ஏடறி வரலா றெதிலும் உழைப்பை
ஈடறி யாதுடை யவர்க்கே யளித்து
பிற்றை நிலை முனியாதும் உற்றறி யாதும்
வற்றிய வாழ்வை ஏற்றிடும் தோழனே
உடையவர் வாழார் உழைப்பவர் இன்றி
நடைமுறை யறியா துரிமை கோரிப்
பெரும்போர் தொடுக்கத் தயங்கும் உனக்குப்
பெருமிதம் ஏனோ உலகின் உயிரென?
(ஏடறிந்த வரலாறு முழுவதிலும், உழைப்பை (அதன்) உண்மையான மதிப்பை உணர்ந்து அறியாமலும், உடைமையாளர்களுக்குப் பணிந்தும், அளித்து விட்டு, வறுமை வாழ்வை ஏற்றிடும் தோழனே! (உடையவர் இன்றி உழைப்பவர் வாழ முடியும்; ஆனால்) உழைப்பவர் இன்றி உடையவர் வாழ முடியாது என்ற நடைமுறை உண்மையைப் புரிந்து கொள்ளாமல் உன்னுடைய உரிமைகளை அடையும் பொருட்டு, (உடையவர்கள் அழிந்து ஒழியும் படியான) பெரும் போரைத் தொடுக்கத் தயங்கும் உனக்கு, உலகின் உயிர் என்ற (வறட்டுப்) பெருமிதம் எதற்கு?)
- இராமியா