1858-ல் ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” என்ற கொள்கையை முன்வைத்து போராடி வெற்றி பெற்றனர். உலகிலேயே முதன் முதலில் 8 மணி நேர வேலை எனும் கோரிக்கையை முன்வைத்துப் போராடி வெற்றி பெற்ற நாடு ஆஸ்திரேலியாவாகும்.
ஆனால் மே நாள் என்பது 1886 மே மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற தொழிலாளர்களின் 8 மணி வேலை நேரத்திற்கான போராட்டத்தையும், குறிப்பாக சிகாகோ நகரில் கே மார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தையும், அதற்காக உதிரம் கொட்டியவர்கள், தண்டனை பெற்றவர்கள் ஆகியோரின் தியாகத்தையும் நெஞ்சில் ஏந்தி தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றச் சூளுரைப்பதற்காக கொண்டாடி வருகிறோம்.
1886-க்கு முன்னால் தொழிலாளி வர்க்கம் வேலை நேரக் குறைப்பிற்காகவும், கூலி உயர்வுக்காகவும், சீர்திருத்தங்களுக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடியது உண்டு. 1893-ல் நடந்த தொழிலாளர் வர்க்கத்தின் பன்னாட்டு அமைப்பான இரண்டாம் அகிலத்தின் மாநாட்டில் “மே நாள் ஆர்ப்பாட்டங்களின் நோக்கமானது 8 மணி நேர வேலைக்காக மட்டுமல்லாமல் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை ஒழித்து உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்துவதாகும்” என்று வழிகாட்டினார் எங்கெல்ஸ்.
எனவே, மே நாள் என்பது முதலாளி வர்க்க நலனுக்காகக் கட்டப்பட்ட அரசியல் அதிகார அமைப்புகளைத் தொழிலாளி வர்க்கம் தூக்கி எறிந்துவிட்டு பன்னாட்டுத் தொழிலாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் தனக்கான அரசியல் அதிகார அமைப்புகளை நிறுவச் சூளுரைப்பதாகும். இதற்கு மாறாக முதலாளித்துவக் கொடியின் கீழும், சீர்திருத்தவாதிகளின், திருத்தல்வாதிகளின் முழக்கத்தின் கீழும் செயல்படும் தொழிற்சங்கங்கள் மே நாளை பொழுதுபோக்கிற்காகவும், போனஸ்க்காகவும், கூலி உயர்வுக்காகவும் இன்ன பிற சில்லரைச் சீர்திருத்தங்களுக்காவும் சூளுரைக்கின்றன. அல்லது முதலாளியத்திற்கு வால் பிடிக்கின்ற முழக்கங்களை முன் வைக்கின்றன. இது தந்திரமாகத் தொழிலாளி வர்க்கத்தின் கவனத்தை மடைமாற்றி முதலாளி வர்க்கத்திற்குத் தொண்டு செய்வதாகும். எனவே, தொழிலாளி வர்க்கம் இவர்களிடையே மிகவும் எச்சரிக்கையாக இருப்பதுடன் அவர்களை அம்பலப்படுத்தவும் வேண்டும்.
தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் அதிகார அமைப்பு சோவியத் வடிவிலான ஆட்சி முறையே!
நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற ஜனநாயகம், அதன் ஆட்சிமுறையானது முதலாளி வர்க்கத்திற்கே அதிகாரம் உள்ள அமைப்பாகும். அது முதலாளி வர்க்கத்தின் நலனுக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.முதலாளிய நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் கம்யூனிஸ்டுக் கட்சிகள் மிகப் பெரும்பான்மையாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தாலும்கூட, அதனைத் தொழிலாளி வர்க்கத்திற்கோ, அல்லது தொழிலாளி வர்க்கத்தின் நட்பு சக்தியான உழவர் வர்க்கத்திற்கோ அதிகாரம் உள்ள அமைப்பாக ஒரு போதும் செயல்படுத்த இயலாது. 1817-ல் ஏற்பட்ட பாரீஸ் கம்யூன் அனுபவமும்கூட இதைத்தான் காட்டுகிறது. எனவே, தொழிலாளி வர்க்கம் பாராளுமன்ற ஜனநாயக்கத்தின் முதலாளித்துவ நலனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாட்டின் அரசியல் அதிகார அமைப்பும் வெவ்வேறு முறையில் கட்டி அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கட்டப்பட்ட அரசியல் அதிகார அமைப்புகள் பெரும் நிலவுடைமையை ஒழித்து முதலாளித்துவ வளர்ச்சிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. இது தனியார் முதலாளிய சொத்துடைமையைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாகும். ரஷ்யா, சீனா, வியட்நாம் நாடுகளில் புரட்சி ஏற்பட்ட பிறகு மிகப் பெருவாரியான தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் மக்களுக்கு (உடல் மற்றும் மூளை உழைப்பாளிகளுக்கு) அதிகாரம் அளிக்கும்வகையில் அந்தந்த நாட்டிற்கேற்ப சோவியத் வடிவிலான ஆட்சிமுறைகள் அமைக்கப்பட்டன. இது சமத்துவ நோக்கம் கொண்டதாகும்.
