ஆனந்த் டெல்டும்ப்டெ

உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூரில் உள்ள பாபா இராகவதாசு அரசு மருத்துவமனையில் உயிர்வளி (ஆக்சிஜன்) உருளைகள் போதிய அளவில் இல்லாத தால், 71 குழந்தைகள் இறந்து கொண்டிருந்த வேளையில், தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இந்தியா வின் 71ஆவது சுதந்தர நாளைக் கொண்டாடும் வகையில், தில்லி செங்கோட்டையின் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பின், தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும் தன்மையில் உரையாற்றிக் கொண்டிருந்தார். திரைப்பட கதாநாயகன் போல் தனக்கே உரித் தான முறையில் அரை உண்மைகளையும் முழுப் பொய் களையும் 125 கோடி மக்களை நோக்கி தன் உரையில் கட்டவிழ்த்துக் கொண்டிருந்தார்.

வளர்ச்சி குறித்த இத்தகைய ஏமாற்றுப் பேச்சு களைச் சுதந்தரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகும் வெகுமக்கள் அமைதியாகக் கேட்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆட்சியாளர்கள் கூறும் வளர்ச்சி என்பது, வெகுமக்களுக்குப் பெருந்துயரத்தை உண்டாக்கு வதன் மூலமாகப் பெருஞ்செல்வர்களுக்கு நன்மையைத் தருவதாக இருக்கிறது. சுயராச்சியம் (Swara) இல்லாத வளர்ச்சி பொருளற்றதாகும். சுயராச்சியம் பெறுவதற்காக எண்ணற்றோர் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகப் போராடினார்கள்; இதில் பலர் தம் இன்னுயிரை ஈந்தனர்.

சுயராச்சியம் என்பது சுதந்தரம், சுய-ஆட்சி என்ப தாகும். சுய-ஆட்சி என்பது மக்கள் அனைவர்க்கும் கல்வி, நலவாழ்வு, உறுதி செய்யப்பட்ட வாழ்வாதாரம் மற்றும் சனநாயக, பண்பாட்டு உரிமைகள் ஆகியன எளிதில் கிடைக்கும்படிச் செய்வதை உள்ளடக்கியதாகும். ஆனால் வளர்ச்சி என்கிற பெயரால் கடந்த எழுபது ஆண்டுகளாக இவை வெகுமக்களுக்குக் கிடைக்காத வாறு ஆளும் வர்க்கங்கள் தடுத்துவருவது மாபெரும் அநீதியாகும்.

அதிதீவிர தேசியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். இவர்கள், இந்தியத் தேசியம் பல இலட்சம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்று பீற்றிக்கொள்கின்றனர். இதன்மூலம் இந்தியா என்பது ஒரு நாடாகப் பிரித்தானிய ஆட்சியால் உருவாக்கப்பட்டது என்கிற உண்மையை மறைக்கின்றனர். சுதந்தரப் போராட்டக் காலத்தில்தான் இந்தியா ஒரு தேசம் என்கிற கருத்தியல் உருவானது. இப்போது ஆட்சியில் இருப்பவர்களோ, இவர்களின் முன்னோர்களோ, சுதந்தரப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தொடக்கக்கால இந்தியத் தேசியம் என்பதுகூட, பிரித்தானிய ஆட்சி இந்தியத் துணைக் கண்டத்தில் நிலைகொள்வதற்காக மேற்கொண்ட அரசியல் மற்றும் நிருவாக ஒருங்கிணைப்பால் உருவானதாகும். இது நவீன போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் வாயிலாக மேலும் வளர்ந்தது. இம்மாற்றங்கள், இந்தியா வில் கிராமப்புற சமுதாய வாழ்வில் நீண்டகாலமாகத் தேக்கமடைந்திருந்த சமூக-பொருளாதார நிலைமை களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இது தேசத் தைக் கட்டமைக்கும் நடவடிக்கையை ஊக்குவித்தது. இந்தியாவை உருவாக்குவதில் முன்னோடியாக இருந்த தலைவர்கள், “சுதந்தர இந்தியா சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்பவற்றின் அடித்தளத்தில் உருவாக் கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் இவர்கள், இந்து இராச்சியத்தை அமைக்க வேண்டும் என்கிற தங்களின் அரசியல் குறிக்கோளுக்காக, சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற கோட் பாட்டை இடையிலேயே கைவிட்டனர். இது வரலாற்று முரணாகும்.

