அங்கிருந்து நீயும்
இங்கிருந்து நானும்
தட்டி விளையாடும்
குட்டிப் பந்து இந்த நிலா

கன்னம் கிள்ளி
வாய்க்குள் போட்டு
காது கடித்து முத்தமிட்டு
கைகள் கோர்த்து
கால்கள் வேர்த்து
கனவு துள்ளும் உன் தூக்கத்தில்
புரளும் விடியல் நான்

மழை வர காத்திருக்கும்
மழை வந்தால் பூத்திருக்கும்
என் பூந்தொட்டி செடியிலெல்லாம்
பூத்திருப்பதும் காத்திருப்பதும்
உன் புன்னகை
வண்ணங்கள் தானே

கூழாங்கற்களின்
குளிர்கால வரங்களை
ஓய்வின்றி காட்டும்
கண்ணாடி ஆற்றில் தானே
துள்ளி விளையாடுகிறது
நம் காதல்

சத்தமாய் மௌனிக்கும்
நீயும் நானும் தான்
நம் மலை உச்சி ரகசியங்கள்
பிறகு பள்ளத்தாக்கு
ஜோடி புறாக்கள்

கூடிக் களிக்க தவிக்கும்
தலைவனும் தலைவியுமாக
ரகசிய ராகம் கூடும்
அகநானூற்றியொன்று
நாம் என்கிறேன்

ஆம் என்கிறது
கன்னம் சிணுங்க
நீ படித்துக் கொண்டிருக்கும்
தூரத்து முத்தங்கள்

- கவிஜி

Pin It