அவன் எப்படியிருப்பான்
மடிந்த வரலாற்றுப் பக்கம்
எப்படி தெரிந்துக் கொண்டாய்
அவன் எப்போதும் நிர்வாணமாய் இருந்தான்
அவன் உடல் ஒலித்ததா
ஆம், நடுக்கடல்
என்ன
நூற்றாண்டு துயில்
உண்மையாகவா
ஆமாம், எனக்குள்ளே, என் கர்ப்பப்பை வாயில்
அவனை சுவைத்தாயா
துயரத்தின் உவர்ப்பு
எப்படி
என் நாக்கின் ரேகைகளை காணவில்லை
சரியாகச் சொல்
நான் தோற்றுப் போனேன்
பின் ஏன்
சுய அழிவு
அவனிடம் ஏதாவது பேசினாயா
இல்லை பேசவில்லை, எனக்குப் பசி
இப்போது எப்படி உணர்கிறாய்
ஒரு அம்பு போல
அவனை எப்படி கண்டுபிடித்தாய்
ஏற்கெனவே கனவில் வந்தவன்
என்ன நினைவு
கடல் புறா
ஏன் அழுகிறாய்
என்னால் மறக்க முடியவில்லை
ஏன் அழுகிறாய்
குஞ்சு முடமாக்கப் பட்டிருந்தது

***

என் முலைகளைப்
பிரித்து வைத்தவளைத்
தேடி கொண்டிருக்கிறேன்
நீ தானா அவள்
உன் இரண்டு கைகளுக்கும்
வேலை வேண்டுமென்றா செய்தாய்
இல்லை வாய் கொள்ளவில்லையென்றா
இரு குன்றுகளுக்கிடையே
தூளி கட்டி விளையாடுவது
உன் சிறுவயது கனவு
என் பிள்ளை பால் குடிப்பது கண்டு
பொறுக்காமல் தானே பாகம் பிரித்தாய்?
உன் பிள்ளைக்கு அறிவில்லை,
அது பால் அல்ல, தேன்
என்று வேறு சொல்கிறாய்
வாகை, சித்திரக்கனி, ஊமத்தை,
தாழம்பூ, தாமரை, அல்லி, கத்திரி
என்று தினம் ஒரு பெயரிட்டு
அழைத்து மயக்குகிறாய்
விரட்டவும் முடியவில்லை
உன் நாக்கின் வெப்பத்திற்கு
என் காம்புகள் கருவாச்சி தளிர்கள்
போல துளிர்க்கின்றன.
பல் தடங்கள் இணைத்து நீ வரையும்
சித்திரங்கள் பருவந்தோறும்
உயிர் பெறுகின்றன
அவற்றை ஒவ்வொரு நாளும்
ஒரு அகழ்வாராய்ச்சியாளன் வந்து
வாங்கி செல்கிறான்.
நீ கிழித்து வைத்திருக்கும்
ரவிக்கைகளை என்னடி செய்வது?

 ***

நீ அகன்ற
அந்தப் பொழுது
என் நிர்வாணத்தை உடைந்த கண்ணாடிக்கு வீசினேன்
காற்றின் அறைகளில் அமிலத்தை கொட்டினேன்
இருத்தலின் துண்டுகளை ஒன்று விடாமல் பொறுக்கித் தின்றேன்
கனவுகளை விற்கும் கலைஞர்களை நாடாப் புழுக்களைப் போல்
வல்லாங்கச் சொல்லி நிந்தித்தேன்
கவிதைகளின் புதிர்களை உருவி நாய்களுக்கு போட்டேன்

***

என் எலும்புகளில் வன்மம் ஏறுகிறது
நீல கரப்பான்
கடலறைந்து பிளக்கும் காகமென் காமம்
பெருமழையில் உன் விந்து நுரைப்பைத் தேடி நீந்துகிறேன்
அகப்படு

- லீனா மணிமேகலை 

Pin It