வட இந்தியர் புலம்பெயர்வால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் ஒவ்வொரு நாளும் நிரம்பி வழிகிறது. அவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைவாய்ப்பைத் தேடித்தான் வருகிறார்கள். அங்கு வேலைவாய்ப்பு கிடைக்காததற்குக் காரணம் கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக ஒன்றிய அரசு செயல்படுவதால் அங்கு வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலைமையை மறைக்க, மத போதையை ஊட்டி வளர்க்கிறார்கள். இசுலாமிய வெறுப்பை ஏற்படுத்தித் திசை திருப்புகின்றன. அதன் காரணமாக சில கலவரங்களும் நடக்கின்றன. ஆனாலும் நீண்ட நாட்களுக்கு அதே போதையில் வைத்திருக்க முடியாது. மத போதை தெளிந்தப் பின்பு குடும்பத்தைப் பார்க்க வேண்டும். குடும்பத்தினரின் பசியைப் போக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதனால் வேலைவாய்ப்பு எங்குக் கிடைக்கிறதோ அங்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டை நோக்கி அலையலையாக வருகிறார்கள்.

தமிழகத்தில் மூன்று வேளை உணவுடன் அதிகப்படியான கூலியும் கிடைப்பதால் இங்கு அதிகமாக வருகிறார்கள். அவர்கள் மாநிலத்துடன் ஒப்பிடும்போது ஒரு கொத்தனாருக்கு இங்கு 700 ரூபாய் என்றால் அவர்கள் மாநிலத்தில் 300 ரூபாய்தான். அதனால் இங்கு 400 ரூபாய்க்கு வேலைபார்க்கத் தயார்நிலையில் உள்ளனர். ஆனால் பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் 100, 150 கூலி. ஆகவே அவர்களுக்கு 350, 400 ரூபாய் பெரிய தொகையாகத் தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் அங்கு வேலையாட்களுக்கு உணவு கொடுக்கும் பழக்கம் இல்லை. ஒரு வர காப்பி மட்டுமே உணவாகக் கொடுப்பார்கள். அதைக் குடித்துவிட்டு காலை முதல் மாலை வரையிலும் வேலை செய்ய வேண்டும். தமிழகத்தில் மூன்று வேளை உணவு, தேநீர், வடை கொடுத்து 350, 400 ரூபாய் கொடுப்பதால் அதை அவர்கள் பெரிதாகக் கருதுகிறார்கள்.

தமிழகத்தில் திராவிடஇயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்களால் கூலி குறித்த விழிப்புணர்வு தொழிலாளர்களிடம் இருக்கிறது. அதனால் தமிழகத் தொழிலாளர்கள் 700 முதல் 900 ரூபாய்க்கு குறைந்து வேலைக்கு வரமாட்டார்கள். அதனால் வடமாநிலத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகள், கடை, விவசாயம், நூல் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கூலி குறைவாக இருப்பதால் வட மாநிலத் தொழிலாளர்களைத் தமிழ்நாட்டு முதலாளிகள் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். இதில் சிலபேர் வடநாட்டு உணவான `பானி பூரி’ உள்ளிட்ட சிறு சிறு தொழில்களையும் செய்கிறார்கள். இதைத் தமிழ்த் தேசியம் பேசக்கூடிய சிலர் அன்னிய இனத்தின் ஆக்கிரமிப்பு, படையெடுப்பு என்று பார்க்கிறார்கள், பேசுகிறார்கள்.

அவர்கள் அரசர்கள் காலத்தில் மராட்டியப் படையெடுப்பு, நாயக்கர்கள் படையெடுப்பு, விசயநகரப் பேரரசு போலவும், மாலிக்காபூர் வரவு போலவும் இங்குப் படையெடுத்து நாடுபிடித்து அதிகாரம் செய்ய வரவில்லை. பஞ்சம் பிழைக்க வந்தவர்களையும் படையெடுத்து வந்தவர்களையும் ஒன்றாகப் பார்க்க முடியாது.