உண்மையைக் கூறவேண்டுமாயின், இந்திய வரலாறு நெடுகிலும் ஆளும்வர்க்கத்தின் சிறப்பு என்று கூறுவதற்கு ஏதும் இல்லை. ஆளும் வர்க்கத்தினரின் செயல்பாடுகள் எப்போது அளவிறந்த தன்னலமும், வெட்க உணர்ச்சியின்றி தங்கள் சொந்த நலன்களை மட்டும் பேணிடும் போக்கும் கொண்டவையாக இருந் துள்ளன. மக்களை வஞ்சிப்பதே அவர்களின் வர்க்க - சாதி குணமாக இருக்கிறது. அதனால்தான், பிரித்தானிய ஆட்சி அதிகாரம் இந்திய ஆளும் வர்க்கத்தினரின் கைக்கு மாற்றப்படும் நிலையில், ஆளும் வர்க்கத்தின் போக்கு எத்தகையதாக இருக்குமோ என்று பலர் அய்யுற்றனர்.

வின்சன்ட் சர்ச்சில் தீவிரமான காலனிய ஆதிக்க ஆதரவாளர், ஆனால் இந்தியாவில் அவரைப் பற்றிப் பரப்புரை செய்யப்பட்டிருப்பதுபோல் அவர் இந்தியாவை வெறுப்பவர் அல்லர். 1947ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்குச் சுதந்தரம் அளிக்கும் சட்ட வரைவு மீது நடந்த விவாதத்தின் போது வின்சன்ட் சர்ச்சில் கீழ்க்கண்டுள்ளவாறு பேசினார் என்று சொல்லப்படுகிறது.

“இந்தியாவுக்குச் சுதந்தரம் வழங்கப்படும் நிலையில், ஆட்சியதிகாரம் போக்கிரிகள், பொறுக்கிகள் கைக்குச் செல்லும். இந்தியத் தலைவர்கள் அனைவரும் துணிவும் திறமையும் இல்லாதவர்கள். அவர்கள் இனிக்க இனிக்கப் பேசுவார்கள்; ஆனால் அவர்கள் சிறுமதியினர். அதி காரத்திற்காகத் தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொள்வார்கள்; அந்த அரசியல் கூச்சலில் இந்தியாவே தொலைந்துபோகும். ஒரு காலம் வரும் - அப்போது இந்தியாவில் தண்ணீருக்கும் காற்றுக்கும்கூட விரிவிதிக் கப்படும்.”

சர்ச்சில் இவ்வாறு சொன்னாரா என்பது ஒரு விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இவ்வாறு சொன்னது எவராக இருப்பினும், இந்தியா சுதந்தரம் பெற்ற பின், கடந்த எழுபது ஆண்டுகளாக நடைபெற்று வருபவை, அக்கூற்றில் சொல்லப்பட்டுள்ளவை உண்மையே என்பதை உணர்த்துகின்றன.

சுதந்தர இந்தியாவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் சி. இராசகோபாலாச்சாரி கூறியிருப்பதைப் படியுங்கள் :

“சுயராச்சியத்தால் உடனடியாகவோ அல்லது நீண்ட காலத்திற்குள்ளாகவோ மக்களுக்கு நல்ல ஆட்சி யையோ அல்லது பெருமகிழ்ச்சியையோ வழங்கிட முடியாது என்பதை நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். நமக்குச் சுதந்தரம் வழங்கப்பட்டவுடன், தேர்தல்கள், அவற்றின் ஊழல்கள், அநியாயங்கள், செல்வத்தின் அடிப்படையிலான அதிகாரமும், கொடுமை யும், நிருவாகத்தின் திறமையின்மை ஆகியவற்றால் பெருந்துன்பமான வாழ்நிலை மக்களுக்கு ஏற்படும், அந்நிலையில் மக்கள் முன்பு இருந்த பிரித்தானிய ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்; பழைய ஆட்சியில் இதைவிட நீதியும், அமைதியும், திறமையான - நேர் மையான ஆட்சியும் இருந்ததே என்று மக்கள் வருத்த முடன் எண்ணிப்பார்ப்பார்கள்... அனைவருக்கும் பொதுக்கல்வி அளிப்பதன் மூலம் எதிர்கால குடிமக்களான மாணவர்களிடம் நன்னடத்தை, கடவுளுக்குப் பயந்து நடத்தல், அன்பு செய்தல் ஆகிய நற்பண்புகளை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதில் நாம் வெற்றியடைந்தால்தான், சுயராச்சியம் மகிழ்ச்சிக்குரிய தாக இருக்கும். அவ்வாறு அமையாவிடில் பணம் படைத்தவர்களின் அட்டூழியங்களும் ஒடுக்குமுறைகளும் கொண்டதாகவே சுயராச்சியம் இருக்கும்.”

