இரவின் நீட்டலில் பகிரமுடியாது கசக்கிய கைக்குட்டை
எங்கோ நினைவுக்கூறுகளின் குவியலில் மறைந்திருக்கிறது!
பதியும் வார்த்தைகள் பதிந்தபடியே கரைகின்றன
தெளியும் நிமிடங்கள் வெகுவாய் சாய்த்துப் பார்க்கும்
ஒரு பழுத்த இலையென சரசரத்துத் தேய்கிறேன்
ஓர் ஆளுயுர அரவத்தின் இறுதியில்....
சுளீரென்ற சத்தம் விடுத்து
சுற்றமனைத்தும் விக்கித்து நிற்கின்றன,
அணைந்தது காற்றா நெருப்பா?
நனைந்தது நீயா நானா?
நீயெனில் பறக்கவும், நானெனில் விலகவும்
செயல்படத் துவங்க வேண்டும்!
ஒரு தணிந்த இரவு தேவைப்படுகிறது
செயல்படவும் மீண்டும் உயிர்க்கவும்,
இதே வளராத சுழலின் ஒற்றைப் புள்ளியில்
முடிவுகளற்று நிற்க மட்டுமே
கற்றுக் கொண்டிருக்கிறேன் இன்றளவும்..
நினைவுகளின் துவைக்காத கைக்குட்டை இன்னும்
கசக்கியபடி உள்ளேயே மறைந்திருக்கிறது,
அதனூடே மிஞ்சி இருந்த நீர்த்த வன்மமும்!!
- தேனப்பன் [