rajiniதமிழ் சினிமாவிற்கு
நான்கு முகங்கள் இருக்கின்றன
ஒன்றில் எப்பொழுதும்
யதார்த்தம் மிளிரும்
உண்மைகளும் பொய்யும்
ஒரே கட்டிலில் படுத்திருக்கும்
வன்முறையும் காதலும்
ஒரே உடலுக்குள் வாழும்
மரம் வெட்டுகிற கைகளும்
செடி நடுகிற கைகளும்
ஒரே உடம்பிலுள்ளதை எடுத்துக்காட்டும்
திடமும் திரவமும்
ஒரே இதயத்தில் கசிவதைக் காட்டும்
அன்றாடம் மலரும் பூக்களையும்
சருகாகும் விதங்களையும் படம் பிடிக்கும்
இன்னொரு முகம்
கலாச்சாரம் பண்பாடுகளின் கையில்
வெறித்தனங்களை கொடுத்திருக்கும்
கத்தியை தூக்குவதும்
பிள்ளைகளை கொஞ்சுவதும் ஒன்றென்று பேசும்
பிணங்களை புகைப்படங்களாய்க் காட்டி
பழைய காலாவதியான பெருமைகளைப் புரட்டும்
சிதைந்து மக்கி மண்ணாய்ப் போன
காலம் புதைத்த பழக்கங்களை
தோண்டி எடுத்து நடக்கவைக்கும்
மீசையை உருட்டி
சாதிப்பெருமை பேசும்
தனிமனிதன் காலில்
பெருங்கூட்டத்தை விழவைத்து மகிழும்
மூன்றாவது முகம் சுவாரசியமானது
கடவுளையும் அறிவியலையும்
ஒரே தட்டில் வைக்கும்
பாம்புகளை பால் குடிக்கவைக்கும்
நடப்பதும் நடக்கவிருப்பதும்
ஏற்கனவே கண்ணாடியாகத் தெரிகிறது என
கர்ம விதிகளை சுட்டும்
இறந்த பின்னும்
வாழ்க்கையிருக்கிறதென்று சொல்லும்
கடவுள் கை வைத்த இடம்
நதியாக நடந்து சென்றதை சொல்லும்
உலகின் மிகப்பெரிய நதி
எந்த கடவுளின் கையால்
திறந்து வைக்கப்பட்டதென்றால்
முகம் திரும்பி விடும்
நான்காவது முகம்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கிற
இன்னொரு மனிதனைக் காட்டும்
கற்களை உடைத்து அங்கிருக்கும்
சிலை மனிதர்களை வெளியே எடுக்கும்
சிரிப்பும் சிந்தனையும் கரங்களாக்கி
இடைவெளிகளை அழிக்கும்
வலிகளுக்கு மருந்திடும்
குரோதம் வெறுப்பு கோபம்
வஞ்சகம் வன்முறை கைவிடச்சொல்லும்
அன்பு கருணை காதல் நீரைத் தெளிக்கும்
தமிழகமே பெரிய திறந்த வெளி
சினிமா அரங்கம்தான்
எந்த முகத்தை ஆதரிக்கிறீர்கள்?

- கோசின்ரா