அதனால் இந்த வருகையை நாம் ஆதரிக்கிறோமா? என்றால் நிச்சயமாக இல்லை. ஏனென்றால் வேலை கொடுப்பது மனிதாபிமானம். அதனால் இந்த புலம்பெயர்வை நாம் எதிர்க்க வேண்டும். அவர்களுக்கு அவர்களின் மாநிலத்தில் ஒன்றிய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடக் கற்றுக்கொடுக்க வேண்டும். காரணம் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது வடமாநிலங்கள் நூறாண்டுகள் பின்தங்கியுள்ளது. சமூகநீதிக் கொள்கை, பகுத்தறிவு போன்ற முற்போக்கான கொள்கை அங்கு இல்லை. தீண்டாமைக் கொடுமை, பல்வேறு மூட பழக்கவழக்கங்கள் மிக மிக அதிகமாகக் கடைப்படிக்கப்படுகிறது. இப்படிப் பல்வேறு பிரச்சனைகள் அங்கு உள்ளது. இந்த நிலையில் புலம்பெயர்ந்து வருபவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் நாம் கணக்கெடுத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் சில உயர்ந்த சாதிகளைத் தவிர மற்றவர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா? தாழ்த்தப்பட்ட, ஓடுக்கப்பட்ட இடைநிலைச் சாதிகள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மார்க்சியம் சார்ந்து தொழிலாளர்கள் நலன் என்பதிலிருந்து மனிதாபிமான நிலையிலிருந்து மட்டுமே நாம் ஆதரித்தாலும் பாட்டாளி வர்க்கம் புலம்பெயர்வதை ஆதரிப்பது கிடையாது. மாறாக அவர்களை அந்தத் தேசத்திலிருந்து போராடக் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்த மண்ணில் படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைக்க பாட்டாளி வர்க்கத்தைத் தயார்படுத்த வேண்டும். அதுதான் பாட்டாளி வர்க்க நலன் ஆகும். பாட்டாளி வர்க்கம் புலம்பெயர்வதை வேடிக்கை பார்ப்பது அல்ல. அதனால் அந்த பாட்டாளி வர்க்கத்திற்கு அவர்கள் அரசை எதிர்த்துப் போராட வேண்டிய உணர்வை ஊட்ட வேண்டியது நமது கடமையாகிறது. அந்தத் திறன் வளர்வதற்குப் பகுத்தறிவும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. தமிழ்நாடு போன்ற மதவாதத்தை முறியடிக்கக் கடவுள், மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளை உடைத்தெறிய வேண்டிய அவசியத்தையும் போராட்ட உணர்வையும் ஊட்டவேண்டியது அவசியமாக உள்ளது.

மேலும் அவர்கள் வருவதைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் மூடத்தனங்களை மூலதனமாக வைத்துக் கொண்டு வடமாநிலங்களில் பாரதிய ஷனதா கட்சி ஆட்சியைப் பிடித்ததைப் போல், தமிழ்நாட்டிலும் மதவாதக் கலவரங்கள் செய்ய இந்துத்துவ சூழலைப் ஏற்படுத்தி அவர்களைக் கொண்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பின்னாலிருந்து சதிசெய்து முயற்சிக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. இது வெளிப்படையான உண்மை. வடமாநிலத் தொழிலாளர்களைக் கையாளுவதைத் தமிழ்நாடு அரசு கவனமாகக் கையாளவேண்டும். வடமாநிலத் தொழிலாளர்களைத் துன்புறுத்துதல் கூடாது.

தமிழ்நாட்டில் உள்ள சமூக விரோதிகள், சாதிவெறி சிந்தனையாளர்களுடன் சேர்ந்து கொண்டு கலவரம் செய்தால் யாராக இருந்தாலும் கைதுசெய்து தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். இயக்கங்கள் அவர்களுக்கு ஈவு இரக்கம் காட்டக்கூடாது. இரக்கம் காட்டி ஏமாந்துவிடக் கூடாது என்பதே நமது நிலைப்பாடு. அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கத்தின் புலம்பெயர்வை நம் இனத்தின் மீதான படையெடுப்பாக தவறாக எண்ணிவிடக் கூடாது. இதை ஒரு ஊசிமேல் நிற்பதுபோல் அறுவா மீது நிற்கும் போது எப்படி வெட்டிவிடாமல் பதம்பார்த்து நிற்கிறோமோ அதேபோல் இதை அணுக வேண்டியது கட்டாயம் ஆகிறது.

