கீற்றில் தேட...

flowers 340பின்னொரு நாளில்
அகன்ற புன்னகையோடும்
விரிந்த கைகளோடும்
உங்களை நோக்கி வரும்போது
வருபவர் கடவுளென்று
நீங்கள் எப்படி உணர்ந்து கொள்வீர்கள்?

அதிகாலை பூக்களின்
வாசம் உணராமல்
அதை கடந்து சென்ற பின்

அலுவல் கிளம்பும் முன்
மழலை தரும் முத்தத்தை
வெறும் எச்சில் என
துடைத்து விட்ட பின்

காமம் தீர்ந்த ஓர் பின்னிரவில்
துணையின் நெற்றி முடி ஒதுக்கி
சிறு முத்தமிட மறந்த பின்

நிராகரிப்பின் வலி ருசித்த
நண்பனின் கண்ணீர்
உங்கள் கைகளில் பிசுபிசுக்காதபடி
ஒதுங்கி நின்ற பின்

பசிக்கு யாசிக்கும் சிறுமியின்
உலர்ந்த உதடுகளில்
ஒரு புன்னகை தர மறுத்து
புறக்கணித்த பின்

ஒரு வாசத்தில்
ஒரு முத்தத்தில்
ஒரு காமத்தில்
ஒரு கண்ணீரில்
ஒரு புன்னகையில்
உணராத ஒன்றை

பின்னொரு நாளில்
அகன்ற புன்னகையோடும்
விரிந்த கைகளோடும்
உங்களை நோக்கி வரும்போது மட்டும்
வருபவர் கடவுளென்று
நீங்கள் எப்படித்தான் உணர்ந்து கொள்வீர்கள்?

- சசிதரன் தேவேந்திரன்