என் குரல்வளையை குறிவைத்து
ஒருவன் அறுத்துக் கொண்டிருந்தான்

அதே வேளையில்
குருதியில்
பொங்கிப் பிரவகிக்கும்
வண்ணங்கள் குறித்து
ஒருவன் பாடல்
புனைந்து கொண்டிருந்தான்

என் மூச்சுக்குழல்
அறுபட்டு வீழ
துடித்துக் கொண்டிருந்தேன்

அதே வேளையில்
காற்றில் பறக்கும்
இறகுகள் பற்றி
ஒருவன் கவிதை பாடிக் கொண்டிருந்தான்

என் கால்கள்
உயிரின் வாதையில்
உழன்று கொண்டிருந்தன

அதே வேளையில்
வான்வெளியில் வட்டமிடும்
உயிர்ப்பறவைகள் பற்றிய
உவமையில் ஒருவன்
லயித்து இருந்தான்

என் ஜீவன்
சிறகடித்த பின்பு
விழிகள் நிலைகுத்தி
நின்றிருந்தேன்

அதே வேளையில்
ஜென் மனநிலைக் குறித்து
ஒருவன் தத்துவ விளக்கம்
மேற்கொண்டிருந்தான்

தறிகெட்டு ஓடும் வாழ்வில்
தவறுகள் நிகழ்வதற்கு
தப்பான மனிதர்கள் மட்டுமே
காரணங்கள் இல்லை

கண்முன்னே நிகழும்
கொடுமைகளைக்
காணாமல் கடந்து செல்லும்
ஒவ்வொரு மனிதனும்

ஆயிரம் ஆயிரம்
கொலைகள் புரிந்த
அநீதியாளனுக்கு
துணைப் போகின்றான்

சர்வாதிகாரத்தின்
தேர்ச்சக்கரத்தில்
சத்தியத்தின் பிள்ளைகளை
சாகடிக்க சம்மதிக்கிறான்

ஜனநாயகத்தின் மாளிகையைத்
தகர்க்க மௌனத்தை விடவும்
மாபெரும் ஆயுதங்கள் இல்லை

கடப்பாரையால்
இடிபடவில்லை
நம்பிக்கைகள்

கனத்த மௌனத்தால்
உடைக்கப்படுகின்றன
மசூதிகளைப் போலவே
மனிதமும்

- அமீர் அப்பாஸ்