‘தமிழால் மருத்துவக்கல்வி முடியும்’ என்றொரு அருமையான நூல் அண்மையில் டாக்டர் சு.நரேந்திரன் அவர்களால் எழுதப்பெற்று நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது, தமிழ் வழி மருத்துவக் கல்வி முடியுமா என்று சந்தேகப் படும் அறிஞர்களுக்கும், மருத்துவர்களுக்கும் ‘முடியும்’ என்று திட்டவட்டமாகப் பதில் சொல்வது போல நூலின் தலைப்பு அமைந்துள்ளது. இந்நூல் 197 பக்கங் களில் ஐந்து பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுச் செவ்வனே வடிவமைக்கப்பட்டுள்ளது. 1. கலைச் சொல்லாக்க நெறிமுறைகள், 2. மருத்துவப் பாட நூல் உருவாக்கம், 3. மருத்துவத்தமிழ் முன்னோடிகள், 4. முடிவுரை, 5. பின்னிணைப்பு ஆகிய பெரும் பகுதிகளைப் பொருளடக்கத்தைப் பார்த்தாலே தெரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்வழி மருத்துவம் - முடியும் என்ற தலைப்போடு தன்னம்பிக்கையோடு முதல் இயல் தொடங்குகிறது. ஒட்டுமொத்த நூலுக்குப் பாயிரம் போல முதல் இயல் அமைந்துள்ளது. இப் பகுதியில் ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து தமிழகத்தில் மலர்ந்த மருத்துவ அறிவியல் சிந்தனைகள், அவற்றை ஐரோப்பியர்கள் பரப்பிய முறைகள் ஆகியவை குறித்து டாக்டர் நரேந்திரன் அவர்கள் அவருக்கேயுரிய தனித்துவ நடையில் விவரிக்கிறார். வீரமாமுனிவர், சீகன்பால்கு, கிரண்ட்லர், லுட்விக், பெரடிரிக் ஆகியோரின் தமிழ் மருத்துவ வளர்ச்சிக்கான பங்களிப்பு வெகுவாக இங்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தரங்கம்பாடியில் தமிழர்களைப் போலவே உண்டும் உடுத்தியும் வாழ்ந்த கிரண்டலர் இங்குள்ள ஓலைச்சுவடிகளைத் தேடியலைந்து திரட்டியதோடு ‘அகஸ்தியர் இரண்டாயிரம்’ என்னும் சுவடியைத் தமிழ் மருத்துவர் என்ற தலைப்பில் ஜெர்மன் மொழியில் பெயர்ப்பு செய்தது நமக்குத் தெரியவருகின்றது. இன்னும் இதுபோல எத்தனை பணிகள் எங்கெங்கு நடைபெற்றுள்ளனவோ? ஐரோப்பியர் வழியாகவே மேலை மருத்துவம் தமிழகத்தில் நுழைந்தது என்றும் தொடக்கப் பகுதியில் சுட்டி விளக்குகிறார்.

su narendran bookதமிழ்வழி மருத்துவக் கல்வியில் கலைச் சொல்லாக்கத்தின் தேவை குறித்தும் அவற்றை உருவாக்கிக் கொள்ளும் நெறிமுறைகள் குறித்தும், உருவாக்கிய பிறகு அவற்றை எவ்வாறு தரப்படுத்துவது என்பது குறித்தும் பல்வேறு சான்றுகளைத் தந்து பகுதி இரண்டில் விரிவாக விளக்கியுள்ளார். சான்றுகள் பெரும்பாலும் மருத்துவத் துறையில் பயன்படுத்தப் படும் சான்றுகளே. ‘இதயம்’ என்ற சொல் பெரு வழக்கிலுள்ளது. ‘நெஞ்சாங்குலை’ என்ற தூய சொல் கால்கொள்ளவில்லை. ‘Heart’ என்பதற்கு இதயம், இருதயம், மார், நெஞ்சு என்ற சொற்கள் பயன்படு கின்றன. இதயம் என்ற பெருவழக்குச் சொல்லையே தேரலாம். இருதயம் நெருடலானது ‘heart attack’ என்னும் போது மாரடைப்பையும் ‘heart burn’ என்னும் போது நெஞ்செரிச்சலையும் பயன்படுத்தலாம் என்று ஓரிடத்தில் விளக்குகிறார் (ப. 59). இவ்விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் பொருத்தமாகவும் உள்ளது. பலகாலும் தமிழில் மருத்துவக் கலைச் சொற்களை உச்சரித்ததால் பெற்ற அனுபவத்தின் வெளிப்பாடேயாகும் இது. ‘மருத்துவர்கள் கூச்சப் பட்டால் நோய் குணமாகாது. சொல் ஆட்சியில் கூச்சப்பட்டால் பொருள் விளங்காது’ என்றும் ஓரிடத்தில் கூறுகிறார். சொல் தேர்வு குறித்து டாக்டர் நரேந்திரன் அவர்கள் தருகின்ற நெறிமுறைகளைப் பிற துறைகளில் கலைச்சொல் படைக்கின்ற அறிஞர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் கலைச் சொல் வழக்கில் இருமொழி வழக்கு இருந்தே தீரும் என்பது டாக்டரின் நம்பிக்கை (ப. 72). தேவைக் கேற்ப கிரந்த எழுத்துக்களையும் சர்வதேசச் சொற் களையும் பிறமொழிச் சொற்களையும் எடுத்துக் கொண்டு தூசு படிந்த தமிழை மாசு படியாது விளங்குமாறு செய்ய வேண்டும் என்று ஓரிடத்தில் கூறுகின்றார் (ப. 90).