மேலும் தொழிலாளர்களையும், மார்வாடிகளையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது. மார்வாடிகள் பனியா கும்பலைச் சேர்ந்தவர்கள் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுடன் கைகோர்த்துக் கொண்டு கனிமவளங்களையும் கொள்ளையடித்துக் கொண்டு தமிழர்கள் செய்துவந்த மின் மற்றும் மின்னணுவியல் பொருள்கள்(எலக்ட்ரிகல் அன்டு எலக்ட்ரானிக்), குழாய் பொருள்கள்(பிவிசி), உணவு விடுதி உள்ளிட்ட அனைத்துத் தொழில்களையும் கைப்பற்றிக் கொள்ளும் கும்பலையும் வடமாநிலத் தொழிலாளர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது தவறானது.

அதுவும் இதுவும் ஒன்று கிடையாது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு சொல்ல முடியும். விசயநகரப் பேரரசு இங்கு வந்து 72 பாளையப்பட்டுகளாகப் பிரித்து ஆண்டுகொண்டு இருக்கும்போது மதுரையில் விசயநகர அரசின் கிளையாக நாயக்கர் அரசு செயல்பட்டது. இன்னொன்றையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாயக்கர் என்பது பட்டம் சாதி கிடையாது. நாயக்கர் என்றால் தலைவன் என்று பொருள். எந்தெந்த அரசுக்கு நாயக்கர் தலைவர்களாக இருந்தார்களோ அவர்கள் நாயக்கர் என்று அழைக்கப்பட்டனர். பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் நாயக்கர்களாக இருந்தார்கள் என்று நாம் சொல்கிறோம். அதேபோல் நாயுடு என்கின்ற உயர்சாதியைச் சேர்ந்தவர்களும் நாயக்கர்களாக இங்கு வந்தார்கள். அதேபோல் தெலுங்கு பேசும் அருந்ததியர்களும் இங்கு வந்தார்கள். அவர்கள் துப்புரவு செய்யவும், மலம் அள்ளவும் இங்குப் பயன்படுத்தப்பட்டார்கள். அவர்களை இங்கு தோட்டி என்றும் அழைக்கப்பட்டார்கள்.

இவர்கள் நாயக்கராக இருந்த தெலுங்கர்களுக்கும் மலம் அள்ளினார்கள். அதே இங்கு நாயக்கர் நிலையில் இருந்த தமிழ் குறுநில மன்னர்களுக்கும் இடைநிலை உயர்சாதிகளுக்கும், சமீன்தாரர்களுக்கும் சேர்த்தே மலம் அள்ளினார்கள். அவர்களையும் அடிமையாகத்தான் வைத்திருந்தார்கள். அதுபோல் நாயக்கர் ஆட்சியில் வந்த நாயக்கரையும், அருந்ததியர்களையும் எப்படி ஒன்றாக கருதமுடியாதோ அதேபோல் இப்போது உள்ள மார்வாடிகளையும், வடமாநிலத் தொழிலாளர்களையும் ஒன்றாகப் பார்க்கவும் முடியாது; கருதவும் முடியாது.

வடமாநிலத் தொழிலாளர்களால் பறிபோகும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வருவதால் இங்குள்ள தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பறிபோகிறது என்று தமிழ்த் தேசியவாதிகளும், தொழிலாளர்களும் கூறுகிறார்கள். அது முற்றிலும் உண்மை. அதற்குக் காரணம் அவர்கள் குறைந்த கூலிக்கு வேலைக்கு வருவதால்தான் அவர்களுக்குக் குறைந்த கூலி கொடுத்து வேலை வாங்கும் முதலாளிகள் யார்? அவர்களும் தமிழர்கள்தானே. வட நாட்டு முதலாளிகள் இல்லையே. நம்ம ஆளை வேலைக்குக் கூப்பிட்டால் 900 ரூபாய் கேட்பான். அவர்களை கூப்பிட்டால் 300, 400 ரூபாய் கொடுத்தால் போதும் என்று அழைத்து அரவணைத்துக் கொள்கிறார்கள். இதற்கு இடைக்காலத் தீர்வு தமிழ்நாட்டில் உள்ள கட்டிடப் பொறியாளர்கள், மேஸ்திரிகள் இங்குள்ள தமிழர்களைத்தான் வேலைக்கு அழைக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். கூலி பற்றிய விழிப்புணர்வு வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வேண்டும். உலகமயமாக்கல் தன்மையோ இதுதான் அடிமாட்டு வேலைக்கு ஒருவரின் உழைப்பை விற்பனை செய்ய தூண்டுவதுதான் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம். முதலாளித்துவம் ஒரு தேசத்துக்குள் இதைச் செய்யும். ஆனால் ஏகாதிபத்தியம் நாடு கடந்து செய்கிறது. இந்த நிலைமையைப் பாசிஸ்ட்டுகள் இன அழிப்புக்கு, பண்பாட்டு அழிப்புக்குப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாகவும் உள்ளது.

