பகுத்துண்டு வாழ்ந்த மகிழ்வை நினைந்தும்
தகுந்தார் யார்க்கும் வேலை உரிமையும்
கல்வி மருத்துவம் தடையின் றளித்தும்
பல்லுயிர் ஓம்பிய சமதர்ம ஆட்சியை
மறக்க வொண்ணாது மருகும் வினைஞரே!
இவ்வள வேதான் சமதர்ம ஆற்றல்
ஒவ்வும் என்று மயங்கிட வேண்டாம்
அழிவுப் பாதையில் செல்லும் உலகை
வழிதிருப்பிக் காக்கும் வல்லமை பெற்ற
சமதர்ம ஆட்சியை அமைப்போம் வாரீர்

(சோஷலிச ஆட்சியில் பல மக்கள் பகுத்துண்டு வாழ்ந்த நாட்களை எண்ணியும், வேலை செய்யத் தகுதியுடைய அனைவருக்கும் வேலை பெறும் உரிமையும், கல்வியும், மருத்துவமும் தடையின்றி கிடைத்து மக்கள் நலமாக வாழ்ந்ததையும் எண்ணி ஏங்கும் தொழிலாளர்களே! சோஷலிச அமைப்பின் ஆற்றலால் இவ்வளவு தான் முடியும் என்று எண்ணி மயங்கிட வேண்டாம். (புவி வெப்ப உயர்வினால்) அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருக்கும் இவ்வுலகை அழிவுப் பாதையில் இருந்து திருப்பிக் காக்கும் வல்லமையும் சோஷலிச அமைப்புக்கு உள்ளதால் (உலகம் அழியக் கூடாது என்று விரும்பும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து மீண்டும்) சோஷலிச ஆட்சியை அமைப்போம் வாரீர்.)

- இராமியா