periyar 392தமிழ்நாடு பத்திரிகையானது மறுபடியும் சென்னை பார்ப்பன தெய்வங்களுக்குள் இரண்டறக் கலரத் தீர்மானித்து விட்டதாக நினைக்க வேண்டி இருக்கிறது. அதின் முழு கவனம் ராயல் கமிஷனை பகிஷ்கரிப்பதில் மாத்திரமில்லாமல் பெசன்டம்மையை தலைவியாக்குவதிலும் அரசியல் பார்ப்பனர்களை காப்பாற்றுவதிலும் கவலை எடுத்துக் கொண்டிருக்கின்றதாகத் தெரிகின்றது. கமிஷன் பஹிஷ்காரத்தைப் பற்றி அவரவர்கள் அரசியல் அபிப்பிராயம் என்று சமாதானம் செய்து கொண்டு வாதாடலாமாயினும், பெசன்ட் அம்மையாரை தலைவியாக்க ஆசைப்படுவதில் பார்ப்பனர்களுடன் போட்டிப் போடுவதான இரகசியம் நமக்கு விளங்கவில்லை.

அது ஒருபுறம் இருக்கட்டும் என்று தள்ளிவிடுவதானாலும் பார்ப்பனரல்லாதார்களுக்கு கடுந்துரோகிகளாகிய அரசியல் பார்ப்பனர்களுடன் குலாவுவதும் அவர்களை காப்பாற்றுவதும் பற்றி காரணம் அறியாமலிருக்க முடியவில்லை. சென்னை கார்ப்பரேஷன் தேர்தல் விஷயத்தில் அரசியல் பார்ப்பனர்கள் நடந்து கொண்ட விஷயத்தைப் பற்றி தமிழ்நாடு பத்திரிகை தனது அபிப்பிராயமாக ஒரு வரி கூட எழுத முடியாத நிர்பந்தம் இப்போது திடீரென்று அதற்கு ஏற்பட்ட காரணம் என்ன என்று கேட்கின்றோம்.

பார்ப்பன அரசியல்வாதிகள் தமிழ்நாடு பத்திரிகை ஆபீசுக்கு வந்து எவ்வளவு தூரம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகின்றார்களோ அவ்வளவு தூரம் அவர்கள் மற்றும் எல்லா பத்திரிகை ஆபீசுகளுக்கும்தான் போய் கெஞ்சுகின்றார்கள். பார்ப்பன பத்திரிகைகளாகிய ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’, ‘சுயராஜ்யா’ முதலியவைகளும் பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளாகிய ‘ஜஸ்டிஸ்’, ‘திராவிடன்’ ஐரோப்பிய பத்திரிகைகளாகிய ‘மெயில்’ முதலியவைகளும் தைரியமாய் தமது அபிப்பிராயத்தை எழுதி இருக்கும் போது ‘தமிழ்நாடுக்கு’ மாத்திரம் ஏற்பட்ட தட்ட முடியாத தாக்ஷண்யம் என்ன என்று கேட்கின்றோம். பார்ப்பன தயவை எதிர்பார்க்கும் நிலை, ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியாரை விட தமிழ்நாடுக்கு அதிகமாய் ஏற்பட்டு விட்டதா?

ஸ்ரீமான் வெங்கிடாசலம் செட்டியாரே எலக்ஷன் விஷயத்தில் தைரியமாய் பார்ப்பன சூழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கும் போது ‘தமிழ்நாடு’ மாத்திரம் ஏன் பயப்படவேண்டும்.

பார்ப்பன சூழ்ச்சிக்கும் பார்ப்பன வகுப்புவாதத்திற்கும் சென்னை தேர்தலைவிட சரித்திரத்தில் எழுதத் தகுந்ததான வேறு ஆதாரம் என்ன வேண்டும். திடீர் திடீர் என்று இம்மாதிரி துப்பாக்கியை கீழே போட்டு எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடுவதால் எவ்வளவு காரியம் கெட்டுப்போய் விடுகிறது. முதலாவது பார்ப்பனர்கள்கூட இப்பத்திரிகைக்கு பயப்பட மாட்டார்கள், மதிக்கவும் மாட்டார்கள். ஏனெனில் நேரில் போய் சரிபடுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஒரு தைரியம் அவர்களுக்கு உண்டாய் விடும். இரண்டாவதாக அடிக்கடி இம்மாதிரி அயர்ந்து விடுவதால் மக்களுக்கும் அதனிடத்தில் அதிக மதிப்பு இருக்காது என்கின்ற தைரியமும் அவர்களுக்கு ஏற்பட்டு விடும்.

இதை ‘தமிழ்நாடு’ பத்திரிகை உணராதது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.11.1927)

Pin It