பல்வேறு கலப்பினத் தேசிய இனங்களைக் கொண்ட அமெரிக்கா, ரஷ்யாவுடன் இந்தியாவை ஒப்பிட்டோமானால் அமெரிக்கா கூட்டரசு என்ற வகையில் ஜனநாயகத் தன்மை கொண்டது. இது 50 மாநிலங்களையும் ஒரு கூட்டமைப்பு மாவட்டத்தையும் ஐந்து முதன்மையான ஒன்றிணைக்கபடாத நிலப்பரப்புகளையும், 9 சிறிய வெளிப்புறத் தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது.
ஒவ்வொரு மாநிலங்களும் தனித்தனி அரசமைப்புகளுடன் செயல்படுகின்றன. இந்தியாவில் மாநிலங்களவை இருப்பதுபோல (ராஜ்யசபா) அமெரிக்காவில் செனட் உள்ளது. அமெரிக்கா செனட் என்பது எண்ணிக்கையில் சிறிய பெரிய மாநிலங்கள் இருந்தாலும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இருவர் மட்டுமே இடம் பெறுவர். அவ்விருவர் மட்டுமே அம்மாநிலச் சிக்கலைத் தீர்க்கும் அதிகாரம் பெற்றிருப்பர். அந்த வகையில் 50 மாநிலங்களுக்கும் இருவர் வீதம் 100 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் இந்தியாவிலுள்ள மக்களவை, மாநிலங்களைவை அப்படி உள்ளனவா? என்றால் இல்லை. இந்தியாவைக் கூட்டாட்சி நாடாகவோ அல்லது ஒன்றியமாகவோ கூறுவது மக்களை ஏமாற்றவே. பல்வேறு கலப்பினத் தேசிய இனங்கள் கூட்டாட்சியுடன் வாழும் அமெரிக்காவுடனோ தேசிய இனங்களுக்கு அரசுரிமை கொண்ட ரஷ்ய ஒன்றியத்துடனோ இந்தியாவை ஒப்பிட இயலாது. இந்தியா என்பது புவியியல் அடிப்படையில் அனமந்த நாடே ஒழிய மொழிவழியிலான இயற்கையான தேசியம் அல்ல. இந்தியாவிலுள்ள தேசிய இனங்களுக்கு அரசுரிமை அளித்து ஜனநாயகப் படுத்த வேண்டும். அதாவது தேசிய இனங்களுக்கு தன் நிலை தீர்வுரிமை. (RIGHTS TO SELF DETERMINATION) வழங்க வேண்டும். இந்தியாவை ஜனநாயகப்படுத்துவதற்கான போராட்டத்தில் தலைமை ஏற்கப் போவது பாட்டாளி வர்க்கமா? அல்லது முதலாளி வர்க்கமா? என்பதே பொறுத்தே, அமையப்போவது தொழிலாளி வர்க்கத்திற்கான சோவியத் வடிவிலான ஆட்சி முறையா? அல்லது முதலாளி வர்க்கத்திற்கான நாடாளுமன்ற ஆட்சி முறையா? எனத் தீர்மானிக்கப்படும்.
