உடைமை யாவும் பொதுவாய்ப் போனால்
நடைமுறை தன்னில் ஊக்கம் இழப்பர்
தேர்ந்து தெளிந்த அறிவியல் அறிஞரும்
சார்ந்தே பணிசெயும் கல்லா மனிதரும்
பெற்றிடும் ஊதியம் ஒன்றெனக் கூறி
முற்றிலும் பொய்யைப் பரப்புரை செய்வார்
திறமைக் கேற்ற உழைப்பை நல்கி
அறத்தின் வழியில் ஊதியம் பெறுதலே
சமதர்ம அமைப்பின் விதியென அறியார்

(உயர் கல்வி கற்று அறிவியலாளராகப் பணி புரிபவருக்கும், (கல்வித் தகுதிக் குறைவு, திறமைக் குறைவு ஆகியவற்றின் காரணமாக) மற்றவர்களுக்குக் கீழ் பணி புரிபவர்களுக்கும் சமமான ஊதியமே கொடுக்கப்படும் என்பதால், உடைமைகள் யாவும் பொதுவாய்ப் போகும் சோஷலிச சமுதாயத்தில் (திறமையாக) வேலை செய்ய வேண்டும் என்ற ஊக்கம் இல்லாது போய்விடும் என்று, அச்சமூகத்தில் (உழைக்கும் மக்கள் தங்கள்) திறமைக்கு ஏற்ற உழைப்பை நல்கி அறத்தின் வழியில் (முதலாளிகளின் தனிப்பட்ட உரிமையாக அல்லாமல், பொது மக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டிய கல்வி, மருத்துவம் போன்ற செலவினங்களுக்குத் தங்கள் பங்கை அளித்து விட்டு மிகுதியை) தாங்கள் செய்த வேலையின் அளவிற்கு ஏற்ப ஊதியமாகப் பெறுவதே சோஷலிச சமூக அமைப்பின் விதி என்பதை அறியாதவர்கள், பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்)

- இராமியா