிகள்,
அனைத்தும் அறிந்த
அவதார புருஷர்கள்
பார்த்துப் படித்துவிட்டாவது
மீய்ந்திருக்கும் விவசாயிகள்
மாய்ந்து போவதற்கு முன்
மக்களிடம் இந்த
அரிசி திருதியை
அனுஷ்டிக்கச் சொல்லிவிடுங்களென்று
காத்திருந்து
காத்திருந்து
காலம்தான்
கரைந்து போகின்றது.

- ரவி அல்லது