பாராளுமன்ற ஆட்சிமுறையில் அனைத்து அதிகாரங்களும் முதலாளி வர்க்கத்திற்கு இருப்பதுபோல, சோவியத் ஆட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் பெரும்பான்மை மக்களாக இருக்கக்கூடிய தொழிலாளி மற்றும் விவசாயிகளுக்கே இருக்கும். சோவியத் ஜனநாயகம் என்பது வர்க்க அடிப்படையிலான பிரதிநிதிகளைக் கொண்டது. வர்க்கப் பிரதிநிதிகள் அந்தந்த வர்க்ககங்களின் எண்ணிக்கைக்கு (அளவுக்கு) ஏற்ப இடம் பெறுவர். அவர்களை அந்ததந்த வர்க்கப் பிரிவு மக்கள் தேர்ந்தெடுக்கவும் எப்போது வேண்டுமானாலும் திருப்பி அழைக்கவும் அதிகாரம் பெற்று இருப்பர். அரசாங்கம் (GOVERNMENT) நாடாளுமன்றம், சட்ட மன்றம் போன்றவற்றில் இடம்பெறும் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; அரசு (STATE) நீதிமன்றம், மாவட்ட, வட்ட அலுவலகம் போன்றவற்றில் இடம் பெறும் படித்த அதிகார வர்க்கங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும். இவ்வாறு சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்ற சட்டம் போடும் அமைப்பும், அதனை நடைமுறைப்படுத்தும் அதிகார வர்க்க அமைப்பும் மக்களுக்குப் பதில்சொல்ல கடமைப்பட்டதாகும். இந்த அமைப்பில் முதலாளிகள் மற்றும் நில உடைமையாளர்களும் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பர். அதே நேரத்தில் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள விவசாயிகள், தொழிலாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் அவர்களது பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்கும். இந்தப் பெரும்பான்மை மூலம்தான் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் மக்கள் தங்களது அதிகாரத்தை முதலாளி வர்க்கத்தின்மீதும் இதர உடைமை வர்க்கத்தின்மீதும் செலுத்துவர். இதுதான் தொழிலாளி வர்க்க அனைத்து அதிகாரமென்பது. ரஷ்யப் புரட்சிக்குத் தலைமைதாங்கிய லெனின் “பன்னாட்டுத் தொழிலாளி வர்க்கம் இதனைப் பரப்புரை செய்ய வேண்டும். இதுதான் தொழிலாளி வர்க்கத்திற்குப் பொருத்தமான ஆட்சி வடிவமாகும்” என்றார். சோவியத் ஆட்சி முறையானது. அந்தந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப, கட்டி அமைக்கப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். இதனை இயந்திரகதியாகச் செயல்படுத்தக் கூடாது.
பாசிசத்தை வீழ்த்த பாட்டாளி வர்க்கத் தலைமை!
இராட்ஷிரிய சுயம் சேவக் சங்கமும் (ஆர்.எஸ்.எஸ்) அதன் துணை அமைப்புகளான பி.ஜே.பி. உள்ளிட்ட சங்கபரிவாரக் கும்பலும் படிநிலைச் சாதியை அடிப்படையாக கொண்ட வேத கால ஆரிய ஆட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டனவாகும். 1925 இல் நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தோற்றுவித்த ஐவரும் பார்ப்பனர்களிலேயே தங்களை உயர்வானவர்களாகக் கருதிக்கொள்ளும் சித்பவன் பார்ப்பனர்களே.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்து ராஷ்டிரத்தில் இந்து சமக்கிருத மொழியைக் கொண்டு அகண்ட பாரதத்தை அமைப்பதையே நோக்கமாகக் கொண்ட அமைப்பாகும். அவர்களது அகண்ட பாரதம் என்பது இன்றைய இந்திய எல்லைகளுடன் வடக்கே திபெத் முதல் தெற்கே இலங்கை வரையிலும் மேற்கே ஆப்கானிஸ்தானிலிருந்து கிழக்கே பர்மா வரையிலும் எல்லைகளை விரிவுபடுத்தும் காலனியத் தன்மை கொண்டதாகும். அவர்களது அகண்ட பாரதத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு முஸ்லீம்களுக்கு கிறிஸ்த்துவருக்கு இடம் இல்லை என்கின்றனர். கம்யூனிசத்தையும் ஜனநாயகத்தையும் அந்நியக் கோட்பாடு எனக் கூறும் இக்கும்பல் அந்நியக் கோட்பாடான இட்லரின் நாசிசத்தையும் முசோலினியின் பாசிசத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். “ஒரு நாடு, ஒரு கலாச்சாரம், ஒரு மக்கள், ஒரு தலைவன்” என்பதுதான் இக்கும்பலின் முழக்கம். எனவே, இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட தமிழ் உள்ளிட்ட பிற தேசிய இனங்களை ஒழித்துக் கட்டி இந்திய தேசியத்தையும், பிற மதங்களை ஒழித்துக் கட்டி ஆரிய வேத மதத்தையும், பிற கடவுள்களை ஒழித்துக் கட்டி இராமனையே கடவுளாகவும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இக்கும்பலின் இந்த அடிப்படைக் கொள்கைகளை முறியடிக்காமல் இந்தியாவிலோ தமிழ் நாட்டிலோ பாசிசத்தை வீழ்த்த இயலாது.
