தான் உருவாக்கிய
பொய்யான பிம்பத்தை
தானே உண்மையென்று
ஒருவன் நம்பத் தொடங்குகிறபோது
அவன் மனிதக் கடவுளாக
மாறிவிடுகின்றான்.

சோற்றுக்கு
வழியில்லாத மக்கள்
சுவரிலிருந்து வீழும்
பல்லியைப் போல
தன் கால்களில்
வீழ்ந்து கிடப்பதை
கடவுளாக மாறிய பின்பு
கண்டு ரசிக்கிறான்

தங்களைத் தாங்களே
கடவுளாக நம்புகிறவர்கள்
கழிப்பறை செல்லும்போது
மிகவும் களைப்படைகிறார்கள்

சிறுநீர் கழிக்கச் 
செல்லும் போது
இன்னும்
சிறுமைப்படுகிறார்கள்.

தன்னை வணங்க
மறுப்பவனை
சாத்தானின் சவலைப் பிள்ளைகளாக
கருதிக் கொள்கிறார்கள்.

தனக்குப் பின்னால்
சுழலும் ஒளிவட்டம்
மின்சாரத் தடையால்
நின்று போகும்போது
மிகவும் குழப்பமடைகிறார்கள்.

தனக்கு நேரும் முதுமையை
வண்ணங்கள் பூசி
தடயமின்றி அழிக்கப் பார்க்கிறார்கள்.

வழிபாட்டு ஆலயங்களுக்குச் செல்ல நேர்கையில்
இன்னொரு கடவுள் இணையாக இருப்பதை
நம்ப மறுக்கிறார்கள்.

வெற்றி
விலகிச் செல்லும் போதும்
நோய்வாய்ப்படும் போதும்
சக மனிதர்களை
சந்திக்க மறுக்கிறார்கள்.

தன் தனித்துவம் எங்கே
தகர்க்கப்பட்டு விடுமோ
என்கிற அச்சத்தில்
தன்னைத் தாண்டி
இன்னொரு திறமைசாலி
இவ்வுலகில் இருக்கக்கூடும் என்பதை
முற்றிலும் நிராகரிக்கிறார்கள்

திடீரென்று ஒருநாள் மனிதக் கடவுளுக்கு
மரணம் நேர்ந்து விடும்போது
அவரைப் பின்பற்றியவர்கள்
வேறு கடவுளை
தேடியலைய
அவகாசம் இன்றி
நாத்திகர்களாகவே மாறிவிடுகிறார்கள்

- அமீர் அப்பாஸ்

Pin It