jeeva 350படைப்பு எல்லாம் கடவுளுடையது என்றால் தாழ்ந்த சாதிக்காரர்கள் ஏன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றவர் ஜீவா. கோயிலை உருவாக்கியவன் மனிதன் கடவுளை உருவாக்கியவனும் மனிதன் தான் அது உண்மையான கடவுளென்றால் மனிதர்களில் இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன் என்று பேதம் பார்க்குமா என்றவர் ஜீவா.

உலகில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு சூரியன் உயர்ந்த சாதியினருக்கு ஒரு சூரியனா உதிக்கிறது என்றவர் ஜீவா. வர்ணாசிரம தர்மத்தை காந்தியடிகள் தூக்கிப் பிடிக்கிறார் என்பதற்காக காந்தியத்தைவிட்டு வெளியேறியவர்.

கடவுளை நம்பியவன் மதத்தைப் பின்பற்றுகிறான் மதம் மனுதர்மத்தைப் பின்பற்றுகிறது என்றவர் ஜீவா. பாரதி ஜீவாவுடைய பள்ளித் தோழனாக இருந்தாலும் இருவரும் வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

வாழ்க்கையில் சுயஒழுக்கம் தான் ஒருவரின் உயர்வு தாழ்வை நிர்ணயிக்க வேண்டுமே தவிர பிறந்த குலம், சாதி அல்ல என்றவர் ஜீவா. தனித்தமிழ் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக தன் பெயரை உயிர்இன்பன் என மாற்றிக் கொண்டவர் ஜீவா.

சொரிமுத்து என்ற குலதெய்வப் பெயரும் மூக்காண்டி என்று பெற்றோர் வைத்த பெயரும் நிலைக்கவில்லை தோழர் ஜீவானந்தம் என்ற பெயரே நிலைத்தது.

புத்தக வாசிப்பு தான் ஜீவானந்தத்தை மானுடனாக மாற்றியது. காங்கிரஸ் வெள்ளையரை விரட்டுவதிலேயே குறியாக இருந்தது. சுயமரியாதை இயக்கம் பிராமண எதிர்ப்பையே முன்னிறுத்தியது. இரண்டு பேரியக்கமும் சமதர்மத்தை சமூகத்தில் நிலைநாட்ட முயற்சி எடுக்கவில்லை.

சுதந்திரத்துக்கு பின்னும் வர்ணாசிரம தர்மத்தை நாடு கடைப்பிடிக்க வேண்டும் என்ற காந்தியின் வாதத்தை எதிர்த்தவர் ஜீவா. தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து கடைசி வரை தொழிலாளர் உரிமைக்காக பாடுபட்டு உயிர் நீத்தவர் ஜீவா. மேற்கு தாம்பரத்திலுள்ள கஸ்தூரிபாய் நகரிலுள்ள புறம்போக்கு நிலத்தில் மண்சுவர் கூட இல்லாத கூரை வீட்டில் கடைசிவரை வாழ்ந்தார்.

பெரியாருக்கு அறிமுகமாகும் முன்பே சமூகப் போராளியாக தீப்பந்தமாக எரிந்துக் கொண்டிருந்தவர் ஜீவா. பெரியார் திராவிடக் கொள்கைகளை தமிழ்நாடெங்கும் பரப்ப ஜீவாவை துணையாக்கிக் கொண்டார். ஜீவாவை யாரும் செதுக்கவில்லை சுயம்புவாக தோன்றியதால் தான் கடைசிவரை உரிமைக்காக அவரால் போராட முடிந்தது.

கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று உயர் சாதிக்காரர்கள் சொன்ன போது அங்கு போராட்டம் வெடித்தது இந்தியா முழுவதும் அந்த விஷயம் பெரிதாக பேசப்பட்டது வைக்கம் போரில் பெரியாருடன் மாணவராக இருந்த ஜீவாவும் கலந்து கொண்டார்.

பிறந்த குலமும், சாதியும் எப்படி உயர்வு தாழ்வை நிர்ணயிக்கும் வாழ்க்கையில் சுயஒழுக்கமும் மனிதனின் செயல்பாடுகளும் தானே அவரவர் உயர்வு தாழ்வை நிர்ணயிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைய முடியாது என்றால் கடவுள் வெளியேறட்டும் தீண்டத்தகாதவர்கள் என்று அவர்கள் ஏன் ஒதுக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு விளக்கம் சொல்லட்டும் என்று அறைகூவல் விடுத்தவர்தான் ஜீவா.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜோசப்பூதலிங்கம் என்பவரை கைப்பிடித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றவர் ஜீவா. அவமானங்களுகம் எதிர்ப்புகளும் போராளிகளை ஒன்றும் செய்துவிடமுடியாது என மெய்ப்பித்துக் காட்டியவர் ஜீவா.