சுயராச்சியம் என்கிற கருத்தியலின் கர்த்தாவான காந்தியே சுயராச்சியம் என்பது மக்களின் ஆட்சியாக இல்லாமல், சிறுகும்பலின் ஆட்சியாக மாறிவிடுமோ என்கிற அய்யம் கொண்டிருந்தார்.

மாற்றம் எதுவும் ஏற்படவில்லை

“சுதந்தரம் கெட்ட சகுனத்துடனேயே வந்தது. நாட்டுப் பிரிவினையால் குருதி பெருக்கெடுத்து ஓடியது”. மூலஉத்திகளை வகுப்பதில் வல்லவரான காந்தியாரால் காங்கிரசுக் கட்சி மக்கள் இயக்கமாக உருவெடுத்திருந்த போதிலும், அது முதலாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகவே இருந்தது. காங்கிரசுக் கட்சி, மக்கள் நலன் சார்ந்த சோசலிச முழக்கங்களை முழங்கிக் கொண்டே, முதலாளிகளின் நலன்களை மேலும் பேணிப் பாதுகாக்கும் வகையில் அரசின் கொள்கைகளை வகுத்த துடன், அதற்கு இயைந்த வகையில் அரசின் கட்டுமானத் தையும் உருவாக்கியது. இந்தியர்களின் கைக்கு ஆட்சி யதிகாரம் மாற்றப்படுவதற்கு முன்பே இந்தச் சூழ்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

1946 மார்ச்சு மாதம் நடைபெற்ற தேர்தலில் தேர்ந் தெடுக்கப்பட்ட மாகாண சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அரசமைப்புச் சட்ட அவை உருவாக்கப்பட்டது. 1946இல் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தவர்கள் 28 விழுக்காட்டினர் மட்டுமே! ஆயினும் இது மக்களால் பிரதிநிதித்துவப்படும் அரசமைப்புச் சட்ட அவை என்று நேர்மையற்ற முறையில் காட்ட முயன்றனர்.

1935ஆம் ஆண்டைய இந்தியச் சட்டம் ((Government of India Act, 1935) அரசமைப்புச் சட்டத்தில் முழுமை யாகச் சேர்க்கப்பட்டது. அதன்மூலம் ஏகாதிபத்திய பிரித்தானிய ஆட்சியின் முதன்மையான கூறுகள் தொடருவது உறுதிசெய்யப்பட்டது. முன்பு இருந்த ஆட்சியில் இருந்தது போன்ற அரசின் கட்டமைப்புகள், அதே சட்டங்கள், அதே மாளிகைகள், அதே நடைமுறை கள், அதே காவல்துறை அடக்குமுறைச் சட்டங்கள் சுதந்தர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்திலும் நீடித்தன. ஒரே ஒரு வேறுபாடுதான்-வெள்ளை இன ஆளும் வர்க்கத்திற்குப் பதிலாக இந்திய ஆளும் வர்க்கம் இப் போது இடம்பெற்றுள்ளது. மேற்கத்திய சுதந்தரக் கோட் பாடுகளைப் பார்ப்பனியம் தனக்கே உரிய நரித்தனத் துடன் மாற்றியமைத்து, பழைய ஒடுக்குமுறையான ஆட்சி முறையே தொடருமாறு செய்தது. அதன்மூலம் தன்னுடைய கரவான ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டது.

1947க்குப்பின் சோவியத் நாட்டில் இருந்தது போன்ற அய்ந்தாண்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இவற்றின் மூலம் சோசலிசக் கோட்பாடுகளை நடை முறைப்படுத்துவதாகப் புதிய ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடித்தனர். ஆனால் இந்த அய்ந்தாண்டுத் திட்டங்களுக்கு அடிப்படையாக விளங்கியது-முதலாளிகளின் விருப்பப்படி உருவாக்கப்பட்ட பம்பாய் திட்டம் என்பதே ஆகும். பம்பாய் திட்டத்தை ஏற்கவில்லை என்று அரசு அறிவித்த போதிலும் கரவான முறையில் அது அரசால் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

