நிலம்… ஆக்கவோ, அழிக்கவோ முடியாத ஒரு இயற்கை வளம். சாதாரண மனிதனைப் பொறுத்தவரை நிலம் என்பது சமூகத்தில் அவனது இருத்தலுக்கான ஒரு அடையாளம். ஆனால் ஆள்பவர்களுக்கோ அது அதிகாரத்தின் அடையாளமாக இருக்கிறது! அதனால்தான் மன்னர்கள் காலம் தொடங்கி இன்றைய வல்லரசுகளின் காலம்வரை நிலத்திற்கான அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டம் தொடர்கிறது. படையெடுத்துச் சென்று போர்க்களத்தில் ஏராளமான மனித உயிர்களைப் பலியிட்டு எதிரிகளின் நிலப்பரப்பை கைப்பற்றுவது பழையவகை போர்முறை!

1995-க்குப்பின் ‘காட் ஒப்பந்தம்’, ‘உலக வர்த்தகக்கழகம்’ ஆகியவற்றின் வருகைக்குப் பிறகு கார்ப்பரேட் ஆட்சியாளர்கள் நடத்தும் போர்கள் எல்லாம், ‘ஜனநாயக’த்தின் அங்கீகாரத்துடன் சட்டப்பூர்வமாகவே அரங்கேற்றப்படுகிறது. இதனை “தேசப்பற்று” “வளர்ச்சி” என்ற கவர்ச்சிகரமான மேக்கப்புடன் கொஞ்சம் காவியையும் கலந்து இந்தியாவில் அமுல்படுத்தி வருகிறார் மோடி! இதற்கு மீண்டும் ஒரு சாட்சியமாக வந்திருக்கிறது மத்திய அரசின் “நிலப் பயன்பாட்டுக் கொள்கை” (LAND UTILISATION POLICY)!

CBE regionபுதிய கொள்கைக்கு அவசியம் என்ன?

ஹைட்ரோகார்பனுக்காக நிலத்தை எடுத்தால் விவசாயம் அழிகிறதே என விவசாயிகள் போராடுகிறார்கள்! எட்டுவழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தினால், சுற்றுச்சூழல்வாதிகளும், விவசாயிகளும் கூட்டாக கோர்ட்டுக்கு சென்று தடையாணை வாங்குகிறார்கள்! ஸ்டெர்லைட் என்றால் துப்பாக்கிச் சூடு வரை நிலமை தீவிரமாகிறது! அணு மின்நிலையம், அணுக்கழிவு மையம் என்றால் கூடங்குளம் மீனவர்கள் எதிர்க்கிறார்கள்! துறைமுக மேம்பாடு என்றால் மும்பை, குஜராத்தில் பிரச்சனை! நிலத்தில் அரசு கைவைத்தாலே மே.வங்கத்தின் நந்திகிராம், சிங்கூர், ஓடிசாவின் நியாம்கிரி பழங்குடிகள், தமிழக விவசாயிகள் என நாடு முழுவதும் போராட்டம் தொடர்கிறது.

இவ்வாறு ‘நாட்டை முன்னேற்றுவதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும்’ மத்திய அரசு கொண்டுவரும் வளர்ச்சித் திட்டங்கள் முழுவதும் பொதுமக்களுடன் மோதலாகவே முடிகிறது. இதனை எப்படி எதிர்கொள்வது? பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண்பது எப்படி? என்பது அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.!

மறுபுறத்தில், “எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க விடமாட்டோம். விவசாய நிலத்தை பறிக்கக்கூடாது. நீர்வளத்தை அழிக்கக்கூடாது. சுற்றுச்சூழலை நாசம் செய்யக்கூடாது” என்பது பொதுமக்களின் கோரிக்கை!

எதிர் எதிரான இவ்விரு பிரச்சனைகளையும் எப்படி தீர்ப்பது?

விவசாயிகளுக்கு நிலம் வேண்டும். சுற்றுச்சூழல்வாதிகளுக்கு இயற்கை வளம் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் நிலம் வேண்டும். பிரச்சனை இவ்வளவுதானே....

எல்லாப் பிரச்சனைகளுக்கும் மையமாக இருப்பது என்ன...நிலம்!

எல்லோரும் வாருங்கள். இருக்கும் நிலவளத்தில் யார் யாருக்கு எவ்வளவு வேண்டும் என்று நமக்குள் பகிர்ந்து கொள்வோம். இதற்குப்பிறகு யாரும் அடுத்தவர்கள் நிலத்திற்குள் மூக்கை நுழைக்கக்கூடாது. சரியா..!

தீர்ந்தது பிரச்சனை! என்று கட்டைப்பஞ்சாயத்து செய்து, கூட்டத்தைக் கலைக்கிறது மத்திய அரசு!

சரி.. நிலத்தை எப்படி பிரித்துக் கொள்ளலாம் என்று கேட்டால், ஏற்கனவே அவர்களின் மூளையை கசக்கி எழுதிய ஒரு தீர்ப்பின் நகலை நம்மிடம் நீட்டுகிறார்கள். அதுதான் நிலப்பயன்பாட்டுக் கொள்கை!

கொள்கையின் நோக்கம் என்ன?

“நாட்டின் நிலவளத்தை அறிவியல்பூர்வமாகவும், மேம்பட்ட திறனுடனும் பயன்படுத்துவது, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் உணவுப்பாதுகாப்பை உத்தரவாதம் செய்வது, நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவது, இதுதான் இக்கொள்கையின் லட்சியம், குறிக்கோள்” என்கிறது மத்திய அரசு.

நாட்டின் மீதும், மக்கள் மீதும் அளவுகடந்த அக்கறையுடன் செயல்பட்டு, இக்கொள்கையை வகுத்தது போன்ற தோற்றத்தை மேற்கண்ட வாக்கியங்கள் உருவாக்கலாம். ஆனால் இதனை சற்று விரிவுபடுத்தினால் உண்மை பளிச்சென வெளிப்பட்டு விடுகிறது.

