வெள்ளி வாகனம் செய்தவற்குப் பதிலாக, மடாதிபதி பிள்ளைப்பேறு ஆஸ்பத்திரி கட்டினார் என்ற செய்தியை 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏன் நாம் கேட்க முடியவில்லை?
திருவிளையாடற் புராண உரை வெளியீட்டுக்குப் பதிலாக, ஆதினம், திருவள்ளுவர் உரைவளம், வெளியிட்டார் என்று அப்போது கேள்விப் பட்டதுண்டா?
ஆண்டவனைக் காப்பாற்றும் பொறுப்பேற்ற சைவத் தலைவர், அதோடுகூட அநாதை விடுதி ஒன்றையும் ஏற்படுத்தி யிருக்கிறார் என்று, அன்று நாம் கேட்டதுண்டா?
-இல்லை. அப்போது ஈரோட்டுப் பாதை செப்பனிடப் படவில்லை. ஆதலால் மதத் தலைவர்கள், மதப் புதரிலும், கடவுள் நாட்டிலும் கண்ணை மூடியபடியே அலைந்து திரிந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இப்போது கண் திறந்து பார்க்கின்றனர்! புதிய பாதையும் தெரிகிறது. துணிந்து நடக்கின்றனர்! ஆனாலும் அவ்வப்போது பழைய நினைவும் வருகிறபடியால் திடீரென்று 18 கையுடைய துர்க்காதேவியைத் தேடி மீண்டும் மதக்காட்டுக்குள் நுழைந்து விடுகின்றனர்!
தருமபுரம் ஆதீனம் அநாதை விடுதியொன்றைத் திறந்து வைத்திருக்கிறாராம்! போகட்டும், மகேசுவரனுக்கிடையே மனிதப் பிறவிகளைப் பற்றியும் சிறிது நினைவு வந்ததே!
“இவ்வாசிரமங்கள் நடமாடுங் கோயிலான ஆன்மாக்களுக்கு உகந்த உபகாரமாய் அமைத்து, படமாடுங் கோயில் பரமர்க் கொன்றாகு மென நம்புகிறேன்.”
-இது மேற்படி ஆதீன கர்த்தர் வாக்கு!
நம்ப முடியவில்லையல்லவா? ஆமாம்! அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்கிறார்களே! அதற்கு ஓர் எடுத்துக்காட்டு! மதத் தலைவர் கூட மக்கள் தேவை எது என்பதைக் கவனிக்கத் தொடங்கி விட்டார்! அது மட்டுமா? இதில் இன்னொரு சங்கதியும் தொக்கி யிருக்கிறதே!
“சைவ மெய்யன்பர்காள்! மயூர நாத ஸ்வாமிக்கோ, தாயுமானார்க்கோ மருத்துவத் திறமை கிடையாது. ஆதலால் மாயூரத்தில் மருத்துவமனையைத் திறந்தேன்! வைத்திய நிபுணர் வைத்தீஸ்வரனுக்கு அநாதைகளைக் காப்பாற்றும் சக்தி கிடையாது. ஆதலால் அவர் ஊரில் அநாதை விடுதியைத் திறந்திருக்கிறேன். மூன்றாண்டுச் சிறுவனுக்கு ஞானப்பால் தந்து தமிழ்க் கவிதைகளைப் பொழியும்படி இனி உமையொருபாகன் செய்வான் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது. ஆதலால் தமிழ்க் கல்லூரி நடத்தி வருகிறேன். இவைகளையெல்லாம் பொறுத்தமட்டில் நான் ஒரு நாஸ்திகனே! ஆனால் திருநீற்றையும் சைவ மதப் பிரசாரப் பெருநிதியையும் பொறுத்தமட்டில் நான் ஒரு ஆஸ்தீகன்! ஆதலால், சைவ மெய்யன்பர்காள்! நீங்கள் உங்களையே நம்புங்கள்! ஆண்டவன் எதையும் செய்வானென்று நம்பியிருந்து ஏமாறாதீர்கள். “கடவுளை நம்பு; ஆனால் உன் துப்பாக்கியைத் தயாராக வைத்திரு!” - என்று தம் போர்வீரர்களுக்கு அன்று ஒருவன் அறிவுரை புகட்டினானே, அதைப் போலவே நானும் உங்களுக்குச் சொல்கிறேன்,”- என்று கூறாமல் கூறுகிறார், தருமபுரம் ஆதீனம்!
இதெல்லாம் போதாது! “காலன் (முடிவு) வருமுன்னே கண் பஞ்சடையு முன்னே,” இன்னும் இருநூறு அநாதை விடுதிகள் கிளம்ப வேண்டும், ஆதீனத்தின் முயற்சியினால் (பணத்தால்)! முக்கண்ணன் பெயரிலாவது ஜில்லாவுக்கு ஒரு பெரிய கண் ஆஸ்பத்திரி திறக்கப்பட வேண்டும், ஆதீனத்தின் முயற்சியினால் (பணத்தால்! தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரியாத தமிழ்ப் பிறவியே கிடையாது என்ற முடிவைப் பார்த்துவிட்டுத் தான் மறைய வேண்டும், ஆதீனம்! அதற்கான செல்வத்தையும் அவர் கையில் கொடுத்திருக்கின்றார், அவர் நம்பியிருக்கின்ற அம்பலவாணர்!
“நடமாடுங் கோவில்கள்” மீது ஆதினத்துக்குப் புது நம்பிக்கை பிறந்திருப்பதனால் இதைக் கூறுகிறேன்!
அடுத்த அநாதை விடுதி எந்த ஊரில்? எத்தனை நாட்களில்?
வரிப்பணம் பிடுங்கும் சர்க்கார் வெட்கப்படும் மாதிரியில் நடக்க வேண்டும்; மளமளவென்று நடக்க வேண்டும்!
- குத்தூசி குருசாமி (9-2-1953)
நன்றி: வாலாசா வல்லவன்