மேலும் திருட்டு என்பது பதுக்கலுக்கான கலகக்குரல் என்று மார்க்சியம் வரையரைக்கிறது. அறம் சார்ந்து பார்த்தால் திருட்டு என்பது குற்றம். ஆனால் மார்க்சியம் சூழலுக்கு ஏற்ப வரையறை செய்கிறது. இப்படிப்பட்டவர்கள் திருட்டில் ஈடுபடும்போது அவர்கள் மாநிலம், அடுத்த மாநிலம் என்று பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு எங்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் திருட்டில் ஈடுபடுவார்கள். தமிழ்நாட்டிலும் திருடர்கள் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்து போன தமிழர்களும் பல்வேறு திருட்டில் ஈடுபடுகிறார்கள். அதனால் புலம்பெயர்வதால் திருடுகிறார்கள் என்று கூற முடியாது.

அமெரிக்காவைவிட நாணய மதிப்பு டாலர் மதிப்பு இங்கிலாந்து பவுண்டு மதிப்பு அதிகம். அப்படிப்பட்ட நாட்டில் திருடுகிறார்கள் என்றால் திருட்டு என்பது பதுக்கலுக்கான கலகக் குரல் என்பது மார்க்சியம் வரையறுத்தது சரியாகத்தான் உள்ளது.

அதனால் நாம் திருட்டை ஆதரிக்க முடியாது. ஆனால் திருட்டைத் தடுப்பது நம் அரசின் கடமை. மக்களுக்குச் சேர வேண்டியதைச் செய்யாமல் வளர்ச்சியைப் பரவலாக்காமல் நாட்டின் ஒரு பகுதியை வளர்த்து விடுவதும் இன்னொரு பகுதியை வஞ்சிப்பதும் நியாயம் கிடையாது. இந்த மாதிரி சமமான வளர்ச்சி இல்லாமல் இருக்கும்போது உள்நாட்டுக் குழப்பத்தைத் தடுக்க முடியாது. உள்நாட்டுத் தொழிலாளர்கள் மற்ற நாட்டுத் தொழிலாளர்களுடன் போரிட்டு உள்நாட்டு மோதல் ஏற்பட இது வழிவகுக்கும் என்பதை எச்சரிக்கை செய்கிறோம். இதற்குக் காரணம் வடநாட்டுத் தொழிலாளர்கள் இல்லை. கார்ப்பரேட்டுகளும் அந்தந்த மாநில கைகூலி அரசுகளும் ஒன்றிய அரசுமே இதற்குக் காரணம். அதை மறைக்கத்தான் மத உணர்வைத் தூண்டிவிட்டு அவர்களை முட்டாள்களாக ஆக்குகிறார்கள். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை இது மாதிரி முட்டாள்களாக வைத்திருப்பதால்தான் அவர்கள் புலம்பெயர்கிறார்கள்.

தமிழ்நாட்டு அரசுதான் வடமாநிலத் தொழிலாளர்களைக் கண்காணிக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசு வடமாநிலத் தொழிலாளர்களைக் கண்காணிக்க முடிவுசெய்து அவர்களின் விவரங்களைத் துல்லியமாக கண்காணிக்க முடிவுசெய்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஏனென்றால் இந்த மாதிரி அப்பாவி மக்களை வைத்துக்கொண்டு ஆர் எஸ் எஸ், பஜ்ரங்தள் போன்ற பயங்கரவாதிகள் இவர்களைப் பயன்படுத்திக் கொண்டு கலவரம் செய்யக்கூடும்.

