karlmark book 450புதிய நூற்றாண்டில் மனிதன் சார்ந்த எல்லா விதமான துறைகளிலும் புதிய அறிவியலும், தொழில் நுட்பமும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரு கின்றன.  மனிதவளம் பின்னுக்குத் தள்ளப்பட்டு அறிவியல் தொழில்நுட்ப வளம் வியக்கத் தகுந்த விதத்தில் மேலெழுந்து பரவி வருகிறது.  பொருள் உற்பத்தி முறையில் உடல் உழைப்பு முதன்மை இழந்து விட்டதால் மனித உறவுகள் தகர்ந்து சமூகம் என்ற கட்டமைப்புச் சிதறி புதியதோர் வடிவம் பெறுகிறது.  அதைப் போலவே உற்பத்தித் திறனும் பகிர்வும் கூடுதலாகி வருகின்றன. 

உலகச் சந்தைகளுக்குத் தேவையான பொருள்கள் உற்பத்தி செய்து ஈடுகட்டவேண்டிய தேவையும் பெருகி வருகிறது.  ஆகவே புதிய உற்பத்தி முறைச் சூழலில், மனித வாழ்க்கை குறித்த பாதுகாப்பு தேவையாக இருக்கிறது.  இதுவரை மனிதனுக்குப் பாதுகாப்பாக இருந்து வந்த இயற்கை வளம் மீண்டும் புதுப்பிக்க முடியாத அளவில் சிதைத்து அழிக்கப்படுகின்றன.  வணிக அடிப்படையிலான உற்பத்தி முறை நாடு களிடையே நெருக்கடிகளை உருவாக்கிப் போட்டியையும், போர்களையும் தோற்றுவித்து உலக அமைதிக்குக் கேடு விளைவிக்கிறது. 

இந்த நிலை மையில் மனித வாழ்வின் முக்கியத்துவத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவை மனிதனுக்கு வந்துவிட்டது.  அறிவியலும், தொழில் நுட்பமும் மனிதனுக்குத் தேவைதான்.  ஆகவே, அவை மனிதனின் கட்டுப்பாட்டில் இயங்கவேண்டுமே தவிர, அவைகளின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய தேவை இல்லை என்பதை நவீன உலகுக்கு உணர்த்த வேண்டியது இன்றைய தேவை.

மனித வரலாறு மாறுபட்ட தொழில் உற்பத்தி முறைகளின் வளர்ச்சியினூடாகத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக் கிறது.  நிலம் சார்ந்த உற்பத்தி முறைகளிலிருந்து, இயந்திரத் தொழில் சார்ந்த உற்பத்தி முறைக்கு மாறும்போது மனித வாழ்க்கையில் பல வகையான மாற்றங்கள் நிகழ்ந்து தொழில் முதன்மையான முதலாளித்துவ சமூக அமைப்பு தோன்றி வளர் கிறது.  அதன் தொடக்க நிலையை, பிரெஞ்சுப் புரட்சியை முதன்மையாக்கி மதிப்பீடுகளை முன் வைக்கலாம்.  முன்னுரிமை, சமத்துவம், சகோதரத் துவம் போன்ற கோட்பாடுகளை நடைமுறைப் படுத்தும் தேவை வரலாற்றில் நடைமுறைக்கு வருகிறதே.  அதன் தொடர்ச்சியான வளர்ச்சியே மார்க்சிய அறிவியலும், சித்தாந்தமும், தத்துவமும்.  அவை பொதுவுடைமைத் தத்துவமாகவும், நடை முறை வாழ்க்கையாகவும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது.

வரலாற்றுத் தேவையின் ஆக்கரீதியான வெளிப்பாடு மார்க்சியமாக மலர்ந்தது.  தொடர்ந்து மணம் வீசுகிறது.  இயற்கைக்கும், மனிதனுக்கும் இடை யிலான முரண்பாட்டின் இயங்குதலே வாழ்க்கை யாக இருந்த ஒரு தத்துவம் பின்னுக்குத் தள்ளப் பட்டு மார்க்சிய தத்துவம் என்ற புதிய தத்துவம் வடிவம் பெற்று நடைமுறைக்கு வந்து தொடர்ந்து வரலாற்றில் புதிய பரிமாணங்களுடன் வளர்ந்து வருகிறது.  இதை ஆழமாகப் புரிந்து கொள்ள மார்க்சிய தத்துவம் நமக்குப் பெருமளவில் உதவு கிறது.  அதன் முக்கியத்துவத்தை மீண்டும் புதுப் பிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில் வரலாற்றை மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

அதை முன் நிறுத்தும் வகையில் தற்போது புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது.  ‘மார்க்ஸ் பிறந்தார்.’ என்ற கார்ல்மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு.  ஆய்வுக் கண்ணோட்டத்தில் இந்த வரலாற்றை ஹென்றி வோல்கவ் வடிவமைத் துள்ளார்.  அதைத் தெளிவான முறையில் தமிழில் நா. தர்மராஜன் மொழி பெயர்த்துள்ளார்.

