வீட்டின் முற்றத்து வேப்பமர நிழலில் அமர்ந்திருந்தேன்.
வறண்ட நாவால் இல்லாளிடம்
தாகமென்றேன்.
அடுக்களையிலோ
தாய்க்கும் சேய்க்கும் சிறு சமர்.
மகள் சொம்பு நிறைய நீர் மொண்டு
ததக்கா புதக்காவென நடந்து
வந்தாள்.

அவள் எனை நெருங்கி வைக்கும்
ஒவ்வொரு அடிக்கும் ஒரு பங்கு நீர் சிந்த
நிலத்தின் தாகம் தணிந்தது.

எனையடைந்த இறுதியடியில்
மகள் காலி சொம்பை நீட்டுகையில்
சொம்பின் வெற்றிடத்தில்
சிரிப்பை நிரப்பினேன்.
தீர்ந்தது பல வருடத்தின் தாகம்.

- நெகிழன்

Pin It