அன்புள்ள நியந்தாவுக்கு, காதலால் கசிந்துருகி காதலால் பெரும் சோகத்தின் மடியில் நின்று கொண்டு நான் எழுதும் உன் கடிதம் இது.

"நான் எழுதுகிறேன். நானா எழுதுகிறேன்....!"

lonely loverநாணல்கள் கொண்ட கரையோரம் நீ நட்டுக் கொண்டிருக்கும் ரகசியங்களுக்கு மழை வேண்டி செய்யும் தவங்கள் எனது. நீ சொல்லும் ஒவ்வொரு லவ் யூ வுக்கும் நான் வண்ணம் சேர்க்கும் ஐ ஆகவே இருக்கிறேன். கடிதங்கள் நிறைந்திருந்த நம் காலத்தைத்தான் நான் இப்போதும் மீட்டிக் கொண்டிருக்கிறேன். பியானோவின் விசும்பல்களைக் கொண்டிருக்கும் உன் கடிதங்களை நான் எல்லா பக்கமிருந்தும் வாசிக்கிறேன். வாசிக்க வாசிக்க சுவாசிப்பின் அனிச்சைக்கும் எழுத்துக் கூட்டும் கடிதங்களை உன்னால் மட்டுமே எழுத முடியும் என நம்புகிறேன்..... அதில் தான் எழுதுவதும் படிப்பதும் இருக்கிறது.

"சாகும் போது கடைசியா என்னை பார்க்கணும்னு சொல்ற. நான் வாழும் போது எப்போதுமே உன்னைத் தான் பார்க்கணும்னு சொல்றேன்...."

மாற்றி மாற்றி நாம் சொல்லி கொள்ளும் எல்லாமே நம்மைத்தான் என்று எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். எல்லாமே நமக்கு தெரிந்து விடுவது தான் சோகமும் கூட. கண்களில் மட்டுமல்ல.... காட்சிகளிலும் உனக்கான காதல் தான் என்னிடம். என் கை அசைவுகளில்... சிதறும் வெளித் துகள்களை உற்று நோக்கு. அரூபத் தூசுகளில் கூட உன் சித்திரம் இருக்கும். நாம் சந்திக்கையில் எல்லாம் சிரிப்போம். பிரிகையில் எல்லாம் சிற்பத்தின் வாழ்வோடு இருக்கும் சிறு சிறு பாவனைகள் மட்டுமே. முடிவில்லா ஓட்ட பந்தயத்தில் மாறி மாறி ஓடுவது, பிடித்தும் இருக்கிறது. ஓடுவதில் தான், பிடித்தமும் இருக்கிறது. முடிந்து விடாத சாலைக்குத் தான் தாங்கொணா பாரம்.

பல சமயங்களில் கண் சிமிட்டா பார்வையோடு தான் முகம் ஏந்தி இருக்கிறேன். எந்த வார்த்தைகளும் எந்த வாக்கியங்களும் நம்மில் முற்றுப் பெறுவதில்லை. முற்றுப்புள்ளிகள் இல்லாத பத்திகள் பக்கம் பக்கமாய் இருப்பதை கடிதத்துள் எப்படி அடைக்க. இன்னும் ஒரு புள்ளியில் காத்திருக்கும் தொடுவானத்தை ஆளுக்கொரு கை பிடித்து அழைத்து செல்வதில் தான் தூரத்து ஞாபகங்களை கோலமிட முடியும். பார்த்து பார்த்து வைக்கும் உன் பாத சுவடுகளில் தாளமிடு முடியும்.

"மரண அவஸ்தை நம் உறவு எனும் போது மரணத்துக்கும் அவஸ்தை நமக்கு உறவில்லை என்பதும்...."

காதலுக்கு துரோகமும் இல்லை.... வஞ்சனையும் இல்லை. அதற்கு தெரிந்ததெல்லாம் காதலிப்பது மட்டும் தான். காதல் என்பதில் எல்லாமே இருக்கிறது. இருந்து விட்டு போகட்டும் என்பதில் தான் காதலும் இருக்கிறது. ஆதலினால் காதலி என்பதன் பொருள்.... காதலினால் தான் ஆதலும் இருக்கிறது என்பது. காதல் தனியுடைமை இல்லை எனும் போது பொதுவுடமைக்குள் வந்து விடுகிறது காதலும். உடமையற்று நேசிக்கையில் நீ நான் அவன் இவளாக மாறி விடுகிறோம். பொதுத் தன்மையில் புள்ளியிட்டுக் கொண்டே நகரும் காதலுக்கு கண்ணில்லாமல் இருப்பது தான் அழகு. தள்ளி இருந்து நேசிப்பது உனக்கு பிடித்திருக்கிறது. நேசித்துக் கொண்டே தள்ளி இருக்க எனக்குப் பிடித்திருக்கிறது.

"நம் அமர காவியத்தில் நானும் நீயே என்பது தான் காவிய டச். நீயும் நானே என்பது தான் காவியத்திலேயே டச்....."

