பறந்து வந்ததில்
வித விதமான பெயர்களில்
பறவைகள்
எனக்கு பறவைகள் என்பதே போதுமானது

அழகூட்டும் வான்வெளிக்கு
பறவைகள் ஓவியங்கள்
ஒன்றிரண்டு பசியோடு இருக்கலாம்
ஓவியனின் வயிறோடு

சில பல குச்சிகளை
பறவைகள் அலகுகளில் காண்கிறேன்
கடல் துளிகளால் ஆன
பாதி சிலுவைகள் அவை

மிக கவனமாக அதன்
சிறகுகளிலிருந்து
இறங்கி கொள்ளும் வானம்
கண்களுக்குப் புலப்படாதது

முன்பொரு காலத்தில்
பூமியிலிருந்து மேலெழும்பிய
தொடுவான சிறகுகள்தான்
பறவைகள்

பறவைகளின் மொழிகளில்
பாடல்கள் கூட உண்டு
தூரம் நெருங்கிட துயரம் விடுபட
வானம் பார்த்து கேட்டிருக்கிறேன்

நின்ற பறவை நீண்ட பறவை
வெயில் பறவை வேனிற் பறவை
வந்த பறவை வசந்த பறவை
வானமெங்கும் சிறகுகளின் எதிர் நீச்சல்

ஏனோ கடைசி பறவை மட்டும்
திரும்பிப் பார்த்து விட்டுதான் பறக்கிறது
அதற்கு முன் இறகொன்றை
உதிர்ப்பதற்கும் அது மறப்பதில்லை

- கவிஜி

Pin It