ஒரு நாட்டின் நிலவளம் என்பது, அந்நாட்டின் பல்வேறு பொருளாதார அம்சங்களுடன் நேரடியாக பின்னிப்பிணைந்த ஒன்று. விவசாயத்திற்கு மட்டுமே நிலம் பயன்படுவதில்லை. ஆரம்ப பள்ளிக்கூடம் தொடங்கி உயர்கல்வி தரும் பல்கலைக் கழகம், வேலைவாய்ப்பு தரும் தொழிற்சாலைகள், சுரங்கத்தொழில், மின்நிலையங்கள் மேலும் வீட்டுவசதி, குடிநீர்வசதி, மருத்துவவசதி, சாலைவசதி, பாசனக்கால்வாய், ஏரி-குளங்கள், மற்றும் அணைகள், இன்னபிற அத்தியாவசியத் தேவைகளுக்கும் நிலம் அவசியமானது. மக்கள்தொகை பெருகப் பெருக இத்தேவைகளும் அதிகரிக்கும். இதற்கேற்ப நிலத்தின் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

எனவே “இருக்கும் நிலவளத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் வகையிலும், அதேசமயம் மக்களின் அடிப்படைத் தேவைகள் பாதிக்காத வகையிலும் திறமையாக நிர்வகிப்பதன் மூலம் நாட்டின் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்துவது”தான் இக்கொள்கையின் நோக்கம் என்று விவரிக்கிறது.

இந்தக் கொள்கையும், லட்சியமும் மத்திய அரசுக்கு திடீரென தோன்றிவிடவில்லை. 1999-ல் ஐ.நா.சபையில், நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் “வளரும் நாடுகளின் நிலவளங்களை நீடித்த, நிலையான வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டிய அவசியம்” பற்றி வலியுறுத்துகிறது. இதை வழிகாட்டியாகக் கொண்டு, இந்திய நிலவளத்துறையும், ஜெர்மனியின் ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சித்துறை’- (GmbH) யின் கீழ் செயல்படும் GIZ என்ற கூட்டாட்சி நிறுவனமும் இணைந்து, 2011 முதல் 2013 வரை இந்தியாவின் நிலப்பயன்பாட்டு முறைகள் பற்றி ஆய்வு செய்து, புதிய நிலப்பயன்பாட்டுக் கொள்கைக்கான பரிந்துரைகளை முன்வைத்தது. இதன் நகல் அறிக்கையை 2015- மார்ச்சில் நடந்த, உலகவங்கியின் “நிலம் மற்றும் வறுமை குறித்த மாநாட்டில்” சமர்ப்பித்து, அங்கு ‘எஜமானர்களின்’ ஒப்புதலும் பெறப்பட்ட பிறகுதான், இந்திய அரசுக்கு இந்த ‘லட்சிய ஞானம்’ பிறந்திருக்கிறது.

நிலப்பயன்பாட்டுக் கொள்கை என்ன சொல்கிறது?

“ஒரு குறிப்பிட்ட தேவைக்கென ஒதுக்கப்படும் ஒரு பரந்த நிலப்பரப்பை நிலப்பயன்பாட்டு மண்டலம்” என்று கூறுகிறது இக்கொள்கை. இவ்வாறு நாட்டின் மொத்த பயன்பாட்டு நிலங்களையும் கீழ்க்கண்ட 9 வகை மண்டலங்களாக பிரிக்கிறது.

1) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்தி மண்டலம். 2) பெருநகர விரிவாக்க மண்டலம், 3) தொழில்துறை மண்டலம், 4) வேளாண்மை மற்றும் கிராமப்புற மண்டலம். 5) போக்குவரத்து மையங்கள். 6) சுரங்கம் மற்றும் கனிமவளங்கள் மண்டலம். 7) சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம். 8) சுற்றுலா மற்றும் பாரம்பரிய நிலப்பகுதிகள். 9) அதிக ஆபத்து விளைவிக்கும் நிலப்பகுதிகள். இதுதவிர, சிறப்பு தேவைகளைக் கருத்தில்கொண்டு மேலும் புதிய மண்டலங்களையும் உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது!

மண்டங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? யார் இந்த வேலையை செய்வது?

2 1 landஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியரின் தலைமையில், பலதுறை வல்லுனர்களைக் கொண்ட ஒரு திட்டக்குழு அமைக்கப்படும். இக்குழு குறிப்பிட்ட மாவட்டத்தில் நடக்கும் விவசாயம், சிறுதொழில்கள், தொழிற்சாலைகள், கல்விநிறுவனம், மருத்துவ-சுகாதார வசதிகள், நிலத்தடி நீர்வளம், வனக்காடுகள், கனிமவளங்கள் ஆகியவற்றின் புள்ளிவிவரங்களை திரட்டுவார்கள். பிறகு இதை தீவிரமாக ஆய்வு செய்வார்கள். இதன் அடிப்படையில், அடுத்துவரும் 20 -25 வருடங்களில் இங்கு என்னென்ன துறைகளில் வளர வாய்ப்பிருக்கிறது. எதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதை முடிவு செய்வார்கள்.

இவ்வாறு மாநிலம் முழுவதும் கிடைக்கும் விவரங்களைக் கொண்டு, மொத்த நிலவளங்களையும் நிலப்பயன்பாட்டுக் கொள்கை கூறுவது போன்ற மண்டலங்களாக, பிறந்தநாள் கேக்கைப்போல வெட்டிப்பிரித்து விடுவார்கள்.

இந்த மண்டலங்களைப் பராமரிக்கவும், மேலாண்மை செய்வதற்கும் மாநில அளவில் உயர் நிர்வாக அமைப்பும், மத்திய அளவில் நில நிர்வாகக் கவுன்சில் ஒன்றும் அமைக்கப்படும் என்று இக்கொள்கை விவரிக்கிறது.

தேர்வு செய்யப்பட்ட மண்டலங்களில் என்ன நடக்கும்?