ஜீவா காந்தியடிகளுக்கு எழுதிய கடிதத்தில் கீதையில் குணத்தையும் செய்யும் தர்மத்தையும் பொருத்து மனிதர்களை நான்கு வர்ணமாக பிராமணன், சத்ரியன், வைசிகன், சூத்திரன் என்று பிரிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதே வேளையில் பிராமணன் நெறி தவறிப் போவானேயானால் அவன் வைசிகன் தானே. அதே வேளையில் வைசிகன் நன்னெறியைப் பின்பற்றுவானேயானால் அவன் பிராமணன் தானே என்ற கேள்விக்கு கடிதம் மூலம் காந்தியடிகள் இப்படி பதிலளித்தார்.

பிராமணன் தவறிழைத்தால் அவன் கெட்ட பிராமணன், வைசிகன் நன்னெறியில் நின்றால் அவன் நல்ல வைசிகன் என்றார். இந்தப்பதில் தான் ஜீவாவை காந்தியத்தைவிட்டு விலக வைத்தது. வ.வே.சு ஐயரின் பரத்வாஜ ஆசிரமத்தில் மாணாக்கர்களுக்கு காந்தியத்தை கொண்டுபோய் சேர்க்க ஆசிரியராகச் சென்ற ஜீவா அங்கு உயர்வகுப்பு மாணவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கும் தனித்தனியே உணவு பரிமாறப்படுவதைப் பார்த்து ஆசிரமத்திலிருந்து விலகி சிராவயலில் காந்தி ஆசிரமத்தை தொடங்கினார். 1932ல் காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டு முதல்முறையாக சிறைக்குச் சென்றார்.

பகத்சிங் தோழர்களை சந்தித்தபின்புதான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனினைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது ஜீவாவுக்கு. நாச்சியார்புரத்தில் உண்மை விளக்க நிலையம் என்ற ஆசிரமம் அமைத்து வர்க்கப் போரையும், சாதியத்துக்கு எதிரான போரையும் முன்று நின்று நடத்தினார்.

பகத்சிங் தனது தோழனுக்கு எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற கடிதத்தை மொழிபெயர்க்கும் பணியை பெரியார் ஜீவாவுக்கு வழங்கினார். அதை மொழி பெயர்த்ததுக்காக வெள்ளைய அரசாங்கம் ஜீவாவுக்கு விலங்கிட்டு அடித்து வீதிவீதியாக அழைத்துச் சென்றது.

புரட்சி என்பது மக்களை மந்தை ஆடுகளாக கருதும் அரசுக்கு எதிராக காட்டையே சாம்பலாக்க கனன்று எழும் சிறு தீப்பொறி என்று முழங்கியவர் ஜீவா. குனிந்து கொண்டே இருக்கும் வரைதான் குட்டுவான் எழுந்து நில் இந்த சிறு தீப்பொறி நாட்டையே பற்றி எரிய வைக்கக் கூடியதென்று ஒருநாள் அவனுக்கு புரியவை இதுதான் ஜீவாவின் சித்தாந்தம்.

தொழிலாளர்களுக்கு உரிமையைப் பெற்றுத்தர மேடை தோறும் முழங்கி பொதுக்கூட்ட மேடையிலேயே உயிர் விட்டவர் ஜீவானந்தம். 1952ல் சட்டமன்ற கூட்டத்தொடரில் தான் ஜீவா முதல்முறையாக தமிழ்நாடு என்ற வார்த்தையை பிரயோகப்படுத்தினார்.

ஒடுக்கப்பட்டோருடைய உரிமையை மீட்க ஊர்தோறும் கூட்டம் நடத்தி முழங்கிய ஜீவா தன் மகள் குமுதாவை அவள் பிறந்து 17 ஆண்டுகள் கழித்துதான் சந்திக்க முடிந்தது. பொது வாழ்க்கையில் ஜீவா பெற்றது குறைவு ஆனால் இழந்தது ஏராளம்.

தமிழ் மொழிக்காகவும், தமிழ்மண்ணுக்காகவும், தமிழ்மக்களுக்காகவும் தன் வாழ்க்கையையே தியாகம் செய்த தன்னலமற்றவர் ஜீவா. அக்காலகட்டத்தில் சாதிய அடக்குமுறைகளை பொதுமக்கள் மீது காட்டிய முதலாளிவர்க்கத்தின் மீது ஜீவாவைப்போல் யாருக்கும் கோபாவேசம் காணப்படவில்லை.

