கணித சமன்பாடுகளோடு
காயும் வெயில்
பெய்யும் மழை
வீசும் காற்றுக்கிடையில்
தவிக்கும் செடிகளின்
வேர்களுக்கிடையில்
ஏற்படுத்தும்
பௌதீக களைப்பால்
அழுதுகொண்டிருக்கும்
வேர்களின்
துன்பங்களை அறியாமல்
உதடுகளும் இதயங்களும்
சொல் களிம்பை தடவி
காற்றில் பறக்கவிட்டு
நீடித்து எழுத முயல்கிறது
சில பொருந்தாத முடிவுகளை.

           ***

என்னைச்சுற்றியிருக்கும்
இயற்கையின்
அணைப்புக்காக
இதயத்தைப் பிழிந்து
அன்பைத் திரட்டி
சலனமின்றி
மழையாய் பெய்கிறேன்
எப்பொழுதும்
ஒரு பறவையின் வழிபாடு
என்னைப் பரவசம் அடையச்செய்யும்
மழைக்கு
மேகம் ஆடையாய்
இருப்பதை விலக்கி
என்னை நனைத்துவிடும் வெட்கத்தில்
என் நிர்வாண அனலின்
அரூப கணத்தில்
சிறுதுளி மழையொன்று
பிழிந்த என் இதயத்திற்கு
உயிர் தந்துபோகும்
வெட்கத்தில்
ஒளிந்துகொண்டிருப்பேன்
எப்பொழுதும்
ஆரவாரத்தைத் தந்துவிட்டு
சலனத்தோடும்
சலனமற்று தீண்டிச் செல்கிறது இயற்கை.

- ப.தனஞ்ஜெயன்

Pin It