உதாரணமாக, வேளாண்மை மற்றும் கிராமப்புற மண்டலத்திற்கு நிலத்தை தேர்வு செய்வதற்கு ராணுவத்திற்கு ஆள் எடுப்பதைப் போல கறார் கண்டிசன் போடுகிறார்கள். “80% மக்கள் வேளாண்மையை சார்ந்திருக்க வேண்டும். இருபோக சாகுபடி நிலமாக இருக்க வேண்டும், அதிக விளைச்சல் திறனுள்ள மண்வளமுடையதாக இருக்க வேண்டும், இதற்கான நீர்வள ஆதாரங்களையும் கொண்டிருக்க வேண்டும், மேலும் பழங்குடி மக்களின் வசிப்பிடங்கள், கிராம மேம்பாட்டுப் பகுதிகளும் உள்ளடங்கும்” என்று வரையறுக்கிறது நிலப்பயன்பாட்டுக் கொள்கை!.

இதை அப்படியே தமிழகத்திற்கு பொருத்தினால் என்னவாகும்? அமெரிக்க தர நிர்ணயத்தின் படி, தமிழ்நாட்டில் சுமார் 50% நிலம்தான் விவசாயத்திற்கு ஏற்ற மண்வளமுடையது என்று வகைப்படுத்துகிறார்கள். இதில் இருபோக சாகுபடி நிலம், நீர்வள ஆதாரம், வளமான செம்மண், கரிசல் மண் நிலங்கள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால், மொத்தத்தில் 10 மாவட்டங்கள் கூட இந்த வரையறைக்குள் தேறாது. எனவே நிலப்பயன்பாட்டுக் கொள்கையின்படி தமிழகத்தில் வேளாண்மை மண்டலம் என்பது சில லட்சம் ஹெக்டேருக்குள் முடிந்துவிடும்! இதுபோல அடுத்தடுத்த மாநிலங்களிலும் அமுலானபின் இறுதியில், தற்போது பரவலாகவும், பன்முகத் தன்மையுடனும் நடந்துவரும் விவசாயம், ஒருசில தனித்தீவுப் பகுதிகளுக்குள் மட்டும் அடைக்கப்பட்டு விடும்!

டெல்டா மாவட்டங்களில், இந்த வரையறையை பொருத்திப் பாருங்கள். 80% மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளனர் என்ற ஒரு அம்சம் மட்டுமே இங்கு பொருந்துகிறது. காவிரி சிக்கலால் இருபோக சாகுபடி என்பதே சமீபகாலமாக இங்கு நடப்பதில்லை. நிலத்தடிநீர் வளமும் பெரிதாக இல்லை. புதிய பாசன விரிவாக்கப் பகுதிகளில் மட்டுமே ஓரளவு கிடைக்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களோடு ஒப்பிடும்போது டெல்டா நிலங்களில் நெல்லின் உற்பத்தித் திறன் குறைந்து வருகிறது. எனவே விவசாய மண்டலமாக அறிவிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் டெல்டா மாவட்டங்களுக்குக் கிடையாது என்று எளிதாக அறிவிக்க முடியும்!

மக்களின் போராட்டங்களையும் மீறி, ஹைட்ரோ கார்பனுக்கான ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போவதைப் பார்த்தால் ,மத்திய அரசு ஏற்கனவே இந்த முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.

இதுமட்டுமல்ல, இனி அரசின் வேளாண் வளர்ச்சித்திட்டங்கள், அரசு மானியம், சலுகைகள், கடனுதவி ஆகியவற்றுக்கு இந்த மண்டலத்திற்குள் மட்டுமே முன்னுரிமை தரப்படும்! மேலும், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணைத் தொழில், மீன் வளர்ப்பு, மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறைகளுக்கும் (பதப்படுத்துதல், தரம்பிரித்தல், கொள்முதல் மற்றும் சேமிப்புக் கிடங்குகள், மின்னணு சந்தை(E-nam), ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தக வளாகம் ஆகியவை) வேளாண் மண்டலத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

அப்படியானால், இந்த வரையறைக்குப் பொருந்தாத மீதமுள்ள விளைநிலங்களின் கதி என்ன? அங்குள்ள விவசாயிகளும், கூலி விவசாயி களும் எங்கு போவார்கள்? ஏற்கனவே உணவுப்பொருள் உற்பத்திப் பரப்பளவு குறைந்துவரும் நிலையில், வேளாண் மண்டங்களால் மேலும் சுருங்கிவிடும். இதனால் ஏற்படப்போகும் உணவுப்பொருள் பற்றாக்குறையை எப்படி ஈடுகட்டுவது? என்று நீங்கள் ஆதங்கப்படுகிறீர்களா? இதோ..அதற்கும் அவர்களிடம் பதில் தயாராக இருக்கிறது!

“வறுமை, ஏழ்மை, உணவுப் பாதுகாப்பு, வருவாய் இழப்பு, வேலையிழப்பு, வேலைவாய்ப்பு எல்லாம் முக்கியம்தான். ஆனால் வளர்ச்சித்திட்டங்கள் மூலம் நாடு முன்னேறும்போது தான் இதையெல்லாம் தீர்க்க முடியும். எனவே வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்காதீர்கள். ஆதரவு தாருங்கள்” என்று மீடியாவில் காவிகள் கூட்டம் பேசுவதையே இந்த கொள்கையும் வாந்தியெடுக்கிறது.

தொழில்துறை மண்டலம்:

வேளாண்மை மற்றும் கிராமப்புற மண்டலத்திற்கு இவ்வளவு கறாரான வரையறைகளைக் கூறும் நிலப்பயன்பாட்டுக் கொள்கை, தொழில்வளர்ச்சி மண்டலத்திற்கு மட்டும் எவ்வித குறிப்பான வரையறைகளையும் கூறாமல் பூசி மொழுகுகிறது.

தொழில் வளர்ச்சிக்கு உகந்த நிலப்பகுதிகள் எது? என்ற நேரடியான கேள்விக்கு “உடனடியாகவோ, எதிர்காலத்திலோ தொழில்வளர்ச்சிக்குத் தேவையான நிலப்பகுதிகள்” என்பதுதான் இக்கொள்கை கூறும் அதிகபட்ச பதில்!