“இது, மார்க்சியத்திற்கு ஒரு வகையான ‘அறிமுகம்’ என்று கூறலாம்.  வேறு எத்தத்துவத்தைக் காட்டிலும் அதிகமாக மனித குலத்தின் விதியை நிர்ணயித்திருக்கின்ற இந்த மாபெரும் தத்துவத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் விளக்குகின்றது.

“இளைஞரான மார்க்சின் தேடல்கள், சிந்தனைகள், உணர்ச்சிகள், குமுறல்கள் என்ற உலகத்திற்குள் அவருடைய நெருப்புப் போன்ற கருத்துக்கள் பரிணாம வளர்ச்சியடைந்த படைப்புத் தன்மை கொண்ட சோதனைச் சாலைக்குள் தன்னோடு வாசகரையும் அழைத்துச் செல்லு வதற்கு இந்த உலகத்துக்குள் தன்னை அமிழ்த்திக் கொள்ளும்படி வாசகரை ஊக்குவிப்பதற்கு இப் புத்தகத்தின் ஆசிரியர் முயற்சி செய்திருக்கிறார்.”

இது, மிகவும் சரியான ஒரு மதிப்பீடு!

மார்க்சின் தனித்துவத்தையும், மனித வரலாற்றில் அவரது அரிய முயற்சியின் வாயிலாக அளித்த அவரது பங்களிப்பையும் நிறுவுவது இதனுடைய தனிச்சிறப்பு.

மனித வரலாற்றில் தொடர்ந்து வளர்ந்து வந்த ஐரோப்பிய மெய்யியலின் அறிஞரான ஹெகல் மெய்யியல் உட்பட இயற்கை அறிவியல், வரலாற்று அறிவியல் ஆகியவற்றின் அனைத்துத் துறை களையும் இயங்கியல் தர்க்கவியலைக் கொண்டு ஆராய்ந்தவர்.  மிகவும் ஆழமான இயங்கியல் உணர்வையும், அறிவியல் வளத்தையும் உள்ளடக்கி செழிப்பாக இயங்கியலை வளர்த்தெடுத்தாலும் அவருடைய கொள்கை கருத்துமுதல்வாதமாகவே நீடித்தது.

“இந்நிலையில், இவ்வுலகம் ஏன் இப்படி இருக்கிறது?  இதை மாற்ற இயலாதா?  என்று சிந்தித்துக் கொண்டிருந்த மார்க்ஸ் பொருளா தாரம், அரசியல், கருத்தியல் போன்ற தளங்களைத் தெளிவாகக் கற்றுத் தேர்ந்து ஹெகலின் நேர்த்தி யான இயங்கியலைப் பொருள் முதல்வாதத்துடன் இரண்டற இணைத்தார்.”

இதில், மார்க்சின் ஆளுமையின் வளர்ச்சியும், மார்க்சியத்தின் வளர்ச்சியும் ஒரே நிகழ்வுப் போக்காக ஆராயப்படுகிறது.

தன்னுடைய முன்னுரையில் இந்த நூலுக் கான தேவையையும், நோக்கத்தையும் நூலாசிரியர் வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார்.

“இளைஞரான மார்க்சின் ஆன்மிக வளர்ச்சியைப் பற்றி நுணுக்கமான அல்லது முழுமையான சித்திரத்தை வரைவதற்கு நான் முயற்சிக்கவில்லை.  அவருடைய ஆளுமையும், அவருடைய உலகக் கண்ணோட்டமும் வளர்ச்சி யடைந்த முக்கியமான திசை வழிகளைக் குறிப் பிடுவது இந்தச் சிறுநூலுக்குப் போதுமானதாகும்.  மார்க்சிய நூல்களில் உள்ள கருத்துக்களை விளக்கு வதும் விமர்சிப்பதும் என்னுடைய நோக்கமல்ல; அவற்றில் வாசகரின் அக்கறையைத் தூண்டித் தானாகவே சிந்திக்கும்படி தேடும்படி வாசகரை ஊக்குவிப்பதே என்னுடைய நோக்கம்.”

