தேவதை என்பதைத் தாண்டி
தேவதையை வேறு எப்படித்தான்
அழைப்பது?
கொரிய சாயலை உன்
குளிர் மௌனம் கூட்டுகிறது
குந்தவை ஞாபகம்
ஏனோ கனா காணும் கண்கள்
என் நெஞ்சில்
பிறை நெற்றிக்கு சற்று
குறுக்கு வெட்டுக் கவிதை
நீள் வரப்பென கூந்தல் முடியும்
எனைக் கூடும் பிடியும்
என் எல்லா ரகசியங்களையும்
மச்சமாக்கி வைத்திருக்கிறாய்
என் எல்லா நட்சத்திரங்களையும்
மூக்குத்தியாய் குத்தியிருக்கிறாய்
முன்பின் அறியாத காதலோடு
நானும் உன் புகைப்படம் நுழைகிறேன்
அனுமதி
நான் தான் உன் ஆண்மதி
பேரன்பின் மொழிக்கு
உன் குரல் செதுக்கலாம்
செங்காட்டு செம்பருத்தியே
நின்னையே ரதியென்று
நம் பாரதியும் நினைக்கலாம்
காதோடு கம்மல் ஆட
கனவோடு கவிதை ஆட
காற்றே பூங்காற்றே என என்னோடு
உன் ஊர்க் காற்றும் ஆடுதடி
மஞ்சள் நிறத்தொரு கவிதை
உன் முலாம் பூசித்தான் கிடைக்கிறது
நான் மலை கடந்து கடல் தாண்டிய தூதன்
வந்திருக்கிறேன்
சிறைப் பிடித்தாலும் சரி
திரை விலக்கினாலும் சரி
நரை கூடும் முன் வளர் பிறையாகு
என் இளம்புவனமே....!
- கவிஜி