மேலும், “விவசாயம் செய்யப்படாத பகுதியிலும், பெருமளவிலான மக்களின் இடப்பெயர்வுகளை தவிர்க்கும் வகையிலும் நிலம் ஒதுக்க வேண்டும்” என்று கொள்கையின் வழிகாட்டும் குறிப்பு ஒன்று பொத்தாம் பொதுவாக ஆலோசனை கூறுகிறது. சரி...விவசாயம் செய்யப்படாத பகுதிக்கு என்ன வரையறை? என்றால் அதற்கும் பதில் இல்லை.

இதுபோல, “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்தி மண்டலம்” என்பதில், தேசிய முக்கியத்துவமான தொழில்கள், திட்டங்கள் என்னென்ன? என்று கேட்டால், “நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு உகந்த திட்டங்கள்” என்று மொட்டையாக ஒரேவரியில் பதில் கூறுகிறது இந்தக் கொள்கை!

இவ்வாறு, பெருமளவிலான நிலத்தைக் கோரும் தொழில்வளர்ச்சி மண்டலத்திற்கு, எந்தவொரு தெளிவான வரையறைகளையும் கூறாமலே. அதற்கு ஒரு மண்டலம் அமைப்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள்.

அதாவது, கார்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்கு எதுவெல்லாம் தேவையோ அந்த நிலப்பரப்பு முழுவதும் தொழில்துறை வளர்ச்சி மண்டலம்! கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி! எனவே கார்ப்பரேட்டுகளுக்கு முக்கியத்துவமானது எதுவோ, அதுவெல்லாம் தேசிய முக்கியத்துவமானது! என்று ஏற்கனவே மத்திய அரசு பின்பற்றிவரும் கொள்கையைத்தான், இந்த நிலப்பயன்பாட்டுக் கொள்கையும் வெளிப்படுத்துகிறது.

வளர்ச்சித் திட்டங்களின் நிலத்தேவைகள்!

நிலப்பயன்பாட்டுக் கொள்கையின் முழுவீச்சைப் புரிந்துகொள்வதற்கு, வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலத்தின் தேவைகள் குறித்து அரசும், இந்தக் கொள்கையின் விளக்கக் குறிப்புகளிலும் உள்ள விவரங்களை பார்ப்போம்.

2 2 land2012 முதல் 2017 வரையிலான 12 வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் நாட்டின் தொழில் வளர்ச்சி 8% ஆகவும், பொருளாதார வளர்ச்சியை 9%-லிருந்து 9.5% ஆகவும் உயர்த்துவது, உற்பத்தித்துறையின் வளர்ச்சியை 9.8%-லிருந்து 11.5% ஆக உயர்த்துவது, சுரங்கத்துறையில் 8%-லிருந்து 8.5% ஆக உயர்த்துவது என்றும். இந்த வளர்ச்சியை எட்டுவதன் மூலம் 2022-ல் 20 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்றும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது.

மேற்கண்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்காக, சிறப்புப் பொருளாதார மண்டலம், சிறப்பு ஏற்றுமதி மண்டலம், தொழில் முதலீட்டு மண்டலம், தேசிய உற்பத்தி மற்றும் முதலீட்டு மண்டலம் (NMIZ), சிறப்பு தொழில்நுட்ப பூங்கா, பெட்ரோ-கெமிக்கல் முதலீட்டு மண்டலம், ஸ்மார்ட்சிட்டி, மோடியின் மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என்று அடுக்கக்கான பெரும் திட்டங்களை அறிவித்தது மத்திய அரசு! இத்திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டுமானால் ஏராளமான நிலவளங்களை அதற்கு பலிகொடுத்தாக வேண்டும்.

உதாரணமாக, டெல்லி- மும்பை தொழில்துறை தொகுப்புத்திட்டம் என்பது உ.பி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, டெல்லி ஆகிய ஆறு மாநிலங்கள் வழியாக சுமார் 1,483 கி.மீட்டர் தூரம்வரை நீள்கிறது! இதுபோல நாடுமுழுவதும் 24 தொழில்முதலீட்டுப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது! இது எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் நீளும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!

ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க சுமார் 500 முதல் 5,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தேவை. இவ்வாறு 2,00,000 ஹெக்டேர் நிலத்திற்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு முதல் கட்ட அனுமதி வழங்கியுள்ளது! இது ஓராண்டிற்கு 10 லட்சம் டன் உணவுப்பொருள் உற்பத்தியாகும் நிலப்பரப்புக்கு சமமாகும்! தவிர, இதுபோல 25 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்கனவே இயங்கி வருகிறது.

2011-கணக்கெடுப்பின்படி 31% மக்கள் (37.7கோடி பேர்) நகரங்களில் வசித்து வந்தனர். இது 2050-களில் 55% ஆக (91.5 கோடி பேர்) அதிகாரிக்கும் என ஐ.நா.சபை எச்சரிக்கிறது. 2000-ல் 5,161 ஆக இருந்த நகரங்களின் எண்ணிக்கை, 2011-ல் 7,935 ஆக அதிகரித்துள்ளது. வருங்காலங்களில் இது மேலும் அதிகரிக்கவே செய்யும். இத்தகைய நகர விரிவாக்கம் என்பது நகரங்களை சுற்றியுள்ள கிராமங்களின் பல லட்சம் ஹெக்டேர் நிலங்களை விழுங்க காத்திருக்கிறது! இதனை, “தொழில்துறை வளரும்போது நகரங்களின் வளர்ச்சியை தவிர்க்க முடியாது. மேலும் நகரங்களின் வளர்ச்சி தொழில்துறை வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது” என்று நியாயப்படுத் துகிறது அரசு!

இதுபோல, சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை தற்போது 0.17% நிலத்தைத்தான் பயன்படுத்துகிறது, ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.72% பங்களிப்பு செய்கிறது. எனவே இதற்கு 1% நிலத்தை ஒதுக்கலாம் என்று தேசிய கனிமவளக் கொள்கை பரிந்துரைக்கிறது.

நாட்டின் மொத்த பயன்பாட்டு நிலத்தில், விவசாயமில்லாத பிற துறைகள் 8.67 சதவீத நிலங்களில் தற்போது இயங்கிவருகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் தொழில்துறை, உள்கட்டுமானத் துறை, சுரங்கத்துறை, நகர விரிவாக்கம் ஆகியவற்றுக்கு மேலும் 5% நிலம் (அதாவது 160 லட்சம் ஹெக்டேர்) தேவைப்படும் என அரசு மதிப்பிட்டுள்ளது.