அதுபோன்று ஆபத்து இருப்பதால் இவர்களைக் கட்டாயம் கண்காணிக்க வேண்டும். வட மாநிலத் தொழிலாளர்களுக்குத் தமிழ்நாட்டில் மூன்று வேளை உணவும் 300 ரூபாய் கூலியும் கொடுத்தால் அது அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரிகிறது.

30 ஆண்டுகள் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி செய்த மேற்கு வங்காளத்தில் கல்கத்தாவின் நிலைமை மிகவும் கொடுமையானது. நம் ஊர்களில் கட்டிட வேலைக்கு வந்து கும்பலாக நிற்பார்கள். அவர்களில் விருப்பம் உள்ளவர்களை வேலைக்கு அழைத்துச் செல்வார்கள். வேலை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் கட்டிட மேஸ்திரியை வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல் கல்கத்தாவில் 13 வயது பெண் என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளுங்கள். 25, 50, 100 ரூபாய் ஏதோ கொடுங்கள். வீட்டில் அம்மா அப்பா பட்டினியாகக் கிடக்கிறார்கள் என்று சொல்கிறார் என்றால் எந்தளவிற்கு வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. 13 வயது குழந்தை அப்படி சொல்லும் நிலையில் இன்றும் கல்கத்தா உள்ளது. அதைக் கேள்விப்பட்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. அதேபோன்று அரியானாவிலும் இதே நிலைதான். சாலையில் வந்து நின்று கொண்டு கூப்பிடும் நிலை உள்ளது. வட மாநிலங்களில் பெரும்பாலும் இது போன்ற நிலை உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இங்கு வருகிறார்கள் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்களையும் சுதந்திரமாக வாழவிடு:

ஈழத் தமிழர்களைத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் திறந்தவெளி முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். இது என்ன அநியாயம், ஈழத் தமிழர்களையும் சுதந்திரமாக வாழக் குடியுரிமை கொடுக்க வழிவகை செய்ய வேண்டும். வடமாநிலத் தொழிலாளர்கள் சாதாரணமாக வந்து குடியேறும்போது, ஈழத் தமிழர்களை மட்டும் திறந்தவெளி முகாம்களில் அடைப்பது கண்டனத்துக்குரியது. ஈழத் தமிழர்களும் பஞ்சம் பிழைக்கத்தான் வருகிறார்கள். அவர்களைப் பயங்கரவாதிகள் போல் கிழக்குக் கடற்கரைச் சாலையில் தமிழ்நாட்டுக் காவலர்கள் முகாமிட்டு கைது செய்து விசாரித்து முகாம்களில் அடைத்துவிடுகிறார்கள். இதுபோன்ற செயல்களைக் கண்டிக்கிறோம்.

உழைக்கும் மனித குலத்தை விடுவிக்க மாற்று மருந்து சோசலிசமே என்பதைத் தவிர வேறு வழி இல்லை. அவர்களை விரட்டி அடிப்பதால் தீர்வு கிடைக்காது. நமக்கும் இதுபோன்ற நிலை விரைவில் வரக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் இழுத்து மூடும் நிலையும் ஐடி கம்பெனிகளில் ஆள்குறைப்பு போன்ற சம்பவங்கள் நமக்கு எதிர்காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை சில ஆண்டுகளில் வரக்கூடும் நிலையும் உள்ளது. தமிழகத்தில் கடந்த காலங்களில் வறட்சி, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களால் வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டிற்குள்ளேயும் கேரளாவிற்கும் வெளிநாடுகளுக்கும் புலம் பெயர்ந்தும் பஞ்சம் பிழைக்கச் சென்ற வரலாறு உண்டு.

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கொடுக்காதே!

உலகில் ஏழை மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் வறட்சி, வேலை வாய்ப்பு இல்லாத நிலை அரசின் ஊழல், கனிமவளக் கொள்ளை அதனால் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றங்கள் ஆகிய காரணங்களால் மக்கள் புலம்பெயருகிறார்கள்.