பாசிசத்தை வீழ்த்துவதற்காக இந்தியக் கூட்டணி அமைக்கப்பட்டது என்கிறார்கள். இந்தியக் கூட்டணிக்கு அதன் தலைவர்களுக்குப் பாசிசத்தை வீழ்த்துவதற்கான திட்டமோ கொள்கையோ கிடையாது. அதே நேரத்தில் அக்கூட்டணியில் இடம்பெற்றவர்கள் பாசிசச் சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றவர்களாக உள்ளனர். ஊபா என்ற அடக்குமுறைச் சட்டத்தைக் காங்கிரசு கொண்டுவந்தபோதும், அதில் ஒடுக்குமுறைப் பிரிவுகளை பி.ஜே.பி கொண்டு வந்த போதும் தி.மு.க. அ.தி.மு.க. இரண்டும் ஆதரித்தன. மாநில அதிகாரங்களைப் பறிக்கும் என். ஐ.எ. என்ற தேசியப் புலனாய்வு முகமையைத் திமுகவும், அதிமுகவும் ஆதரித்தன. இந்தக் கறுப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கானோரை திமுக, அதிமுக ஆகிய இரண்டு அரசுகளுமே கைது செய்தன. இவர்களது மதவாத பாசிச எதிர்ப்பு என்பது வெறும் நாடகமே. பிஜேபி மதவாதக் கட்சி என்றால் திமுக சாதிவாதத்தை எதிர்க்காத கட்சியாக மாறிவிட்டது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்ததில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் இடம் உண்டு என்றால், தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுத்ததில் திமுக, அதிமுக ஆகிய இரண்டுக்கும் பங்குண்டு என்பதைத் தமிழ்நாட்டு தொழிலாளி, விவசாயி மற்றும் இதர வர்க்கங்கள் உணர வேண்டும். இந்தியாவிலுள்ள காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியதில் காங்கிரசும் பிஜேபியும் ஒன்றுக்கொன்று சளைத்தவைகளல்ல. அப்போராட்டங்களைக் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக மற்றும் தமிழகத்திலுள்ள பிற கட்சிகள் பாசிசத்திற்கு எதிராக ஜனநாயகத்தைப் படைப்பார்கள் என்பது பகல் கனவே.
இந்திய அரசியல் அரங்கில் இரண்டு வகையான தெளிவான போக்குகள் தெரிகிறது. ஒன்று, இந்தியத் தேசியப் போக்கு, மற்றொன்று தமிழ் தேசியம் உள்ளிட்ட மொழிவழித் தேசியப் போக்கு. இந்தியத் தேசியப் போக்கில் காங்கிரசு, பிஜேபி, இடது வலது கம்யூனிஸ்டுகள் உள்ளனர். இவர்கள் தேசிய இன ஒடுக்குமுறையாளர்கள். மொழிவழித் தேசியப் போக்கில் தேசிய விடுதலைப் புரட்சியாளர்கள், போராளிகள் உள்ளனர். இது ஜனநாயகப் போக்காகும். இவ்விரண்டில் ஒன்றைப் பாட்டாளி வர்க்கம் தேர்வு செய்தாக வேண்டும். கண்டிப்பாகப் பாசிசத்திற்கு எதிராக ஜனநாயகப் போக்கில் பாட்டாளி வர்க்கம் தேர்வுசெய்து சூழ்நிலைக்கு ஏற்ப அதனை ஆதரிக்கவோ, தலைமை கொடுக்கவோ வேண்டும்.