உண்மையில் இது கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய நிலவளத்தின் மீது நடத்திவரும் மாபெரும் போர்! அதன் படைத் தளபதியாக மத்திய அரசு செயல்படுகிறது. இப்போரில் கார்ப்பரேட்டுகளின் வெற்றியை உறுதிசெய்வது தான் இக்கொள்கையின் முக்கிய நோக்கம்.

விவசாய நிலங்களைத் தான் பலியிட வேண்டுமா?

விவசாயத்தைப் போலவே பிற தொழில்துறைகளின் வளர்ச்சிக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதும் தேவைதான். அதற்காக பெரும்பாலான மக்களான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள விளைநிலங்களை மட்டும்தான் பலியிட வேண்டுமா?

நாட்டில் விவசாயத்திற்கு பயன்படாத 68 லட்சம் ஹெக்டேர் நிலம் இருப்பதாக அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும் அரசு நிறுவனங்களிடம் மட்டும் 45 லட்சம் ஏக்கர் நிலம் பயன்பாடில்லாமல் உபரியாக இருக்கிறது! 2014-ம் ஆண்டு கணக்கீட்டின்படி, நாடு முழுவதும் சுமார் 4 கோடி ஏக்கர் தரிசு நிலம் பயன்பாடு இல்லாமல் அரசுவசம் உள்ளது! 25 லட்சம் ஹெக்டேர் “பூதான நிலங்கள்” நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படாமல் மாநில அரசுகளிடம் இருப்பதாக 1992-ல் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டிலேயே கூறப்பட்டது!

இந்த நிலங்களை தொழில்துறை வளர்ச்சிக்கு அரசு ஒதுக்கினால், இதுவரை பயன்படாத புதிய நிலப்பரப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். இதன்மூலம் நகர விரிவாக்கம் என்ற பெயரில் அருகிலுள்ள கிராமங்களின் விவசாய நிலங்களையும், ஏரி-குளங்களையும் கையகப்படுத்துவதைத் தவிர்க்கலாம்! நகரங்களின் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்! ஆனால் இதற்கு அதிக முதலீடு தேவைப்படும் என்பதால் கார்ப்பரேட்டுகளும், அரசும் இதை விரும்புவதில்லை!

மாறாக, நம் நாட்டின் சொந்த முதலீட்டாலும், தொழிலாளிகளின் கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்ட, ஏற்கனவே தயார் நிலையில் உள்ள விமான, ரயில்வே, துறைமுக வசதிகளும், நவீன தகவல்தொடர்பு வசதியும், வேலையில்லா இளைஞர்கள் நிறைந்த நகர்புற பகுதிகளையும் தான் கார்ப்பரேட்டுகள் விரும்புகிறார்கள். எஜமானர்களின் விருப்பமறிந்த அடிமைகளான நம் ஆட்சியாளர்கள் அதை கச்சிதமாக செய்து முடிக்கிறார்கள்!

சொந்தமாக இடம்வாங்கி, வீடுகட்டி, சட்டி பானை, கேஸ்அடுப்பு, அரிசி- காய்கறிகள் வாங்கி, பிறகு சோறாக்கி சாப்பிடுறதுனா எவ்வளவு சிரமம்..செலவு..? இதைவிட அடுத்தவன் வீட்டிற்குள் புகுந்து, அவனது சட்டி பானை அடுப்பில் சோறாக்கி சாப்பிடால் எவ்வளோ...லாபம்!! இதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில் கொள்கை! இதற்கு போலீசை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து கதவை திறந்துவிடுவதுதான் மத்திய அரசின் கடமை. இதற்கு பெயர்தான் தேசபக்தியாம்!

தமிழகத்தில் நடக்கும் முன்னோடித் திட்டம்!

வழக்கம்போல ‘இதெல்லாம் நடக்காது” “வராது”. “வரட்டும் பார்ப்போம்” என்று வீராப்பாக பேசுவதற்கெல்லாம் இங்கு வாய்ப்பே கிடையாது. எள் என்று சொல்வதற்கு முன் மோடியும் கார்ப்பரேட்டுகளும் எண்ணையில் வடை சுட்டு வாயில் போட்டு விடுகிறார்கள்!

நிலப்பயன்பாட்டுக் கொள்கையை 2015 ஜூலையில் ஒரு வரைவுக் கொள்கையாக வெளியிட்ட மத்திய அரசு, அடுத்த இருமாத இடைவெளியில் (செப்டம்பரில்) இறுதிசெய்து அறிவித்துவிட்டது. இதேவேகத்தில் 2015 அக்டோபரிலேயே இக்கொள்கையை அமுல்படுத்தும் வேலையிலும் இறங்கிவிட்டது மத்திய அரசு!

இதற்காக, வரவுக்கொள்கை தயாரிப்பில் ஈடுபட்ட ஜெர்மனியின் GIZ என்‌ற நிறுவனத்துடன், மத்திய நிலவளத் துறை கூட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது. இதன்படி, ஜெர்மனி நிறுவனம் இந்தியாவில் நிலப்பயன்பாட்டுக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு அறிவியல் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதுடன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டுகள் நடைமுறை பயிற்சியும் அளிக்கும்.

இதன் முதல்கட்டமாக தமிழ்நாடு, ஓடிசா ஆகிய இரு மாநிலங்களில் நிலப்பயன்பாடு மற்றும் மேலாண்மைத் திட்டம் என்ற முன்மாதிரி திட்டத்தை செயல்படுத்துவது என்றும், இதன் அனுபவத்திலிருந்து படிப்படியாக நாடுமுழுவதும் இக்கொள்கையை விரிவுபடுத்துவது என்றும் திட்டமிடப்பட்டது. இத்திட்ட வேலைகளை முறைப்படுத்துவதற்கு மத்திய அரசின் சிறப்பு கண்காணித்துக் குழுவு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது!.