முத்தமிட தெரியாதவர்கள் போல நாம் இருந்ததெல்லாம் முத்தமிட தெரியும் என்பதால் தானே. ஒரு மலை உச்சி பாறைக்கும் நீர் வார்ப்பவள் நீ. நான் ஒரு மலை உச்சியில் பாறையாகவே நீர் வார்ப்பவன். இருந்தும் இரு மலை சேர்க்கும் ஒரு பறவைக்கு நம்மை தெரியும். அந்த பறவைக்கு காதல் என்ற பெயர் தான் என்று நமக்கும் தெரியும். தெரியாமலே இருப்பதாக தெரிந்து கொண்டும் இருப்பது தான் தெரிந்த விளைவின் தெரியாத நுட்பத்தனம். நுட்பங்களில் கடிதம் எழுதிக் கொள்ளும் காதல் வாய்த்திருக்கிறது நமக்கு.

"எழுது. காதலி. நுட்பத்தில் முத்தமும் இடு. நூதனத்தில் யுத்தமும் நிகழ்த்து...."

ஒரே ஒரு தரம் இறுக்க்க்கமா கட்டிக்கோ என்ற போது தான் ஓஷோ கண்கள் பூத்திருக்க வேண்டும் எனக்கு. முப்பொழுதும் கற்பனைகள் கொண்ட தொப்பிக்காரன் ஒருவனை எங்கேயோ விட்டு விட்டேன். அதன் படி தான் அது நடக்கும் என்பது அதற்கும் பொருந்தும் எனும் போது இதழ் சேர்ந்த முத்த சித்திரங்களை யாரோ நம்மை சுற்றி வரைகிறார்கள். வெகு தூரம் பயணிக்க வேண்டும் என சொல்லும் உன்னில் எப்போதுமே குட்டி குட்டியாய் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறேன் நான். வளைவுகள் நிறைந்தவள் நீ. வாகன அழுத்தம் எனக்கு. ஜன்னலோர இருக்கைக்குள் சதுரமாய் ஒரு வானம் கேக்காகி துண்டு துண்டாய் வீசி எறிந்த நீ தான் தூரத்தில் பெயர் அற்ற பறவையாகவும் பறக்கிறாய். பறப்பதாகவும் பார்க்கிறாய்.

"மறு ஜென்மம் வாழ்ந்திடும் வித்தை எனக்குத் தெரியும்.. உற்றுப் பார்க்க வேண்டும் உன்னை... அவ்வளவு தான்...."

எப்போதும் குறுஞ்சிரிப்பு எட்டிப்பார்க்கும் என் உதடு பிடிக்கும் என்பாய். உதடுகளின் வழியே விடுதலை அடையும் சிரிப்புக்கு உன் மொழி பூச வேண்டும். பிடிக்கும் என்ற உன்னை எட்டிப் பார்க்க இன்னொரு முறை சிரிக்கத் தோன்றுகிறது. உதடுகளோடு வரி செய்யும் புன்னகையை நீயே வாரி வழங்குகிறாய். உன் முதல் என்ட்ரிக்கு வசந்தம் இருக்கிறது. உன் கடைசி என்ட்ரிக்கு சந்தம் இருக்கிறது. நம்மில் நாம் பலமாக இருக்கிறோம். உன்னில் நான் கிடைப்பதும் என்னில் நீ கிடைப்பதும் கிளிஷேவாக இருந்தாலும்.... கிள்ளி பார்த்துக் கொள்ளும் ரூபம் தான்.

"கிளி பறந்த பிறகு கூண்டுக்குள் அடைபட்டுக் கொள்கிறான் கிளிக்காரன்...."

நமக்கு பொருந்தும் காதல் கம்பிகளில் அரூபமாய் கிளி ஒன்று இருக்கிறது. அதற்கு பாதி நிறம் உனது. மீதி நிறம் எனது. உன் கொய்யா மரத்தில் எத்தனை காய்களாய் நான் தொங்குவது. உன் சொல்லாடல் இடைவெளிகளில் கடிதம் நிரப்பும் சுவாசம் என்னிடமிருக்கிறது. மியூட்சுவல் டிப்ரஸ்சன் நம்மோடு சேர்ந்து......மாறி மாறி கன்னம் காட்டும் நம் கடவுளுக்கும் இருக்கிறது. மையத்தின் குவிதலை உன் போல மறைப்பார் யார். மைவிழியின் நிறத்தில் நீ பாதுகாத்து வைத்த என்னை நானே நினைத்தாலும் அழிக்க முடியாது. அது போல இல்லை. உன்னை பத்திரமாக வைத்திருக்கும் என்னை யாருக்குமே காட்டுவதில்லை. கண்டுபிடிக்கவே முடியாத தூரத்தில் தான் நான் என்ற வேஷம் உனக்கு போட்டிருக்கிறேன்.

வேஷங்களை நிஜமாக்கி இருப்பது நம் திரைக்கதை யுக்தி....மற்றும் இதோ நீ படித்து முடித்த இந்த கடிதம்...!

- கவிஜி

Pin It