நமது மொழி வழியாகப் பிற பாடங்களைக் கற்பிப்பதற்கு முன்தேவையாக அமைவது பாடநூல் உருவாக்கம். அறிவியல், மருத்துவம் தொடர்பான நூல்களையும் கட்டுரைகளையும் எழுதும்போது சர்வதேச சொற்கள், சமன்பாடு, வாய்பாடு, குறியீடு களை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இம்முறையே உலக அளவில் ஏனைய மொழிகளிலும் எடுத்தாளப்படுகிறது என்று வழிகாட்டுதல்களைக் கொடுத்துள்ளார் (ப. 96). இப் பகுதியில் பிரெஞ்சு-இங்கிலீஷ்-தமிழ் சம்பாஷணைச் சுருக்கம் (வைத்தியர்களின் உபயோகத்திற்காக) என்றொரு நூலினை டாக்டர் அறிமுகப்படுத்துகிறார். இந்நூல் 1904 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. த பால் கோல்சின் என்ற பிரெஞ்சு சுகாதார அதிகாரியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகளோடு எவ்வாறு மருத்துவர்கள் நோய்கள், மருத்துவம் குறித்து தமிழில் உரையாட வேண்டும் என்பதனைக் கற்பிக்கும் நோக்கில் படைக்கப்பட்டுள்ளது, இந்நூலை மாதிரியாகக் கொண்டு தற்காலத்திலும் உரையாடல் நூல்கள் தயாரிக்கலாம். செய்முறை-சோதனைச் சாலைகளில் மருத்துவர்-மாணவர்கள் உரையாடல் நிகழ்த்த பாடங்கள் தயாரித்தால்-மேற்கண்ட நூலினை மாதிரியாகக் கொள்ளலாம்.

அரிய நூல்களைத் தேடித் திரட்டி அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் டாக்டரின் முயற்சி மிகவும் பாராட்டிற்குரியது. மருத்துவ இதழ்கள் குறித்த ஓர் வரலாற்று ரீதியான விவரணையும் விளக்கமும் இப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. விடுதலைக்கு முன்பு வந்த மருத்துவ இதழ்கள், சிறுவர்களுக்கான அறிவியல், சுகாதார இதழ்கள் ஆகியவற்றையும் டாக்டர் அறிமுகப்படுத்துகிறார்.