இந்தியாவில் போதிய திட்டமிடல் வல்லுனர்கள் இல்லாததால், போபாலில் உள்ள ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்டு ஆர்க்கிடெக்சர்-லிருந்து 200 மாணவர்களும், ஜெர்மனியின் சில வல்லுனர்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2015-லிருந்து நடந்துவரும் முன்மாதிரி திட்டத்திற்கு தமிழகத்தில். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை பிராந்தியத்தை தேர்வு செய்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டுவரும் திட்டக்குழுவினர், மேற்கண்ட ஒவ்வொரு மாவட்டத்தை பற்றிய அனைத்துப் புள்ளி விவரங்களையும் திரட்டிக்கொண்டு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், மற்றும் தொழில் பிரமுகர்களுடன் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்., இறுதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொருத்தமான நிலப்பயன்பாட்டுக் கொள்கைகளை அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.

2 3 landதிருப்பூர் மாவட்டத்தை தொழில்துறை மண்டலமாகவும், கோவை நகரை மருத்துவ நகராகவும் (MEDI-CITY), அறிவு மையமாகவும் (தொழில்துறைக்கு தேவையான தொழில்நுட்ப வல்லுனர்கள், மற்றும் பயிற்சி பெற்ற திறமையான தொழிலாளர்களை உற்பத்தி செய்யும் மையமாக) அறிவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை – சேலம் நெடுஞ்சாலைப் பகுதிகளை வேளாண் வர்த்தக முதலீட்டுப் பகுதியாகவும், உற்பத்தித்துறைக்கான முதலீட்டுப் பகுதியாகவும் அறிவிக்கலாம் என்றும், செங்கல்பட்டு – கோவை – தூத்துக்குடி ஆகியவற்றை இணைக்கும் ஆறுவழி அல்லது எட்டுவழிச்சாலை அமைத்தால் அதிக முதலீடுகளை கவரும் பகுதியாக வளரும் என்றும் பரிந்துரைத்துள்ளனர். இதேபோல ஒடிசாவில் கஞ்சம் (kanjam) மாவட்டத்தில் முன்மாதிரித் திட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த நான்கு வருடமாக தமிழக அரசின் நேரடி ஈடுபாட்டுடன் நடந்துவரும் இத்திட்டம் பற்றி, மத்திய மாநில அரசுகள் எங்காவது வாய் திறந்திருக்கிறார்களா? பத்திரிக்கை, செய்தி ஊடகங்களில் விரைவுச் செய்தியாகக் கூட வெளிவரவில்லை. சம்பந்தப்பட்ட மாவட்ட மக்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ கூட தெரியாமல் பரம ரகசியமாக ஒரு திட்டம் அமுலாகி வருகிறது! இதுதான் இந்தியா ஜனநாயகத்தின் யோக்கியதை!!

பறிபோகிறது மாநில அரசின் நில நிர்வாக உரிமை!

இந்தியா அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவனையின் 18-வது பிரிவின்படி, நிலம் மற்றும் அதன் பயன்பாட்டு உரிமை என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. அதாவது, நிலவரி வசூலிப்பது, நில ஆவணங்களை பராமரிப்பது, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு நிலவளங்களை பயன்படுத்துவது போன்ற நிலநிர்வாக அதிகாரம் முழுவதும் மாநில அரசுக்குத்தான் உண்டு. மாநிலங்களின் கல்வி உரிமையைப் போல தற்போது இந்த நிலநிர்வாக உரிமையும் மத்திய அரசிடம் பறிபோக உள்ளது!

இந்த புதிய நிலப்பயன்பாட்டுக் கொள்கை, “மாநில அரசுகளின் நிலக் கொள்கைகளுக்கு மேம்பட்ட ஒரு வழிகாட்டியாக இருக்கும்” என்று ஆரம்பத்தில் அடக்கமாகக் கூறிகிறது. ஆனால் இறுதியில், “மாநில அரசுகளின் நிலப் பயன்பாட்டுக் கொள்கைகள் தேசிய நிலப்பயன்பாட்டுக் கொள்கைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்”. என்றும், “நிலையான வளர்ச்சிக்குப் பயன்படாத திட்டங்களை மாநில அரசுகள் கைவிட்டுவிட வேண்டும்” என்று முடிக்கிறது. மேலும் “நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகள் இயற்றியுள்ள சட்டதிருத்தங்களே, இனி தீர்வுகாண உதவும் கருவியாக இருக்கும்” என்றும் வலியுறுத்துகிறது!

ஏற்கனவே, விரைவுச் சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பின் ஏற்கனவே இருந்த நில உச்சவரம்பு கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டது! பி.ஜே.பி.யின் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நிலம் கையகப்படுத்தும் சட்டம்’ “விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு தரவேண்டியதில்லை!” “நில உரிமையாளர்களிடம் அரசுத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறவேண்டியதில்லை!” என்று கூறிவிட்டது!. தேசிய நிலப்பதிவுகள் திட்டத்தின் மூலம், நாட்டின் நில ஆவணங்கள் முழுவதையும் தற்போது கணிணி மயமாக்கி ஒருங்கிணைத்து வைத்துள்ளது மத்திய அரசு.

இந்நிலையில் வரவிருக்கும் நிலப்பயன்பாட்டுக் கொள்கையோ, மாநில அரசுகள் உருவாக்கி வைத்திருக்கும் நில நிர்வாகக் கட்டமைப்பு முழுவதையும், மத்திய அரசு கைப்பற்றிக் கொள்வதற்கு நேரடியாக வழியமைத்துக் கொடுப்பதாக இருக்கிறது!

கார்ப்பரேட்டுகளின் காவலனாக அரசு!

1999-ல் ஐ.நா. வெளியிட்ட ‘நிலப்பயன்பாட்டுத் திட்டம்’ பற்றிய தீர்மானம், “நாட்டின் நிலவளங்களை எவ்வாறு பிரித்து ஒதுக்கீடு செய்வது என்பது பற்றி முடிவெடுக்க மக்களுக்கு அதிகாரம் வேண்டும்” என்று தெளிவாக கூறுகிறது.

