என் மூளை மடிப்பிலெல்லாம்
ஜவ்வு மிட்டாய் பிசு பிசுப்போடு
உன் அரைக்கால் பாவாடை சட்டை

*****

lady 345கடற்கரை சாலை கோயில் வரிசை
பால்கனி தனிமை
காலப் பதிவுகளை என்ன செய்ய.....

*****

விக்கல் வருகிறது
நீ நினைப்பதாகக் கூறும் அம்மாவிடம்
எப்படி கூறுவது மறக்கிறாள் என்று!

*****

ஒத்திகைக்கு வந்த என் காகத்துக்கும்
சோறில்லை என்கிறது
உன் வீட்டு திதி

*****

கனவைத் திருப்பி
தந்துவிட்டாய்
வண்ணங்களை என்ன செய்வாய்....?

*****

படக்கென்று எட்டிக் குதித்து
வானவில் உடைக்கிறாய்
துண்டு துண்டாய் வளையல் வில்கள்....

*****

அத்தனையையும் மறந்துவிட்டு
அது நிகழ்ந்தது என்கிறாய்
ஆனாலும் இத்தனை ஞாபகம் கூடாது

*****

கடந்து விட்டேன் என
சொல்வதைக் கடந்துமிருக்கிறது
நீ கொன்று விட்டு சென்றவைகள்

*****

உன் துரித மறதிக்கு அப்பாற்பட்டிருக்கிறது
உன் வானம் நிறைந்த
என் பறவைக்கு கூட்டம்

- கவிஜி