“டேய் மண்டூ! காந்தி காந்தீன்னு அடிச்சிண்டிருக்கியே! அவர் பேச்சைக் கேட்டு 4 தடவை ஜெயிலுக்குப் போய் உன் படிப்பையும் பாழாக் கீண்டியே! உன் காந்தி கொல்லப்பட்ட போது வால் நட்சத்திரம் விழுந்துதாடா?”
“என்னங்க சார், என்னை மண்டூங்கறீங்க? ரமண ரிஷி செத்தபோது வால் நட்சத்திரம் விழுந்ததுக்காகத் தானே இப்படிச் சொல்றீங்க?”
“ஆமாண்டா, ஆமாம்! சும்மாவா விழுந்தது? தென் கிழக்குத் திசையை நோக்கியாக்கும் போச்சு! சர்க்கார் தலைமைக் காரியதரிசியே சொல்லியிருக்கிறாரே! ‘மெயில்’ பேப்பரைப் படிச்சியோ?”
”போங்க சார்! சும்மா புளுகாதீங்க சார்!
நான் தான் விழுந்ததைப் பார்த்துக்கிட்டிருந்தேனே! தென் மேற்கிலிருந்து புறப்பட்டு வடகிழக்குத் திசையை நோக்கீல்ல போச்சு? ஆமா! அதனாலே அவர் ரொம்ப பெரியவர் ஆயிட்டாரோ? மனுஷர்களுக்குச் சேவை செய்வதிலே மகாத்மா கால்தூசி கூடப் பொறமாட்டாரே, உங்கள் ரமண ரிஷி! 10-15 மாசமா உடம்பிலே வீக்கங் கண்டுதானே செத்தார்? அதிலென்ன பெருமை? தினம் எத்தனையோ அநாமதேயக் கிழடுகள் இந்த மாதிரிச் சாகுதே! எங்கள் மகாத்மா இப்படிச் சாகவில்லையே! நெஞ்சில் குண்டு பாய்ந்து, தன் கொள்கைக்காக இரத்தைத்தையல்லவா சிந்தினார்? மானிட சிற்பிக்குள்ளே மகாத்மா ஒரு தனி முத்து சார்! முத்து! இந்த மாதிரிச் சாவு எந்தத் தலைவனுக்குச் சார் கிடைக்கும்?”
“டேய்! அதிகப் பிரசங்கி! னோக்கு ஒண்ணுந் தெரியாதுடா! பகவான் ரமணரிஷி சாகல்லேடா! அது தெரியுமோ? ஜீவன் முத்தரான பகவான் விதேஹ முத்தராகிவிட்டார்! அவர் சடலம் வீழ்ந்ததேயொழிய சான்னித்தியம் விழவில்லையடா! தனிப்பெருந் ஜோதி மறைந்து விட்டதடா!”
அப்படீங்களா? அந்த ஜோதி சுரண்டிவைத்த சொத்துக்களெல்லாம்?”
“டேய் மகாபாபி மகாபாபி? சுரண்டியதல்லடா பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதடா! அதெல்லாம் அப்படியே இருக்குடா! கோ சம்ரட்சணை, வேதப் பிராமனாள் சாம்ரட்சணை, தம்பி நிரஞ்சனானந்த ஸ்வாமி குடும்ப சம்ரட்சணை - ஆகிய சத்காரியங்களுக்காக ‘உயில்’ எழுதி வைத்திருக்கிறாரடா!”
“உயிலா? ஜோதியாங்க எழுதுச்சு? அடாடா என்ன ஞானோதயம்! எவ்வளவு பற்றற்ற பரந்த மனம்- ஞான யோகியென்றால் இவரல்லவோ ஞானயோகி! என் தலைவர் மகாத்மா, மனைவி மக்கள் இருந்தும் காலணாக கூடச் சேர்த்து வைக்கவில்லை! உங்கள் பகவான் பிரம்மசாரியாகவே வாழ்ந்தும், பல லட்சம் சேர்த்து வைத்து “உயிலும்” எழுதிவிட்டார்! அடாடா!”
“டேய் குறும்புக்காரா! போதும் உன் கிண்டல்! மூடு, உன் வாயை! நாக்கு அழுகிப்போகும்! ஜாக்கிரதை! பெரியவாளை இப்படிச் சொன்னியோ, அந்நிய காலத்தின் உன் உடம்பில் புற்று வைத்துத்தான் புழுப் புழுத்து மரணாவஸ்தைப்பட்டுச் சாகப் போகிறாய்!”
“அப்படிங்களா? அப்படியானால் நான் சாகும் போதும் வால் நட்சத்திரம் விழுங்களா? என்னவோ போங்க! ஊரிலே மழையில்லாட்டிப் போனாலும் உங்க காட்டில்தான் மழை! பனகால் ராஜா இறந்ததற்குத் தலையங்கம் எழுதாத மவுண்ட்ரோடு மகாஷ்ணுகளெல்லாம் ரமண ரிஷிக்காகத் தலையங்கம் எழுதுகிறதென்றால், முட்டாள்கள் எண்ணிக்கை எவ்வளவு பெருகி விட்டது என்பதுதானே தெரிகிறது!”
(இந்தச் சமயத்தில் சுமார் 15 வயதுள்ள சிறுவன் ஓடி வந்தான்.)
“அப்பா! அப்பா! நான் படிப்பை நிறுத்திடப் போறேன்! போதும் இந்தப் படிப்பு! திடீரென்று எனக்கு ஒரு மாதிரி ஜோதி தோணித்து! திருவண்ணாமலை தீபம் மாதிரித் தெரிஞ்சுது! நான் அங்கே போகப் போறேன்! இந்த உடலம் அநித்தியம் அப்பா! உலகமும் அநித்தியமப்பா!”
“டேய்! டேய்!! முட்டாள்! என்னடா சொன்னே? உடலம் அநித்தியமா? ஓரணாவுக்குக் கவுரிபாஷாணம் வாங்கித் தின்னுட்டாவது சாகேண்டா! சோம்பேறிப்பயல்! ஜோதி தோணித்தாம், ஜோதி!”
இந்த மாதிரி அர்ச்சனை செய்தார், தந்தையார் - வரப்போகும் ரமணரிஷி மீது! இது நீதியா. நீங்களே சொல்லுங்கள்!
- குத்தூசி குருசாமி (18-4-50)