தொடர்ந்து அவர் இன்னொரு கருத்தையும் விளக்கித் தெளிவுபடுத்துகிறார்.  “மார்க்சியத்தின் வளர்ச்சியில் தத்துவஞான மற்றும் சமூக பொருளா தாரக் கருத்துக்களை மட்டுமின்றி, கலை அழகியல் கருத்துக்களும் முக்கியமான பாத்திரத்தை வகித்தன என்பது மெய்யாகும்.  சுதந்திரத்தை நேசிக்கின்ற கலை உலகமே இளைஞரான மார்க்சின் கருத்துக்கள் மலர்ந்த முதல் கல்விக் கூடமாகும்.  கலை அவரை யதார்த்தத்தின் பால் விமர்சன ரீதியான அணுகு முறையைக் கடைப்பிடிக்குமாறு செய்தது; தன்னிறை வுடைய அற்ப வாதத்தைக் கண்டனம் செய்யுமாறு பணித்தது.  மார்க்சின் கலையுணர்வின் வளர்ச்சி அவருடைய அரசியல் உணர்வின் வளர்ச்சியுடன் இணைந்தது.  அற்பவாதத்தைப் பற்றிய அவருடைய விமர்சனம் அதைப் பேணி வளர்த்த சமூகத்தின் அடிப்படைகளைப் பற்றிய விமர்சனமாயிற்று.”

இதையே, லெனின் இன்னொரு வகையில் தெளிவுபடுத்துகிறார்.  “மார்க்ஸ் மனித சிந்தனை தோற்றுவித்திருந்தவை யாவற்றையும் மறு பரிசீலனை செய்தார்.  விமர்சனத்துக்கு உட்படுத்தினார்.  தொழி லாளி வர்க்கத்தைக் கொண்டு சரிபார்த்தார்.  முதலாளித்துவ வரம்புகளால் கட்டுப்படுத்தப் பட்டோரில் அல்லது முதலாளித்துவத் தப்பெண்ணங் களால் கட்டுண்டோரால் வந்தடைய முடியாத முடிவுகளை இவ்வழியில் வந்தடைந்து அவர் வரையறுத்துக் கொடுத்தார்.”

இவற்றைத் தகுந்த தகவுகளோடு அறிவியல் கண்ணோட்டத்தில் நிலவுவதே ‘மார்க்ஸ் பிறந்தார்’ என்ற மாறுபட்ட வரலாற்றின் உள்ளடக்கமாக இருக்கிறது.

“ஜெர்மன் அற்பவாதம் பிரபலமானது; ஏனென்றால் ஹேய்னெயின் புண்படுத்துகின்ற கிண்டலும், மார்க்ஸ் மற்றும் எங்கல்சின் தப்ப முடியாத ஏளனமும் அதன் தோலை உரித்துக் காட்டியிருக்கின்றன.”

அற்பவாதம் எந்த விதத்திலும் ஒரு தேசியக் கண்டுபிடிப்பு அல்ல.  அது குட்டி முதலாளி வர்க்க சுயதிருப்தி.  போலியான மத ஆசாரம்.  இதயத்தில் கைக்கூலித் தனத்தை வைத்திருக்கின்ற முன்னாளைய கைக்கூலியின் அடிமைப்புத்தி ஆகியவற்றின் இயற்கை யான விளைவு, தனிமனிதவாத ஆளுமையை இவ்வாறு அடையாளப்படுத்துகிறது மார்க்சியம்.

மார்க்ஸ் அற்பவாதத்தை மேலும் தெளிவு படுத்துகிறார்.  “ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளி யாகலாம்; மாபெரும் ஞானியாகலாம்; மிகச் சிறந்த கவிஞராகலாம்.  ஆனால் அவர் குறை யில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதனாக முடியாது”

இது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் மார்க்ஸ் மற்றும் அவருடைய தந்தையான ஹென்ரிக் மார்க்ஸுக்கும் இடையில் நடைபெற்ற கடிதத் தொடர்புகளும், கருத்துப் பரிமாற்றங்களும் இதில் பொருத்தமாக எடுத்தாளப்பட்டு தெளிவுபடுத்தப் படுகின்றன.  அவற்றிலிருந்து மார்க்ஸ் உருவாக அவருடைய தந்தை எந்தெந்த வகையில் ஈடுபாடு காட்டி அவரை ஊக்குவித்திருக்கிறார் என்பதையும் இதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