ரஷ்யப் புரட்சியில் போல்ஷ்விக்குகளுக்கும் மென்ஷ்விக்குகளுக்கும் இடையே நடைபெற்ற போராட்டங்களும், சீனப் புரட்சியின் கம்யூனிஸ்ட் கட்சியில் கம்யூனிஸ்டுகளுக்கும் இடதுசாரிச் சந்தர்ப்பவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற போராட்டங்களும் புரட்சியில் தலைமை பற்றிய பிரச்சனையே முக்கியமானதாகும். இந்தியாவின் பொதுமைய இயக்கத்தை ஆராய்ந்தால் பொதுமைய இயக்கம் இதுவரை தலைமை பற்றி அக்கறை இன்றியே முதலாளித்துவத்திற்கு வால் பிடித்து வந்துள்ளது. பாசிசத்திற்கு எதிராக இந்தியக் கூட்டணியை ஆதரிக்க கூடிய புரட்சிகர ஜனநாயக இயக்கங்கள் சீனப் புரட்சியில் கோமிங்டாங் கட்சியுடன் சீனக் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி வைத்ததை ஒப்பிட்டு நியாயப்படுத்துவது தவறானதாகும். சீனப்புரட்சியில் கம்யூனிஸ்டு கட்சி, பிற முதலாளியக் கட்சிகளைப் பயன்படுத்திக் கொண்டதே தவிர முதலாளியக் கட்சிகளுக்கு சீனக் கம்யூனிஸ்டு கட்சி வாலாகப் போகவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால் இந்தியாவிலோ தமிழகத்திலோ பொதுவுடைமை இயக்கம், முதலாளியக் கட்சிகளுக்கு வாலாகவே சென்று கொண்டுள்ளது.
முதல் உலகப் போர் ரஷ்யப் புரட்சியைத் தோற்றுவித்தது என்றால், இரண்டாம் உலகப் போர் சீனப்புரட்சியைத் தோற்றுவித்தது. போர் என்பதே ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடுதான். இனி ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் சமாதான முறையில் இயங்க முடியாது என்பதே. பாசிசம் கூட இந்திய முதலாளியத்திற்கு இடையிலான முரண்பாடே. முதல், இரண்டால் உலகப் போர்களில் ஏகாதிபத்தியங்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாட்டைக் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்திக் கொண்டதைப் போல இந்தியாவில் பாசிசச் சூழலில் முதலாளியங்களுக்கு இடையிலான முரண்பாட்டைக் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்திக் கொண்டு புரட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும். மாறாகப் பாசிசத்திற்கு எதிராக முதலாளியத்திற்கு வால்பிடிப்பது மூலயுத்தி, செயல்யுத்தி நோக்கங்களுக்கு எதிரானதாகும்.
ஒவ்வொரு பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின் போதும் ஆளும் வர்க்கங்கள் சில பிரச்சனைகளை முதன்மைப்படுத்தி மக்களை ஏமாற்றும்போது அதற்கேற்பக் கம்யூனிஸ்டுகளும் ஏமாறுவது கேலிக்குரியதாகும். எல்லாச் சூழல்களிலும் புரட்சிகர நோக்கங்களை நோக்கியே கம்யூனிஸ்டுகள் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் புரட்சியை முன்னெடுக்க இயலும்.
எனவே, தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் இந்திய, ஆரிய மாடலை எதிர்ப்போம். வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை மடைமாற்ற முன் வைக்கப்படும் “மாநில சுய ஆட்சி! மத்தியில் கூட்டாட்சி” என்ற சீர்திருத்தவாதத்தை அம்பலப்படுத்துவோம். தமிழ்த் தேச இறையாண்மையப் போராட்டத்தை முன்னெடுப்போம், பாசிசத்திற்கு எதிராகப் புரட்சிகர, ஜனநாயக ஆற்றல்களைக் கொண்ட தமிழ்த் தேச ஜனநாயக சோவியத் வடிவிலான அரசமைப்போம். சோசலிசம், கம்யூனிசத்தை நோக்கி முன்னேறுவோம்.
- பாரி