ஆனால் இங்கு மக்களை நேரடியாக சந்தித்துப் பேசவே மத்திய- மாநில அரசுகள் அஞ்சுகின்றன! இவர்கள் மக்களையும் நம்புவதில்லை! மாநில அரசுகளுக்கு நில நிர்வாக உரிமையை வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தையும் மதிப்பதில்லை! மாறாக, போலீசு, இராணுவம், அதிகாரவர்க்கம், கிரிமினல் அரசியல்வாதிகள், மற்றும் உள்ளூர் அடியாட்களையும் மட்டுமே நம்புகிறது!

பத்து தலைகளின் வலிகளுக்கும் ஒரே நிவாரணம் என்ற தைல விளம்பரம் போல, நாட்டின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு எங்கள் ‘வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமே’ என்று மோடி கும்பல் அடித்துக் கூறுகிறது!.

ஆனால், தனது வளர்ச்சித் திட்டங்களால் மக்களின் ஏழ்மையும், வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிந்துவிட்டது அல்லது குறைந்து வருகிறது என்று நிரூபிப்பதற்கு, நம்பகமான ஒரு ஆதாரமும் இந்த அரசிடம் கிடையாது. நாடு பொருளாதாரத்தில் முன்னேறி தனது சுயாதிபத்தியத்தை கட்டிக்காப்பாற்றி வருகிறது என்பதை முன்னாள் ரிசர்வ் வங்கி இயக்குனர் உட்பட பிரபல பொருளாதார நிபுணர்களே கேள்விக்கு உட்படுத்தி வருகிறார்கள்!

சீனாவில் விவசாய நிலங்களை தொழில்துறைக்கு ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், நாட்டின் உணவுப்பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், கையகப்படுத்தப்படும் விளைநிலங்களுக்கு சமமான அளவு தரிசுநிலங்களை விவசாய நிலங்களாக மேம்படுத்துவதை அரசின் கொள்கையாக வைத்துள்ளனர். இத்தகைய சுயாதிபத்திய நடவடிக்கைகளை இந்தியா ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா? இதற்குப் பின்னணியில் மறைந்திருக்கும் ஒரே உண்மை என்னவென்றால். கார்ப்பரேட்டுகளும், அவர்களது கைத்தடிகளும் மட்டுமே ‘வளர்ச்சியின் பலன்களை’ அறுவடை செய்துகொள்கிறார்கள் என்பதுதான்!

அதனால்தான், அரசால் தனது வளர்ச்சித் திட்டங்களின் சாதக- பாதகங்களை ஒளிவு மறைவின்றி மக்களிடம் எடுத்துக்கூறி, மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியவில்லை! ஐ.நா. கூறுவதுபோல “வளர்ச்சித் திட்டங்களில் மக்களின் பங்கெடுப்பையும்” ஏற்படுத்த முடியவில்லை! இவ்வாறு சொந்த நாட்டு மக்களிடமே தனிமைப்பட்டு தோற்றுப்போய் நிற்கிறது இந்த அரசு! இதனால்தான், குறுக்குவழியில் பயங்கரவாத அடக்குமுறைகளை ஏவிவிட்டு மக்களை உருட்டி, மிரட்டி, பலாத்காரமாக நிலத்தைப் பறிக்கிறது அரசு!

என்ன செய்யலாம்?

தனது வளர்ச்சித் திட்டங்களின் உண்மையான சாதக – பாதகங்களை மக்களிடம் வெளிப்படையாக முன்வைத்து, விவாதித்து, ஒரு பொது முடிவெடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் விரும்புவதில்லை!

எங்கள் வாழ்வாதாரமான நிலங்களை பறிக்கும் எந்த வளர்ச்சித் திட்டமும் எங்களுக்கு வேண்டாம். ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மக்கள் போராடுகிறார்கள்!

மாற்று அரசியல் பேசும் அமைப்புகளோ, வளர்ச்சித் திட்டங்கள் அனைத்துமே கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானது! மக்கள் நலனுக்கு எதிரானது! என்ற கண்ணோட்டத்தில் ‘விரட்டியடிப்போம்’, ‘முறியடிப்போம்’ என்று தன்னெழுச்சியாகப் போராடும் மக்களுக்குப் பின்னால் ஓடுகின்றன. இதுவும் போலீசு தடியடி, துப்பாக்கிச்சூடு, கைது, வழக்கு, பிணை என்ற வட்டத்திற்குள் முடிந்து விடுகிறது!

இதற்கெல்லாம் பயந்து அரசு தனது திட்டங்களை கைவிடுவதில்லை. மேலும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் அடக்குமுறையுடன் மீண்டும் அதே திட்டத்தை அமுல்படுத்துகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தில் இதுதான் நடந்து வருகிறது. இது போராடும் மக்களிடம் சோர்வையும், அவநம்பிக்கையையும் தான் விதைக்குகிறது.

2 4 landபோராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது எப்படி? என்ன கோரிக்கையை மையப்படுத்தி மக்களைத் திரட்டுவது? நடைமுறை சாத்தியமான தீர்வுகள் என்ன? என்பதைப் பற்றி மாற்று அரசியல் பேசுபவர்களிடம் தெளிவான பார்வையோ, கருத்து ஒற்றுமையோ கிடையாது. போராடும் மக்களும் இவர்களை அரசியல் தலைமையாக அங்கீகரிப்பதில்லை. ‘நமக்கு சப்போர்ட் பண்றாங்கப்பா’ என்ற அளவில்தான் இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே இவர்களும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் தோற்றுப் போய்தான் நிற்கிறார்கள்!

மறுபுறத்தில், ‘விவசாயத்தைப் பாதுகாப்போம்’ என்று முழங்கும் விவசாய சங்கங்களிடம் விவசாயத்தை லாபகரமான ஒரு தொழிலாக வளர்த்தெடுப்பது எப்படி என்ற திட்டமோ, அதுபற்றிய புரிதலோ கூட இல்லாமல் உள்ளனர். விவசாயத்தைக் காப்போம் என்றால், தற்போது விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கும் விவசாயத்தையா அல்லது 1960-களுக்கு முன்னால் நடந்த பாரம்பரிய விவசாயத்தையா…… எதைக் காப்பாற்றப் போகிறோம்? இது இரண்டுமே சாத்தியமில்லை எனும்போது மூன்றாவது விவசாயக் கொள்கை என்ன? இது பற்றி யாரும் பேசுவது இல்லை.

