கீற்றில் தேட...

red flagகாணாது போன கடைசி மாமனை
தோழர் என்றால்தான் தெரியும்
ஊருக்குள் பலருக்கு

தேடிவந்த கட்சிப் பொறுப்பை மறுத்து
தொண்டர்களைத் தயாரித்தலே
தோழர்களுக்குப் பொறுப்பு என்றிருந்தவர்

மக்காப்போன் இல்லாத நேரங்களில்
மைக்காய்ச் சுருட்டிய துண்டறிக்கையால்
தெருமுனைப் பிரச்சாரம் செய்தவர்

மரித்துப் போனால் தன்னுடலை
செங்கொடி தரித்தே அஞ்சலி செலுத்த
அன்றே எழுதி வைத்தவர்

கலகம் செய்யப் பிறந்தவராய்
கழகத்தின் அழைப்புகளை மறுத்து
களம் பல கண்டவர்

புரட்சி செய்யாமல்
விடியாது கிழக்கு
புரட்சியாளனுக்கு
விடியலே இலக்கு
என்றவாறு காணாது போனார்
ஒருநாள்

தேடிச் சலித்தபின்
மேற்கு வங்கம் சென்றதாய்ச் சிலரும்
செஞ் சீனம் சென்றதாய்ச் சிலரும்
ஆதாரமற்றுக் கூறினர்

சேருமிடம் அறிவிக்காது
காணாமல் போயிருந்தாலும்
கொள்கைக் குன்றாய் விளங்கியவரை
பறைசாற்றியபடி பட்டொளி வீசிப் பறக்கிறது
அனைவரின் பார்வையிலும்
பிழைக்கத் தெரியாதவன்
என்றவரின் வீட்டில்..
அவர் தாங்கிய செங்கொடி

- மகிவனி