தன்னுடைய வாழ்க்கைப் பணியான மூலதனத்தை எழுதுவதற்காகத் தன்னுடைய உடல் நலத்தை, மகிழ்ச்சியை குடும்பத்தைத் தான் தியாகம் செய் திருப்பதாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.  அவர் உருவாவதற்கு இன்னொருவரும் தன்னையே தியாகம் செய்திருக்கிறார் என்பதையும் வரலாற்றா சிரியர் உணர்வெழுச்சியுடன் அடையாளப்படுத்து கிறார்: “அவருடைய ஓய்வில்லாத வாழ்க்கையின் எல்லாச் சுமைகளையும் - அலைச்சல், சிறை, நாட்டி லிருந்து வெளியேற்றப்படுதல், வறுமை, காட்டு மிராண்டித்தனமான ஒடுக்கு முறை - ஜென்னி தன்னுடைய கணவருடன் பகிர்ந்து கொண்டாள்.  மூன்று குழந்தைகள் இறந்தன.  ஆனால் அவள் மார்க்ஸின் மிக நெருங்கிய சகாவாக, ஆலோச கராக அவருடைய நற்தெய்வமாக இருந்தாள்.  ருஷ்யாவிலிருந்து அமெரிக்கா வரையிலும் புதிய போராடுகின்ற உலகத்தின் சின்னமாக மார்க்ஸ் ஆகியிருப்பதை அவள் உயிரோடிருந்து பார்த்தாள்.  இது அவள் இழந்த அனைத்துக்கும் ஈடாக இருந்தது.”

மார்க்ஸ் தன்னுடைய கற்பனை உலகங் களைப் படைத்து முடிப்பதற்குள்ளாகவே உடைந்து விடுகிறார்.  புதிய உலகங்களைத் தேடிப் புறப்பட்டு விடுகிறார்.  அவர் எழுதிய ‘தேடல்’ என்ற கவிதையை ஜென்னிக்கு அர்ப்பணித்தார்.  அதில் அவரே பின்வருமாறு எழுதுகிறார்:

என்னைக் கட்டிய தலைகளை நொறுக்கி எழுந்தேன்.

“எங்கே செல்கிறாய்?”

“எனக்கொரு உலகம் தேடி”

“இங்கே அகன்ற பசும்புல் வெளிகளும்,

கீழே - கடல்களும்

மேலே - விண்மீன்களும் இல்லையா?”

“உலகம் என்னிடமிருந்து தோன்ற வேண்டும்

என் இதயத்தில் அது வேரூன்ற வேண்டும்

என் இரத்தத்தில் அது ஊற்றெடுக்க வேண்டும்

என் ஆன்மாவின் மூச்சில் அது வசிக்க வேண்டும்

நான் நெடுந்தூரம் அலைந்து சென்றேன்

திரும்பினேன்-கீழும் மேலும் உலகங்கள்

விண்மீன்களும் கதிரவனும் துள்ளின

மின்னல் வெட்டியது-நான் மடிந்தேன்.”

“மார்க்ஸ் மிக அதிகமான அன்பும், நட்புணர்ச்சியும் கொண்டவர்.  அதனால்தான் அவர் தவறு செய்தவர்களை அதிகமாக வெறுத்தார்.  அவருடைய வாழ்க்கையில் இரு நபர்கள் மிகவும் அசாதாரணமான பாத்திரத்தை வகித்தனர்.  ஜென்னி யின் காதலும், எங்கல்சின் நட்பும் வாழ்க்கை மார்க்சுக்கு அளித்த மிகவும் சிறந்த கொடை களாகும்.

“ஹெகல் எழுதிய தர்க்கவியல் முழுவதையும் நன்குப் படித்துப் புரிந்து கொள்ளாமல் மார்க்ஸ் எழுதிய ‘மூலதனத்தை’ புரிந்துகொள்ள முடியாது என்று லெனின் எழுதினார்.  அதைப் போலவே,  ஷேல்லிங், ஃபிஹ்டே, கான்ட், லேய்ப்னித்ஸ், ஸ்பினோஸா, அரிஸ்டாடில், பிளாட்டோ, சாக்ரடீஸ், டெமாக்ரீடஸ், ஹெரக்லீடஸ் ஆகியோருடைய தத்துவ குணங் களைப் புரிந்து கொள்ளாமல் ஹெகலின் தர்க்க வியலைப் புரிந்து கொள்ள முடியாது.”

“அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச்சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத் திருக்கிறது என்ற உண்மையிலிருந்து மார்க்ஸ் தெளிவாகவும், சந்தேகத்திற்கு இடமில்லாமலும் முன்னேறுகிறார்.  தனிச்சொத்துடைமை “அந்நியப் படுத்தப்பட்ட உழைப்பின் உற்பத்தி முடிவு, அவசிய மான விளைவு” பொருளாதார அந்நியமாதல்.

“அந்நியமாதலின் வெவ்வேறு வடிவங்களின் (அரசியல், மத, தத்துவஞான, அறவியல், இதரவை) சாயல்களும், அம்சங்களும் பொருளாதார அந்நிய மாதலில் குவிகின்றன.  மொத்த மனித அடிமைத் தனமும் உற்பத்தி முறையில் தொழிலாளியின் உறவின் அடிமைத்தனத்தில் வெளிப்படுகிறது.  “...அடிமைத்தனத்தின் எல்லா உறவுகளும் இந்த உறவின் உருத்திரிபுகளும், விளைவுகளுமே.”  இங்கே மார்க்ஸ் அடிப்படையில் சமூக உற்பத்தி உறவுகளின் தலைமையான பாத்திரத்தைப் பற்றிய கருத்தை வகுத்துரைக்கிறார்.

“ஹெகலிடம் எல்லா அந்நியமாதலுமே கருத்தின் அந்நியமாதலாக இருந்தது.  அகப் பொருளின் “உணர்வில்” இந்த ரகத்தைச் சேர்ந்த ஊடுருவுதளம் சாத்தியமாக இருந்தது.  ஆனால், அவர் உலகத்துடன் தன்னுடைய உறவுகளின் அடிமைத் தன்மையை உணர்ந்து கொண்டிருப் பதால் அவருடைய அந்நியமாதல் மறையவில்லை.  அது, அதிகரிக்கிறது.

“ஹெகலியத் தத்துவகுணத்தின் கருத்துமுதல் வாதமும் வரையறைகளும் எப்படி இருந்தாலும் உலகத்தைப் பற்றிய விளக்கத்தில் அது முன்னே எடுத்து வைக்கப்பட்ட மாபெரும் காலடியாக இருந்தது.”

“ஹெகல் தன்னுடைய தத்துவ ஞானத்தில் உலகத்தை தலைகீழாகத் திருப்பி வைத்திருக்கிறார். அது, அந்த ஆபத்தான நிலைமையிலேயே நின்று கொண்டிருந்தது.  முன்னே போகமுடியவில்லை இப்படி ஆடிக்கொண்டிருக்கும் அடிப்படையின் மீது இயக்கவியல் முறை வளர்ச்சியடைய முடிய வில்லை.”

“தத்துவ ஞானம் தனிமுதலான கருத்துமுதல் வாதம் என்ற ஹெகலிய அமைப்பை முன்வைத்த பொழுது அது செய்ய வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே நிறைவேற்றிவிட்டது.  அது அறியக் கூடிய அனைத்தையும் ஏற்கனவே அறிந்துவிட்டது.  அது சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டது.  தனிமுதலான உண்மை அறியப்பட்டு விட்டது.”

ஹெகலிய வாதத்திலிருந்து மார்க்சியத்திற்கு முன்னேறிய எங்கல்ஸ் பின்வருமாறு எழுதியது முற்றிலும் நியாயமே.  “ஹெகலின் தர்க்கவியலி லிருந்து இந்தத் துறையில் ஹெகலின் உண்மை யான கண்டுபிடிப்புகளைக் கொண்ட கருத்தைப் பிரித்தெடுப்பதற்கும், இயக்கவியல் முறையின் மீதுள்ள கருத்துமுதல் வாதப் போர்வைகளை நீக்கி, அதன் எளிமையான வடிவமே கருத்தின் பரிணாமத்திற்கு ஒரே சரியான முறை என்பதை நிறுவுவதற்கும் மார்க்ஸ் ஒருவர் மட்டுமே இருந்தார்; இன்னும் அவர் ஒருவர்தான் இருக் கிறார்.  அரசியல், பொருளாதாரத்தைப் பற்றிய மார்க்சின் விமர்சனத்துக்கு ஆதாரமான இந்த முறையை உருவாக்கியது அடிப்படையான பொருள் முதல்வாதக் கருதுகோளுக்கு எந்த விதத்திலும் முக்கியத்துவத்தில் குறைந்ததல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.”

