நாங்கள் ஆச்சாரமானவர்கள்
எனச் சொல்லியிருந்த அவனிடம்....
அப்படியென்றால்.... எனக் கேட்க.
யோசித்துவிட்டுக் கிடைக்காததற்குப் பகரமாய்
சொல்லியபடி
பாதிமுறுக்கு தந்துவிட்டிருந்தான்....

நானும் உபரி கல்கோனாக்களை
சர்க்கரைப் பிசுக்குகளோடு அவன்
கைக்குள் திணித்துவிட.. அடுத்த வகுப்புக்கான
காத்திருப்புகளோடு
மென்று கூடியிருந்தோம்...

தமிழ் இரண்டாம்தாளில்
அலகிடுதலைச் சரியாகச் செய்தும்..
அவனுக்கு ஐந்து எனக்கு நாலரை
கொடுத்திருந்த ராமானுஜ வாத்தியாருக்குப்
போட்டியாக...

மீ சி ம.... மீ பெ வ... க்களில்
எனக்கும் ஐந்தும் அவனுக்கு நாலரையும்
கொடுத்திருந்த செல்லையன்
வாத்தியாருக்கும் ஆச்சாரமென்பது என்னவெனத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

வருடங்கள் கழிந்த
திருவிழா நாளொன்றில்
நான் கொடுத்த அர்ச்சனைத் தட்டுகளில்
திருநீறும் சேர்த்துக் கொடுக்கையில்
அவன் கொடுத்த
முறுக்கைப் போலிருக்கவில்லை.... அது..

திரும்பிப் போவதற்குள்
எப்படியும் கேட்டுவிடவேண்டும்
அவனிடம்...
ஆச்சாரமென்றால்.... என்ன...?

- கட்டாரி