pongalவிவசாயத்தை
இழந்தவன்
மழைப்பாடல்
பாடுகிறான்.

பிளாஸ்டிக் இலைகளை
வாசலில் தோரணமாய்
மாற்றிய பின்
பொங்கலன்று
கூரைப்பூக்களையும்
தேடுவதை விட்டு விட்டோம்.

பொங்கல்
இனிப்போடு
முடிந்து போகும்
நாளில் கூட
மறந்து விடுகிறோம்
விவசாயிகளை.

மேய்ச்சல் நிலங்களில்
வீடுகளைக் கட்டிய நாம்
சாலையை மறைக்கும்
மாடுகளைக் கண்டால்
வெகுண்டெழுகிறோம்.
கோபங்களை
அசைபோட்டவாறே
கடக்கின்றன மாடுகள்.

நெல்பேட்டைகளைத்
தொலைத்து விட்டு
அரிசி கடைகளை
தேடிக்கொண்டிருக்கிறோம்.

கனம் ஏற ஏற
தலைகுனிய
தெரிந்திருக்கிறது
நெற்கதிருக்கு.

மண் வாசனையை வைத்து
மழையை
அறிந்த விவசாயிகள்
எத்தனை முறை
ஏமாற்றப்பட்டாலும்
நம்புவதென்னவோ
மண்ணையும்
மழையையும் மட்டுமே

மண்ணைப் பிசைந்து
உலகிற்கு
உணவழித்தவன்
விலையில்லா அரிசி வாங்க
வீதியில் நிற்கிறான்.