இவ்வாறு கார்ல்மார்க்ஸ் தனது முன்னோடி யான ஹெகலின் கருத்துக்களை ஆய்ந்தறிந்து உலகளாவிய நன்மைகள் அடங்கிய ஒரு புதிய அறிவியல் கண்ணோட்டத்தை மனித குலத்திற்கு இது அடையாளம் காட்டுகிறது.

ஜென்னி மார்க்ஸ் மரணமடைந்து ஒரு வருடத்திற்குப் பிறகு 1883 மார்ச் 14ந் தேதியன்று கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது, “மனித குலத்தில் ஒரு ‘தலை’ குறைந்துவிட்டது அது, நம் காலத்தி லேயே மாபெரும் தலை” என்று எங்கல்ஸ் எழுதினார். 

காலப்போக்கில் இதுவே சமூக அறிவியலாக மாற்றம் கொண்டு உலகளாவிய அளவில் இயங்கி வருகிறது.  ஒவ்வொரு மனிதனுமே தன்னிலிருந்து, தன்னுடைய வாழ்க்கைச் சூழலிலிருந்து தன்னுடைய அனுபவம் சார்ந்த புற உலகைப் புரிந்து கொண்டு இயல்பாக வாழ்க்கையை மதிப்பீடு செய்கிறான்.  அவனுடைய மதிப்பீடுகள் மாறக் கூடியவையாக இருந்தாலும், ஏற்கனவே நிறுவப்பட்ட சமுதாயக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இயங்க வேண்டியிருக்கிறது.  அவ்வப்போது அவன் வந்தடையும் தளத்தில் நின்றபடியே அவன் தன்னுடைய வாழ்க்கையைப் புரிந்து கொண்டு உணர்வு ரீதியாக அதனை மதிப்பீடு செய்கிறான்.  அவனுடைய அனுபவங்கள் சார்ந்த புரிதல்களும், உணர்தல்களுமே அவனளவில் வாழ்க்கை பற்றிய மதிப்பீடாகிறது.  இந்த அடிப்படைகளை ஆழ்ந்து ஆய்வு செய்து அக, புற இயக்கங்களை உணர்வது வாயிலாக உலகளாவிய வாழ்க்கையை மதிப்பீடு செய்வதும் வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.  அந்த வகையில் முற்றிலும் மாறுபட்ட, நடைமுறை சார்ந்த அறிவியல் கண்ணோட்ட முடைய மார்க்சியத் தத்துவத்தின் எதிர்மறையான தோற்றத்தையும் வளர்ச்சியையும் வாசிப்புக்கு உகந்த வகையில் வடிவமைத்திருக்கிறார் வரலாற்று ஆசிரியர்.

கார்ல் மார்க்ஸ் தன்னிலிருந்து வாழ்க்கையைக் கற்கத் தொடங்கி தனிமனிதன் என்ற நிலையி லிருந்து தன்னுடைய பல வகையான அனுபவங் களின் ஊடாக வளர்ந்து தன்னை சமூக மனிதனாக இனம் காணும் வாழ்க்கையை அறிவியல் கண் ணோட்டத்தில் வாசிப்புக்கு எளிமையாக்குகிறார்.  ஹெகலிய தத்துவத்திலிருந்து மீண்டு, சமுதாயக் கண்ணோட்டம் மிகுந்த அறிவியல் கண் ணோட்டத்தை உலகுக்கு வழங்கியிருக்கிறார்.

ஒரு மனிதன் தன்னுடைய உயிர்வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவனே உற்பத்தி செய்து கொள்ள முடியாது.  ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குத் தேவையான எல்லாவற்றையும் தன்னுடைய ஏதேனும் ஒரு வகையான உழைப்பி லிருந்தே தனக்குத் தேவையானவைகளைப் பெற்று வாழ்கிறான்.  சமூக மனிதன் என்ற உணர்வில் இந்த ‘மார்க்ஸ் பிறந்தார்’ நூலை எவரும் வாசிக்கலாம்.

மார்க்ஸ் பிறந்தார்

ஹென்றி வோல்கவ்

தமிழில் : நா. தர்மராஜன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098

தொடர்புக்கு : 044 - 26251968

விலை: ` 175/-

Pin It