(புறநானூற்றுப் பாடலில் பிட்டங்கொற்றனின் இரு வகைப் பண்புகள் பற்றிக் கூறப்பட்டு உள்ளன. இங்கு இந்திய நாட்டின் பொதுவுடைமைக் கட்சிகளின் இருவகைப் பண்புகள் பற்றிக் கூறப்பட்டு உள்ளது.)

உழைக்கும் மக்களின் நலனை வேண்டிப்
பிழையிலாப் புரட்சியைத் தேர்ந்திடும் வினைஞரே!
செங்கொடி தன்னைப் போற்றுதல் கண்டும்
சங்கம் அமைத்து வினைஞரைத் திரட்டிக்
கூலி உயர்வைப் பெறுவது கண்டும்
போலிக் கட்சியை நம்பிட வேண்டாம்
கருத்தியல் அறிவை வளர்த்திடக் கேட்பினும்
வருண முறையை ஒழித்திட வேண்டினும்
மார்க்சிய சாயம் முழுதும் வெளுத்துப்
பார்ப்பன வெறியைத் தெளிவாய்க் காணலாம்

(உழைக்கும் மக்களின் நலன்களுக்காகப் பிழை இல்லாத புரட்சியைத் தேர்ந்து எடுக்கும் தொழிலாளர்களே! செங்கொடியைத் தங்கள் கட்சியின் கொடியாகக் கொண்டுள்ளதைப் பார்த்தும், தொழிற் சங்கம் அமைத்துத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, போராடி, கூலி உயர்வைப் பெற்றுத் தருவதைக் கண்டும், இங்குள்ள போலிக் கட்சிகளைப் பொதுவுடைமைக் கட்சிகள் என்று நம்பிட வேண்டாம். (தொழிலாளர்களிடையே) தத்துவ அறிவைப் பரப்ப வேண்டும் என்றும், பார்ப்பனர்கள் மட்டுமே அனைத்துச் சுகங்களையும் அனுபவிக்க முடிகிறபடியாக நடைமுறையில் உள்ள வருணாசிரம முறையை ஒழிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தால், மார்க்சிய சாயம் வெளுத்து, அக்கட்சிகளின் பார்ப்பன வெறியைத் தெளிவாய்க் காணலாம்.)