மூன்றாவது பகுதி மருத்துவத் தமிழ் முன்னோடிகள் என்ற தலைப்பில் உள்ளது. இப் பிரிவில் மேனாட்டறிஞர்களான இரேனியஸ், டாக்டர் சாமுவேல் ஃபிஷ்கிறீன், ம,ஜகந்நாத நாயுடு, டாக்டர் அ.கதிரேசன் ஆகியோரின் அரிய முயற்சிகள் விரிவாக விவரிக்கப்படுகின்றன. இவர்கள் யாவரும் முன்னோர் போல விளங்கிய மருத்துவத் தமிழ் முன்னோடிகளாவர். டாக்டர் சாமுவேல் ஃபிஷ்கிறீன் பணிகள் பற்றி, மருத்துவம், வேதியியல், தாவரவியல் நூல்களை வெளியிட்டவர் எனவும், இவரே தமிழில் முதல் கலைச்சொல் கோட்பாட்டாளர் எனவும், கூறுவது பொருத்தமுடையதாகும் என்று டாக்டர் நரேந்திரன் குறிப்பிடுகிறார். தமிழ்க் கலாச்சாரத்தைச் சற்றேனும் குறைக்காது தமிழர்களிடையே நிலவிய அறிவியல் சார்ந்த சில நடைமுறை மருத்துவங் களையும் இணைத்து மேலை மருத்துவத்தைத் தமிழில் எழுதியதோடு நில்லாமல் மாணவர்களை முதன்முதலில் தமிழ்வழி மேலை மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்கிய பெருமை இந்த அமெரிக்க மருத்துவப் பாதிரியாரையே சாரும் (ப. 127) என்று குறிப்பிடுகிறார். டாக்டர் கிறீன் இலங்கையில் பணி யாற்றியதைப் போலவே தமிழகத்திலும் ம.ஜகந்நாத நாயுடு (1885-1888) என்பவர் மேலை மருத்துவ நூல் களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இவர் ஆயுர்வேத மருத்துவ முறைகளை மேலை மருத்துவத் துடன் இணைத்து மருத்துவத்தில் புதுமைகள் பல செய்துள்ள விவரங்களும் இந்நூலின் வழி தெரிய வருகின்றன.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கிணங்க டாக்டர் சு.நரேந்திரன் அவர்களின் நூல் தமிழால் மருத்துவக்கல்வி முடியும் என்று கட்டியம் கூறுகிறது. மனமிருந்தால் மார்க்கமுண்டு. தமிழர் மனம் வைத்தால் அனைத்துக் கல்வியையும் தமிழ் மொழியிலேயே தரமுடியும். அனைவருக்கும் தமிழ் மொழியிலேயே வேலை தரமுடியும். ஆங்கிலம் கற்றால்தான் உலக அளவில் வேலைக்குச் செல்லலாம் என்பது மாயை. இதனையும் மக்கள் உணர வேண்டும். இம்மாயையைத் தகர்க்க வேண்டும்.

நூலின் வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது. அட்டையிலுள்ள டாக்டர் படம் நூலை கையிலெடுத்துப் பார்க்கத் தூண்டுவதாய் உள்ளது.

இந்நூலினை எழுதுவதற்கு உதவிய நோக்கு நூல்களின் பட்டியல் எங்கும் இடம்பெறவில்லை. தந்திருந்தால் மற்றவர்களுக்கும் மிகவும் பயன்படும். கிறித்தவமும் அறிவியலும் என்றொரு நூலையும் ஏற்கனவே டாக்டர் எழுதி வெளியிட்டுள்ளார். அந்நூலிலுள்ள தகவல்கள் இந்நூலிலும் பயன் கருதி எடுத்தாளப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இந்நூலினைப் படைத்துள்ள டாக்டர் சு.நரேந்திரன் அவர்கள் தம் மருத்துவப் பணியோடு இடையறாது நல்ல பல அறிவியல் - குறிப்பாக மருத்துவ அறிவியல் சார்ந்த நூல்களை எழுதி வருகின்றார். ‘பணியை மாற்றிச் செய்வதே சிறந்த ஓய்வு’ என்னும் கொள்கை யுடையவர். ஓய்வு நேரத்தில் கூடத் தொடர்ந்து நூலாக்கப் பணியில் ஈடுபட்டு வருகின்ற கலைமா மணி. அத்தகைய மாமனிதரின் இன்னொரு படைப் பாக ‘தமிழால் மருத்துவக்கல்வி முடியும்’ என்ற நூல் வந்துள்ளது. டாக்டர் நரேந்திரன் அவர்களின் நூலினை அடியற்றிப் பல நூல்கள் வரவேண்டும். டாக்டருக்கு நமது பாராட்டுக்கள்.

தமிழால் மருத்துவக்கல்வி முடியும்

டாக்டர் சு.நரேந்திரன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை - 600 098.

தொலைபேசி எண்: 044 - 26359906

விலை : 165/-

Pin It