அதுபோல் உலகின் சில முன்னேறிய நாடுகளுக்கு மக்கள் புலம் பெயருகிறார்கள். அப்படிக் கனடாவிற்கும் புலம்பெயருகிறார்கள். கனடாவிற்குள் வெளிநாட்டினரின் குடியேற்றம் 2022-இல் 4,31,000 ஆக இருக்கிறது. இது மேலும் உயர்ந்து கொண்டே உள்ளது. இது 2023, 2024-இல் 9,00,000 புதியவர்கள் வருவார்கள் என்று கணக்கிடுகிறார்கள். இதுபோன்ற குடியேற்றம் காரணமாகக் கடந்த 50 ஆண்டுகளில் கனடாவில் மக்கள் தொகை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது என்று கனடாவின் புள்ளியியல்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு வீடுகளின் விலையேற்றம் உயர்ந்துள்ளது. கனடாவில் `ரியல் எஸ்டேட்’ சங்கத்தின் தரவுகளின்படி கடந்த வருடத்தில் மட்டும் ஒரு குடும்பம் தனித்தனியாக வசிக்கும் வீட்டின் விலை இரட்டிப்பாகியுள்ளது என்று குறிப்பிடுகிறது. இதுபோன்று பல்வேறு மாற்றங்கள் அங்கு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கனடா மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கிற்குமேல் உள்ளதுதான் காரணம்.

குடியிருக்க வீடு பற்றாக்குறை, நகர நிர்வாகம், சாலை, குடிநீர், உணவு உற்பத்தி மற்றும் சட்டம் ஒழுங்கு இன்று கனடாவிற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதேபோல் அமெரிக்காவில் தெற்கு எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் இருக்கும் மக்களை விட அதிகமான புலம் பெயர்ந்தோர் இருப்பது குறித்துப் பரவலாக மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும் இதுவரை ஏறத்தாழ இரண்டு கோடிப்பேர் வடமாநித்தவர்கள் புலம் பெயர்ந்து இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்த இரண்டு கோடிப் பேருக்கும் வாக்குரிமை வழங்குவதில் சிக்கல் உள்ளது. வாக்குரிமை இப்போதைக்கு வழங்கக் கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு. தமிழ்நாட்டில் இருப்பதில் சிக்கல் இல்லை. வாக்குரிமை கொடுக்கக்கூடாது என்னும் நிலைப்பாடு மார்க்சியப்படி மேலோட்டமாகத் தவறாகத் தெரியும். அதனால் தத்துவத்தை நடைமுறையுடன் பொருத்திப்பார்க்க வேண்டும். இந்த மண்ணின் அரசியல், இடஒதுக்கீட்டுக் கொள்கை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், முற்போக்குக் கொள்கை, பெரியாரியம், கல்வி மேம்பாடு, இந்த மண்ணின் சுதந்திரம் போன்ற கொள்கைகளைப் பின்பற்றக் கூடிய முன்னேறிய மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.

ஆனால் வடமாநிலத்திலிருந்து வருபவர்கள் இவற்றுக்கு நேர் எதிர் மாறாக உள்ள பண்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்தங்கிய மாநிலத்தில் இருந்து வருகிறார்கள். அவர்களை அரசியல்படுத்தாமல் குடியுரிமை கொடுத்தால் அவர்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு இங்குள்ள பா.ஷ.க. மற்றும் சில வலதுசாரிகள் அவர்களைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கும் கேடும் (அபாயமும்) நடக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்குக் குடும்ப அட்டை கொடுத்து அதன்மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்வதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வாக்குரிமை கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் நிரந்தரமாக இங்கு தங்கி வாழப் போகிறார்களா அல்லது சில ஆண்டுகள் இருந்துவிட்டு செல்லப் போகிறார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆகவே குடியுரிமை முற்றிலும் கொடுக்கக்கூடாது என்பது நமது நிலைப்பாடு. இல்லை இதுபோன்ற காரணங்களால் தொடர்ந்து பல பத்தாண்டுகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து தங்கி இருந்திடும் சூழல் ஏற்பட்டால் அதையும் வரையறைப்படுத்தி நெறிப்படுத்தியே அவர்களுக்குக் குடியுரிமை கொடுக்க முடியும்.

- தங்க.குமரவேல்

Pin It