கண்ணீரின் கோலங்கள்
ஈழ கார்த்திகையின் வாசலில்,
ஏற்றிய தீபங்கள்.. நினைவுகள்
வந்து எரியுது எம் நெஞ்சினில்

தமிழுக்கென்று தேசம் காண
ஊர்மடியில் உருவெடுத்தீர்,
உரிமை வெல்லவே உணர்வுக்கு
உயிர்கொடுத்தீர்

நோக்கத்தை பற்றவைத்து,
தேகத்தை எரிமலையில் நனைத்து,
எதிர் கோட்டைக்குள் உடல் வெடிக்கும்,
அண்ணன் நாளை நாடாள்வான் என்றே
சிரித்தபடி சிதறி தியாகத்தின் உயிர்பறக்கும்

இருந்த பிள்ளையை இழந்த வலி
அந்த மாவீரன் நினைவை துணையாய் அணைத்தபடி
வாழும் தாய்மைகள் இங்கு பெருமையில்,
புனித முத்துக்களை சுமந்து மடி
வாரிசு வாழவைக்குமென்றே அன்று படர்ந்த கொடி
இன்றும் கிடக்கின்றதே தெருவோரங்களில்

ஆண்ட பரம்பரையை
அடிமைப்படுத்துவதில்
நம்மவரும் துணை,
அங்கு வேண்டிய பதவிக்கு
எம்மவர் எமக்கு செய்யும் வினை,
மாண்ட மறவரை மண்ணில்
தொழுதல் பிழை,
எம்மை கொன்று குவித்தோர்க்கு
தெருவெங்கிலும் சிலை

கொலையாளி சுற்றி
திரிகின்றான் அரசவையில்,
எம் கொள்கையாளி நீதியற்று
மறைகின்றான் கல்லறையில்

கடல் வற்றித்தான் போய்விடுமோ,
எம் களக்காவியங்கள்
மக்கித்தான்போய்விடுமோ,

உங்கள் உயரிய தியாக உயிரை உரமிட்டதால்
வென்றடைவோம் தனி அரசு,
எரிகின்ற தீப வெளிச்சத்தில் ஒன்றிணைவோம்
நாளை விடியட்டும் ஈழத்தின் கிழக்கு

உரிமை வெல்லும் நாளில்- தூய்மையே
உங்கள் உயிர்முகம் பேரின்ப தேரில் வரும்,
கனவுகள் நிறைவேறும் காலம்வரை
புனித கல்லறைகள் இங்கு சுவாசிக்கும்

- சஜிதரன்

Pin It