தனது கொள்கைக்கு ஒத்துப் போகாத இயக்கத்திலிருந்து விலகி சுயமரியாதை சமதர்ம இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கினார். விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செயக் கருதியிருக்கின்றாயடா என்ற பாரதியின் வரிகளில் காணப்படும் ரெளத்திரம் ஜீவாவிடம் இருந்தது. ஜீவா தேடியதற்கான விடை மார்க்சியத்தில் தான் கிடைத்தது. 1929ல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஜீவா தான் இறக்கும் வரை கம்யூனிஸ்ட்டாகவே இருந்தார்.

சாதியத்தை முற்றிலும் ஒழிப்பதே ஜீவாவின் கனவாக இருந்தது. ஜீவானந்தம் போராட்டங்களிலும், சிறையிலும், பொதுக்கூட்ட மேடைகளிலுமே தன் வாழ்நாளில் அதிக காலத்தை செலவளித்தார். இதனால் அவர்பட்ட அவமானம், அடிகள், எதிர்ப்புகள் ஏராளம். எதற்கும் அஞ்சாத சிங்கமாக வாழ்ந்தார் ஜீவானந்தம். அவர் காலத்தில் பல எழுச்சிமிக்க தொழிலாளர் போராட்டங்கள் நடந்தன.

அதனை முன்னின்று நடத்திக் காட்டியவர் ஜீவானந்தம். தமிழக அரசியல் வரலாற்றில் விலைபோகாத மனிதர் ஒருவர் உண்டென்றால் அவர் ஜீவானந்தம் தான். எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவனின் வார்த்தைகளை வேத வாக்காக நம்பியவர் ஜீவானந்தம். இந்தியா சுதந்திரமடைந்த பின் கம்யூனிஸ்ட்கள் 1948ல் கல்கத்தாவில் ஒன்றுகூடினர்.

புரட்சிகள் கொடுங்கோலாட்சியின் கொடுமையை குறைக்கவில்லை இன்னொரு கொடுங்கோலனிடம் தான் ஆட்சியை ஒப்படைத்துள்ளன என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். புரட்சியின் மூலம் புதிய பாரதத்தைக் கண்டடைவோம் என கோஷம் எழுப்பினார்கள்.

1948 – 50வரை கம்யூனிஸ்ட்கள் அரசின் அடக்குமுறைக்கு உள்ளானார்கள். கம்யூனிச வரலாற்றில் கருப்பு வருடங்கள் அவை. 1939 – 45 வரை தமிழ்நாட்டில் ஜீவா நடமாடமுடியாத சூழ்நிலை நிலவியது. அவருக்கு அரசாங்கம் வாய்ப்பூட்டு சட்டம் போட்டது. அப்படியும் அவருடைய போராட்டக் குணத்தை மழுங்கச் செய்ய முடியவில்லை. 1951ல் சிறையிலிருந்து விடுதலையாகிறார்.

அது முதற்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியை உயிர்த்தெழ வைக்க வேண்டிய முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். 1952ல் சென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.

ராஜாஜி முதல்வராக இருந்தபோதே குலக்கல்வியை எதிர்த்தவர் ஜீவானந்தம். 1962ல் தேர்தலில் இதே வண்ணாரப்பேட்டை நின்று தோற்கிறார். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும், மொழிக்காகவும் வாழ்ந்த ஜீவாவை தமிழக மக்கள் டெபாசிட் இழக்க செய்தார்கள். அந்த தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 10049.

அதே தொகுதியில் சுயேட்சையாக நின்ற எந்த அரசியல் பின்புலமுமில்லாத லிங்கேசனுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 8250. இது அனைத்தும் லிங்கேசனுக்கு கிடைத்த சாதிய ஓட்டுக்கள். எந்த சாதிய உணர்வை வேரறுக்க வேண்டுமென்ற ஜீவா தன் வாழ்நாள் வரை முழங்கினாரோ அந்த சாதிய உணர்வு நாடு சுதந்திரமடைந்த பின்பு அங்குசத்துக்கு அடங்காத மதம் பிடித்த யானையாகிவிட்டது.

தன் வாழ்க்கையை தமிழுக்காகவும், தமிழருக்காகவும் தியாகம் செய்த செய்த ஜீவாவால் ஒருமுறை மட்டுமே தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைய முடிந்தது. பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை அநீதிக்கு எதிரான போராட்டத்தில் உயிரை துச்சமென மதித்து கலகக் குரல் எழுப்புவானாயின் நீ ஒருவனே மரணத்தை வென்றவன். ஜீவா தனியொருவனாக நின்று மரணத்தை வென்று காட்டிவிட்டான். தமிழகத்தில் பாட்டாளி மக்கள் இருக்கும் வரை ஜீவாவின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

- ப.மதியழகன்

Pin It