கீற்றில் தேட...

எல்லாத் திசைகளிலிருந்தும்
என்னுள் வந்து விழுகின்றன சொற்கள்
என்றாலும்
என் களஞ்சியம் நிறைந்தபாடில்லை

சில சொற்கள் தலையில்
தேன் சுமந்து நிற்கின்றன
சில தோளில் கைப்போடுகின்றன
சில நீலம் பாரித்த
விஷமுகம் காட்டுகின்றன
மனத்தைத் துண்டு துண்டாக்கி
பாறையில் உலர்த்துகின்றன சில!

நான் சொற்கூட்டத்தில்
மூழ்கிப் புதைந்து
அறிவேந்தி நடக்கிறேன்

அம்மா பேசிய சொற்களை மட்டும்
இயன்ற வரை
தனியே எடுத்துச் சேமித்தேன்

பாசத்தில் தத்தளித்தபடி
அவை திக்குமுக்காடுகின்றன

அவற்றுள்
மின்னிய வண்ணம்
என் முன் நிற்கிறது ஒரு சொல்
அது என் பெயர்!

****

கடவுளைச் சபித்தல்

உன் பேச்சில்
மலர்களாய்த் தொடுக்கப்பட்டுள்ளன
எனக்கான ப்ரியங்கள்

உன் அன்பளிப்பில்
என்றும் நீ ஒட்டிக் கொண்டிருக்கிறாய்

பிரிந்த நேரங்களிலும்
நீ பற்றிய என் வளைக் கரங்களில்
உன்னால் எப்படித் தங்கியிருக்க முடிகிறது?

நம் பாதையில்
விரவிக் கிடக்கும்
கனல் பாளங்களின் கணகணப்பில்
உன் பாதங்கள் பாதிக்கப்படாமல்
என்னை
உன்னால் அழைத்துச் செல்ல முடியுமா?

ஒளியைக் கொஞ்சம் பிடித்து
உன் உருவம் செய்து பார்க்கிறேன்
வெற்றிடத்தைக் கூட நிரப்பி
வியாபித்திருக்க
உனக்குத் தெரிகிறது

கடவுளை
நான் சபிக்கிறேன்
உன்னோடான மணவாழ்க்கை
விண்ணப்பத்தை
பரிசீலனை செய்யாத குற்றத்திற்காக…

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்