இலட்சக்கணக்கான நிலமற்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக என்று கூறி கொண்டுவரப்பட்ட நிலச்சீர்திருத்தச்சட்டம் பெயரளவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. நிலச்சீர்திருத்த நடவடிக்கை சூத்திரர்களில் மேல் படிநிலையில் இருந்த சாதியினர் பணக்கார உழவர்களாக உயர்வதற்கு வழிவகுத்தது. இவர்கள் காங்கிரசை ஆதரிப்பவர்களாக விளங்கினர். மக்களின் பசியைப் போக்குவதற்காக என்று கொண்டு வரப்பட்ட பசுமைப் புரட்சி உண்மையில் வேளாண் மையை முதலாளிய உற்பத்திமயமாக்குவதை நோக்க மாகக் கொண்டதாகும். வேளாண்மை இயந்திரமய மாக்கப்பட்டதால் மேல்சாதி நிலப் பண்ணையார்கள் நகரங்களில் வணிகத்திலும், தொழில்களிலும் ஈடுபட லாயினர். பின்னாளில் இவர்கள் மாநிலக் கட்சிகளின் தலைவர்களாக உருவாயினர்.

சூத்திரர்களில் மேல் படிநிலையில் இருந்த சாதிகளில் இவ்வாறு பணக்காரர்களானவர்கள், முதலாளிய உற் பத்தியில் ஈடுபட்டதன் மூலம், இருபிறப்பாளர்கள் எனப் படும் மேல் மூன்று வருணத்தினர் போல் உயர்ந்த சமூக மதிப்பைப் பெற்றனர். அதேசமயம் தலித்துகள், “ஜஜ்மானி” முறை மூலம் நெடுங்காலமாகப் பெற்றிருந்த குறைந்த அளவிலான நில உரிமையையும் இழந்த னர்; கூலி வேளாண் தொழிலாளர் நிலைக்குத் தள்ளப் பட்டனர். இதனால் சமூகத்தில் முரண்பாடுகள் மேலும் கூர்மையடைந்தன. எனவே புதிய வடிவிலான ஒடுக்கு முறைகள் தலித்துகள் மீது ஏவப்பட்டன. கீழ் வெண் மணி முதல் கயர்லாஞ்சு வரை, கார்தா முதல் உனா வரை சுதந்தர இந்தியாவில் தலித்துகள் மீது நடத்தப் பட்ட தாக்குதல்கள் இந்த வகைமையைச் சேர்ந்தவை.

அரசியலில் அதிகாரப் போட்டியும், மக்களின் வாழ் வாதார நெருக்கடிகளும் அதிகமாக, அதிகமாக அரசு தன் கொடிய நச்சுப் பற்கள் மூலம் மக்களை ஒடுக்கு வதும் அதிகமாகி வருகிறது. மேலும் “வல்லவை வாழும்” என்னும் டார்வினின் கோட்பாட்டை சமுதாய நிலையில் செயல்படுத்துவதற்காக, அரசு புதிய தாராள மயக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. இவற்றால் மக்கள் மேலும் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். புதிய ஆட்சியாளர்கள் குடிஅரசு என்ற முகமூடியை அணிந்து கொண்டு தாம் தண்டிக்கப்படுவோம் என்ற அச்ச உணர்வே இல்லாமல் தொடர்ந்து அட்டூழியங்களைச் செய்து வருகின்றனர். பிரித்தானிய ஆட்சியாளர்கள்கூட இந்த அளவுக்கு அட்டூழியம் செய்யத் துணிந்ததில்லை.

தேசியவாதிகள், நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த வேளையில், அதற்கு நேர்எதிரான வகையில் பி.ஆர். அம்பேத்கர் 1949 நவம்பர் 26 அன்று ஓர் எச்சரிக்கை விடுத்தார். அரசமைப்புச் சட்ட அவையின் இறுதிநாளின் விவாதத் தின் போது, அம்பேத்கர், “அரசமைப்புச் சட்டம் மூலம் அரசியல் சமத்துவத்தை உருவாக்கி உள்ளோம். மிக விரைவில் சமூக நிலையிலும் பொருளாதார நிலை யிலும் சமத்துவத்தை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அதனால் பாதிக்கப்படும் மக்கள் இந்த அரசியல் சனநாயகக் கட்டமைப்பையே தூக்கி எறிவார்கள்” என்று கூறினார்.