அரசுகள் விவசாயத்தைப் புறக்கணிப்பது என்பது காலனிய காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாக நீடிக்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்று உலகளவில் உற்பத்தி முறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் விளைவுகள்தான் இந்தியா விவசாயத்திலும் எதிரொலிக்கிறது! அணுக்கழிவு மையம், ஸ்‌டெர்லைட், ஹைட்ரோகார்பன் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் மோடி- அமித்சாக்களின் சிந்தனையில் உதித்தவையல்ல. கார்ப்பரேட்டுகளின் சாம்ராஜ்ஜியத்தை உலகம் முழுவதும் விரிவாக்கும் பல்வேறு செயல்திட்டங்களில் இதுவும் ஒன்று. இதற்கு அனைத்து வகையிலும் தமிழகத்தில் சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால்தான் வளர்ச்சித் திட்டங்கள் இங்கு குவிக்கப்படுகிறது.

உலகம் முழுவதுமான வலைப்பின்னலுடன் நடந்தேறி வரும் திட்டங்களை ஒருசில தனிநபர்களின் சாகசங்களினாலோ, சிறு அளவிலான மக்கள்திரள் நடவடிக்கைகளினாலோ மட்டும் ஒழித்துவிட முடியாது! இதற்கு நீண்டகால கண்ணோட்டத்தில் அனைத்து வளர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஒரு விவசாயக் கொள்கை தேவை. அது பெரும்பாலான மக்களின் சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்! அதை மக்களிடம் முன்னிறுத்த வேண்டும். பெரும்பாலான போராடும் இயக்கங்களிடம் இத்தகைய அணுகுமுறை இல்லாமல், “ஆடு மாடு மேய்ப்பதை அரசுப் பணியாக அறிவிப்போம்” என்று காமெடி செய்து கொண்டுள்ளனர்.

ஒரு தொழில் என்ற முறையில் விவசாயம் ஏற்கனவே கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. தற்போது அரசு பின்பற்றிவரும் கார்பரேட் அரசியல்- பொருளாதாரக் கொள்கையோ விவசாயத்தை அழிவுப்பாதைக்கு தள்ளிவிடுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 13.5%.(தொழில்துறையின் பங்கு 21.5%) ஆனால் நாட்டின் வேலைவாய்ப்பை வழங்குவதில் விவசாயத்தின் பங்கு 50%! (தொழில்துறையின் பங்கு 20% தான்) இது விவசாயத்தின் பெருமையைக் குறிக்கும் விவரமல்ல. அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை நம்பி 60% மக்கள் உயிர் வாழ்கின்றனர் என்பதற்கான எச்சரிக்கை! இவ்வாறு கிராமப்புறங்களில் முடக்கப்பட்டுக் கிடக்கும் இந்த மக்களை (உழைப்புச் சக்திகளை) மீட்டெடுப்பதன் மூலம்தான் கிராமப்புற வறுமை- ஏழ்மையை ஒழிக்க முடியும். அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தால் இது சாத்தியப்படுமா?. எனவே விவசாயமில்லாத பிற தொழில்களின் வளர்ச்சியும் அவசியமாகும். இது புரியாமல் விவசாயத்தைக் காப்போம் என்றால் அது இன்றைய அவல நிலமையை மேலும் தீவிரப்படுத்துவதற்கே உதவும்!

தற்போதைய நிலமையில், விவசாய வருமானத்தை மட்டுமே நம்பி, தனது வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எந்த விவசாயிக்கும் கிடையாது. இதனால் விவசாயிகள் மத்தியில், நிலத்தை அதன் சந்தை மதிப்பிலான வெறும் பணமாக மட்டுமே புரிந்துகொள்ளும் மனோபாவம்தான் உள்ளது. சந்தை மதிப்புக்கு ஈடான இழப்பீடு கொடுத்தால் தங்களது நிலங்களை மனமுவந்து விற்றுவிட பெரும்பாலான விவசாயிகள் தயாராக உள்ளனர் என்பதே உண்மை.

மாற்று அரசியல் பேசுபவர்கள் மேற்கண்ட எதார்த்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் “அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்” “புரட்சிதான் தீர்வு” என்று கூறுவது வீரதீரமாக தெரிந்தாலும், எதார்த்தத்தில் அது மக்களை மிரளச் செய்வதாகவே உள்ளது.

எனவே வளர்ச்சித் திட்டங்கள் – நிலவளம் – விவசாயம் என்பதை மையப்படுத்தி மக்களிடம் விரிவான கலந்துரையாடலை நடத்துவது அவசியமாகும். நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இப்பிரச்சனைகளை எப்படி கையாள்வோம் என்பதை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். தொழில்வளர்ச்சியின் தேவை அவசியம் பற்றியும் வலியுறுத்த வேண்டும் நடைமுறை சாத்தியமான உடனடி கோரிக்கைகளையும் பரிசீலிக்கலாம். இவற்றின் மீதெல்லாம் மக்களின் கருத்தறியப்பட வேண்டும். மக்களைக் கற்றுக்கொள்வதற்கும், மக்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.. உண்மையான மாற்று அரசியலை முன்னெடுக்கும் அமைப்புகளுக்கு இதுதான் வலுசேர்க்கும். வெற்றுக்கோசங் களால் யாருக்கும் எந்தப்பயனும் கிட்டப் போவதில்லை. விரையங்கள் மட்டுமே மிஞ்சும்!

கூடுதல் விவரங்களுக்கு:

https://smartnet.niua.org/sites/default/files/resources/draft_national_land_utilisation_policy_july_2013.pdf

https://dolr.gov.in/programme-schemes/giz-led-pilot-land-use-planning-and-management-project

https://www.urban-industrial.in/about/about_giz/

https://dolr.gov.in/documents/land-titling%E2%80%93aroadmap

http://lupm.urban-industrial.in/e65664/e66028/

- மாறன்

Pin It