கோவைக்கு அருகே உள்ள ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை எதிர்த்து ஏராளமான குரல்கள் கேட்கின்றன. சில மக்கள் மன்றங்களிலும் சில நீதிமன்றங்களிலும் எழுப்பப்பட்டுள்ளன. பல்வேறு கட்சிகள், அமைப்புகள் அந்த மையத்தை எதிர்த்து, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துகின்றன. ஆனாலும் என்ன..... இந்தியாவின் பிரதமர் அந்த மையத்திற்கு முன்பு வந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவர் சிவன் ராத்திரி கொண்டாட இன்று வருகிறார். பிறகு தவறு செய்வதற்கு அவர்களுக்கு என்ன தடை இருக்க முடியும்?

அந்த மையத்திற்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளில் முதன்மையானது, யானைகளின் வலசைப் பாதையை மறித்து, அரசிடம் முன் அனுமதியும் பெறாமல், கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பதுதான்! தங்கள் பாதை மறிக்கப்பட்டு விட்டதால், யானைகள் வேறு திசைகளில் சென்று மனிதர்களைத் தாக்குகின்றன. இதனால் மனிதர்கள் மட்டுமில்லாமல், யானைகளும் உயிரிழப்புக்கு உள்ளாகின்றன.

அடுத்ததாக, சிவன் ராத்திரி என்கிற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் களியாட்டங்களில், காடுகளில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் கலக்கத்திற்கு உள்ளாகின்றன. இவை போன்ற குற்றச்சாட்டுகளை ஈஷா மையம் துளியும் மதிப்பதில்லை.

இவற்றைத் தாண்டி ஜக்கி வாசுதேவ் மீது ஒரு கொலை வழக்கும் பதிவாகியுள்ளது. அவருடைய மனைவியை அவர் கொன்று விட்டார் என்று அவர் மனைவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

எல்லாவற்றையும் மறைப்பதற்கும், திசை திருப்புவதற்கும் ஜக்கி வாசுதேவ் பல வேலைகளைச் செய்து வருகிறார். காவிரியைக் காப்பாற்றுவோம் என்று ஓர் இயக்கம் தொடங்குகிறார். காவிரியின் குரல் என்று அதற்குப் பெயர் சூட்டுகிறார். காவிரியின் ஆற்றங்கரைகளில் மரம் நடுதல்தான் அந்தத் திட்டம். எங்கேனும் ஆறுகளின் ஓரத்தில் மரங்களை நட்டு, ஆற்றைக் காப்பாற்றி விட முடியுமா? இந்தத் திட்டத்தின் பெயரால் அவர் பலரிடமும் வாங்கி இருக்கிற பணத்தின் கணக்கு மிகக் கூடுதல் என்றும் கூறுகின்றனர்!

இப்போது மண்ணைக் காப்போம் என்று இன்னொரு உலகப் பயணம் நடத்தி இருக்கிறார். சொந்த மண்ணைச் சிதைத்து விட்டு உலக நாடுகளின் மண்ணை எல்லாம் காப்பேன் என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!

இவற்றையெல்லாம் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஓசை, பூவுலகின் நண்பர்கள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் போராடி வருகின்றன. சில வழக்குகள் நீதிமன்றத்திலும் இருக்கின்றன.

ஆனால் இவை குறித்தெல்லாம் எந்தக் கவலையும் இன்றி அங்கு ஆதி சிவன் சிலை திறக்கப்பட்ட போது அந்த விழாவிற்கு, இந்தியாவின் பிரதமரே நேரில் வருகிறார். இப்போது அங்கு நடைபெற இருக்கும் சிவன் ராத்திரிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள, இந்தியக் குடியரசு தலைவர் வருகிறார்.

நிலைமை இப்படி இருக்குமானால், பிறகு அந்த மையத்தின் மீது எப்படி நியாயமான ஒரு விசாரணை நடைபெற முடியும்?

இன்றைய விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்வது, ஜக்கி வாசுதேவுக்குப் பெருமை சேர்க்கலாம். ஆனால் அது இந்தியாவையும் இந்திய மக்களையும் அவமதிக்கும் செயலாகவே இருக்கும்!

- சுப.வீரபாண்டியன்

Pin It