கடந்த 70 ஆண்டுகளில் இந்திய சனநாயகம் அழிந்துவிடவுமில்லை; செழித்தும் வளரவுமில்லை; ஆனால் நொண்டிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு இந்திய சனநாயகம் உயிர் பிழைத்திருப்பது குறித்து நாம் பெருமைப்பட முடியுமா? அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டால் நாம் பெருமை அடைய ஏதுமில்லை. இந்தியாவில் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் பொருளாதார வளர்ச்சி, மற்ற முன்னேற் றங்கள் குறித்து மேட்டுக்குடியினரும் நடுத்தர வர்க் கத்தினரும் போற்றிப் புகழ்கின்றனர். ஆனால் இவர்கள் சொல்லுகின்ற வளர்ச்சி என்பது கோடிக்கணக்கான மக்களைத் துன்பக் கேணியில் தள்ளியதால் ஏற்பட்டது என்கிற உண்மையைக் காண மறுக்கின்றனர்.

இப்போது ஆட்சியில் இருப்பவர்கள், உலக அளவில் தம்மைத் தலைவராகக் காட்டிக் கொள்வதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக இராணுவ ஏவுகணைகளையும் புல்லட் இரயில்களையும் தயாரிக்கின்றனர். அதே சமயம் மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்விக் கும், மருத்துவத்திற்குமான அரசின் செலவைக் குறைக் கின்றனர். மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா எல்லா அளவீடுகளிலும் அவலமான நிலையில் மிகவும் பின்தங்கியுள்ளது. திறந்தவெளியில் மலம் கழிப்போர், தூய்மையற்ற சுற்றுப்புறம் கொண்ட குடிசைப் பகுதிகளில் வாழ்வோர், ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள், இரத்தச் சோகை உள்ள தாய்மார்கள், பள்ளிக் கல்வியில் இடைநிற்றல், மாணவர்கள், எழுத்தறிவற்ற மக்கள் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் இருக்கின்றனர் என்கிற உண்மை, இந்தியா எந்த அளவிற்கு மனிதவள மேம்பாட்டில் இழிந்த நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டுப் பட்டியலில் (Human Development Index-HDI) கல்வியில் இந்தியா 92ஆவது இடத்தில் உள்ளது. மற்ற வளரும் நாடுகள் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. பிலிப்பைன்சு 76ஆவது இடம், மலேசியா 51ஆவது இடம், சிறி இலங்கா 59ஆவது இடம் பெற்றுள்ளன. 2016ஆம் ஆண்டில் மக்கள் நல வாழ்வில் (Health) 188 நாடு களில், 143ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மற்ற நாடுகள் பெற்றுள்ள இடங்கள் - சிறிஇலங்கா 79, சீனா 92, போரினால் சிதைந்துள்ள சிரியா 117, ஈராக் 128. உலகில் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா வாங்கும் சக்தி அளவீட்டில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது; மிகப்பெரும் கோடீசுவரர்களைப் பெற்றிருப்பதில் நான்காவது நாடு; வேகமாக வளரும் பொருளாதார நிலையைக் கொண்ட நாடு என்றெல்லாம் இந்தியாவைப் பற்றிப் பெருமித மாகப் பேசப்படுகிறது. ஆனால் மக்களின் நலவாழ்வுக் கான வசதிகளை வழங்குவதில், ஏழை நாடுகளான வங்கதேசம், நேபாளம், கானா, மிகவும் வறிய நாடான லிப்ரியா முதலான நாடுகளைவிட இந்தியா பின்தங்கி யிருக்கிறது.

இந்தியா ஒரு வல்லரசாகத் திகழ்ந்து கொண்டி ருப்பதாக நரேந்திர மோடி பகல் கனவில் திளைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், பொருளாதாரம், தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், திறமையான நிருவாகம், கல்வி, மக்கள் நலவாழ்வு, பாதுகாப்பான சூழல், தனிமனிதச் சுதந்தரம், சமூக மூலதனம் ஆகியவற்றில் உலக அளவில் முதல் பத்து இடத் துக்குப் பக்கத்தில் கூட இந்தியா இடம்பெறவில்லை. 2015ஆம் ஆண்டு மேற்குறிப்பிட்டுள்ள துறைகளில் உலக நாடுகளின் நிலைமையை ஆய்வு செய்த ஓர் அமைப்பு ((Legatum Prosperity Index)) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

(குறிப்பு : ஆனந்த் டெல்டும்ப்டெ“Development of a few, Misery for the Mass” என்ற தலைப்பில் எழுதிய இந்த கட்டுரை 2017 செப்டம்பர் 9 நாளிட்ட எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லீயில் (Economic and Political Weekly) வெளிவந்தது. ஆனந்த்டெல்டும்ப்டே சிறந்த மார்க்சிய - அம்பேத்கரிய அறிஞர். தமிழாக்கம் : க. முகிலன்).

Pin It